முரசொலி தலையங்கம்

“தமிழ் மருத்துவம் மூலம் தமிழக மக்களை காக்கும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் பாராட்டு!

ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, இயற்கை மூலமாகவும் தமிழக மக்களை காக்க முன்வந்திருக்கும் தமிழக அரசை பாராட்டுவோம்.

“தமிழ் மருத்துவம் மூலம் தமிழக மக்களை காக்கும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனாவை ஒரு வழியில் அல்ல, பல்வேறு வழிகளில் போய்தான் வீழ்த்த முடியும். அதனை உணர்ந்து செயல்பட்டு வருகிறது தமிழக அரசு! ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்தே, ‘நோய் எதிர்ப்பு சக்திகளை உடலில் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்' என்பதை வழக்கமாகச் சொல்லிவந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கபசுரகுடிநீர் அருந்துங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதைச் சொல்லிவந்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் கொரோனா தொற்று மீதான மாபெரும் பல்முனைத்தாக்குதலாக மாறிவருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை களத்தில் இறக்கி விட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெருகி வரும் கொரோனா நோய்தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை பல்வேறு மருத்துவ வல்லுநர்களை கலந்தாலோசித்து கொரோனா நோய் சிகிச்சைக்கான புதிய மருத்துவ மேலாண்மை வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இதனடிப்படையில் சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை கடந்த 9ம் தேதி காலையில் தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் அடுத்த வாரம் மேலும் ஒரு சித்தா மையம் திறக்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் 12 இடங்களில் சித்தா மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

“தமிழ் மருத்துவம் மூலம் தமிழக மக்களை காக்கும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் பாராட்டு!

சென்னையில் இப்போது திறக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 240 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மூலிகை கசாயங்கள், வலி நிவாரணி உள்ளிட்டவை நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றும், மனநல ஆலோசனை மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவை வழங்கப்படும். வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகள் வழங்கப்படும்.

உணவே மருந்து என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும். புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் சித்தர்யோகா, திருமூலர் பிராணாயாமம், வர்மசிகிச்சை, சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவி சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட இருக்கிறது.

சென்னையைத் தொடர்ந்து, தர்மபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையங்கள் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படும் என்றும், சென்னையில் 70 படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு சித்தா மருத்துவ மையம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

“தமிழ் மருத்துவம் மூலம் தமிழக மக்களை காக்கும் தி.மு.க அரசு” : முரசொலி தலையங்கம் பாராட்டு!

இது மிக முக்கியமான முன்னெடுப்பாக இருக்கப் போகிறது. இரண்டு விதங்களில் இது மிக முக்கியமானது. காலம் காலமாக நமது வாழ்வில் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்டி வந்த பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலமாக கொரோனாவை வெல்வது. மிக லேசான அறிகுறி உள்ளவர்கள், இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக தொற்று அதிகம் ஆகாமல் தடுக்கலாம். அதிகமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு வசதியை செய்து தருவதற்கு இது வழி விடுவதாக அமையும்.

“தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வரும் சூழலில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க இதுபோன்ற சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார்.

கொரோனா முதல் அலையின் போது அதனைக் கட்டுப்படுத்த நம் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவம் பெருமளவு உதவி செய்தது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றில் இருந்து மீண்டார்கள். இப்போது இரண்டாவது அலை, பரவி வருகிறது. இந்த அலையைக்கட்டுப்படுத்தவும், அடுத்து இதுபோன்ற சூழ்நிலை உருவாகாமல் தடுக்கவும் சித்த மருத்துவ முறைகளால் நிச்சயம் முடியும். எளிமையானது, முழுமையானது, செலவு இல்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது - இவை அனைத்தும் எந்த மார்க்கெட்டிங் மூலமாகவும் நிரூபிக்கத் தேவையில்லாத உண்மைகள் ஆகும்!

ஆயுர் வேதம், ஓமியோபதி, யுனானி, இயற்கை மருத்துவர் ஆகியோரை முழுமையாகப் பயன்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்கி இருப்பது - இப்போதைய பரவலுக்கு மட்டுமல்ல இனி வராமல் தடுக்கவும் பயன்படும் பாதையாகும். தமிழ் மருத்துவம் மூலமாகவும் தமிழக மக்களை காக்க முன்வந்திருக்கும் தமிழக அரசை பாராட்டுவோம்!

banner

Related Stories

Related Stories