முரசொலி தலையங்கம்

“இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்” : முரசொலி!

இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் தமிழகத்தைத் தடுத்து நிறுத்தி முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல்.

MK Stalin
MK Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னால் வேட்பாளர் பெயராக ‘கலைஞர்’ என்று எழுதிக் கொள்ளலாம். ‘உதயசூரியன்’ என்று எழுதிக் கொள்ளலாம்!

அத்தகைய உணர்வோடும், உரத்தோடும், உண்மையோடும்தான் இந்த ஜனநாயகப் போர்க்களத்தில் கழகத்தொண்டர்கள், கூட்டணிக் கட்சியின் தோழர்கள் உழைக்கக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், இது சாதாரணத் தேர்தல் அல்ல. ஜனநாயகப் போர்க்களமாக மாறிக்கொண்டு இருக்கிறது!

திராவிட முன்னேற்றக் கழகம் 1967-ல் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது எத்தகைய இருள் சூழ்ந்த சூழல் இருந்ததோ, அத்தகைய சூழல் இன்றும் இருக்கிறது. அந்த இருளைக் கிழித்து எத்தகைய உதயசூரியன் உதயமானதோ, அத்தகைய உதயசூரியன்தான் இப்போதும் உதயமாக இருக்கிறது. அதனினும் ஒளிவீசத்தக்க, கூடுதலான சூரியனாய் ஒளிவீசப் போகிறது!

1967 தேர்தல் அறிக்கையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள்.. “திராவிட முன்னேற்றக் கழகம் 1957ல் பெற்றிருந்த வளர்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகரித்த வளர்ச்சியை 1962 ல் பெற்றதற்கு பொதுமக்களின் நல்லெண்ணம் தவிர வேறு எந்தவிதமான வலிவும் கழகத்திற்கு இல்லை என்பதனை நாடு அறியும்!

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

1962ல் பொதுமக்களின் அதிகரித்த ஆதரவைப் பெற்ற கழகம், பொறுப்புமிக்க ஜனநாயகப் பணியினைச் செம்மையாக நிறைவேற்றியதன் மூலம், மேலும் அதிகமான அளவில் பொது மக்களின் ஆதரவை இம்முறை பெற்றுப் புதிய பொறுப்புகளை ஏற்கத்தக்க நிலைபெற இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் கழகம் இம்முறை பொதுத் தேர்தலில் நிற்கிறது.

கழகம், மிகப்பெரிய எதிர்ப்புச் சக்திகளிடையே தனது பணியினைச் செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதனை அனைவரும் அறிவர். இந்த நிலையிலும் இத்துணை வேகமான வளர்ச்சி கழகத்திற்குக் கிடைத்திருப்பது - கழகத்தின் பொறுப்பு உணர்ச்சியையும் தன்னடக்கத்தையும் அதிக மாக்கி இருக்கிறது.

இந்திய - வெளி உலக அரசியல் வட்டாரங்களில் இம்முறை தி.மு.கழகம், தோழமைக் கட்சிகளுடன் நேசத் தொடர்பு கொள்வதன் மூலம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத்தக்க நிலை பெறும் என்று குறிப்பிடப்படுவது நாடறிந்ததாகும். இந்தப் புதிய நிலைமையை கழகம் எண்ணிப்பார்த்து எழுச்சியும், அதேபோது அடக்க உணர்ச்சியும் கொண்ட நிலையில் பொதுமக்களை அணுகத்தீர்மானித்திருக்கிறது” - என்று எழுதினார்கள்!

அதே எழுச்சியுடனும், அடக்க உணர்ச்சியுடனும் தான் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மத்திய மாநில அரசின் உளவுத்துறைகள் எடுத்த கருத்துக்கணிப்புகள், தங்களது ஆட்சி மேலிடத்துக்கு கொடுத்து வரும் கணிப்புகளில் கூட தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு என்றே வருகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றில் கழகமே வெற்றி பெறும், மு.க.ஸ்டாலினே முதலமைச்சர் ஆவார் என்றே முடிவுகள் வருகின்றன. ஆனாலும் அதனை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அடக்க உணர்ச்சியுடன் தலைவர் செயல்பட்டு வருகிறார்.

“இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்” : முரசொலி!

போர்க்களத்தில் இருக்கும் இராணுவத் தளபதிக்குத் தெரியும், இறுதி வெற்றி நமக்குத் தான் என்று. ஆனாலும் போர் வீரர்களிடம் தனது அதீதமான எச்சரிக்கை உணர்வைப் பற்றியே இராணுவத் தளபதிகள் பேசுவார்கள். அத்தகைய இலக்கணத்துடன் தலைவர் செயல்பட்டு வருகிறார். ‘நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அந்த வெற்றியைத் தடுக்கப் பார்ப்பார்கள். அதனைக் கவனத்துடன் முறியடித்து அந்த இலக்கை அடைய வேண்டும்” என்று திரும்பத் திரும்ப தலைவர் சொல்லி வருகிறார்கள்.

கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது என்பது தான் இதன் மையப்புள்ளி. 234 தொகுதிகளிலும் ‘கலைஞரே வேட்பாளர், உதயசூரியனே வேட்பாளர்’ என்ற உணர்வு என்பது வெற்றியின் இலக்கை ஒரே மையப்புள்ளியை நோக்கிக் குவிப்பதுதான். அதனை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாக தொடக்கம் முதல் உணர்த்தி வருகிறார்கள்.

“இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் தமிழகத்தைத் தடுத்து நிறுத்தி முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல்! நான் எடுத்துள்ள உறுதிமொழி என்பது ஐந்தாண்டுகளுக்கு மட்டுமானது அல்ல; பத்து ஆண்டுகளுக்கும் சேர்த்துச் சொல்லி இருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி வரும் ஐந்தாண்டுகள் மட்டுமல்ல, தொடர்ந்து காலம் தோறும் தொடர்ந்தால் மட்டும் தான் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். எனவே, அ.தி.மு.க ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமே வாக்களிக்கப் போகும் தேர்தல் அல்ல இது! இனி தமிழகத்தில் எந்நாளும் தி.மு.க. ஆட்சி தான் என்பதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டிய தேர்தல் இது!” - என்பதையும் தலைவர் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் வெற்றி எண்ணாக 234 மாறப் போகிறது. கலைஞரே வேட்பாளர்! உதயசூரியனே வேட்பாளர்! கழக ஆட்சியே இலக்கு! - இம்மூன்றுமே அனைவரது பொது நோக்காக மாற வேண்டும்! வெற்றி வேட்பாளர்களை வாழ்த்துவோம்!வெற்றிப் பாதையை உருவாக்குவோம்!

banner

Related Stories

Related Stories