முரசொலி தலையங்கம்

“சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு யார் பொறுப்பு?” : முரசொலி தலையங்கம் கேள்வி !

சென்னைப் பல்கலைக் கழகம் போல் இன்னமும் எத்தனை கல்வி நிறுவனங்கள் இரட்டை இலை வெற்று நடை ஆட்சியால் சீரழிந்து போய் இருக்கிறதோ தெரியவில்லை.

“சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு யார் பொறுப்பு?” : முரசொலி தலையங்கம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் - சென்னைப் பல்கலைக்கழகம். மாபெரும் அறிஞர்களையெல்லாம் உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் இன்றைய தினம் நிர்வாகச் சீர்கேட்டினால் தன் புகழ் முகத்தை இழந்து வருகிறது. 42 சதவிகித ஆசிரியப் பெருமக்களை வைத்துக் கொண்டு, அதையும் நிர்வகிக்கப் போதிய வருவாயும் மானியமுமின்றி சென்னைப் பல்கலைக் கழகம் அல்லாடுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு என்று ஆண்டுதோறும் ரூ.82 கோடி சம்பளம், ஓய்வூதியம் ரூ.90 கோடி, இதர செலவுகள் ரூ.30 கோடி என்று சுமார் 202 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மாநில அரசு ரூபாய் 40 கோடி ஆண்டுதோறும் சம்பளத்திற்கான மானியத் தொகையை வழங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தின் மொத்த செலவுகளில் 20 சதவிகிதம் மட்டுமே வழங்கி வருகிறது. பல்கலைக் கழகத்தின் மூலம் ரூ.70 கோடி மட்டுமே கிடைக்கிறது. இந்த மோசமான நிதிநிலையில் ஓய்வு பெறும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு 2018ம் ஆண்டு முதல் கடைசி நேர பலன்களை வழங்கி அவர்களுக்கு நிம்மதியான ஓய்வூதியத்தை நிறைவு செய்ய முடியாத நிலையே இருந்து வருகிறது.

உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர், பேராசிரியர் எனப்பல்கலைக் கழகத்தில் மொத்தம் 513 பேர் இருக்க வேண்டும். ஆனால், 217 பேர் மட்டுமே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆசிரியர்களின் நிலைமை இதுவென்றால் மாணவர்களின் நிலைமை - அவர்களின் எண்ணிக்கை வருத்தம் தருகிற போக்கில்தான் அமைந்து இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 72 துறைகள் இருக்கின்றன. அவற்றில் ஆய்வு மய்யங்களும் இடம் பெற்று இருக்கின்றன. இதில் 18 துறைகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலுகிறார்கள்.

“சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு யார் பொறுப்பு?” : முரசொலி தலையங்கம் கேள்வி !

கன்னடம், சமஸ்கிருதம், நோய் அரசியல், மருந்தியல், சுற்றுச்சூழலியல், நாளமில்லா சுரப்பியல், நச்சூட்டு ஆய்வு இயல், தென்கிழக்கு ஆசிய ஆய்வுக்கான பல்கலைக்கழக மான்ய மய்யங்கள் போன்ற துறைகளில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையே இல்லை. இது நமக்குப் பெருத்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 27ஆம் தேதி பல்கலைக் கழகத்தின் செனட் கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கழகச் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கடந்த 10 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் எல்லாத் துறைகளிலும் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரப் பட்டியலை கேட்டுள்ளதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. தேர்தல் நேரமாதலால் அவரிடமிருந்து நம்மால் கூடுதல் விவரங்களைத் தொடர்பு கொண்டு பெற முடியவில்லை. ஆனாலும், தேர்தல் நேரத்திலும் பல்கலைகக் கழகச் செனட் கூட்டத்தில் சுதர்சனம் பங்கேற்று இருப்பதை அறிந்து நாம் நமது பாராட்டைத் தெரிவிக்கின்றோம். சென்னைப் பல்கலைக் கழகம் பற்றி ஓர் ஆங்கில நாளேட்டில் வெளி வந்த செய்தியைக்கொண்டே நாம் இங்கே நமது கருத்தை முன்வைக்க விரும்புகின்றோம்.

(1) பல்கலைக் கழகத்தில் 58 சதவிகித ஆசிரியர்கள் இல்லை.

(2) பல்கலைக் கழகத்தை நிர்வாகிக்கப் போதுமான நிதி வசதி இல்லை.

(3) சில துறைகளில் நடப் பாண்டில் மாணவர்களே இல்லை.

(4) சில துறைகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள்.

(5) ஓய்வு பெற்று வீடு திரும்பும் ஆசிரியர்களுக்கு - ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டி இருக்கிறது என்பன போன்ற குறைகள் இருக்கின்றன. இதுகுறித்துப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.கௌரி சில பல கருத்துகளை எடுத்துக் கூறி இருக்கிறார்.

அவர், (1) ஆசிரியர் குறைவை இட்டு நிரப்புவதற்காக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யலாம் என்கிறார்.

(2) நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அவர் சில வழிகளைக் கூறினாலும் அரசிடமிருந்து 165 கோடி ரூபாய் மான்ய உதவியை எதிர்பார்க்கிறார்.

(3) வருவாய் ஈட்டுவதற்கான படிப்புகளுக்கே மாணவர்கள் வருகின்றனர். ஆகவே, இதர துறைகள் ஒரு இலக்கத்திலும், மற்றைய துறைக்கு மாணவர்கள் சேர்க்கையே வருவதில்லை என்கிறார் துணைவேந்தர். ஆனால், அதே நேரத்தில் மாணவர்களை ஈர்ப்பதற்காக கண்காட்சிகள் நடத்தியதாகத் தெரிவித்து இருக்கிறார்.

நிர்வாகத் தரப்பிலிருந்து துணைவேந்தர் என்ற முறையில் அவர் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டாலும், இப்போது நம் கண்களுக்குத் தெரியும் இந்த சீரழிவுகள் ஒரே நாளில் நடந்திருக்க முடியாது. புகழ் பெற்ற ஒரு பல்கலைக் கழகம் கடந்த பத்து ஆண்டுகளில் மோசமான நிலைக்கு ஆளாகி இருக்கிறது என்றால் அ.தி.மு.க. ஆட்சியினர்தான் அதற்குப் பொறுப்பு.

“சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு யார் பொறுப்பு?” : முரசொலி தலையங்கம் கேள்வி !

ஒரு பதில்சொல்ல வேண்டும் என்பதற்காக துணை வேந்தர் சில பல கருத்துகளை எடுத்து வைத்து இருக்கலாம். அவை எல்லாம் நமக்குத் தற்காலிகத் தீர்வுகளாக தெரிகின்றன. பொதுவாகவே இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கிற சீர்கேடுகள் எப்படியும் வெளிவந்து கொண்டே இருக்கும். அவற்றைக்களைந்தெறிந்து சீர் செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் எந்தவித துன்பமுமின்றி சிறப்பாக இயங்க வேண்டும். அதுவும் சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்கள் பழைய புகழோடு இயங்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த பத்து ஆண்டுகளாக மிக மோசமான நிர்வாகத்தைச் சந்தித்துள்ளது என்பது அ.தி.மு.க.வின் வெற்று நடைபோடும் அரசின் சாதனையே எனலாம். தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மே 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தலைவர் ஸ்டாலின் அறிவித்த 7 அம்ச தொலைநோக்குத் திட்டத்தில் கல்வி மேம்பாடு குறித்து பேசப்பட்டு இருக்கிறது. கல்வியின் தரத்தை உயர்த்துகிற வாக்குறுதி வழங்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக் கல்வி முதல்

பல்கலைக்கழக கல்வி வரை அத்திட்டத்தால் மேம்பாடு அடைய இருக்கிறது. சென்னைப் பல்கலைக் கழகம் போல் இன்னமும் எத்தனை கல்வி நிறுவனங்கள் இரட்டை இலை வெற்று நடை ஆட்சியால் சீரழிந்து போய் இருக்கிறதோ தெரியவில்லை. அவையெல்லாம் கூட இனி தெரிய வரலாம். நாட்டு மக்கள் அவர்களின் நிர்வாக இலட்சணத்தைக் கண்டு ரசிக்கலாம். ஆனால், நமக்கோ இத்தகைய இழப்புகளைச்சரி செய்ய நிச்சயமாகச் சில காலம் ஆகும். அவ்வளவு சீர்கேடுகள் நாட்டில் உள்ளன.

banner

Related Stories

Related Stories