முரசொலி தலையங்கம்

“ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு: படுதோல்வியை தழுவிய மோடி அரசின் நிர்வாகத் திறன்” - முரசொலி கடும் சாடல்!

இரண்டாவது அலையின் தீவிரத்தை உணராமல் மோடி அரசு அலட்சியத்துடன் செயல்பட்டது அதன் நிர்வாகத் திறமையின்மையை சுட்டிக்காட்டுகிறது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு: படுதோல்வியை தழுவிய மோடி அரசின் நிர்வாகத் திறன்” - முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலை மிகக் கடுமையாக இருந்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் அதன் தாக்குதல் அதிகரித்து நீடித்து கொண்டே இருக்கும் என்றே செய்திகள் வெளி வருகின்றன. பிரதமர் பொது முடக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்தி வருகிறார்.

ஆனால் மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. முழு ஊரடங்கு அல்லவெனினும், இந்தப் பகுதி ஊரடங்குத் தேவையான ஒன்றாகவே இப்போது இருந்து வருகிறது. ஆனால், இதன் நீட்டிப்பு குறித்து யோசிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறோம். தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளிகளுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனாவின் 2வது அலை அதிகரித்துள்ள இந்த நிலையில் அதை எதிர்த்துப் போராடும் செய்திகளை விடவும் பதற்றம் கொள்ளும் செய்திகளே மிக நிரம்ப நாளேடுகளிலும், ஊடகங்களிலும் இடம் பெற்று வருகின்றன. இவை உண்மை அல்ல என்று நாம் சொல்ல வரவில்லை. அந்த உண்மைகள் மக்கள் அறிய வெளிப்படுத்துகிற அதே நேரத்தில் நிவாரணப் பணிகள் குறைவில்லாமல் நடைபெற்று வர வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

“ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு: படுதோல்வியை தழுவிய மோடி அரசின் நிர்வாகத் திறன்” - முரசொலி கடும் சாடல்!

(1) தடுப்பூசிகள் கையிருப்பில் போதுமான அளவு இல்லை என்கிறார்கள். முதல் தவணையை போட்டுக் கொண்ட பயனாளிகள் தடுப்பூசிக்காக இரண்டாவது தவணைக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(2) தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன என்ற செய்திகளும் வெளி வருகின்றன. வீணடிக்கப்படுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது எனும் செய்திகள் வெளியாகி உள்ளன.

(3) தடுப்பூசிகள் விலைகள் பற்றி பேசப்படுகின்றன.

(4) கோவெக்சின், கோவிஷில்டு, இரஷிய தடுப்பூசி என்பது பயன்பாட்டில் இருக்கின்றன. இரஷிய ஊசி இன்னும் முழுப்பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் அதன் விலை ரூ.800 என்கிறார்கள். கோவிஷில்டுப் போலவே இரஷிய தடுப்பூசி ஸ்புட்னிக்கையும் இந்தியாவில் தயாரிக்க இருக்கிறார்கள். இதர சில ஊசிகளின் பெயர்களும் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு தடுப்பூசிகள் தடையின்றி கிடைக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தடுப்பூசி மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும். உள்நாட்டுத் தேவைகளை முதலில் கவனிக்கப்பட வேண்டும். ஏற்றுமதி நிறுத்தப்பட வேண்டும். தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் அதற்குரிய பணம் வாங்கப்படுகிறது. இந்தப் பணம் இன்னும் அதிகரிக்கக் கூடுமோ எனும் அச்சமும் மக்களிடையே இருந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலோ, தனியார் மருத்துவமனைகளிலோ மக்களுக்குத் தடுப்பூசியை இலவசமாக போடும் விதமாக ஏற்பாடுகள் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதனால் தடுப்பூசி போடும் பணி வெகு விரைவில் முடிவடைய வாய்ப்புகள் ஏற்படும். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதற்கு இடந்தரக்கூடாது. இதனால் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுவதே பொருளாகும். எந்தக் காரணத்தினால் தடுப்பூசிகள் வீணாகின்றன என்பதைக் கண்டறிந்து அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும்.

வீணடிப்பதை விட இலவசமாகத் தடுப்பூசியை வழங்குவது மேல் அல்லவா என்றே சொல்ல வருகின்றோம். இதற்கிடையே இன்னொரு செய்தி, நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. நாசிக்கில் ஆக்ஸிஜன் இல்லாததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் 24 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதே போல் டெல்லியிலும், வேலூரிலும் நிகழ்ந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இவர்கள் அத்தனை பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

இப்படி நாடு முழுவதும் பிரச்சினைகள் இது தொடர்பாகப் பலவாறு இருந்து வருகின்றன. தடுப்பூசி விலைகள் பற்றிய செய்திகள் நோயின் தொற்றை விட கடுமையாக உள்ளது. ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு மூன்று வகையான விலைகளை நிர்ணயித்து இருக்கிறார்கள். போர்க்காலத்தில் எதிரிகள் கொள்ளை அடிப்பதைப் போன்ற நடவடிக்கைகளைத் தனியார் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் அனுமதிக்க முடியாது. இதைத்தான் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இது மட்டுமில்லை, தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் விலைகள் தொடர்பான குறிப்பினையும் வழங்கி இருக்கிறார். அதாவது, ‘மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு தடுப்பூசியை விற்பனை செய்யப்படும் சீரம் நிறுவனம், மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.400 விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?’ என்றே தலைவர் ஸ்டாலின் கேட்டு இருக்கிறார்.

“ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு: படுதோல்வியை தழுவிய மோடி அரசின் நிர்வாகத் திறன்” - முரசொலி கடும் சாடல்!

ஆகவே இப்படிப்பட்ட செய்திகள் வருவதினால் நமது கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வினா எழுப்பிச் சுட்டிக்காட்டியது போல பிரதமர் மோடியின் நிர்வாக நிபுணத்துவம் படுதோல்வி அடைந்துவிட்டதை அவரது நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. கொரோனா தொற்றைத் தடுப்பதில் அவர் படுதோல்வி அடைந்துவிட்டார். மேலும் மதம் சார்ந்த விழாக்களைப் பெரிய அளவில் ‘கும்பமேளா’ போன்ற நிகழ்வுகளை மத்திய, மாநில அரசுகள் அனுமதித்தது நோய் பரவலை அதிகமாக்கி விட்டது.

அவை சமூக இடைவெளியை குறைத்துவிட்டன. ஆனால் இடையில் அவ்விழா நிறுத்தப்பட்டது நமக்கு ஆறுதலை அளிக்கிறது. கடந்த ஆண்டு மதம் சார்ந்த விழாக்களுக்கு கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளையே இந்த ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும். பெருநோய் தொற்றுக் கடுமை நாடு தழுவி பெரும் பாதிப்புகளை உண்டாக்கி விடும் நிலையில் அந்நோயை எதிர்கொள்வதில் மக்கள் கடும் துன்பத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக வாழ்வாதாரத்திற்கு அவர்கள் படும்பாடு சொல்ல முடியாததாய் இருக்கிறது. அப்பிரச்சினைகளோடு மக்களுக்கு நோயை எதிர்கொள்வதும் இன்னொரு பிரச்சினையாகிறது. இப்படிப் பிரச்சினைகளை சந்திக்கிற மக்களை ஆறுதலாக எதிர்கொள்கிற ஒரே அமைப்பு அரசு மட்டுமே ஆகும். அந்த அரசு இடத்தில் குறைவற்ற வாழ்வாதாரத்தையும், கொரோனா தொற்றுக்கு நிவாரணமும் மக்கள் எதிர்பார்ப்பது தவறாக இருக்க முடியாது. ஆனால் நாட்டின் நிலை அப்படி இல்லை என்றாலும் அதனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இன்று நாடு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories