முரசொலி தலையங்கம்

“அணு ஆயுதங்களால் அணை போட முடியுமா?.. உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் பாடம் என்ன?” : முரசொலி தலையங்கம் !

இராணுவத்துக்குச் செலவு செய்யும் பணத்தை மருத்துவத்துக்குச் செலவு செய்திருந்தால் உலகின் ஒவ்வொரு நாடும் தனது மக்களைக் காப்பாற்றி இருக்கலாம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

“அணு ஆயுதங்களால் அணை போட முடியுமா?.. உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் பாடம் என்ன?” : முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செல்வச் செழிப்புகள் உள்ள நாடுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகளில் கூட, மருத்துவம் என்பது ‘வசதிக் குறைவானதாகவே' இருந்ததைத்தான் கொரோனா என்ற பெருந்தொற்று அடையாளப்படுத்தியது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“மக்கள் நலனைக் காக்க அணுத்திமிர் அடக்கு!” என்ற தலைப்பில் முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு :-

அனைத்து நாடுகளும் அமைதியைப் பற்றியே பேசுகின்றன. ஆனால், அணு ஆயுதங்களையே தயாரிக்கின்றன! அமைதியின் குரல் வாயளவில் மட்டுமே ஒலிக்கிறது. அணு ஆயுதங்கள் மட்டுமே அவர்களது மனங்களில் நிறைந்துள்ளது. இதனை சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அணு ஆயுதங்களை அதிகரிக்கும் நாடுகளாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை இருக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுத் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்.ஐ.பி.ஆர்.ஐ.) சார்பில் அணு ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலகம் முழுவதிலும் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 90 சதவீத ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளில் மட்டுமே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

“அணு ஆயுதங்களால் அணை போட முடியுமா?.. உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் பாடம் என்ன?” : முரசொலி தலையங்கம் !

சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், வட கொரியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவில் 350 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானில் 165 ஆயுதங்களும், இந்தியாவில் 156 ஆயுதங்களும் உள்ளன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகப்படுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், புளுட்டோனியம் ஆகிய கதிரியக்கப் பொருள்களை நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா, இஸ்ரேல் ஆகியவை புளுட்டோனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகின்றன. பாகிஸ்தான் யுரேனியத்தைக் கொண்டு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. மற்ற நாடுகள் இரு கதிரியக்கப் பொருள்களையும் கொண்டு ஆயுதங்களைத் தயாரித்து வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருவதாகவும், அந்தச் சோதனைகள் தொடர்பான தகவல்களை முறையாக வெளியிடுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020 வரை முக்கிய ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ததில் சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகியவை முன்னணி வகித்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்துக்குச் செலவு செய்யும் பணத்தை மருத்துவத்துக்குச் செலவு செய்திருந்தால் உலகின் ஒவ்வொரு நாடும் தனது மக்களைக் காப்பாற்றி இருக்கலாம். செல்வச் செழிப்புகள் உள்ள நாடுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகளில் கூட, மருத்துவம் என்பது ‘வசதிக்குறைவானதாகவே' இருந்ததைத்தான் கொரோனா என்ற பெருந்தொற்று அடையாளப்படுத்தியது.

“அணு ஆயுதங்களால் அணை போட முடியுமா?.. உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் பாடம் என்ன?” : முரசொலி தலையங்கம் !

ஒவ்வொரு நாடும் கோடி கோடியான பணத்தை ராணுவத்துக்குச் செலவு செய்கிறது. நாட்டின் பாதுகாப்பு என்பதை அலட்சியப்படுத்தவில்லை. ஆனால் ‘எல்லைப் பாதுகாப்பு' மட்டுமே ‘மக்கள் பாதுகாப்பாக' ஆகிவிட முடியாது. ஆகவில்லை என்பதைத்தான் கொரோனா என்ற பெருந்தொற்று அடையாளப்படுத்தியது. எல்லைகளைத் தாண்டியது கொரோனா. எந்தநாட்டு ஆயுதமாவது கொரோனாவைத் தடுக்க முடிந்ததா? தங்கள் நாட்டுக்குள் வர விடாமல் அணை போட முடிந்ததா? கொரோனாவுக்கு எல்லை இல்லை.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதல் பத்து நாடுகள். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தொற்று பரவினாலும் அதிகமாகப் பாதித்த நாடுகள் இவை. இவைதான் ஆயுதமும் அதிகம் தயாரிக்கும் நாடுகள் என்பது பெருமைக்குரியதா?

உலகம் முழுவதும் 17 கோடிப் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 38 லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். இந்தப் பேரழிவில் இருந்து உலகம் கற்றுக் கொண்ட பாடம் என்ன? அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். இந்தியாவில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3.74 லட்சம் பேர். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய உயிர்க்கொல்லியோடு உலகம் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. போர் இன்னும் முடியவில்லை.

இரண்டாவது அலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்னதாக மூன்றாவது அலை குறித்த பேச்சு கிளம்பிவிட்டது. முற்றுப்புள்ளி வைத்ததாகச் சொன்ன இங்கிலாந்தில் மீண்டும் பரவுகிறது. ரஷியாவிலும் இதே நிலைமைதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் ஒரு வாரமாக மீண்டும் அங்கு பரவுகிறது. மாஸ்கோவில் ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“அணு ஆயுதங்களால் அணை போட முடியுமா?.. உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் பாடம் என்ன?” : முரசொலி தலையங்கம் !

இங்கிலாந்தும் ஊரடங்கைத் தொடர்ந்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி, மங்கோலியா ஆகிய நாடுகளிலும் மீண்டும் பரவுகிறது. கொரோனா தொற்று எந்த நாடு என்று பார்ப்பது இல்லை. அணு ஆயுதங்களே நாடுகளைப் பிரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த தொற்றுக் காலத்திலும் ஜி7 நாடுகளுக்கும் சீனாவுக்குமான மோதல் வெளிப்படையாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

சீனாவின் நடவடிக்கைகள் உலகத்தை அச்சுறுத்துகிறது என்று அந்த நாடுகள் குற்றம் சாட்டின. ‘‘சீனாவின் பாதுகாப்புக் கொள்கை தற்காப்பை அடிப்படையாகக் கொண்டது. சீனாவின் வளர்ச்சியைப் பகுத்தறிவு முறையில் பார்க்க வேண்டும். சீனாவின் நியாயமான நலன்களையும் உரிமைகளையும் அரசியலாக்குவதற்கும் மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் சீனா அறிவித்துள்ளது.

இத்தகைய அறிக்கைப் போர், அணு ஆயுதப் போராக மாறிவிடக் கூடாது. இவை அனைத்தையும் விட வைரஸ் வல்லமை பெற்றது. இத்தகைய சூழலில் கொரோனா, உலக நாடுகளுக்கு எடுக்கும் ஒரே பாடம்: “மக்கள் நலனைக் காக்க அணுத்திமிர் அடக்கு!”.

banner

Related Stories

Related Stories