முரசொலி தலையங்கம்

“பாரதி முதல் வ.உ.சி வரை.. தேசிய தலைவர்களுக்கு மகுடம் சூட்டும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

புதிய பாதை காட்டிய பாரதியின் பெருமையைத்தான் இன்றைய அரசு போற்றி இருக்கிறது. இதுதான் அனைவருக்குமான அரசு என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம்!

“பாரதி முதல் வ.உ.சி வரை.. தேசிய தலைவர்களுக்கு மகுடம் சூட்டும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (10-09-2021) தலையங்கம் வருமாறு:

இந்திய சுதந்திர தினமாம் ஆகஸ்ட் 15ஆம் நாள் கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த ஆண்டுக்கான பெருமைகளை அடுக்கினார்!

“இன்றைய தினம் இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான பெருமை இந்த ஆண்டுக்கு இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களை அழைத்து சில நாட்களுக்கு முன்னால் நடத்தினோம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததன் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டுதான்! தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த காந்தி அடிகள் அவர்கள், இந்திய விடுதலைக்காகப் போராடத் தொடங்கியதன் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டுதான்!

மதுரைக்கு வந்த காந்தி, தமிழ்நாட்டு ஏழைத் தமிழ் மக்களைப் பார்த்து, தனது உயர்ரக ஆடையைக் களைந்து அரையாடை உடுத்தத் தொடங்கியதன் நூற்றாண்டும் இந்த ஆண்டு தான்!

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு 150 ஆவது பிறந்ததினம் கொண்டாட இருப்பதும் இந்த ஆண்டுதான்!

சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடி, பாட்டால் உசுப்பிய சுப்பிரமணிய பாரதி மறைந்து 100 ஆண்டுகள் ஆகிறது இந்த ஆண்டோடு!

இப்படி எத்தனையோ வரலாற்றுப் புகழ் பெற்ற ஆண்டாக இந்த 2021 அமைந்துள்ளது!” என்று முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள்!

அதே பேச்சில் மகாத்மா நினைவைப் போற்றும் அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் செய்தார்கள். சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக காந்தியை முதல்வர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவைப் போற்றும் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் அவர்கள் கடந்த வாரத்தில் செய்தார்கள். இதோ பாரதிக்கும் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இன்றைய தினம் (செப்டம்பர் 11 ) பாரதியின் நினைவு நாளாகும். பாரதியை இந்திய தேச விடுதலை வீரராகச் சுருக்கும் காரியமும் ஒரு பக்கம் நடக்கிறது. வைதீகம் அவரைக் கபளீகரம் செய்யும் காரியமும் இன்னொரு பக்கம் நடக்கிறது. ஆனால் அது பாரதியாரின் முழு முகம் ஆகாது. அவரது முற்போக்குக் கருத்துக்களைத் தொகுத்து அவரை ‘மக்கள் கவிஞர்' என்று நிறுவியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

எட்டையபுரத்திலே பாரதியாருக்கு மண்டபம் அமைத்து, மாபெரும் விழா 1947 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனையொட்டி 'திராவிடநாடு' இதழில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள். “பாரதியாரின் காலம் வேறு, இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங்களை எல்லாம், அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய - திராவிட பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ, நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர், ‘ஆரியர்’ என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம், நாமெல்லாம், பள்ளிகளில் ஆரிய மத ஊபாயக்யானம் எனும் ஏட்டினைப்பாடமாகப் படித்த காலம். நமது தலைவர், தமிழ்நாட்டுக் காங்கிரசிலே பெருந்தலைவராக இருந்த காலம்.

ஆரியர் - திராவிடர் பிரச்சினை, ஒரு ஆராய்ச்சி - வரலாறு - இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை. ஆரியம் ஓர்வகைக் கலாச்சாரம் - வாழ்க்கை முறை. திராவிடம் - அது போன்றே, தனியானதோர், வாழ்க்கை முறை. இது, இன்று, விளக்கமாக்கப்படுவது போல, பாரதியாரின் நாட்களிலே கிடையாது.

பல ஜாதி - பல தெய்வ வணக்கம் - பற்பல விதமான மூடநம்பிக்கைகள் - தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு - இவைகள்தான், ஆரியம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” இது திராவிடம். இரண்டிலே எது நல்லது, எந்தக் கலாச்சாரத்துக்கு, நீர் ஆதரவு தருவீர், என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர், திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில் - பிற்காலப் பகுதிகளில் - இந்தச் சூழ்நிலை இருக்கக் காணலாம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.

“அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுகளை உடைத்தெறியக் கூடியதாக இருந்தது என்பது அவருடைய கவிதைகளிலே பல, ரசமான இடங்களில் தெரிகிறது. தேசீயக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே, பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால், பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி, மறைக்கப்படுகிறது. நாட்டு விடுதலையைத் தாண்டி நாட்டு உள்நிலை, மக்கள் மனநிலை, இவைகளைக் கண்டு, மனம் நொந்து வேதனைப்படும் பாரதி இருக்கிறார், மக்களின் மந்த மதியினைக் கண்டு அவர்களைத் திருத்த வேண்டும் என்று ஆவல் கொண்டு துடிக்கும் பாரதி இருக்கிறார், நாடு எப்படி எப்படி இருக்க வேண்டும், சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும் என்று இலட்சியம் கூறும் பாரதி இருக்கிறார். தேசிய பாரதியின் உருவம், இத்தனை பாரதிகளை மறைக்கிறார்கள்” என்றும் பேரறிஞர் அண்ணா எழுதினார்.

மண்டபத்தை பந்தல் மறைக்கிறது என்று அன்று இராஜாஜி பேசினார். இதைச்சுட்டிக் காட்டிய அண்ணா, “உண்மையான பாரதியை மறைப்பதை விடவாமண்டபத்தை பந்தல் மறைப்பது பெரிய விஷயம்?” என்று கேட்டார். பாரதியின் புதிய ஆத்திச்சூடியை புதிய பாதை என்று வர்ணித்தார் பேரறிஞர் அண்ணா. (திராவிட நாடு 19.10.1947). இத்தகைய புதிய பாதை காட்டிய பாரதியின் பெருமையைத்தான் இன்றைய அரசு போற்றி இருக்கிறது. இதுதான் அனைவருக்குமான அரசு என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம்!

banner

Related Stories

Related Stories