முரசொலி தலையங்கம்

அப்போது வரியை குறைக்கச் சொன்னதும் பா.ஜ.கதான்.. இப்போது மக்களை வதைப்பதும் பா.ஜ.கதான்.. முரசொலி தலையங்கம்!

மத்திய மோடி அரசின் பெட்ரோலிய பொய்கள் என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அப்போது வரியை குறைக்கச் சொன்னதும் பா.ஜ.கதான்.. இப்போது மக்களை வதைப்பதும் பா.ஜ.கதான்.. முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? என்று நாடும், நாட்டு மக்களும் கேட்கிறார்கள். இதே கேள்வியை நம்முடைய பிரதமரும் கேட்கிறார். பெட்ரோல் விலை 100 ரூபாய் ஆனதற்கு யார் காரணம்? என்ற கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொண்ட பிரதமர், அதற்குக் காரணம் மன்மோகன்சிங் என்கிறார். மன்மோகன் சிங், கச்சா எண்ணெய் வியாபாரி அல்ல. பெட்ரோல் விற்பனையாளரும் அல்ல.

அப்படியானால் அவர் யார் என்று கேட்கிறீர்களா? இந்தியாவில் 2014ம் ஆண்டுக்கு முன்னால் பிரதமராக இருந்தவர் தான் இந்த மன்மோகன் சிங். 2021ம் ஆண்டு பெட்ரோல் விலை உயர்வுக்கும் அந்த மன்மோகன்சிங் தான் காரணம் என்று மோடி சொல்கிறார் என்றால், அவரை என்ன வகை மனிதர் என்று சொல்வது? "இந்தியா 2019 -20ம் ஆண்டில் தனது எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்துக்கும் மேல் இறக்குமதி செய்தது.

அதுபோல எரிவாயு தேவையில் 53 சதவிகிதத்தை இறக்குமதி செய்தது. இதுபோல இறக்குமதியை நம்பி இருக்க முடியுமா? நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்ற போதும், இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் முன்னரே கவனம் செலுத்தி இருந்தால், நடுத்தர மக்கள் மீது இந்த அளவு சுமை ஏறி இருக்காது" என்று பேசி இருக்கிறார் பிரதமர்.

அப்போது வரியை குறைக்கச் சொன்னதும் பா.ஜ.கதான்.. இப்போது மக்களை வதைப்பதும் பா.ஜ.கதான்.. முரசொலி தலையங்கம்!

அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியைக் குறைப்பதில் முந்தைய அரசு கவனம் செலுத்தத் தவறியதே பெட்ரோல் விலை கூடுவதற்கான காரணம் என்கிறார் மோடி. அய்யா! பிரதமர் அவர்களே! இத்தகைய இறக்குமதியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தாங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்பதுதான் நாட்டு மக்கள் எழுப்பும் கேள்வி!" காரணம் சொல்பவர், காரியம் செய்யமாட்டார்" என்பார்கள். அதுபோல காரணம் சொல்லியே ஏழு ஆண்டுகளாக எந்தக் காரியமும் செய்யாத பிரதமர்தான் மோடி.

பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் இவர்கள் சொல்லி வந்த ஒரே வரிபதில்: கச்சா எண்ணெய் விலை உயர்கிறது, அதனால் பெட்ரோல் விலை உயர்வும் தவிர்க்க முடியாதது என்றார்கள். ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் எதற்காக பெட்ரோல் விலை குறையாமல் இருக்கிறது என்பதுதான் கேள்வி! இவர் எந்த மன்மோகன் சிங்கை குறை சொல்கிறாரோ, அதே மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் விலை எப்படி இருந்தது?

2012: இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .67. அப்போது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை: பீப்பாய் ரூ. 117 டாலர். 2021: இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100. உலகளாவிய கச்சாஎண்ணெய் விலை: பீப்பாய் ரூ.53 டாலர்.. டாலர் மதிப்பைக் கருத்தில் கொள்ளும் போது 2012ல் ரூ.53 ஆகவும், இப்போது ரூ .73 ஆகவும் உள்ளதால், டாலர் விலையை ஒப்பீடு செய்து பார்த்தால், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை முறையே ரூ .6201 (2012) மற்றும் ரூ .3869 (2021) ஆகும். பீப்பாய் விலையை பகுத்தறிவு செய்தால், விற்பனை விலை லிட்டருக்கு ரூ.67/ லிட்டராக இருந்ததால், பெட்ரோல் இன்று செலவு உட்பட லிட்டர் ரூ.42க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஓரளவு பொருளாதார அறிவு கொண்டவர்களும் சொல்லி வருகிறார்கள்.

சுப்பிரமணிய சுவாமியும் 40 ரூபாய்க்குதான் விற்க வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறார். ஏன் அதிக விலைக்கு விற்கிறீர்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி! ஆனால் பிரதமர் எழுப்பும் கேள்வி என்பது, ஏன் அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும். இந்த நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடவில்லை. அப்படி ஏற்பட்டு இருந்தால் மாற்று எரிசக்தியைப் பற்றி நீண்ட நேரம் பிரதமர் எடுக்கும் பாடத்தைக் கேட்கலாம்.

இப்போதைய பிரச்சினை, குறைவான விலைக்கு வாங்கி அதிகமான விலைக்கு ஏன் விற்கிறீர்கள் என்பதுதான் கேள்வி! பிரச்சினையையே திசை திருப்புகிறார் பிரதமர்! கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல் விலையைக் குறைக்காதது மத்திய அரசின் தவறு அல்லவா? அப்படி குறைக்காமல், விலையைக் கூட்டும் வகையில் வரிகளை அதிகப்படுத்தி அரசின் வருவாயைக்கூட்டிக் கொண்டதை எதற்காக மறைக்கிறீர்கள்? மோடி பிரதமரான போது கச்சா எண்ணெய் விலை என்ன? இன்று விலை என்ன?

அன்று பெட்ரோல் விலை என்ன? இன்று விலை என்ன? இதனை பிரதமரால் சொல்ல முடியுமா? எதிர்க்கட்சியாக இருக்கும் போது வரிகளைக் குறை என்று சொன்னது, பா.ஜ.க.; ஆளும் கட்சியாக ஆனதும் வரிகளைக் கூட்டி மக்களை வதைப்பதும் அதே பா.ஜ.க. தான். இன்றைக்கு உலக அளவில் அதிகமான அளவுக்கு விலையை உயர்த்தி விற்கும் நாடு இந்தியா. விற்கும் பிரதமர், ஏழைத் தாயின் மகன் என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்? பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியாக எளிய மக்களிடம் இருந்து சுமார் ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுக் கொள்வதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோல் விலை 23.78 ரூபாயும் டீசல் விலை 28.37 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதாவது பெட்ரோல் விலை 258 சதவிகிதம் உயர்ந்துள்ளது. டீசல் விலை 820 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்தாலே பெட்ரோல் விலை 60 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாகவும் குறைந்துவிடும். இவை அனைத்தையும் மறைப்பதற்காக மாற்று எரிசக்தியைப் பற்றிப் பேசுகிறார் பிரதமர். பேசவில்லை, பசப்புகிறார் பிரதமர்.

banner

Related Stories

Related Stories