
கழகத் தலைவரும், மிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.04.2026) நாமக்கல்லில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!”
கருப்புக் கொடியேற்றி இன்றைக்கு காட்டிவிட்டோமா… இது வெறும் டிரெயிலர்தான்! மெயின் பிக்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக் கூடாது!
“தமிழர்களின் ரத்தத்தில் சூடு குறைந்துவிட்டது, தெருவில் இறங்கிப் போராட மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்... மொழிக்காக வீதிகளில் இறங்கியவர்கள்... எங்கள் இனத்தின் உரிமைக்காக இறங்கமாட்டோமா? தமிழர்களுக்காகப் போராட யார் இருக்கிறார்கள் என்று நினைத்தார்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறான்! ஆயிரம் எமர்ஜென்சியைப் பார்க்க நான் தயார்!
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள்... தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம்! தென்மாநில மக்களுடைய குரலை மதிக்கமாட்டேன் என்று இருக்கும் ஒன்றிய பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்குவோம்!
மாநிலங்களால் உருவாகியிருக்கும் இந்தியாவில் - மாநிலங்களை நசுக்க வேண்டும் என்று நினைத்தால் - கை கட்டி, வாய் பொத்தி, அடிமையாக அடங்கியிருப்போம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறீர்கள்...
தமிழ்நாட்டின் போராட்டக் குணத்தைப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் என்று டெல்லியை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டிற்கு எதிராகப் பா.ஜ.க.வும் - அதற்கு ஜால்ரா போடும் அ.தி.மு.க.வும் ஏற்படுத்தியிருக்கும் பேராபத்து!”
தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க பா.ஜ.க. போடும் சதி திட்டம்தான், தொகுதி மறுசீரமைப்பு. அதனை வெளிப்படையாக எதிர்ப்பதற்குக்கூட முதுகெலும்பற்ற கூட்டம்தான் அ.தி.மு.க.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி.க்கள் அனைவரும் பிரச்சாரத்தில் இருப்பார்கள்; இந்த இடைவெளியில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்று பா.ஜ.க. நினைத்தது!
முதலில், மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்! அப்போதுதான் ஜனநாயகத்தில் தேர்தலுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். நாம் போடும் வாக்குக்கே வேல்யூ இல்லை என்று ஒரு நிலை வரும் என்றால், அதை எதிர்க்க வேண்டாமா? அதனால்தான், நம்முடைய எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்!
நமக்கு கொள்கைதான் முக்கியம்! தமிழ்நாட்டு உரிமைகள்தான் முக்கியம்! நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னதுதான், எங்களுக்கு பதவி என்பது தோளில் போடும் துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி!
பேரறிஞர் அண்ணாவும் - தலைவர் கலைஞரும் தந்த தன்மான உணர்வோடு, தமிழ்நாட்டைப் பாதுகாக்க உங்களுடைய ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் உருவாக்கிய நாமக்கல் மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையை உருவாக்கிய தலைவர் கலைஞரின் மகனாக நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன்.
உங்கள் அனுமதியோடு வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
முதலில், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மதிவேந்தன் அவர்கள்! மருத்துவம் படித்து, மாண்புமிகு அமைச்சராக உயர்ந்து, அவர் கவனித்த துறைகளை வளர்த்தெடுத்தவர்.
அடுத்து, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள்! நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வலுசேர்க்கும் தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர். கடந்த முறை உங்களுடைய குரலாக சட்டமன்றத்தில் ஒலித்து, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
அடுத்து, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே.பி. ராணி அவர்கள். ராணி என்று தெரிவதைவிட, நாமக்கல் ராணி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு இந்த ஊரையே தன்னுடைய அடையாளமாக மாற்றியிருக்கும் கழக வீராங்கனை. நாமக்கல் நகர்மன்ற உறுப்பினராகவும் – ஒன்றிய குழுத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர்!
அடுத்து, சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் பூமலர் அவர்கள்! சேந்தமங்கலம் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மரியாதைக்குரிய நினைவில் வாழும் பொன்னுசாமி அவர்களின் அன்பு மகள். பொன்னுசாமி அவர்கள் காலத்தில்தான், கொல்லிமலை வளர்ச்சி அடைந்தது! கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.
அடுத்து, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ். பாலு அவர்கள்! பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பல ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றிய மக்கள் தொண்டர்.
அடுத்து, பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே.எஸ். மூர்த்தி அவர்கள். ஒன்றியச் செயலாளர், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகச் செயலாற்றியவர். ஏற்கனவே உங்கள் எம்.எல்.ஏ.வாக நிறைய திட்டங்களை கொண்டு வந்திருப்பவர்.
இவர்கள் அனைவரின் வெற்றிக்கு, நம் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அனைவரும் வாக்கினை வழங்கிட வேண்டும். இங்கு நிற்கும் வேட்பாளர்களின் வெற்றி உறுதிதானே? உறுதி (மக்கள்). நன்றி! இப்போது வேட்பாளர்கள் உட்காரலாம். உங்கள் சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது!
நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் – ஒவ்வொரு வட்டத்துக்கும் – ஒவ்வொரு ஊராட்சிக்கும் என்ன தேவை என்று பார்த்து பார்த்துச் செய்திருக்கிறோம்.
இப்படி சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சிறந்து விளங்கும் இந்த நாமக்கல் மாவட்டத்துக்கு, நம்முடைய திராவிட மாடல் கவர்மெண்டில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களில் சிலவற்றை மட்டும் ஹைலைட்ஸாக சொல்ல வேண்டும் என்றால்,
நாமக்கல் நகராட்சி மாநகராட்சியானது,
இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம்,
பள்ளிப்பாளையம், ஆலப்பாளையம், படவீடு கூட்டுக் குடிநீர் திட்டம், மோகனூர் புதிய குடிநீர் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தியுள்ளோம்.
இராசிபுரத்தில் புதிய அரசு மாவட்ட மருத்துவமனை,
திருச்செங்கோட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவமனைக் கட்டடம்,
நாமக்கல் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம்,
சேந்தமங்கலத்தில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்,
இராசிபுரம் திருவள்ளுவர் கல்லூரியில் புதிய கட்டடம்,
குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றைக் கட்டியுள்ளோம்.
நாமக்கல்லில் அறிவுசார் மையம், தினசரி சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், புதிய பேருந்து நிலையம், திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கலைக் கல்லூரி திறப்பு,
92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பால் பண்ணை, பால் பதப்படுத்தும் ஆலை என ஏராளமாகச் செய்து தந்திருக்கிறோம்! அந்த உரிமையோடும் இன்னும் நிறையச் செய்து தர வேண்டும் என்ற உறுதியோடும்தான் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் இப்படி சாதனைகளை பட்டியலிட்டு பேசுகிறாரா? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... ஐந்தாண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்தது? அலங்கோலத்துக்கும் – அவலத்துக்கும் எடுத்துக்காட்டாக ஒரு ஆட்சியை பழனிசாமி நடத்திக் கொண்டிருந்தார். குட்காவில் ஆரம்பித்து, நெடுஞ்சாலைகள் வரைக்கும் ஊழல்கள், முறைகேடுகள்! கூவத்தூர் தொடங்கி, கொடநாடு கொலை வரைக்கும் விலகாத மர்மங்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் பக்கத்தில் இருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் வரைக்கும் மக்கள் கதறல்கள்! பழனிசாமி ஆட்சியில் எதிலும் கலெக்ஷன், எல்லாவற்றிலும் கரப்ஷன், எதுக்கெடுத்தாலும் கமிஷன் எனும் நிலை இருந்தது! வள்ளுவருக்கு காவி பூசினாலும் கப்சிப், எம்.ஜி.ஆருக்கு காவி பூசினாலும் கப்சிப்! இதுதான் பழனிசாமி ஆட்சியின் நிலைமை!
அ.தி.மு.க. ஆட்சியே இவ்வளவு கேவலமாக இருந்தது என்றால், என்.டி.ஏ. ஆட்சி என்று பா.ஜ.க. தமிழ்நாட்டில் மொத்தமாக ஆட்டம் போடத் தொடங்கினால் என்ன ஆகும்? மதவாதம் தலைதூக்கும்! கலவரங்கள் உண்டாகும்! மக்கள் பிளவுபடுவார்கள்! மாநில உரிமைகள் பறிக்கப்படும்! குலக்கல்வியைக் கொண்டு வருவார்கள்! பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நாசப்படுத்துவார்கள்! இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பார்கள்! பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டைப் பறிப்பார்கள்! சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை மகாராஷ்டிரா பாணியில் ரத்து செய்வார்கள்! தமிழைச் சிதைக்க இந்தியைத் திணிப்பார்கள்! ஏன், தமிழ்நாடு என்ற அடையாளத்தையே அழித்து தட்சிணப் பிரதேசம் என்று பெயரையே மாற்றிவிடுவார்கள்! அதற்காகத்தான் பா.ஜ.க.வுக்கு பழனிசாமி வாக்கு கேட்டு வருகிறார்! அதனால்தான் இந்தத் தேர்தலை தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி என்று சொல்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு பதினோராவது தோல்வியை நீங்கள் கொடுக்க வேண்டும்! தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்கச் சரண்டரான இடம்தான் பா.ஜ.க. வாஷிங் மெஷின்! தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள்! அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.வுக்கு விழும் வாக்குகள் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்!
எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்! டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவப் பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்! அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்!
நினைத்துப் பாருங்கள், 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்தோம்! இன்றைக்கு இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்திருக்கிறோம். ஏன்? இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல்தான் என்று சொல்லலும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்!
எந்த அளவுக்கு என்றால், மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் தி.மு.க. என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் என்ன மாதிரியான மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறார் என்று பார்க்க வேண்டும், அதை அப்படியே நம்முடைய மாநிலத்தில் செயல்படுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். இந்த மாதிரி நல்லாட்சியைக் கொடுக்கும் காரணத்தால்தான் திராவிட மாடல் ஹீரோ ஆஃப் இந்தியா என்று பெயர் எடுத்திருக்கிறது!
அப்படிப்பட்ட நம்முடைய திட்டங்களை நான் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி சொல்லட்டுமா?
மே 7, 2021 அன்று “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று தலை நிமிர்த்தி சொன்னேன்! இனி தமிழ்நாடும் தலைநிமிர்ந்துவிடும் என்று அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்.
முதல் நாள் – முதல் கையெழுத்திலேயே மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டேன். அதைத் தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்களைத் தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.
ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை வழங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், இனி உங்கள் உரிமைத்தொகை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, ஆயிரம் அல்ல… இரண்டாயிரம் ரூபாயாக உயரப் போகிறது!
அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், இனி இந்தத் தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!
19 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு சூடாகவும் – சுவையாகவும் சத்தான உணவை வழங்கும் காலை உணவுத் திட்டம்! இந்தத் திட்டம் இப்போது ஐந்தாம் வகுப்பு வரை… 2.0 ஆட்சி வந்ததற்கு பிறகு எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
பல இலட்சம் உயிர்களைக் காக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பல்லாயிரம் பேருடைய உயிர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம்!
பாதம் பாதுகாப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்!
ஒன்றிய அரசே பின்பற்றப் போவதாகச் சொல்லியிருக்கும் தோழி விடுதித் திட்டம்!
ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்!
கலைஞர் கனவு இல்லம்!
இப்படி நாள் முழுவதும் என்னால் பட்டியலிட முடியும்!
2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக உங்களுடைய ஆதரவைக் கேட்டு வரும்போது, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாகக் கொடுத்துவிட்டுத்தான் நான் வாக்குக் கேட்டேன். அந்த அடிப்படையில், எதிர்காலத் தமிழ்நாட்டை கட்டமைக்கப் போகும் செயல்திட்டத்தை சூப்பர்ஸ்டாராக களமிறக்கியிருக்கிறோம்! சூப்பர்ஸ்டார் யாரு? சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்னக் குழந்தைகள்கூடச் சொல்லும். அதுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை!
அதில், என்னென்ன ஹைலைட்? இங்கிருக்கும் மகளிரை நான் கேட்கிறேன்... உங்கள் அண்ணன் இந்த ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்! மகளிர் எல்லாம் இப்போதே வீட்டுக்கு என்ன புதிய பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! இந்தக் கூப்பனை வைத்து உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதியதாகவும் வாங்கிக் கொள்ளலாம், இல்லையென்றால் பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் – உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக்கொள்ளலாம்! தயவுசெய்து வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்டுவிடாதீர்கள். உங்களை குழப்பிவிடுவார்கள். ஏதாவது பிரச்சினை பண்ணிவிடுவார்கள். ஏதாவது பிரச்சினை என்றால், இந்த அண்ணனிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.
அடுத்து, 20 இலட்சத்துக்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில் நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!
உயர்கல்வி படித்து முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையோடு 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
மேற்கு மாவட்டங்களில் தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல, 2 ஆயிரம் கோடி ரூபாயில் சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம்!
நாமக்கல்லில் ஜவுளிக் குழுமம் என ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம். நாங்கள் சொன்னால் சொன்னதைச் செய்வோம்!
இப்படி நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையோடு நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தால், எப்படியெல்லாம் பின்னோக்கி இழுக்கலாம் என்று பா.ஜ.க. சதித் திட்டம் போடுகிறது.
தெற்கு மறுபடியும் தேய வேண்டும் என்று பா.ஜ.க. உருவாக்கியிருக்கும் லேட்டஸ்ட் பிளான்தான், இந்த தொகுதி மறுசீரமைப்பு! தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருப்பது போராட்டம் இல்லை, போர்! போர்கள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை! முதலில் சமூகநீதிப் போர்! இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே முதலில் திருத்த வைத்தது தமிழ்நாடுதான்!
அடுத்து, மொழிப்போர்! தாய் கொடுத்த உயிரைத் தாய் மொழிக்குத் தந்து கட்டாய இந்தியை விரட்டிய வீரம் செறிந்த வரலாற்றுக்குச் சொந்த மண், நம்முடைய தமிழ்நாடு! இந்தப் போரில்தான் நேருவின் உறுதிமொழியும் வந்தது, பேரறிஞர் அண்ணாவும் இருமொழிக் கொள்கையை உருவாக்கினார்! இப்போது நடப்பது தமிழ்நாட்டின் அரசியல் உரிமைக்கான போர்!
ஏன் இந்தப் போர் என்றால், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய நாட்டில் பசியும் வறுமையும் அதிகமாகி இருக்கிறது, இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்தையும் – தேச நலனையும் மனதில் வைத்துக் கொண்டு, நம்முடைய தமிழ்நாடும் – இன்னும் பல மாநிலங்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநில மக்கள்தொகைக்கு ஏற்றாற்போல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான் விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கிறது!
புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால், 1971 சென்சஸ்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி. உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை எட்டு கோடி. இன்றைக்கு, தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்...

நமக்கும் அவர்களுக்கும் மூன்று மடங்கு வித்தியாசம்.. இப்படி இருக்கும்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் அது நியாயமாக இருக்குமா?
இதனை உணர்ந்துதான், இந்திரா காந்தி அவர்களும் – வாஜ்பாய் அவர்களும் தொகுதி மறுசீரமைப்பு முடிவைத் தள்ளிப் போட்டார்கள்... இப்போது இந்தத் திட்டத்தை இவ்வளவு அவசர அவசரமாக மோடி செய்ய வேண்டிய ரகசியம் என்ன? இப்படியொரு அநீதி நடந்தால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் வலுவிழந்துவிடும்.
நம்முடைய எம்.பி.க்களுக்கு பவர் இல்லை என்றால் டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்பது நடக்கவே நடக்காது. இனி அதை நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ்நாடு மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படுவதை அனுமதிக்கலாமா? இந்த ஆபத்துதான் தொகுதி மறுசீரமைப்பு!
நாம் என்ன கேட்கிறோம், கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்க நினைக்காதீர்கள். வரிப்பணத்திற்கு மட்டும்தான் தமிழ்நாடு உங்களுக்குத் தேவையா? பா.ஜ.க.வின் அதிகார திமிரை அடக்கும் காலம் வந்துவிட்டது. தலைவர் கலைஞர் பராசக்தியில் வசனம் எழுதியிருப்பார், இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது என்று எழுதியிருப்பார்.
அதேபோன்று, நம்முடைய நாடும் எத்தனையோ பிரதமர்களைச் சந்தித்திருக்கிறது! ஆனால் பிரதமர் மோடி அவர்கள் மாதிரி மாநிலங்களை நசுக்கியவர்கள் யாரும் கிடையாது. இத்தனைக்கும் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி வக்கணையாகப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருந்தார்.
என்னென்ன பேசினார்? ஒன்றிய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 50 விழுக்காட்டைத் தர வேண்டும் என்று சொன்னார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று சொன்னார். ஒன்றிய அரசுகளுடைய அதிகாரக் குவிப்பைக் கடுமையாக எதிர்த்தார். இதெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி அவர்கள் சொன்னது.
ஆனால் இப்போது, மாநில அதிகாரங்களைப் பறித்து ஒன்றியத்தில் குவிக்கிறார். மாநிலங்கள் உரிமையைக் கேட்பது வேப்பங்காயாகக் இப்போது கசக்கிறது. மொத்தத்தில் கூட்டாட்சிக் கருத்தியலையே குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்.
முதல்முறையாகப் மோடி அவர்கள் பிரதமரானபோது நாடாளுமன்றத்துக்கு முன்னால் பவ்யமாக விழுந்து கும்பிடு போட்டார் நம்முடைய பிரதமர், இப்போது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே ஒரே அடியாகக் கும்பிடு போட வேண்டும் என்று நினைக்கிறார். அதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுசீரமைப்பு!
மகளிர் இடஒதுக்கீடு என்று அவர்கள் சொல்வது பம்மாத்து வேலை. உண்மையிலேயே அதுதான் நோக்கம் என்றால், 2023-இல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியபோது, 2029-க்குப் பிறகு என்று சொன்னார்கள்? ஏனென்றால் மகளிர் முன்னேற்றம் இவர்களின் நோக்கம் இல்லை; இவர்களின் நோக்கம் ஆர்.எஸ்.எஸ். விரும்பும் ஒரே நாடு, ஒரே அரசு! அதற்காகத்தான் அரசியல் சட்டத்தைக் காலால் மிதித்து இவ்வளவு அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதை எப்படித் தமிழ்நாடு ஒத்துக் கொள்ள முடியும்?
தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மனிதர்களும் இன்றைக்கு எதிர்த்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த அநீதிக்கும் ஆதரவாகப் பேசும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர்தான், அரசியல் அவமானமாகப் பார்க்கப்படும் அடிமைசாமி! புரிகிறதா, அடிமைசாமி என்று யாரை சொல்கிறேன் என்று...
இன்றைக்கு நாட்டில் இவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. பழனிசாமி என்ன பேசியிருக்கிறார் என்றால்... டீ-லிமிட்டேஷனால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து வராது என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்காது என அமித் ஷாவே சொல்லிட்டார் என்று பழனிசாமி பேசுகிறார். ஒன்றிய அரசு சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசியிருக்கிறார்.
அமித் ஷா எங்கே சொன்னார்? தேர்தல் பிரசாரத்தில்! நாங்கள் என்ன கேட்டோம்? நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்கிறோம். எங்களுக்குப் பேப்பரில், சட்டபூர்வமாக நாடாளுமன்றத்தில், உறுதிமொழி வேண்டும்! 1971 மக்கள் தொகை அடிப்படையில்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி அளவு இருக்கும் என்கிற உறுதிமொழி வேண்டும்.
தேர்தல் கூட்டத்தில் அமித் ஷா சொன்னதையெல்லாம் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். கூட்டணியில் இருக்கும் பாவத்திற்கு அடிமை பழனிசாமி வேண்டுமானால், அதையெல்லாம் நம்பலாம்! தி.மு.க.வோ – தி.மு.க. ஆளும் தமிழ்நாடோ - வேல்யூ இல்லாத உங்களுடைய வெற்று வார்த்தைகளை நம்பாது!
பழனிசாமி இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறார்… “ஆபத்து வரும் பின்னே… பழனிசாமியின் லா பாயிண்ட் வரும் முன்னே” என்று, இதனை நாம் எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.
தனிமனிதர்களைவிட நமக்கு தமிழ்நாடுதான் பெரிது! எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பா.ஜ.க. எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்!
டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கண்ட்ரோலுக்கு அடிமைகள் தமிழ்நாட்டில் ஆடக் கூடாது!
அதற்கு, ராசிபுரத்தில் மதிவேந்தன் அவர்களுக்கும், திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் அவர்களுக்கும், நாமக்கல்லில் ராணி அவர்களுக்கும், சேந்தமங்கலத்தில் பூமலர் அவர்களுக்கும், குமாரபாளையத்தில் எஸ். பாலு அவர்களுக்கும், பரமத்தி வேலூரில் மூர்த்தி அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் முட்டை சப்ளை செய்வது நாமக்கல்தான்! அப்படிப்பட்ட நீங்கள் என்.டி.ஏ. எனும் தமிழ்நாட்டுக்கு விரோதமான கூட்டணிக்கும் நாமக்கல்லில் பெரிய முட்டையைப் போட்டு அனுப்ப வேண்டும்!
மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கலைஞரின் மகனாகக் கேட்கிறேன்.
அடுத்து அமையவுள்ள நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்! இது உங்களுக்கு இந்த ஸ்டாலின் தரக்கூடிய கேரண்டி! நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
நன்றி! வணக்கம்!