முரசொலி தலையங்கம்

“எழுவர் விடுதலையில் அ.தி.மு.கவின் ஏழு நாடகங்கள்” - பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்!

மத்திய அரசை, பா.ஜ.க.வை, ஆளுநரை எதிர்க்கத் துப்பு இல்லாத பழனிசாமி, தி.மு.க.வை விமர்சிப்பது கேவலமானது.

“எழுவர் விடுதலையில் அ.தி.மு.கவின் ஏழு நாடகங்கள்” - பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"எழுவர் விடுதலையில் தி.மு.க. அரசியல் நாடகம் நடத்துகிறது" என்று சட்டமன்றத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி. மத்திய அரசை, பா.ஜ.க.வை, ஆளுநரை எதிர்க்கத் துப்பு இல்லாத பழனிசாமி, தி.மு.க.வை விமர்சிப்பது கேவலமானது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, தி.மு.க.வை விமர்சித்து திசைதிருப்புகிறார் பழனிசாமி! எழுவர் விடுதலையில் எல்லா வகையிலான நாடகங்களையும் நடத்தியது அ.தி.மு.க.தானே தவிர, தி.மு.க. அல்ல. இதற்கு கழகத் தலைவர் விளக்கம் அளித்துவிட்டார்.

"ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று தி.மு.க. சொல்கிறது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒப்புதல் தராத ஆளுநரை தி.மு.க. கண்டிக்கிறது. இதனால் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறது. இதில் எதை நாடகம் என்கிறார் பழனிசாமி? இதில் என்ன நாடகத்தைப் பார்த்தார் பழனிசாமி? இந்தக் கோரிக்கையோடு போய் நாங்கள் ஆளுநரைப் பார்த்தோம். ஆனால் அப்படி சொல்லிக்கொள்ளாமல் போய் பார்த்தார் பழனிசாமி. ஆனால் ஏழுபேர் விடுதலை குறித்து பேசத்தான் ஆளுநரைச் சந்தித்ததாக நாடகம் ஆடுகிறார் பழனிசாமி!"- என்று தி.மு.க. தலைவர் சொல்லி இருக்கிறார்.

தி.மு.க. தலைவரின் பேட்டி என்பது ஆளுநருக்கு எதிரானது. ஆனால் பழனிச்சாமிக்கு எதற்காக வலிக்கிறது? இந்த ஏழுபேர் விடுதலையில் அ.தி.மு.க. அரசும், அ.தி.மு.க.வும் நடத்திய நாடகங்கள் ஏராளமானவை. அதில் ஏழு மட்டும் இங்கே பதிவு செய்யப்படுகிறது!

“எழுவர் விடுதலையில் அ.தி.மு.கவின் ஏழு நாடகங்கள்” - பட்டியலிட்ட முரசொலி தலையங்கம்!

1. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுத்துள்ளார். அது அவரது உரிமை. ஆனால் இந்த முடிவை ஜனவரி 25 ஆம் தேதியே எடுத்துவிட்டார். ஆனால், அவர் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று 29ஆம் தேதி அவரைச் சந்தித்து வலியுறுத்தியதாக நடித்தாரே. அதுதான் நாடகம்!

2. பிப்ரவரி 4ஆம் தேதி தி.மு.க.வை விமர்சித்து மிகப்பெரிய அறிக்கையை சட்டமன்றத்தில் பழனிசாமி வாசித்தார். "இந்த விவகாரத்தில் மாண்புமிகு ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று சட்டமன்றத்தை ஏமாற்றினார் பழனிசாமி. அன்று மாலையே, ஆளுநரின் கைவிரிப்புக் கடிதம் வந்துவிட்டது. மாலையில் ஆளுநரின் கடிதம் வெளியே வரப்போவது தெரிந்து, முன்கூட்டியே இப்படி ஒரு அறிக்கையை பழனிசாமி வெளியிட்டாரே, அதுதான் நாடகம்!

3. எழுவர் விடுதலையில்தான் ஏதோ உறுதியாக இருப்பதைப் போல பழனிசாமி சொல்கிறார். ஆனால் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சென்று மனு தாக்கல் செய்த அரசுதான் பழனிசாமி அரசு. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பேரறிவாளனுக்கு விடுப்பு நீடிப்பு கூடாது என்று வாதிட்டார். இதுதான் நாடகம்!

4. இதே நாடகத்தைதான் ஜெயலலிதாவும் செய்தார். அவரது ஆட்சிக்காலத்தில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், பரோல் கேட்டு நளினி மனு தாக்கல் செய்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை மறுத்தவர்தான் முதல்வர் ஜெயலலிதா. அதாவது நளினியை முழுமையாக விடுதலை செய்யப் போவதாகச் சொன்ன ஜெயலலிதாதான், அவருக்கு பரோல் கொடுக்க மறுத்தார். இதுதான் நாடகம்!

5. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசின் அமைச்சரவை கூடித் தான் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை அப்போது எதிர்த்தவர்தான் ஜெயலலிதா. அவர் தான் பின்னர் எழுவர் விடுதலைக்கு ஆதரவாளர் போல நாடகம் ஆடத் தொடங்கினார். அன்று சட்டமன்றத்தில் (26.4.2000) அ.தி.மு.க. உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், தி.மு.க.அரசை விமர்சித்தார். "இதைப் பார்க்கும் போது இந்த தி.மு.க. அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ரகசிய உறவு இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது" என்றார். இது எல்லாம் பழனிசாமிக்குத் தெரியாது.

6. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு தீர்ப்பளிப்பதற்கு முன்பு வரை இவர்களுக்கு எதிராக இருந்தவர்தான் ஜெயலலிதா. அவர்களை விடுதலை செய்யமாட்டேன் என்று சொல்லி வந்தவர் ஜெயலலிதா. இனிமேல் நீதிமன்றம் கேள்வி எழுப்பாது என்று தெரிந்த பிறகுதான், விடுதலைக்கு ஆதரவாளர் போல நாடகம் ஆடினார் ஜெயலலிதா.

7. "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதிதான் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார்" என்று குற்றம்சாட்டியவர் தான் (23.10.2008) ஜெயலலிதா. நளினியின் தண்டனையைக் குறைத்தது சோனியா செய்த தவறு என்றும், நளினியை பிரியங்கா சந்தித்தது தவறு என்றும், நளினி ஏதோ உரிமைக்குப் போராடுவது போல வழக்குப் போடுகிறார் என்றும், உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது என்றும் அறிக்கை விட்டவர்தான் ஜெயலலிதா.

இது எதுவும் தெரியாமல் நாடகம்ஆடிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. இப்படி ஒரு அறிக்கையை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த யாரோ எழுதிக் கொடுத்திருப்பார்கள் போல. வரலாற்றில் எந்தச் சம்பவங்களும் தெரியாத அறிவிலிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சட்டமன்றத்தில் பழனிசாமி படித்தது அருவருப்பு ஏற்படுத்துகிறது. எழுவர் விடுதலையை யார் தடுக்கிறார்கள் என்பதை ஊருக்குச் சொல்ல தைரியம் இல்லாவிட்டால் சும்மா இருப்பதுதான் பழனிசாமிக்கு நல்லது.

banner

Related Stories

Related Stories