இன்று (01-07-2025), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பைத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம்:
திராவிட முன்னேற்றக் கழக அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான நாளாக, இந்த நாள் அமையப் போகிறது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்றைக்கு, நான் தொடங்கி வைக்கிறேன். இன்று தொடங்கி, 45 நாட்கள் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது. இன்று 38 வருவாய் மாவட்டக் கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சேர்ந்து, எனது இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இன்றைக்கு அவரவர் பகுதிகளில் ஊடகத் தோழர்களையும், பத்திரிகை நண்பர்களையும் சந்திக்க இருக்கிறார்கள்.
நாளை, தமிழ்நாட்டில் இருக்கும் 76 மாவட்டக் கழகங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ஜூலை 3 முதல், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கிறார்கள்.
இதுக்காக, கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், தொகுதிக்கு ஒருவர் என்று 234 நபர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற அந்த 234 நபர்களும் தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (BDA) பயிற்சி தந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் அடிப்படையும், முதன்மையான நோக்கமும்!
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் – அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இது.
ஒன்றிய பா.ஜ.க. அரசால் நம்முடைய தமிழும் - தமிழ்நாடும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்று நான் உங்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. சுருக்கமாகத் தலைப்புச் செய்திகளை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால்,
அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் புறக்கணிக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை.
தமிழ்நாட்டின் நிதி உரிமைகள் ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக பறிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை.
தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை.
பள்ளிக் கல்விக்கான நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்கி நிறைவேற்றி வருகிறது.
நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கை, இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது.
தமிழுக்கு வெறும் 113 கோடியும், சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடியும் ஒதுக்கி இருக்கிறார்கள்.
தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைச் சொல்லும் கீழடி அறிக்கையைத் திட்டமிட்டு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நாம் தொடர்ந்து பேசுவதால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு சிலவற்றை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். இவை எல்லாம் வெறும் அரசியல் விமர்சனங்கள் மட்டுமில்லை; தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தவை! இவை எல்லாம் அரசியல் கட்சிகளால் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று, மக்கள் அனைவரையும் சந்திக்கப் போகிறோம்.
அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய விரும்புவோர் தங்களை இணைத்துக் கொள்ளலாம். தி.மு.க. வில் சேர ஆர்வம் உள்ளோர் செயலி மற்றும் நேரடிப் படிவம் மூலம் பதிவு செய்யப்படுவார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால், தி.மு.க. தனக்கான உறுப்பினர்களைச் சேர்ப்பதாக உங்களில் சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மையான நோக்கம் என்பது கட்சி எல்லைகளைத் தாண்டி, தமிழ்நாட்டின் நலனுக்கானது. தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கும்போது, எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்று காட்டியாக வேண்டும்.
பா.ஜ.க.வின் அரசியல் படையெடுப்பை - பண்பாட்டு படையெடுப்பை - தமிழ்நாடு மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரப் போரை எதிர்கொள்ள, நெஞ்சுரம் உள்ள அரசியல் சக்தி தேவை. அதை உருவாக்கத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை இயக்கமாகத் தொடங்கி இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: மக்களை சந்திக்கும்போது எவைகளெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படும்?
பதில்: ஒன்றிய அரசால் தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது – எப்படியெல்லாம் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் சொல்ல இருக்கிறோம்.
அதேநேரத்தில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு செய்திருக்கும் சாதனைகள், திட்டங்கள் – ஏற்கனவே, மக்களுக்கு தெரிந்திருக்கிறது – இருந்தாலும், நினைவுப்படுத்தி, துண்டு பிரசுரமாக வழங்கி, அந்தப் பிரசாரமும் நடைபெற இருக்கிறது. அதேபோல, உறுப்பினர் சேர்க்கைப் பணியும் நடைபெற இருக்கிறது.
கேள்வி: இதன் மூலமாக தி.மு.க. தேர்தலுக்குத் தயாராகிவிட்டது என்று சொல்லலாமா?
பதில்: நிச்சயமாக... இப்போது இல்லை, தயாராகி வெகு நாட்களாவிட்டது.
கேள்வி: நீங்கள் நல்ல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு சில அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகளால் சரியான முறையில் உங்களுக்குத் தகவல் தெரிய வருவதில்லை – ஒவ்வொரு விஷயங்களும் மக்களுக்காக நலத் திட்டங்களை கொண்டு வரும்போது அதிகாரிகள் தவறு செய்யும்போது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை – இரண்டு நாட்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். FIR போட்டிருந்தால் பிரச்சனையில்லாமல் இருந்திருக்கும்… அது பற்றி?
பதில்: என்ன தவறு செய்தார்கள்? தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது செய்துவிட்டோம். இன்றைக்குக்கூட மேலதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
கேள்வி: எதிர்க்கட்சியில் உள்ள குடும்பங்களைச் சந்திக்கப் போகிறீர்களா? அவர்களிடமும் இதை வலியுறுத்தப் போகிறீர்களா?
பதில்: நிச்சயமாக சொல்லப் போகிறோம்... விருப்பம் உள்ளவர்களைச் சேர்க்கப் போகிறோம். கட்டாயப்படுத்திச் சேர்க்கப் போவதில்லை. சேர்ந்தே தீருங்கள் என்று சொல்ல மாட்டோம். அவ்வாறு சொன்னாலும் சேர மாட்டார்கள். அதனால் அவர்கள் விருப்பம் இருந்தால் சேர்ப்போம்.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் மக்களைச் சந்திக்கும் பயணத்தை 7-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்போகிறார். இந்தப் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர் இப்போதுதான் மக்களை சந்திக்கப் போகிறார். இப்போது தான்... நாங்கள் எப்போதிலிருந்தோ சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: கடந்த வாரமே ஒன்றிய அரசின் மீது தொடர்ச்சியாக பல்வேறு ... இப்போது மீண்டும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையின் மூலம் பொது மக்களை சந்தித்துச் சொல்வதால் இது பலனளிக்கக்கூடிய திட்டமாக அமையுமா?
பதில்: மக்களுக்குத் தெளிவாக தெரியும், இருந்தாலும் அதை நினைவூட்டுகிறோம் – வலியுறுத்துகிறோம் - வற்புறுத்துகிறோம் – அவ்வளவுதான்.
கேள்வி: ஓரணியில் தமிழ்நாடு – புதிய திட்டம் மட்டுமா? அல்லது தேர்தல் பரப்புரையும் இருக்குமா?
பதில்: தேர்தல் பரப்புரையும் உண்டு – உறுப்பினர் சேர்க்கையும் உண்டு – ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடுமைகளும் உண்டு – இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் செய்து கொண்டிருக்கும் சாதனைகளையும் சொல்ல இருக்கிறோம்.
கேள்வி: எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்குச் செல்வீர்களா?
பதில்: அது அங்கிருக்கக்கூடிய சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது. பொறுப்பு ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செல்வார்கள். நான் அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்.
கேள்வி: தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை தி.மு.க. எப்படி சமாளிக்கப் போகிறது?
பதில்: தேர்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதைச் சமாளித்துவிடுவோம்.
கேள்வி: இந்தக் கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பிருக்கிறதா?
பதில்: இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தவரைக்கும் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால், வாய்ப்பு வருகின்ற நேரத்தில் அதை எப்படி சேர்ப்போம் என்று கலந்துபேசிச் செய்வோம்.
கேள்வி: நான்கு ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துவிட்டது. தி.மு.க.-வின் முத்தாய்ப்பான மூன்று திட்டங்கள் என்றால், எதை வரிசைப்படுத்துவீர்கள்?
பதில்: எல்லாவற்றையும் வரிசைப்படுத்தலாம். நீங்கள் கேட்டீர்கள் என்பதால் மூன்று சொல்கிறேன்.
காலை உணவுத் திட்டம் – அது தேர்தல் வாக்குறுதியில் கிடையாது. இல்லையா? அதை நிறைவேற்றியிருக்கிறோம். மகளிர் உரிமைத் திட்டம் – அது தேர்தல் வாக்குறுதியில் இருக்கிறது. அது கிட்டத்தட்ட 60 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்னும் 20 சதவிகிதம் 30 சதவிகிதம் மீதம் இருக்கிறது.
அதை அவர்கள் பூர்த்தி செய்யாமல் தவறவிட்டுவிட்டார்கள். சிலர் தவறுதலாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் திருத்தி, அதற்கு ஒரு முகாம் போட்டு, அதையும் செப்டம்பர் மாதத்திலிருந்து வழங்க இருக்கிறோம். அது, ஒரு பெரிய திட்டம்.
பேருந்தில் கட்டணமில்லா விடியல் பயணம் – அது ஒரு பெரிய திட்டம். மாணவ – மாணவியர்கள் பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளுக்குச் செல்லும்போது 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் எனும் அற்புதமான திட்டம். இப்படி பல திட்டங்கள் இருக்கிறது. எதை சொல்வது – எதை விடுவது என்று தெரியவில்லை.
கேள்வி: ‘உடன்பிறப்பே வா’ என்றீர்கள்? உற்சாகமாக இருக்கிறதா?
பதில்: அதைத்தான் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேனே... ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றரை நாள் ஒதுக்குகிறேன். நீங்களே பார்த்திருப்பீர்கள். நான் ஒரு நாளைக்கு மூன்று தொகுதியை எடுத்துக் கொள்கிறேன். காலை, மாலை. ஏனென்றால், கோட்டைக்குச் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
அரசு வேலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கும் செல்ல வேண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 234 தொகுதிகளைச் சேர்ந்தவர்களையும், நிச்சயமாக இதே அறிவாலயத்தில் அழைத்துச் சந்திப்பேன்.
கேள்வி: ஒவ்வொரு பூத்திலும் 30 சதவிகிதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்போது இளைஞர்கள் – இளம் பெண்களை கவரும் வகையில் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
பதில்: நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டு வந்திருக்கிறோம். அந்தத் திட்டத்தின் மூலமாக சுமார் 40 லட்சம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறோம். இன்று கூட ஒரு பெரிய நிகழ்ச்சியை முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். மூன்று லட்சம் பேருக்கு அதில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில், 20000 ரூபாய், 1 இலட்சம், 2 இலட்சம், 3 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் எல்லாம் கூட வேலையில் சேர்ந்திருக்கிறார்கள்.
கேள்வி: ஓரணியில் தமிழ்நாடு – எவ்வளவு இலக்கு வைத்து உறுப்பினர்கள் சேர்க்கைக்குத் திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
பதில்: நாங்கள் ஒரு இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவிகிதம் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் 30 சதவிகிதம் அல்ல; 40 சதவிகிதம் சேர்ப்போம் என்று உறுதியும் கொடுத்திருக்கிறார்கள்.
கேள்வி: 2026-இல் எவ்வளவு சட்டப் பேரவைத் தொகுதிகளை இலக்காக வைத்திருக்கிறீர்கள்?
பதில்: நாங்கள் ஏற்கெனவே 200 தொகுதிகள் என்று சொல்லியிருக்கிறோம். அதைத் தாண்டிதான் வரும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: இப்போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தனியாகவே மக்கள் பிரச்சினைகளைக் கேட்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இன்னும் நிறைய முகாம்களை நடத்த வேண்டும். தற்போது ஒரு நாள் மட்டுமே மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நடத்துகிறார்கள். தாசில்தார்கள் தாலுகா அலுவலகத்தில் இன்னும் நிறைய நடத்துவார்கள் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்?
பதில்: தற்போது அரசின் சார்பில், ஏற்கெனவே ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அனைத்து அலுவலர்களும் சென்று அங்கு ஒரு வாரம் தங்கி அங்கு மக்களின் குறைகளைக் கேட்டு அந்த இடத்திலேயே முடித்து கொடுக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு முகாம் முடிந்துவிட்டது. அதை இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்குகிறோம். அப்போதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்களும் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அளிக்கச் சொல்லியிருக்கிறோம். அந்தப் பணியையும் நிறைவேற்றுவார்கள்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் வேறு புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: இதுவரைக்கும் இல்லை. வந்தால் சொல்லுங்கள். பரிசீலிக்கலாம்.
கேள்வி: வாக்களிக்காத மக்களுக்கும் இந்த அரசு வரவேற்பைத் தரும் வகையில் ஆட்சி அமைக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். தற்போது நான்காண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. மக்கள் மனதில் எப்படி இருக்கிறது?
பதில்: இந்த உரிமைத் தொகையைப் பொறுத்தவரை, தி.மு.க.வினர் மட்டும் வாங்கவில்லை. அனைத்துக் கட்சிகளில் இருக்கும் மகளிரும் பெற்று வருகிறார்கள். அதைத்தான் அப்போதே நான் சொன்னேன். பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே சொன்னேன். இந்த ஆட்சி, வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும். வாக்களிக்கத் தவறியவர்கள், இப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அதுபோன்ற சூழலில்தான் ஆட்சியை நடத்துவேன் என்று சொன்னேன். நடத்திக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: அண்மையில் அமித்ஷா அவர்கள் மதுரையில் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்தபோது, நான் இனி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருவேன் என்று கூறினார். அது பற்றி?
பதில்: அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். வந்து பொய்யைப் பேசிவிட்டுச் செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்குத் தெரிகிறது. அது எங்களது தேர்தல் நேரத்தில் இலாபமாக அமையும். அதேபோன்று, இந்த கவர்னரை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், கவர்னர் மக்களுக்கு நல்லது செய்தாலும் இனி எடுபடாது. அந்தளவுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறார். அதனால் அவர்களெல்லாம் அடிக்கடி வர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.