
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2025) சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி, ஆற்றிய உரை.
கண்களில் கனவையும், இதயத்தில் இலட்சியத்தையும் சுமந்து இன்று பட்டம் பெற்றுள்ள மாணவ மாணவியர்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தலைசிறந்த கல்வியை வழங்கியிருக்கக்கூடிய தலைமைப் பண்புமிக்க மாணவர்களை உருவாக்கி வரக்கூடிய, இந்த பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர், நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
இங்கே பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாள் இந்த நாள். அப்படிப்பட்ட நாளில் உங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நானும் உங்களை வாழ்த்துவதில் மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
உங்கள் கையில் இருக்கும் ‘Degree’ என்பது வெறும் பேப்பர் இல்லை! உங்களுடைய உழைப்பின் விளைச்சல்! உங்கள் அறிவுக்கான - திறமைக்கான அங்கீகாரம்! இந்த நாள் உங்கள் குடும்பத்தின் பல தலைமுறை கண்ட கனவு, மெய்ப்படக்கூடிய நாளாக அமைந்திருக்கிறது! மதிப்புமிக்க பாரதிதாசன் கல்வி நிறுவனத்திலிருந்து நீங்கள் டிகிரி பெற்று இருக்கிறீர்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் மேலாண்மை பள்ளியாக ‘BHEL’ வளாகத்தில் நிறுவப்பட்ட பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. மேனேஜ்மெண்ட் சார்ந்த கல்வித் துறையில், இந்திய அளவில், தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது.
இங்கு படித்த உங்களுடைய சீனியர்ஸ் எல்லாம், இப்போது, பல தொழில் நிறுவனங்களில், கல்வி மற்றும் சமூக துறைகளில் Top Position-ல் இருக்கிறார்கள்! அந்த List-ல் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும். ஏன் நீங்கள் உருவாக்குகின்ற நிறுவனம் அந்த டாப் லிஸ்டில் வரவேண்டும்.
இந்த பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் உங்களை மட்டும் Shape செய்யவில்லை. இங்கே வீடியோவில் வந்ததுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாய்வுத் திட்டம் - மாநில திட்டக் குழு - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை - தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - C.M.D.A - நீர்வளத் துறை என்று பல்வேறு அரசு துறைகளிலும் மேனேஜ்மெண்ட் பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவிலேயே உயர்கல்வியில் விளங்கக்கூடிய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதம், N.I.R.F. தரவரிசை என்று பல குறியீடுகள் அதற்கு சான்றாக இருக்கிறது. இப்படி உயர்கல்வியில் தமிழ்நாடு சிறக்க காரணம் யார்? ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் எல்லாம் இன்றைக்கு படித்து முன்னேறி, உலகம் முழுவதும் Top Position-ல் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் யார்? திராவிட இயக்கம்!
இந்த அடித்தளத்தில், உயர்கல்வியில் தலைசிறந்த தமிழ்நாட்டை கட்டமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உயர்கல்விக்கு என்று ஏராளமான திட்டங்கள் - கல்விக் கட்டணச் சலுகைகள், புதிய பல்கலைக்கழகங்கள் - நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்று உயர்கல்விக்காக அதிகமாக செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அதன் தொடர்ச்சியாகதான், நம்முடைய திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - கல்லூரி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் - படித்து முடித்ததும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம் - அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு முதலமைச்சரின் ஆய்வு திட்ட நிதி உதவி - வசதி வாய்ப்பு இல்லாத வீட்டுப் பிள்ளைகளும், உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!

உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும்! கொஞ்சம் அசந்தாலும், 'Outdate' ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள்.
அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது! அவர்கள் உருவாக்கும் பாசிட்டிவ் தாக்கம்தான்! இந்த ஏ.ஐ. காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும்!
வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம்! எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில Basics எப்போதும் மாறாது! அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்!
இதற்காக பெரிய பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்க வேண்டும் என்று இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும் அடிப்படையான மேனேஜ்மெண்ட் பாடங்கள் நம்முடைய திருக்குறளிலேயே நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால், அடுத்து நடக்கப் போவதை கணிக்கிறவர்கள்தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும்.
அதைத்தான் “அறிவுடையார் ஆவது அறிவார்” என்று வள்ளுவர் சொல்கிறார். அந்த திறன் இல்லாதவர்கள் எதிர்பாராத ஒரு இடைஞ்சலுக்கே நம்பிக்கை இழந்து முடங்கிவிடுவார்கள்.
சாதக பாதகங்களை யோசிக்காமல், ‘Proper Planning’ இல்லாமல், எதிலும் இறங்க கூடாது என்பதை, “எண்ணித் துணிக கருமம்” என்று சொல்லி, வள்ளுவர் ‘வார்னிங் கொடுக்கிறார். எவ்வளவு நல்ல ஐடியாவாக இருந்தாலும், ‘டைமிங்’ மிகவும் முக்கியம்! அதைத்தான் “காலம் அறிந்து கடிது செயல்வேண்டும்” என்று சொல்கிறார். அப்படி செயல்பட்டால் உலகத்தையே கூட வெல்லலாம்!
சரியான ஆட்களை வைத்தால்தான், எந்த வேலையும் சரியாக நடக்கும் என்பதை, “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்ற குறளில் சொல்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேல், நாம் செய்யும் எந்த செயலிலும் அறம், வாய்மையை தவறவிடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும்! எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும், எந்த சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு இதுபோன்ற விழுமியங்களை கைவிடாதீர்கள். Long term -இல் இவையெல்லாம்தான் உங்கள் வாழ்க்கையை உயர்த்த அடித்தளமாக இருக்கும்.
பாவேந்தர் அடிகளான “புதியதோர் உலகம் செய்வோம்” எனும் உங்கள் யுனிவர்சிட்டியின் Motto-வை நெஞ்சில் நிறுத்தி, எங்கு சென்றாலும், துணிச்சலாக, புதுமையாக, தெளிவாக, அதே நேரத்தில், அன்போடும் அறத்தோடும் செயல்படுங்கள்.
இன்றைக்கு நீங்கள் பட்டம் பெறுவது, கல்விக்கான - கற்றலுக்கான ஒரு முடிவு கிடையாது! இன்னும் கற்றுக்கொள்வதற்கான புது தொடக்கம் இது! நீங்கள் எல்லோரும் நல்ல மனிதர்களாக - வெற்றியாளர்களாக - மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக வளர வேண்டும். நீங்கள் உயர உயர வளரும்போது, உங்களுக்கு கீழே இருப்பவர்களையும் நீங்கள்தான் கைதூக்கி விட வேண்டும்! இதுதான் உண்மையான Leadership Quality!
பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் ‘Alumnus’ என்ற அடையாளத்தின் அறிவு, மனிதநேயம், புதுமை மற்றும் சமூகப்பணி உணர்வை பிரதிபலிக்கும் Legacy-யை நீங்கள் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்திய துணைக்கண்டத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடல் கடந்து வாழக்கூடிய வாணிபம் செய்த வரலாறும், ஆயிரம் ஆண்டு முன்பே கடல் கடந்து பல நாடுகளை வெற்றி கொண்ட வரலாறும் கொண்டது நம்முடைய தமிழினம்!
இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் C.E.O-க்களாக நீங்கள் வர வேண்டும்! பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை, கனவு எல்லாம்!
பல Role Model-களை பார்த்து வளர்ந்த நீங்கள், அடுத்து வர இருக்கும் பலருக்கும் Role Model-களாக விளங்க, மீண்டும் ஒருமுறை உங்கள் எல்லோரையும் வாழ்த்தி, Dream big! Work hard! Be Kind and Simple!






