
மதுரை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு விழா, மதுரை TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2025) பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 31.5.2025 அன்று மதுரை மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது பந்தல்குடி வாய்க்காலை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது, தூர் வாரும் பணிகளையும், சுற்றுச்சுவர்களை கட்டும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பந்தல்குடி கால்வாயில் 69 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாயின் இருபுறமும் வெள்ள தடுப்பு பக்கவாட்டு சுவர் கட்டும் பணிகள், கால்வாயில் தண்ணீர் செல்லும் திறனை மேம்படுத்துவற்காக மண்படுகைத் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றம் செய்யும் பணி, கால்வாயில் குப்பைகள் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் கொட்டுவதை தடுப்பதற்காக பக்கவாட்டு சுவரின் மேற்புறத்தில் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு கம்பிவேலி அமைக்கும் பணி, கால்வாயின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்வதற்காக ஏற்கனவே கட்டப்பட்டிருந்த சிறு பாலங்களில் பழுதடைந்து மோசமான நிலையிலுள்ள மூன்று சிறு பாலங்களை மறுகட்டுமானம் செய்யும் பணி ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

இந்த பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், பக்கவாட்டு வெள்ள தடுப்புச்சுவர் கரைமட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு கட்டப்படவுள்ளதால் வெள்ளநீர் வெளியேறுவது தடுக்கப்படும், கால்வாயின் தரைதளம் கான்கிரீட் தளமாக மாற்றப்படவுள்ளதால் நீரின் ஓட்ட வேகம் அதிகரித்து கால்வாயில் நீர் தேங்காத நிலை ஏற்படும், பக்கவாட்டுச் சுவரின் மீது கம்பி வேலி அமைக்கப்பட்டு கால்வாயில் குப்பைகள் மற்றும் இதர கழிவுபொருட்கள் கொட்டுவது தடுக்கப்படும். இதன்காரணமாக, இப்பகுதி மக்கள் மழை காலங்களில் வெள்ள அபாயமின்றியும், நோய் தொற்று இல்லாமலும் வாழ வழிவகை செய்யப்படும்.
இந்த ஆய்வின்போது, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.






