முரசொலி தலையங்கம்

“விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக” - முரசொலி தலையங்கம்!

டெல்லி போராட்டமும், பஞ்சாப் முடிவுகளும் என தலைப்பிட்டு முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

 “விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகளின் வீறு கொண்ட போராட்டம் மூன்று மாதங்களைத் தொடப்போகிறது. அந்த விவசாயிகளைத் தேச விரோதிகளைப் போல சித்தரித்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.!

அதாவது மத்திய பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாக அடையாளம் காட்டுவதுதான் அவர்களுடைய பாணியாக உள்ளது. பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் யார் மக்களின் எதிரிகள் என்பதை அடையாளம் காட்டிவிட்டார்கள் மக்கள்! பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

மொத்த மாநகராட்சிகளில் எட்டு இடங்களில் ஏழு இடங்களை காங்கிரசு கட்சி கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் எட்டு மாநகராட்சிகளுக்கும் 109 நகராட்சிகளுக்கும் கடந்த 14 ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. இதில் பதிண்டா, கபூர்தலா, ஹோசியார்பூர், பதான்கோட், படாலா, மோகா, அபோஹர் ஆகிய ஏழு மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

பெரும்பாலான வார்டுகள் காங்கிரஸ் கட்சியின் வசம் ஆனது. பாரதிய ஜனதா மட்டுமல்ல, பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியாக சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்த சிரோண்மணி அகாலி தளம் கட்சியும் மக்கள் செல்வாக்கை இழந்துள்ளது.

 “விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக” - முரசொலி தலையங்கம்!

50 வார்டுகளைக் கொண்ட அபோஹர் மாநகராட்சியில் 49 வார்டுகளையும் காங்கிரஸ் கைப்பற்றி இமாலய சாதனையைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 350 மாநகராட்சி வார்டுகளில் 281 வார்டுகளையும், 1815 நகராட்சி வார்டுகளில் 1199 வார்டுகளையும் காங்கிரசு கைப்பற்றி உள்ளது. அகாலி தளம் 33 மாநகராட்சி வார்டுகளை மட்டுமே பிடித்தது. பா.ஜ.க. 20 மாநகராட்சி வார்டுகளை மட்டுமே பிடித்தது. இதை வைத்துப் பார்க்கும் போது பஞ்சாப் மக்களின் மனநிலை என்ன என்பதை எளிதில் உணர முடியும். கடந்த தேர்தலில் அகாலிதளமும் பா.ஜ.க.வும் தான் பெரும்பான்மையான வார்டுகளைக் கைப்பற்றி பஞ்சாப்பை தங்கள் கோட்டையாக மாற்றி வைத்து இருந்தார்கள்.

அதில் பெரிய ஓட்டையை பஞ்சாபியர்கள் போடுவதற்கு என்ன காரணம்? மூன்று வேளாண் சட்டங்கள்தான் காரணம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வந்தாலும், டெல்லிக்கே வந்து போராடி வருபவர்கள் பஞ்சாப் விவசாயிகள். அவர்களை அப்போதே அழைத்து மத்திய அரசு பேசி இருக்க வேண்டும். இரண்டு மூன்று வாரங்கள் கழித்த பிறகு பேச்சுவார்த்தை என்ற பெயரால் நாள் கடத்தல் நாடகங்களைத் தான் மத்திய அரசு நடத்தியது.

மூன்று வேளாண் சட்டங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும்என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் அவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு இந்த சட்டங்கள் எவ்வளவு தூரம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார். அதை விட முக்கியமாக, விவசாயத்துக்குள் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைந்து முதலீடுகள் செய்தால்தான் விவசாயம் வளரும், விவசாயிகள் வளருவார்கள் என்று வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தார் தோமர்.

இது போன்ற கழுத்தறுப்பு பேச்சுக்களையும், சதி வலைப்பின்னல்களையும் மொத்தமாக அறிந்தவர்கள் பஞ்சாப் விவசாயிகள். அதனால் அவர்கள் இதனை செவிசாய்க்கவில்லை. கடந்த 18 ஆம் தேதி பஞ்சாப், அரியானா, உ.பி. ஆகிய மாநிலங்களின் ரயில்சேவை முடங்கியது. விவசாயிகள் நடத்திய ரயில் மறியல்தான் இதற்குக் காரணம். பீகாரில் போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீர் விவசாயிகளும் மறியல் செய்தார்கள். இந்த மறியலின் போது இடைவெளியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் பயணம் செய்த பயணிகளுக்கு தண்ணீர், பழம் ஆகியவற்றை விவசாயிகள் வழங்கினார்கள்.

தங்கள் கோரிக்கையின் நியாயங்களைச் சொன்னார்கள். 11 கட்டங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் மத்திய அரசு எங்களது கோரிக்கைக்கு செவி மடுக்கவில்லை என்று அவர்கள் அப்போது சொன்னார்கள். எங்களது நிலைமையை இதுவரை அரசாங்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்றார்கள்.

விவசாயிகளின் மொழி, கண்ணீர் இந்த பா.ஜ.க.அரசுக்கு தெரியவில்லை என்று சொன்னார்கள். விவசாயத்தை வளர்க்க எதுவும் செய்யாத மத்திய அரசு, விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயரும் என்றும் சொன்னார்கள். மத்திய அரசு, இந்தச் சட்டத்தை சில மாதங்களுக்கு தள்ளிவைக்கும் என்பது போன்ற செய்திகளை பரப்பினார்கள். அதனையும் விவசாயிகள் ஏற்கவில்லை.

உச்சநீதிமன்றம் தலையிட்டது. பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது. அந்தக் குழுவையே விவசாயிகள் ஏற்கவில்லை. குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என்றும் சொல்லிப் பார்த்தார் பிரதமர். அதையும் நம்ப வில்லை. அதாவது எதற்காக தொடங்கினார்களோ, அதே கொள்கையில் உறுதியாக,தெளிவாக, இறுதியாக நிற்கிறார்கள் விவசாயிகள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை இது அரசியல் கோரிக்கை அல்ல. வாழ்க்கை கோரிக்கை. வயிற்றுக் கோரிக்கை. மண்ணுக்கான கோரிக்கை. நிலத்துக்கான கோரிக்கை. அவர்களுக்கு ஒரே சொத்து, அவர்களது மண் தான்.

அந்த மண்ணுக்கான கோரிக்கை அது. மத்திய அரசாங்கம் எங்களை தீவிரவாதி என்று சொல்லிக் கொள்ளட்டும், பயங்கரவாதி என்று சொல்லிக் கொள்ளட்டும், காலிஸ்தான் என்று சொல்லிக் கொள்ளட்டும், அந்நிய சதி என்று சொல்லிக் கொள்ளட்டும். அதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் மக்களுக்கான போராட்டம் இது என்று பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடுகிறார்கள். அவர்களை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை பஞ்சாப் மக்கள் காட்டி இருக்கிறார்கள். இதன் பிறகும் மத்திய அரசுக்கு புரியும் வகையில் எப்படிச் சொல்வது?

banner

Related Stories

Related Stories