
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு, அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்றாவது முறையாக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
அதேபோல், கேரள ஆளுநர் இராசேந்திர அர்லேகர் மற்றும் கர்நாடகா ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் இருந்து அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் வெளி நடப்பு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தபோதே, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்" என்று கூறினார்.
அடுத்தடுத்து கர்நாடகா, கேரளா ஆளுநர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ள நிலையில்,ஆளுநர் உரைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு என மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”முதலில் தமிழ்நாடு. பின் கேரளா. இப்பொழுது கர்நாடகா. இந்த நடைமுறை மிகவும் தெளிவானது மற்றும் திட்டமிடப்பட்டது.
மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரையைப் படிக்க மறுப்பதன் மூலமும், கட்சி முகவர்களைப் போலச் செயல்படுவதன் மூலமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் சிறுமைப்படுத்துகின்றனர்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான்.
இந்த வழக்கற்றுப் போன மற்றும் தேவையற்ற நடைமுறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர, இந்தியா முழுவதும் உள்ள ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து தி.மு.க நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.






