முரசொலி தலையங்கம்

“முதலமைச்சர்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... இனி என்றும் அவரே முதல்வர்!” : முரசொலி தலையங்கம்

இந்திய அளவிலான பத்திரிக்கைகள், அமைப்புகள் மீண்டும் தமிழ்நாட்டைக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. கவனம் ஈர்க்கும் முதல்வராக சிறக்கத் தொடங்கி இருக்கிறார் நம்முடைய பெருமைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள்!

“முதலமைச்சர்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... இனி என்றும் அவரே முதல்வர்!” : முரசொலி தலையங்கம்
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 19,2021) தலையங்கம் வருமாறு:

பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டின் சிறந்த முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

முதலில் கழகம் தெரிந்துகொண்ட சிறப்பை, அடுத்ததாக தமிழ்நாடு அறிந்துகொண்டது. தமிழ்நாடு அறிந்து கொண்ட சிறப்பை, இதோ இன்று இந்தியாவே அறிந்து கொண்டு இருப்பதன் அடையாளம் தான் ‘ஆர்மாக்ஸ் மீடியா' அறிவித்துள்ள கருத்துக் கணிப்பு அறிக்கை ஆகும்.

மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் சிறந்த முதலமைச்சருக்கான ‘ஆர்மாக்ஸ் மீடியா' அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக 68 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்துக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்திருப்பது என்பது சாதாரண உழைப்பு அல்ல. சாமானியரின் உழைப்பும் அல்ல. அது சாதனையாளரின் உழைப்பு என்பதை இன்று இந்தியா அங்கீகரித்துள்ளது.

“அரசியலில் உங்கள் அடியொற்றி பயணித்து வரும் உங்கள் மகன் ஸ்டாலின்பற்றி சில வரிகள்...?” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அப்போது அவர் கல்வெட்டாகச் சில வார்த்தைகளைச் சொன்னார்: “ஒரு தந்தை என்ற முறையில் ஸ்டாலின் முன்னேற்றத்துக்கு எந்தவிதக் கடமையையும் நான் ஆற்றவில்லை. ஆனால் ஒரு மகன் என்ற முறையில் தனது கடமைகளைச் சரிவர ஆற்றி என்னைப் பெருமைப்பட வைத்திருக்கிறான் ஸ்டாலின். இப்படி ஒரு மகன் கிடைக்கப் பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” - என்று சொன்னார் கலைஞர்.

இப்படி ஒரு மகன் கிடைத்ததற்காக கலைஞர் அவர்கள் பெருமைப்பட்ட தருணம் கடந்து - இப்படி ஒரு தலைவர் கிடைத்ததற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் பெருமைப்பட்ட தருணம் கூடக் கடந்து - இப்படி ஒருமுதலமைச்சரைப் பெற்றதற்காக தமிழ்நாடு பெருமைப்படும் சூழல் இப்போது உருவாகி இருக்கிறது.

‘ஆர்மாக்ஸ் மீடியா' மாதம் தோறும் மக்களிடம் ‘யாரை நீங்கள் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராகக் கருதுகிறீர்கள்?' என்று கேள்வியை எழுப்பி உள்ளது. அதில் 68 விழுக்காடு வாக்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், மூன்றாவது இடத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் பெற்றுள்ளார்கள். அவர்கள் இருவரும் நமது மரியாதைக்குரியவர்களேதான். மாற்றுக் குறையாதவர்கள் தான். இந்த மூவரையும் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும், ஒரு கருத்தை இங்கு கவனிக்க வேண்டும்.

பினராயி விஜயனாக இருந்தாலும் நவீன் பட்நாயக்காக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பவர்கள். முதலமைச்சராகத் தொடர்பவர்கள். அவர்கள், சிறப்புப் பெறுதல் என்பது சிறப்பின் தொடர்ச்சிதான். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தைப் பெற்றிருப்பதுதான் முக்கியமாய் கவனிக்கத்தக்கது.

மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறை முதலமைச்சராக ஆகி இருக்கிறார். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. அதனினும் முக்கியமாக மிக மோசமான கொரோனா காலம் இது.

கடந்த பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை அ.தி.மு.க என்ற கட்சி எல்லாவகையிலும் சூறையாடிவிட்டது. ஆளத் தெரியாதவர்கள் மட்டுமல்ல, பாழாக்க மட்டுமே தெரிந்தவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. எந்த தொலைநோக்குப் பார்வையுமற்ற தற்குறிகளின் கையில் அதிகாரம் இருந்தது. பணமும் மேலாதிக்க மமதையும் மட்டுமே கடந்த கால ஆட்சியாளர்களின் கையிருப்பாக இருந்தது. தமிழ்நாட்டின் கஜானாவை பகலிலும் இரவிலும் பில் போட்டு சூறையாடிவிட்டுப் போய்விட்டார்கள். பத்து ஆண்டுகளாக மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் - அதிகாரிகளுக்கும் ஆட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒருசில நச்சு சக்திகள் மட்டுமே கோலோச்சும் கோட்டையாக அதனை உருமாற்றி வைத்திருந்தார்கள்.

இப்படி அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்ட பைந்தமிழ் நாட்டை மீட்டெடுப்பது சாதாரணமான காரியமாக இருக்காது என்ற சூழ்நிலையில்தான் தி.மு.க தலைவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார். பிரச்சினைகளை உணர்ந்தார். திறந்த மனத்துடன் அனைத்தையும் கேட்டார். மக்களுக்குத் தேவையானதை அறிந்தார். அதனை மட்டுமே செயல்படுத்தினார். அன்றாடத் தேவைகள் - ஓராண்டுத்தேவைகள் - பத்தாண்டு காலத் திட்டமிடல்கள் என தனது இலக்குகளைப் பிரித்துக்கொண்டார். அதனடிப்படையில் தனது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டார்.

கொனோராவைக் கட்டுப்படுத்தியது மாபெரும் சாதனை. கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நான்காயிரம் ரூபாய் பணம்கொடுத்தார். தமிழ்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டது. பால் விலை குறைக்கப்பட்டது. அனைத்து மகளிருக்கும் பேருந்துகளில் இலவச பயணச் சேவை தரப்பட்டது. கடந்த ஆட்சியின் பெரும்துயரமான தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நீதி கிடைத்தது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. ‘நீட்’ பலிபீடத்தை உடைக்க நீதியரசர் ராஜன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஏழு பேர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. மேகதாது அணையைத் தடுக்க தமிழ்நாடே எழுந்து நிற்கிறது.

தினந்தோறும் ஒவ்வொரு துறைவாரியாக ஆய்வு நடத்தி வருகிறார் முதலமைச்சர். இவைதான் அடுத்த ஓராண்டு திட்டமிடுதல்களுக்கான அடித்தளமாக அமையப் போகிறது. உலகளாவிய சிந்தனையாளர்கள் கொண்ட குழுவும் - பேராசிரியர் ஜெயரஞ்சன் தலைமையிலான கொள்கை வகுக்கும் குழுவும் அடுத்தடுத்து தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து நாட்டு மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் இருந்ததை விட முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போது அதிகமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அவருக்கு வாக்களிக்கத் தவறியவர்களும் இப்போது அவரைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய அளவிலான பத்திரிக்கைகள், அமைப்புகள் மீண்டும் தமிழ்நாட்டைக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. கவனம் ஈர்க்கும் முதல்வராக சிறக்கத் தொடங்கி இருக்கிறார் நம்முடைய பெருமைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள்! இனி என்றும் அவரே முதல்வர்!

banner

Related Stories

Related Stories