முரசொலி தலையங்கம்

“இது மொழிப்பிரச்னை அல்ல, ஆதிக்கத்தின் பிரச்னை”: சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க வேண்டும் - முரசொலி தலையங்கம்!

சமஸ்கிருதத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டுமானால் அவர் நேரடியாக அதைச் செய்யலாம். அதற்கு அம்பேத்கரை துணைக்கு அழைக்கத் தேவையில்லை.

“இது மொழிப்பிரச்னை அல்ல, ஆதிக்கத்தின் பிரச்னை”: சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க வேண்டும் - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதற்கு அண்ணல் அம்பேத்கரையும் துணைக்கு அழைத்துள்ளார்!

சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கரின் 130வது பிறந்த நாள் விழா, நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கட்டிடத் திறப்பு நிகழ்ச்சி, வீடியோ கான்பரன்சிங் முறையில் கடந்த 14 ஆம் தேதி நடந்தது. இதில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கலந்து கொண்டார்.

“பாபா சாகேப் அம்பேத்கர், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை நன்கு புரிந்து வைத்திருந்தவர். மக்களுக்கு எது தேவை என்றும் அவர் உணர்ந்திருந்தார். அவர், நாடு முழுவதும் தேசிய அளவில் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தலாம் என அப்போதே பரிந்துரை செய்திருந்தார். நமது பழங்கால நூலான நீதி சாஸ்திரம், அரிஸ்டாட்டில் மற்றும் பெர்சியன்நியதிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. நமது மூதாதையர்கள் கூறிய கருத்துகளைப் புறக்கணிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் எந்த மொழியில் உரையாற்ற வேண்டும் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது. இன்று டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா.

பேசும்போது பயன்படுத்தும் மொழி மற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மொழிகளின் காரணமாக முரண்பாடு ஏற்படுவது காலங்காலமாக உள்ளது. துணை நீதிமன்றங்களில் எந்த மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. ஆனால், இதுகுறித்து ஆராய வேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், அம்பேத்கர் இந்தக் கோணத்தில் முன்கூட்டியே சிந்தித்துள்ளார். தமிழ்மொழி வடஇந்திய மாநிலங்களில் ஏற்கப்படுவதில்லை. இதுபோல், இந்தி தென்னிந்திய மாநிலங்களில் ஏற்கப்படுவது கிடையாது. ஆனால், வடஇந்திய மாநிலங்கள் மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே சமஸ்கிருதத்துக்கு எதிர்ப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்திருக்கிறது” - என்று தலைமை நீதிபதி பேசி இருக்கிறார்.

“இது மொழிப்பிரச்னை அல்ல, ஆதிக்கத்தின் பிரச்னை”: சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க வேண்டும் - முரசொலி தலையங்கம்!

சமஸ்கிருதத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டுமானால் அவர் நேரடியாக அதைச் செய்யலாம். அதற்கு அம்பேத்கரை துணைக்கு அழைக்கத் தேவையில்லை. ஒரு கூட்டத்தில் தான் எந்த மொழியில் பேச வேண்டும் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. எந்தக்கூட்டத்திலும் ஒருவர், தனது தாய்மொழியில் பேசலாம். அவருக்கு எந்த மொழி தெரியுமோ அதில் பேசலாம்.

அல்லது ஆட்சி மொழியில் பேசலாம். அது அவரது விருப்பம் சார்ந்தது. நடைமுறைப்பிரச்னையையும் நாட்டுப் பிரச்னையையும் எதற்காக தலைமை நீதிபதி ஒன்று சேர்க்க வேண்டும்? “இந்தியை தென் மாநிலங்கள் ஏற்காது. தென் மாநில மொழியை வடமாநிலத்தவர் ஏற்க மாட்டார்கள். ஆனால் இருவருமே சமஸ்கிருதத்தை எதிர்க்க மாட்டார்கள்” என்று சொல்வது மிகமிக மேம்போக்கான கருத்து!

இந்தி எதிர்ப்புக்கு அடிப்படையே சமஸ்கிருத எதிர்ப்புதான் என்பதை தந்தை பெரியாரும், அண்ணாவும் பல்வேறு இடங்களில் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். சமஸ்கிருதத்தை திணிக்க முடியாததால் இந்தியைத் திணிக்கிறார்கள். இந்தியை ஏற்றுக் கொண்டதும் சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவார்கள் என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். இதே தொனியில் இராஜாஜி பேசியதையும் பெரியார் மேற்கோள் காட்டி இருக்கிறார்.

“இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் ஆக வேண்டும். அதற்கு முன்னதான கால கட்டத்தில் இந்தி இருக்கலாம்'' என்பதுதான் அவர்களது அழுத்தமான கொள்கை. இவர்களின் தத்துவ மூலவரான கோல்வார்க்கர் சொல்கிறார்: “மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகிற காலம் வரை இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும்” (கோல்வாக்கரின் சிந்தனை முத்துகள் நூல்) என்கிறார். அது தான் இன்று பல்வேறு வடிவங்களில் பலராலும் உச்சரிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தை கட்டாயப்பாடமாக்கி, சமஸ்கிருத எழுத்துக்களையே எல்லா மொழிக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஜனசங்கம் தீர்மானம் போட்டுள்ளது. இராமாயணம், மகாபாரதம், கீதை ஆகியவை மட்டுமே இந்திய இலக்கியங்கள். ஹோலி, தீபாவளி, ரக்ஷபந்தன் மட்டுமே தேசிய பண்டிகைகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் போட்டவர்கள் அவர்கள்.

இந்தியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி மொழி ஆகவில்லை. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருப்பதா? ஆங்கிலம் தொடர்வதா? என்ற விவாதம் எழுந்தபோது காங்கிரசு கட்சியின் கூட்டத்தில் இந்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமமாகத்தான் வாக்குகள் விழுந்தது. காங்கிரசு கட்சியின் தலைவராக அப்போது இருந்த பட்டாபி சீதாராமையா, தனது வாக்கை இந்திக்கு ஆதரவாக அளித்தார். அதனால் காங்கிரசு கட்சி இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டது. அது ஏற்றுக் கொண்டதால் அரசியல் சட்ட அவையில் இந்தி ஆட்சி மொழியாக 14.9.1948 அன்று ஏற்கப்பட்டது.

“இது மொழிப்பிரச்னை அல்ல, ஆதிக்கத்தின் பிரச்னை”: சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க வேண்டும் - முரசொலி தலையங்கம்!

இந்தி என்பது பெரும்பான்மையோர் பேசும் மொழியும் அல்ல. போஜ்புரி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி, மக்தி, ஹர்யான், மார்வாரி ஆகிய மொழி பேசுவோரையும் இந்தி மொழி பேசுபவர்களாகச் சேர்த்து விட்டார்கள். போஜ்புரி மொழி பேசுவோர் மட்டும் 5 கோடி பேர். இப்படி அனைவரையும் சேர்த்து 43 சதவிகிதம் பேர் இந்தி பேசுவதாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இந்தி பேசுவோர் தொகை 26.62 சதவிகிதம் தான். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவதாக 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மக்கள் தொகையில் 5 விழுக்காடு இருப்பாதாகச் சொல்லப்படும் பிராமணர்கள் அனைவரும் சமஸ்கிருதம் தங்களது தாய்மொழி என்று சொல்லவில்லை. சொல்லிக் கொள்ளவு மில்லை. அப்படி பெரும்பான்மையினரின் தாய் மொழியாக இல்லாத சமஸ்கிருதம் எப்படி ஆட்சி மொழியாக முடியும்?

பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத இந்தியே ஆட்சி மொழியானது தவறு என்று சொல்லி தென் மாநிலங்கள் மட்டுமல்ல; இப்போது வடமாநிலங்களும் போராடி வரும் போது - சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கலாம் என்பது போன்ற குரல்கள், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை! “இது மொழிப்பிரச்னை அல்ல, ஆதிக்கத்தின் பிரச்னை” என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய ஆதிக்கம் எந்த வழியில் வந்தாலும் எதிர்க்கப்பட்டாக வேண்டும்!

banner

Related Stories

Related Stories