தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சி குறித்து நித்தமும் பிதற்றிக் கொண்டு இருக்கிறார் ‘பயந்த’ பழனிசாமி” : ‘முரசொலி’ தாக்கு!

‘பயந்த’ பழனிசாமி, தான் தைரியசாலிதான் என்பதைக் காட்டிக் கொள்ள நித்தமும் ஏதாவது பிதற்றிக் கொண்டு இருக்கிறார். சொன்னதையே சொல்லி வருகிறார் என முரசொலி தலையங்கம் சாடியுள்ளது.

“தி.மு.க ஆட்சி குறித்து நித்தமும் பிதற்றிக் கொண்டு இருக்கிறார் ‘பயந்த’ பழனிசாமி” : ‘முரசொலி’ தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (28-09-2021) வருமாறு:

‘பயந்த’ பழனிசாமி, தான் தைரியசாலிதான் என்பதைக் காட்டிக் கொள்ள நித்தமும் ஏதாவது பிதற்றிக் கொண்டு இருக்கிறார். சொன்னதையே சொல்லி வருகிறார். ‘தி.மு.க கொடுத்த வாக்குறுதி எதையும் காப்பாற்றவில்லை’ என்பதுதான் பழனிசாமியின் பிதற்ற உளறல்களில் தெளிவாகத் தெரியும் ஒரே ஒரு வரி!

நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று நான்கு மாத காலத்துக்குள் செய்து கொடுத்த திட்டங்களைப் பட்டியலிட்டு காணொலி ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். அதன்பிறகும் பழனிசாமியின் வாய் அமைதியாகவில்லை. ‘ஓ! ஆட்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா?’ என்று பழனிசாமியே இப்போதுதான் தெரிந்து கொண்டு இருக்கிறார்.

நான்காண்டு காலமாக நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு இருந்தவருக்கு இப்போதுதான் முதலமைச்சர் என்றால் இப்படித்தான் செயல்பட வேண்டும் போல என்பதே இப்போதுதான் புரிந்து வரும். இந்த இயலாமையைத்தான் இப்படி வெளிப்படுத்தி வருகிறார் பழனிசாமி. ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்பது பழமொழி. இது பழனிசாமிக்கு மட்டுமே பொருந்தும்!

“நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாங்கள் இம்மியும் பிசகாமல் காப்பாற்றி இருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லி இருக்கும் முதலமைச்சர் அவர்கள், அதற்கான முழுவிளக்கத்தையும் அந்த காணொலியில் சொல்லி இருக்கிறார்கள். 505 வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று முதல்வர் பெருமையுடன் அறிவித்துள்ளார்கள்.

ஆளுநர் உரையில் 51 வாக்குறுதிகளும், தனது பதிலில் இரண்டு வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற பழனிசாமி, இதனை வரவேற்றிருக்க வேண்டும். ‘நிறைவேற்றிய வாக்குறுதிகளுக்கு நன்றி, மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றுங்கள்’ என்று சொல்லி இருந்தால் பெருந்தன்மையாளர் என்று அவரை பாராட்டலாம். ஆனால், எதுவுமே நிறைவேற்றவில்லை என்று சொல்லி தன்னைப் போலவே மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார் அந்த மாஜி மாண்புமிகு!

சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் கேட்டாரே... அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளின் நிலை என்ன என்று! அதற்கு இதுவரை பதில் அளித்துள்ளாரா பழனிசாமி? கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் வெறும் வெற்று அறிவிப்பு. இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னது பழனிசாமிக்கு மறந்து விட்டதா?

கடந்த 10 ஆண்டுகளில் 1700-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டன. அதில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணையை வெளியிடவே இல்லை. இந்த அறிவிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் கோடி. ஆனால் செலவு செய்தது ரூ.87,000 கோடிதான். ஜெயலலிதாவும், பழனிசாமியும் ஆண்ட காலத்தை இதன் மூலம் அறியலாம்.

இதன் தொடர்ச்சியாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சில புள்ளிவிபரங்களை வெளியிட்டு இருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் 348 அறிவிப்புகளுக்கு அரசு ஆணைகள் வெளியிட்டார்கள். ஆனால் முழுமையாக நிதி ஒதுக்கவில்லை. 143 அறிவிப்புகளுக்கு அரசு ஆணை போட்டார்கள். ஆனால் சல்லிக் காசு ஒதுக்கவில்லை. 20 அறிவிப்புகளுக்கு அரசாணையே போடவில்லை. 26 அறிவிப்புகளை கைவிட்டு விட்டார்கள். இதன்படி பார்த்தால் 1700 அறிவிப்புகளில் 537 அறிவிப்புகளை சும்மா மக்களை ஏமாற்றுவதற்காகப் போட்ட ஆட்சி தான் அ.தி.மு.க ஆட்சி. மக்கள் ஏன் அ.தி.மு.க.வை கைவிட்டார்கள் என்றால் இதனால்தான்.

2011 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியும் - 2016 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியும்- பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றாத ஆட்சி அ.தி.மு.க ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளில் 505 இல் 202 வாக்குறுதிகளை நான்கு மாதத்தில் நிறைவேற்றிய ஆட்சி தி.மு.க ஆட்சி!

அரசுத் துறையின் செயலாளர்களை அழைத்து ஆய்வு நடத்திய முதலமைச்சர் அவர்கள், “கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஆறு மாதத்துக்குள் - அடுத்த நிதி நிலை அறிக்கைக்கு முன்னதாக நிறைவேற்றியாக வேண்டும்’’ என்று பகிரங்கமாக உத்தரவு போட்டுள்ளார்கள். இதுதான் தி.மு.க. ஆட்சி என்பது!

கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல; கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய அரசு இந்த அரசு. இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளை முதலமைச்சர் செய்துள்ளார். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். தினந்தோறும் கிராமம் கிராமமாக - தெருத் தெருவாக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று - மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுவரைக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளார்கள். பொங்கலுக்குள் ஒரு கோடி பேருக்கு வாழ்வளித்த திட்டமாக இது அமையப் போகிறது என்பதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்தக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். ‘தமிழக அரசுக்கு பெரிய புகழை ஈட்டித்தரும் திட்டமாக இது அமைந்துள்ளது’ என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

அதேபோல் மற்றொருதிட்டம்தான், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதும் ஆகும். கடந்த 2006 -11 கழக ஆட்சி காலத்தில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன. ஆனால் 2011 -16 அ.தி.மு.க. ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், 2016-21 அ.தி.மு.க. ஆட்சியில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும்தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன.

ஆனால் ஆட்சிக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை தி.மு.க அரசு தரப்போகும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அ.தி.மு.க ஆட்சியில் மொத்தமே 54 மெகாவாட் மட்டும் தான் கூடுதலாக தயாரித்துள்ளார்கள், கழக அரசு வரும் பத்தாண்டு காலத்தில் 17 ஆயிரத்து 980 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

அவசர அவசரமாக அம்மா கிளினிக் என்ற பெயரால் பெட்டிக்கடைகளைத் திறந்த பழனிசாமி, விவசாயி வேஷம் போட்ட பழனிசாமி - மக்களுக்கு உண்மையாக பாடுபடுவது எப்படி என்பதை இனியாவது உணர வேண்டும். உணர்ந்து உளறல்களை நிறுத்த வேண்டும்!

banner

Related Stories

Related Stories