கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது அமெரிக்கப் பயண அனுபவங்களைக் கடிதத் தொகுப்புகளாக எழுதுகிறார். அதன் முதல் பகுதி:
அமெரிக்கப் பயணச் சிறகுகள் (1)
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அமெரிக்கப் பயண மடல்.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்கினை நிர்ணயித்து, அதனை அடைதவற்காக உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் குழுவினை உருவாக்கி, நமது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட கடந்த மூன்றாண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் நம் திராவிட மாடல் அரசின் திறன்மிகு முயற்சிகளால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
இலக்கு பெரியது. அதை அடைவதற்குத் தேவைப்படும் உழைப்பு அளப்பரியது. அதனை உணர்ந்தே திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஆகஸ்ட் 27 அன்று இரவு பயணம் மேற்கொண்டேன். பயணம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், கழகத்தின் முன்னணி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் ஊடகத்தினரும் ஆர்வத்துடன் குழுமியிருந்து, பயணம் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம், தொழில் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், நடத்தியுள்ள மாநாடுகள், சந்திப்புகள், வெளிநாட்டுப் பயணங்கள், மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள், அதன் மூலம் கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், அதன் விளைவாக உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைவிடவும் விளக்கமாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் தெளிவாகத் தெரிவித்துவிட்டு, அமெரிக்கப் பயணத்தின் நோக்கத்தையும் குறிப்பிட்டேன். ஊடகத்தினரின் அன்பான வாழ்த்துகளுடன் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடான அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டேன்.
பயண நேரத்திலும் தமிழ்நாட்டின் நினைவுகளே!
சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய்க்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்வதற்கான விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது. 16 மணி நேரப் பயணம். மிக நீண்ட பயணம்தான் என்றாலும், அதிக உயரத்தைத் தாண்ட வேண்டும் என்றால் நீண்ட தூரம் ஓடி வரவேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன சொற்கள்தான் நினைவுக்கு வந்தன. பெருங்கடலுக்கு மேலே பல்லாயிரம் அடி உயரத்தில், மேகங்களைக் கடந்து, வானத்தை உரசுவது போன்ற இந்த நெடும்பயணத்தின்போது, கடந்த மூன்றாண்டு காலத்தில் தொழில் முதலீடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் விளைவுகள் குறித்த சிந்தனைகளும் உங்களில் ஒருவனான என்னுள் எழுந்தன!
ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, வளம் மிகுந்த - வாய்ப்புகளை வழங்கும் தன்மை கொண்ட அமெரிக்க நாட்டை நோக்கிய பயணம். இதற்கு முன் மேற்கொண்ட பயணங்களின் விளைவுகளால் உருவான தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பைப் பெற்ற தமிழ்நாட்டுக் குடும்பத்தினரிடம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அது மாநிலத்தில் உள்ள மற்றவர்களிடமும் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை இவற்றுக்கேற்ப அமெரிக்கப் பயணமும் அமைய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கின்ற நிலையில், திராவிட மாடல் ஆட்சியில்தான் தமிழ்நாட்டிற்கு மிக அதிகமான முதலீடும், தொழிற்சாலைகளும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகளும் உருவாகின என்ற நிலையும் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையுடனேயே என் பயணம் தொடர்ந்தது.
ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, அவர்கள் எதிர்பார்க்கும் தொழிற்கட்டமைப்புகளுடன் நிறுவனத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கே பல மாதங்களாகும். நிறுவனத்தைக் கட்டமைத்து, வேலைவாய்ப்புகளை வழங்கி, உற்பத்தியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகள்கூட ஆகும். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில் தொழிற்துறையில் ஒரு குழுவை அமைத்து, அனுமதி உள்ளிட்டவற்றை விரைந்து நிறைவேற்றி, தமிழ்நாட்டில் பரவலான தொழில்வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்.
நமது அரசு அமைந்தபோது தொழில்துறைக்குப் பொறுப்பு வகித்து சிறப்பாகச் செயலாற்றியவர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள். அவருடைய அனுபவமிக்க பணி நிதித்துறைக்குத் தேவைப்பட்டதால், தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தம்பி டி.ஆர்.பி.ராஜா முனைப்பாகவும் வேகமாகவும் செயலாற்றி, ஒப்பந்தங்களை நிறைவேற்றும் பணியை என் எண்ணத்திற்கேற்ப செயல்படுத்தி வருகிறார். மூன்று முறை தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அனுபவத்தினாலும், திட்டக்குழு உறுப்பினராக இருந்து சரியான தரவுகளை அறிந்திருப்பதாலும், கழகப் பொருளாளரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான அவருடைய தந்தை டி.ஆர்.பாலு அவர்கள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்குகளுக்காகப் பல வெளிநாடுகளுக்குச் சென்று பங்கேற்ற அனுபவங்களைத் தம்பி டி.ஆர்.பி.ராஜா உள்வாங்கியிருப்பதாலும் என் மனதை அறிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இதற்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எந்தளவு நிறைவேறியிருக்கிறது என்பதை அவரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். என்னிடம் அவர் தெரிவித்த விவரங்களை, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவரை விளக்கமாகத் தெரிவிக்கச் சொன்னேன். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், அதன் மூலமாகக் கிடைத்துள்ள வளர்ச்சி இவை அனைத்தையும் விளக்கி வெள்ளை அறிக்கை போல தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
தாய்த் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும், தமிழர்களின் வாழ்வு உயர்ந்திட வேண்டும் என்ற இலக்குடனான அமெரிக்கப் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரத்தை ஆகஸ்ட் 28 அன்று சென்றடைந்தேன். 16 மணிநேரம் ஒரே விமானத்தில் நீண்ட பயணம் என்பது சற்றே களைப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பளிப்பதற்காகக் காத்திருந்த தமிழர்களின் முகங்களைப் பார்த்ததும், பனித்துளிகளில் நனைந்த பூக்களைப் போல உற்சாகம் கொண்டேன்.
கண்டேன் தமிழர்களின் அன்பு முகங்களை!
சான் பிரான்சிஸ்கோவில் இந்தியத் தூதரக அதிகாரி திரு. ஸ்ரீகர் ரெட்டி அவர்கள் அன்பான வரவேற்பை அளித்தார். தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் அமெரிக்காவில் வசிக்கும் தன் மகனைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர், விமான நிலையத்திற்கு வந்து அன்புடன் வரவேற்றார். தமிழ்த்திரையில் புகழ்பெற்ற நடிகரான நெப்போலியன் அவர்களும் வரவேற்பளித்தார். சில நாட்களுக்கு முன்புதான் தன் மகனுக்குத் திருமணம் உறுதியாகியிருப்பதையடுத்து அழைப்பிதழைத் தருவதற்காகச் சென்னையில் என் இல்லத்திற்கு அவர் வந்திருந்தார். சான் பிரான்சிஸ்கோவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தாய்மண்ணிலிருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார் என்ற உணர்வுடன் விமான நிலையத்திற்குக் குடும்பத்துடன் வருகை தந்து அன்பான வரவேற்பை அளித்தனர்.
அவர்களின் வரவேற்பு எனக்கு ஆச்சரியத்தையும் சற்று தயக்கத்தையும் ஏற்படுத்தியது. காரணம், விமான நிலையத்தில் இருந்த அமெரிக்கர்களும் பிற நாட்டவர்களும், இத்தனை பேர் திரண்டு நின்று யாரை வரவேற்கிறார்கள் என்று எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் விமான நிலையத்திலேயே, மரபும் நவீனமும் கலந்த நடன அசைவில், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்..’ பாடலுக்கும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டு மக்களின் இதயத்தின் ரீங்காரமாக அமைந்த, ‘ஸ்டாலின்தான் வராரு’ பாடலுக்கும் நடனமாடி வரவேற்று அன்பைப் பொழிந்தனர்.
விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சான்பிரான்சிஸ்கோ!
1906-ஆம் ஆண்டு பெருமளவில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட இந்தக் கட்டடம் அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதும் சேதமடைந்திருக்கிறது. எனினும், ஜூலியா மார்கன் எனும் புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநரின் துணையுடன் அது புனரமைக்கப்பட்டு 1907-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரையே பெரும் அழிவுக்குள்ளாக்கிய நிலநடுக்கத்தில் இருந்து அந்நகரம் எப்படி மீண்டு மேலெழுந்து வந்தது என்பதற்கான வாழும் சாட்சியமாக இன்றளவும் இந்த ஓட்டல் திகழ்கிறது. ஐ.நா. சாசன உருவாக்கமும் இங்கு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான தேசிய பதிவேட்டிலும் இது இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய இசையுலகின் புகழ்பெற்ற கிராமி விருதுகளைப் பல முறை வென்றுள்ள பிரபல பாடகரும் மனித உரிமைக்கான ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் விருது பெற்றவருமான டோனி பென்னட், “I Left My Heart in San Francisco” என்ற தன்னுடைய புகழ்பெற்ற பாடலை முதன்முதலில் இந்த ஹோட்டலில்தான் பாடியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது 90-ஆவது வயதில் ஃபேர்மாண்ட் ஹோட்டலின் வெளியே அவரது சிலை, அவரது முன்னிலையிலேயே திறந்து வைக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோ நகரம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது. சமூகநீதிக்கும், மனித உரிமைக்குமான குரல்களும் அதன் விளைவான சட்டங்களும் கலிபோர்னியா மாநிலத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக இங்கு ஜனநாயகக் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு இதற்கு முன் நான் பயணித்திருந்தாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மேற்கொண்ட பயணத்தில் முதலில் சென்று இறங்கியது கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோவாக அமைந்தது.
தொடர்ச்சியான விமானப் பயணமும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான நேர வித்தியாசமும் களைப்பை ஏற்படுத்தியிருந்ததால் அன்றிரவு நன்றாக ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் வழக்கம்போல அதிகாலையில் எழுந்துவிட்டேன். வெளியே குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால், உள்ளே இருந்த உடற்பயிற்சிக் கூடத்திலேயே ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு, முதலீட்டாளர்கள் சந்திப்பிற்கு ஆயத்தமானேன்.
ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்!
முன்கூட்டியே அமெரிக்கா சென்றிருந்த தம்பி டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான தொழில்துறை குழு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் உரையாடி, எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு உகந்தவையாக இருக்கும் என்பதை அறிந்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த நிறுவனங்கள் கொடுத்திருந்த தேதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்துடனான சந்திப்பு நடந்தது.
ஆகஸ்ட் 29 அன்று முதலில் என்னை வந்து சந்தித்த நிறுவனம், ஃபார்ச்சூன் 500 எனப்படும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனமாகும். அவர்கள் வந்தவுடனேயே ஒரு புகைப்படத்தை என்னிடம் கொடுத்தனர். 1997-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான நான் சென்னை மாநகரத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றிருந்த நேரத்தில் என்னை நோக்கியா குழுமத்தைச் சேர்ந்த அல்காடெல் நிறுவனத்தின் தலைவர் சந்தித்த புகைப்படம்தான் அது. இனிய நினைவுகளுடனான தொடக்கமாக அமெரிக்க முதலீட்டாளர்களின் சந்திப்பு அமைந்தது.
நோக்கியா நிறுவனத்துடன் நடந்த சந்திப்பின் விளைவாக, சென்னை சிறுசேரி சிப்காட்டில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடும் வகையில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து, ஃபார்ச்சூன் 500-இல் இடம்பெற்றுள்ள மற்றொரு நிறுவனமான பே-பால் நிறுவனத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையிலான செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதுபோலவே, செமிகண்டக்டர்களை வடிவமைக்கும் கருவிகளின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், கோயம்புத்தூர் சூலூரில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி நிறுவனத்தைத் தொடங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
குறைக்கடத்தி உற்பத்தியில் புகழ்பெற்ற மற்றொரு முன்னணி நிறுவனமான மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (G.D.C) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முதன்மை நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் கோலோச்சும் தமிழர்கள்!
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டிய அமெரிக்க நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. திராவிட இயக்கம் தந்த இடஒதுக்கீடு, உயர்கல்வி, பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தமிழ் - ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை, முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உள்ளிட்டவை அமெரிக்க நிறுவனங்களில் தமிழர்கள் உயர்பொறுப்பில் இருப்பதற்கு அடித்தளமாக உள்ளன என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. திரைகடலோடி திரவியம் தேடும் தமிழ் மரபின் அடிப்படையில், நம் தமிழர்கள் அமெரிக்க நாட்டின் நிறுவனங்களில் கோலோச்சிக் கொண்டிருப்பது பெருமையளித்தது.
உலகின் புகழ்பெற்ற அமெரிக்க தொழில்நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான தேவைகள் குறித்து, தொழில்துறைச் செயலாளர் திரு. வி. அருண் ராய் இ.ஆ.ப., அவர்கள் எடுத்துரைப்பார். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தொழில்கட்டமைப்பு, உற்பத்தியை மேம்படுத்துவதற்கான வசதிகள் குறித்து நான் விளக்கிடுவேன். அடுத்து, தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்கள் நம்முடைய கொள்கைகளை விளக்குவார். அவருக்குப் பின் என்னுடைய முதன்மைச் செயலாளர் திரு. உமாநாத் இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைப்பார். பின்பு, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. வே. விஷ்ணு இ.ஆ.ப., அரசின் சார்பில் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். திராவிட மாடல் ஆட்சி அமைந்த இந்த மூன்றாண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கான 14 கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் கொள்கைகள் அடங்கிய வெளியீடுகளை அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கி, அவற்றையும் விளக்கினேன். தொழில்துறையின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு கட்டத்தையும் உணர்ந்து, உலகத் தரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள அந்தக் கொள்கைக் குறிப்புகளை அவர்கள் பாராட்டினர்.
அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் நன்மைகளை உணர்ந்தே இருக்கின்றனர். அவர்கள் என்னிடம் பேசும்போது, தமிழ்நாட்டில்தான் திறமையான மனித வளம் இருக்கிறது என்பதையும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கேற்ற உயர்கல்வியையும் திறனையும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் அமெரிக்க நிறுவனத்தினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்திய முதலீட்டாளர் மாநாடு!
பகல் பொழுதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அலுவலர்களைச் சந்தித்துப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில் அன்று மாலையில் முதலீட்டாளர்களுடனான மாநாடு நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தைத் தமிழ்நாடு அரசின் தொழில்துறை, இந்தியத் தூதரகம், சான்பிரான்சிஸ்கோ வர்த்தகர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டது, தமிழ்நாட்டின் தொழில்துறை மீது அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையைக் காட்டியது. அந்த நம்பிக்கைக்கேற்ப, தமிழ்நாட்டின் தற்போதைய தொழில்வளர்ச்சியையும், தொழில் முதலீடுகள் செய்பவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதையும் திரையில் ஒளிபரப்பு செய்து தெளிவுபடுத்தியது நமது மாநில அரசின் தொழில்துறை.
இந்தியத் தூதரக அதிகாரி அவர்கள், இந்தியாவில் தமிழ்நாடு தொழில்துறையில் காட்டுகின்ற முனைப்பையும், முதலமைச்சரான என்னுடைய செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி, அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு தொழில்துறையில் நடத்தியுள்ள பாய்ச்சலைத் தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
ஃபர்ஸ்ட் சோலார் என்கிற சூரிய மின் உற்பத்திக்கான கருவிகளைத் தயாரிக்கும் புகழ்பெற்ற கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் விட்மர் பேசும்போது, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 18 மாதங்களிலேயே அனைத்து அனுமதிகளையும் பெற்று, தொழிற்சாலையையும் கட்டி முடித்து, அதனைத் திறந்து பணியையும் தொடங்கிவிட்டோம்” என்று சொன்னது, அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி என்ற டேட்டா சென்டர் தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கில் நடைபெற்றது. டேட்டா சென்டர் நிறுவனத்தின் தலைமை வருவாய் அலுவலர் காலின் மெக்லின் தனது உரையில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டிற்கான நல்வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.
இத்தகைய சிறப்பான - பயன்களைத் தரும் நிகழ்வில் அமர்ந்திருந்தபோது, கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, வெளிநாடுகளில் இதுபோல ஆறு முறை முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டிருப்பதையும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகியவற்றில் நடந்தவற்றையும் சேர்த்து மொத்தமாக 15 மாநாடுகள் நடைபெற்றிருப்பதையும் எண்ணிப் பார்த்தேன்.
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் நான் உரையாற்றும்போது, வாய்ப்புகளை வழங்கக்கூடிய அமெரிக்க நாட்டிற்கு வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுவதை என் உரையில் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் 6-ஆவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் என்பதையும், எளிய மக்களுக்கான இந்த இயக்கத்தை பேரறிஞர் அண்ணா கட்டியமைத்ததையும், அந்த அண்ணா வழியில் நவீனத் தமிழ்நாட்டை முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கியதையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் அதிகளவில் நகர்ப்புறமயமான மாநிலம் தமிழ்நாடுதான் என்பதால், இங்கு தொழில் வளர்ச்சிக்கான வசதியான கட்டமைப்புகள் இருப்பதையும் அவர்களிடம் கூறினேன். ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக சென்னை அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 39 ஆயிரம் தொழிற்சாலைகளும், அதில் பணியாற்றக்கூடிய 2.6 மில்லியன் அளவிற்குப் பணியாளர்களும் இருப்பதால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக உள்ளதையும் கூறி, அமெரிக்க நிறுவனத்தினர் தமிழ்நாட்டில் தாராளமாக முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்பதையும், அவர்களுக்குத் தேவைப்படும் கட்டமைப்புகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தரும் என்ற உறுதியையும் வழங்கினேன்.
அயலகத்திலும் தமிழ் உறவு - கழகக் கொள்கை உணர்வு
மனதிற்கும் மாநிலத்திற்கும் நிறைவான வகையில் அமைந்த இந்த முதலீட்டாளர் மாநாடு முடிவடைந்தபிறகு, ஃபேர்மாண்ட் ஹோட்டலுக்குத் திரும்பியபோது, லாபியில் தமிழர்கள் காத்திருந்தனர். ஹோட்டலில் இருந்து புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், உங்களில் ஒருவனான என்னைக் காண வந்திருக்கும் தமிழர்களைக் காண்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில தமிழர்கள் என்னைப் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்டு, கண் கலங்கிவிட்டார்கள். நமக்கும் அவர்களுக்கும் இருப்பது இரத்த உறவல்ல. அதைவிடவும் உயர்ந்த தமிழ் உறவல்லவா.. அந்த உணர்வுடன் அவர்களிடம் அன்பாகப் பேசி, ஆறுதல்படுத்தி, அவர்கள் வழங்கிய புத்தகங்களையும் பூங்கொத்துகளையும் அன்புடன் பெற்றுக்கொண்டேன். ஒருசிலர் தங்கள் புத்தகங்களில் என் கையொப்பம் பெற்று மகிழ்ந்தனர். பலர் வாழ்த்துக் கவிதைகள் வழங்கினர். சிலர் கடிதங்களை அனுப்பியிருந்தார்கள்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரும் அன்பு காட்டிய நிலையில், கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் கூடுதல் பாசம் வெளிப்படுவது இயல்புதானே.. அப்படியொரு பாசத்தை, தென்பாண்டிச் சிங்கமாக முகவை மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக்காத்தவரும், சிறுகதை மன்னர் எனப் பெயர் பெற்றவருமான எஸ்.எஸ். தென்னரசு அவர்களின் குடும்ப உறவு மூலம் அமெரிக்காவில் கண்டுணர்ந்தேன். தென்னரசு அவர்களின் பேரன் கதிர் தென்னரசு தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் பழைய முரசொலி நாளிதழில் வெளியான தன்னுடைய கையெழுத்திலான கடிதத்தை என்னிடம் அளித்தார். அது வெளியானபோது அவர் நான்காம் வகுப்பு மாணவர்.
2001-ஆம் ஆண்டு ஜூன் மாதக் கடைசியில் நள்ளிரவு நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சியின் போலீசார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பொய்வழக்கில் கைது செய்து, இரக்கமின்றி இழுத்துச் சென்றபோது நாடே பதறிய நிலையில், நான்காம் வகுப்பு மாணவரான கதிர் தென்னரசும் பதறியிருக்கிறார். “டியர் கலைஞர் தாத்தா” என்று தொடங்கி, சிறைவாசத்தில் இருந்த தலைவர் கலைஞருக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார்.
தலைவர் அவர்கள் சிறை வாசலில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அழுதுவிட்டதையும், அவரை ஆறுதல்படுத்திய அவரது அம்மா, ஒரு வாரம் கழித்து, தாத்தாவைப் பார்க்கப் போகலாம் என்று சொன்னதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்த கதிர், தன்னுடைய அப்பா தன் மீது செல்லமாக இருப்பார் என்றும், ஒரு நாள் முரசொலி நாளிதழ் மீது சூடான காபி டம்ளரை வைத்துவிட்டதால் அப்பா தன்னை அடித்துவிட்டார் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார். “தாத்தா.. நான் டெய்லி முரசொலி கடிதங்கள் வாசிச்சு தமிழ் நல்லா பழகிட்டேன்” என்று குறிப்பிட்டிருப்பதுடன், எமர்ஜென்சி காலத்தில் தனது அம்மா இளவரசியின் கேள்விக்குத் தலைவர் கலைஞர் பதில் எழுதி அனுப்பியதைக் குறிப்பிட்டு, என் கேள்விக்கும் பதில் சொல்வீங்களா? என்று கேட்டு, அ.தி.மு.க ஆட்சியின் கொடுங்கோல் சிறையில் இருந்த கலைஞரின் மனதுக்கு இதமான மருந்து தடவும் வகையில் அவரின் பிஞ்சுக் கரம் கடிதம் எழுதியிருக்கிறது. அதைத் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலி 20-7-2001 அன்று வெளியிட்டிருக்கிறது. காலத்திற்கும் நிலைத்து நிற்கும் அந்தக் கருவூலத்தைத்தான் கதிர் தென்னரசு அமெரிக்காவில் என்னிடம் வழங்கி மகிழ்ந்தார். அதைப் படிக்கும்போது எத்தனையெத்தனை உணர்வலைகள். கடல் கடந்து வந்தாலும் கழகக் குடும்பத்தினரின் உணர்விலும் உதிரத்திலும் கறுப்பு - சிவப்புக் கொள்கையே உயிரோட்டமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
சென்னையில் வசிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கழகத்தின் மூத்த தொண்டர் ஒருவரின் கடிதமும் என்னை நெகிழ வைத்தது. வேலைக்காகச் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து கூலித்தொழில் செய்த அந்தத் தொண்டர், கழக மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் எதுவாக இருந்தாலும் தவறாமல் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மேடைகளில் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர், கழக முன்னணியினர் பேசுவதைக் கேட்டவர், அது போலத் தன்னால் பேச முடியாவிட்டாலும், தன் பிள்ளைகள் கழகத்தின் கொள்கைகளை முழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்களைப் பேச வைத்திருக்கிறார். அந்தத் தொண்டரின் மகள் சிறப்பாகப் பேசப் பழகியதுடன் மட்டுமல்லாமல், சட்டம் பயின்று, பட்டம் பெற்று, கழக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக இருப்பதையும், தனது மகன் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பதையும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கூலித் தொழிலாளியான ஒரு தொண்டர் தன் மகளை வழக்கறிஞராகவும் மகனை பெரிய நிறுவனத்தின் உயர் அலுவலராகவும் ஆக்குவதற்கு கழகத்தின் கொள்கைகளே உந்துசக்தியாக இருந்திருக்கின்றன என்பதை அமெரிக்கப் பயணத்தில் அறிந்துகொண்டபோது, தலைமுறைகளை வாழ வைக்கும் நம் இயக்கம் 75 ஆண்டுகளைக் கடந்து பீடுநடை போடுவதையும், இந்த இயக்கத்தின் தேவை வருங்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கும் அவசியம் என்பதையும் உணர்ந்தேன். இப்படி எத்தனையோ உணர்ச்சிகரமான கடிதங்கள், கவிதைகள் என பயணம் முழுவதும் கைகளுக்கு கிடைத்தது.
சிலிகான் வேலியில் சிறப்பான ஒப்பந்தங்கள்!
நம் சென்னையைப் போலவே கடற்கரை நகரமான சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் பகுதியை சிலிக்கான் வேலி என்று அழைக்கிறார்கள். உலக அளவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் புரட்சியின் மையமாகத் திகழ்கிறது சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி. இதன் சிலிகான் வேலியில்தான் ஆப்பிள், கூகுள், மெட்டா என உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன.
அமெரிக்காவுக்கு சிலிக்கான் வேலி என்றால் தமிழ்நாட்டிற்கு ஓ.எம்.ஆர். எனப்படும் ராஜீவ் காந்தி சாலையின் ஐ.டி. காரிடர். புத்தாயிரம் ஆண்டான 2000-த்தில் தரமணியில் நம் உயிர் நிகர் தலைவர் அவர்களின் ஆட்சித் திறத்தால் உருவாக்கப்பட்டு, இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது டைடல் பார்க். அதனைத் தொடர்ந்து, கழக ஆட்சியின் தகவல் தொழில்நுட்பக் கொள்கையால் தரமணி முதல் சோழிங்கநல்லூர் வரையிலான ஓ.எம்.ஆர். சாலை பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக மாறியிருக்கிறது. நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞரின் உலகளாவிய சிந்தனையையும் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களையும் நினைத்துப் பார்த்தபடியே ஆகஸ்ட் 31-ஆம் நாள் சிலிகான் வேலியில் பயணித்தோம்.
தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, சிலிகான் வேலியில் உள்ள நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைச் சொல்லிக் கொண்டே வந்தார். திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு, இந்தியாவில் தமிழ்நாடுதான் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது. அதை இன்னும் மேம்படுத்தும் வகையில், சிலிக்கான் வேலியில் நாங்கள் முதலில் சென்றது ஆப்பிள் நிறுவனம். அது மிகவும் பிரம்மாண்டமானதாக இருந்ததுடன், சூழலியல் கண்ணோட்டத்துடன் சிறப்பான வடிவமைப்பில் திகழ்ந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் இதனைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஏதோ ஒரு கம்பெனிக்குள் இருக்கிறோம் என்று நினைக்காமல், தங்கள் வீட்டில் - தங்கள் சொந்த இடத்தில் இருப்பது போன்ற மனநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு அமைத்திருக்கிறார். இது பற்றி தம்பி டி.ஆர்.பி. ராஜா விளக்கிக்கொண்ட வந்தார்.
ஆப்பிள் நிறுவன உயர் அலுவலர்களுடனான சந்திப்பு இனிமையாகத் தொடங்கியது. அவர்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் தங்களின் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பாக இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் விரிவாக்கம் செய்வது குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. எதிர்கால முதலீடுகளுக்கும் அந்த கூட்டம் வழிவகுத்தது.
அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்குச் சென்றோம். உள்ளங்கைக்குள் உலகம் என்பதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கும் உலகின் முன்னணி நிறுவனம் கூகுள். எந்த மூலையில் இருந்தாலும், தன் கையில் உள்ள அலைபேசியில் கூகுள் மேப் போட்டு, தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் சரியாக செல்லக்கூடிய அளவில் மக்களின் அன்றாடப் பயன்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனம். அத்தகைய கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை என்ற தமிழர் இருக்கிறார் என்பது பலரும் அறிந்த பெருமைக்குரிய செய்தி. கூகுள் நிறுவனத்திற்குச் சென்றபோது, அந்த நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தமிழர்கள் பலர் நல்ல பொறுப்பில் இருப்பது தெரிந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் பணியாற்றுகிறார்கள்.
கூகுள் நிறுவன உயர் அலுவலர்களுடனான சந்திப்பின்போது, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உருவாகி வரும் புதிய முயற்சிகள், கற்பனைக்கெட்டாத தொழில்நுட்பங்கள் சாத்தியமாகிவருவதைக் குறித்து பேசினோம். அவர்களிடம் நான், “இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதில் என்னுடைய கனவுத் திட்டம் என்பது நான் முதல்வன் திட்டம். அதில் இடம்பெறும் மாணவ - மாணவியருக்குச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் கூகுள் நிறுவனம் பயிற்சியளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டேன். உடனடியாக அதனை ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனத்தினர், தமிழ்நாட்டில் 20 இலட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பயிற்சியளிக்கும் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டனர். கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனத்தின் இந்தப் பயிற்சி நடைமுறைக்கு வரும்போது, தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் காணும். கூகுள் நிறுவனம் தற்போது போன், ட்ரோன் போன்ற தயாரிப்புகளிலும் முனைப்பாக இருப்பதால் அவை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக அமைந்தன.
சிலிக்கான் வேலியில் அடுத்த நிறுவனம், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மையாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தில் முதன்மைப் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை வரவேற்றதுடன், தமிழ்ப் பாடல் ஒன்றை ஒலிக்கவைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும் நமக்கு விளக்கினர். சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2570 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதால் அதனை இன்னும் விரைவாக நிறைவேற்றுவது குறித்து அவர்களுடன் உரையாடினோம். அவை நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றும், அத்துடன் கூடுதலான முதலீடுகள் குறித்தும் பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் இந்த மூன்று நிறுவனங்களைப் பார்வையிடுவதற்குக் காலை முதல் பிற்பகல் வரை ஆகிவிட்டது. அமெரிக்க நேரம், மாலை 3 மணி. இப்போதாவது மதிய உணவு சாப்பிடலாமே என்றன எங்களின் வயிறுகள். இந்திய வகை உணவு அந்த சிலிக்கான் வேலியிலேயே கிடைக்கும் என்பதை அறிந்துகொண்டோம். கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் கோவை கபே என்ற உணவகத்தை நடத்துகின்றனர். அங்கே நமது பாரம்பரியப்படி, வாழை இலையில், நம் ஊர் சாப்பாட்டைப் பரிமாறினார்கள். பசிக்கேற்ற ருசியுடன் உணவு சிறப்பாக இருந்தது.
வாழ்த்தி வரவேற்ற நல் உள்ளங்கள்!
அன்று மாலையில் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்புக்கு இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. சிறிய அரங்கம் - நிறைந்த கூட்டம் - பொங்கி வழிந்த பேரன்பு - வாழ்த்து முழக்கங்கள் என உள்ளம் ஒன்றிய நிகழ்வாக அது அமைந்தது. என்னுடைய வாழ்த்துகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு பேசினேன். ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர். படம் எடுத்துக்கொள்ளவும், கைக்குலுக்கவும், பரிசுகள் வழங்கவும் அவர்கள் காட்டிய ஆர்வம் திக்குமுக்காட வைத்தது. அதனை எனக்கான தனிப்பட்ட வரவேற்பாகக் கருதவில்லை. என்னை முதலமைச்சர் என்ற பொறுப்பில் அமர வைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான வரவேற்பாகவே கருதினேன்.
மறுநாள் செப்டம்பர் 1 அன்று பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமான ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்தது. அந்த நாளில் மற்றொரு புதிய அனுபவம் வாய்த்தது. அறிவியல் தொழில்நுட்பம் எந்தளவில் வளர்ந்திருக்கிறது என்பதையும், அதில் அமெரிக்கா எந்தளவு முன்னேறியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. அது, ஆள் இல்லாத காரில் பயணம்.
கடற்கரை நகரமான சான் பிரான்சிஸ்கோவில் கடலையொட்டி மலையும் உண்டு. அந்த மலையில் பல நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்குச் செல்லும் சாலைகள் வளைந்து நெளிந்து செல்லக்கூடியவை. ஒரு கட்டடத்திற்கும் இன்னொரு கட்டடத்திற்கும் இடையிலான அந்த வளைவான சாலைகளில் வாகனப் பயணம் என்பது புதுவித அனுபவம். சாகசம் போல இருக்கும். கடலுக்கும் மலைக்கும் இடையிலான சாலையில் ஆள் இல்லாத காரில் பயணித்தது இனிமையான சாகசம் போல அமைந்தது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வருகிறார்கள். சென்னை மெரினா போன்ற நீண்ட கடற்கரையாக அது இல்லை என்றாலும், மக்களின் மனம் கவரும் இடமாக அமைந்திருக்கிறது.
கடலில் சற்று தொலைவில் ஒரு பாறைத் தீவு உள்ளது. அதன் மீது பழமையான சிறைச்சாலை அமைந்துள்ளது. சிறைவாசத்தின் மூலம் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த எனக்கு அதனைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அல்காட்ரஸ் என்கிற அந்த பாறைத் தீவில் உள்ள சிறை, உலகின் மிகவும் ஆபத்தான சிறைச்சாலையாகும். அதில் அடைக்கப்பட்ட கைதிகளால் தப்பிக்கவே முடியாது. சிறைக்கம்பிகளைக் கடந்து கடலில் குதித்தால், பனிக்கட்டி போல குளிர்ச்சியாக இருக்கும் நீரைக் கடந்து கடற்கரைக்கு வருவது கடினம். தற்போது சிறைச்சாலை இயங்கவில்லை. அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. நாங்கள் சென்ற நாளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. எழில்மிகு சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டியது இனிய அனுபவமாக இருந்தது.
சிகாகோ நோக்கிப் பறந்த சிறகுகள்!
சான் பிரான்சிஸ்கோ நகரம் உழைப்புக்கும் உரிமைக்கும் பெயர் பெற்றதாகும். 20-ஆம் நூற்றாண்டில் இங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள், 1960-களில் நடந்த சிவில் உரிமை இயக்கம் போன்றவற்றால் சமத்துவக் கொள்கையின் களமாக விளங்குகிறது. இங்குச் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையைத் (இந்த ஆண்டு 2-ஆம் தேதி) தொழிலாளர் நாளாகக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பிடத்தக்க அந்த நாளில், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்கு அகலமான வாசலைத் திறந்து வைத்த சான் பிரான்சிஸ்கோ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மகிழ்ச்சி. புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஹோட்டலில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான வரலாறும் பதிவாகியிருப்பதை நினைத்து, ஹோட்டல் வாசலில் உள்ள பாடகர் டோனி பென்னட் சிலை முன்பாகப் படம் எடுத்துக்கொண்டு, சிகாகோ நோக்கி விமானத்தில் பறந்தேன். ஐந்தரை மணி நேரப் பயணம்.
நமது இந்தியாவில் டெல்லியிலும் சென்னையிலும் கடிகாரத்தில் ஒரே நேரம்தான். இந்தியாவைவிட பரப்பளவில் பெரிய நாடான அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் நேரமும் சிகாகோ மாநிலத்தின் நேரமும் மாறுபடும். விமான நிலையத்தில் சிகாகோவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி திரு. சோமநாத் கோஷ் வரவேற்றோர்.
சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோ விமானநிலையத்திலும் அமெரிக்கவாழ் தமிழர்கள் திரண்டிருந்தனர். தமிழர்களுக்கேயுரிய பாரம்பரிய உடையுடனும், தமிழர்களின் கலையான பறை இசை, பண்பாட்டு நடனம் என அவர்கள் அளித்த வரவேற்பு, அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பெரும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.