முரசொலி தலையங்கம்

சயான் வாக்குமூலத்தை பழனிசாமியால் யூகிக்க முடிந்தது எப்படி? பதறுவது ஏன்? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவை கொலைநாடு பங்களாவாக மாற்றியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரப்போகிறது. அதற்குள் சில இருட்டு மனிதர்கள் துள்ளத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சயான் வாக்குமூலத்தை பழனிசாமியால் யூகிக்க முடிந்தது எப்படி? பதறுவது ஏன்? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் கூலிப்படையைச் செயல்படுத்தியதாகச் சொல்லப்படும் சயன் என்பவர் கடந்த 17 ஆம் தேதி மதியம், ஊட்டி காவல்துறையில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். உடனேயே அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொள்ளும் பழனிசாமிக்கு உள்காய்ச்சல் தொடங்கி விட்டது. 18ஆம் தேதியே கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்குள் வருகிறார். வெளிநடப்பு செய்கிறார். மறுநாள் ஆளுநர் மாளிகைக்கு ஓடுகிறார். பேட்டி என்ற பெயரால் ஏதேதோ ‘சட்டம்’ எல்லாம் பேசுகிறார்!

சயன் என்பவர் என்ன சொன்னார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படவில்லை. அதற்குள் பழனிசாமி பதறுவது ஏன்? என்ன காரணம்? ‘சயன் என்ன சொல்லி இருக்க முடியும் என்பதை அவரால் எப்படி யூகிக்க முடிந்தது?’ ‘கொடநாடு கொலை, கொள்ளையில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எந்த விசாரணைக்கும் நான் தயார்’ என்று பழனிசாமி சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது’ என்கிறார். இதைத்தான் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதைப் போல என்று மிகச் சரியாகச் சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த பழனிசாமியின் முகம் வெளிறிப்போயிருந்தது. தொண்டையில் முள் இருந்தால் நாக்கு சரியாக உச்சரிக்க முடியாது. அது போலக் காணப்பட்ட பழனிசாமி, "சயன் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இதை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சயன் வாக்குமூலத்தில் என்னையும் இணைத்துள்ளார்கள். மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்கள். பழிவாங்க இதை ஜோடிக்கிறார்கள்’’ என்று கோர்வையில்லாமல் ஏதோ சொல்கிறார். ‘இவர்கள் எத்தனை முறை விசாரித்தாலும் என்னைச் சிக்க வைக்கமுடியாது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றுதானே பழனிசாமி சொல்ல வேண்டும்! அவருக்குச் சம்பந்தம் இருப்பதாக இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லையே! ஏன் இந்த அவசரம்? பதற்றம்?

பழனிசாமி ஆட்சியில்தான் 2017 ஏப்ரல் 24 ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழை வாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியை கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்படுகிறார். பங்களாவில் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் அதாவது ஏப்ரல் 28 ஆம் நாள், இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைகிறார். விபத்தில் மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்த இந்த கனகராஜ் சேலத்தைச் சேர்ந்தவர்.

சயன் உள்ளிட்ட கூலிப்படையை பணம் கொடுத்து அழைத்து வந்ததாகச் சொல்லப்படுபவர் இந்த கனகராஜ். கனகராஜ் இறந்த அதே நாளில் சயன் சென்ற காரும் விபத்துக்கு உள்ளாகிறது. அதில் அந்த இடத்திலேயே சயனின் மனைவியும் குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். காயத்துடன் சயன் தப்புகிறார். குற்ற வழக்குகளில் இதுபோன்று நிறைய நடக்கும். ஒருவரை வைத்து ஒரு சம்பவம் செய்ய வைப்பார்கள். அதே ஆட்களை உடனே காலி செய்தும் விடுவார்கள். இதுதான் கொடநாடு சம்பவத்தில் நடந்துள்ளது. அடுத்த சிலநாட்களில் கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் இறக்கிறார். தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் தன்னை மாட்டி விட நினைக்கிறார்கள் என்று பதறுகிறார் பழனிசாமி. உண்மை அது அல்ல, அவரது ஆட்சியிலேயே உண்மை வெளியில் கசிய ஆரம்பித்தது. அந்த உண்மையை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைக்கப் பார்த்தார் பழனிசாமி. ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன், இந்த விவகாரத்தில் பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று அப்போதே பேட்டி கொடுத்தார். ‘முதலமைச்சர் பழனிசாமிக்கு இது எல்லாம் தெரியும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்று கனகராஜ் தங்களிடம் சொன்னதாக சயன் பேட்டி கொடுத்தார். கொடநாடு பங்களாவில் சில சின்ன சின்ன பொருள்கள்தான் காணாமல் போனதாகவும், அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டது, கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறை மறைக்க ஆரம்பித்தது.

முதலமைச்சரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சயன் என்பவரும் வாளையார் மனோஜ் என்பவரும் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயனும் வாளையார் மனோஜும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சஜீவன், ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவுக்கு மரவேலைப்பாடுகள் செய்து கொடுத்ததாகச் சொல்லப்படுபவர். அந்த சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் வர்த்தகர் அணிச் செயலாளர் பொறுப்பை போட்டுக் கொடுத்திருந்தார் பழனிசாமி. சஜீவனுக்கு கட்சிப் பதவி தரக்கூடாது என்று ஊட்டியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினரே எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதை மீறி பழனிசாமி பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? பழனிசாமி முதலமைச்சராக நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அவர் அருகில் சஜீவன் இருந்துள்ளார்.

மூன்று அரசு விழாக்களில் பழனிசாமியுடன் சஜீவன் இருந்துள்ளார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது. பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயனும் மனோஜும் சிறையில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்கள். தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக நீதிமன்றத்திலேயே புகார் கூறியுள்ளனர். இப்படி கடந்த நான்காண்டு காலத்தில் கொடநாடு வழக்கின் விசாரணையை தடுத்து வந்தவர்தான் பழனிசாமி. ஏன் தடுத்தார்? ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு உண்மையான விசாரணை தொடங்கியதும் ஏன் பதறுகிறார்?

banner

Related Stories

Related Stories