மு.க.ஸ்டாலின்

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், " மாவட்டக் கழகச் செயலாளர் சேகர் பாபு அவர்கள் இங்கே தொடக்கத்தில் பேசுகிறபோது ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். கொளத்தூர் தொகுதி என்று சொன்னால், நான் எப்போது எல்லாம் வருகிறேனோ அப்போதெல்லாம் ஒரு எழுச்சியை – உணர்ச்சியை – மகிழ்ச்சியை - புத்துணர்ச்சியை, நான் பெறக்கூடிய வகையில், ஆறு நிகழ்ச்சிகளுக்கு குறையாமல் பங்கேற்கிறேன். இன்றைக்கு எட்டாவது நிகழ்ச்சி, ஆனால் அவர் ஆறு என்று சொல்லிவிட்டார். அதில் ஒரே ஒரு திருத்தம்தான்.

மாலை தொடங்கிய நிகழ்ச்சிகள், ஏறக்குறைய மூன்று மணி நேரமாக தொடர்ந்து, நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்று, அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் முடித்துவிட்டு கழக நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். என்னதான் அரசு பொறுப்பில் இருக்கிறோம் என்று சொன்னாலும், அதற்குக் காரணம் கழகம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மாலை தொடங்கிய நிகழ்ச்சியை நான் எண்ணிப்பார்க்கிறேன். ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் இருந்தால் ஞாபகம் வைத்து சொல்லலாம். ஆனால் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வந்திருக்கின்ற காரணத்தினால், அவைகள் எல்லாம் முன்கூட்டியே குறித்து வைத்துவிட்டுதான் வந்திருக்கிறேன்.

● பல்லவன் சாலையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்பந்தாட்ட ஆடுகளம் அதை திறந்து வைத்தேன்.

● அதைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் 8-ஆவது தெருவில் 54 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தேன்.

● ஜவகர் நகர் 1-ஆவது சர்குலர் சாலையில், தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை குறிப்பிடும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கண் மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

● அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் தையல் பயிற்சி மையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

அதற்கு பின்னால், சட்டமன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள்:

அதாவது 55 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சிலருக்கு மருத்துவ உதவிகள், இரண்டு இணையர்களுக்கு திருமண உதவிகள், ஒரு சிலருக்கு உதவி உபகரணங்கள்.

அதற்கு பின்னால், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால், வி.வி.நகர் பகுதியில், 33 புதிய மறுசீரமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாக்கள். இவையெல்லாம் முடித்துவிட்டு நிறைவாக, இப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கக்கூடிய நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியாக வைத்து மேடை போட்டு வைத்திருந்தால், இந்த நிகழ்ச்சிக்கு இந்த நேரத்திற்கு வந்திருக்க முடியாது. அதனால் நேரத்தின் அருமை கருதி எனக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலை கருதி, நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் அவர்களும், இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும் அவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மேடையெல்லாம் போடாமல் எளிய வகையில், ஆனால் அதே நேரத்தில் இனிமையான வகையில் எழுச்சியோடு இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்து, அவையெல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு நிறைவாக நடக்கக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு உங்களிடத்தில் நான் வந்து சேரவேண்டும். அந்தவகையில்தான் நான் உங்களிடத்தில் நான் வந்து சேர்ந்திருக்கிறேன்.

அதனால்தான் தொடக்கத்தில் சொன்னேன். கட்சியால்தான் ஆட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சி, ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு ஒருமுறை நான் இந்த தொகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்படி வரும்போதெல்லாம், திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், திருமண ஜோடிகளின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து சொல்வது, நம்முடைய கழக தோழர்கள் யாராவது நம்மை விட்டு பிரிந்துவிட்டால், அவருடைய இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவிப்பது, பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை சென்று பார்ப்பது, சில இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வது, இப்படி தொடர்ந்து இந்த பகுதியில், இந்த தொகுதியில், செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கு உங்கள் வீட்டுப் பிள்ளையாய் என்னை நினைத்து நீங்கள் அன்போடு, பாசத்தோடு வரவேற்கக்கூடிய இந்த காட்சி இருக்கிறது.

நான் காரில் வருகின்றபோது நம்முடைய மாவட்டச் செயலாளரிடத்திலும், மற்றவர்களிடத்திலும் சொல்லிக் கொண்டு வந்தேன். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு இந்தத் தொகுதிக்கு வருகின்றபோது, மனுக்களாக வந்து குவியும். அது குவியத் தொடங்கியபோது நம்மிடத்தில் மக்கள் இவ்வளவு எதிர்பார்க்கிறார்களே என்று, கொஞ்சம் பயம் வந்தது. நானும் அந்த மனுக்களை எல்லாம் பொறுமையாக வாங்கி, அதற்கு பிறகு அலுவலகத்தில் உட்கார்ந்து பரிசீலித்து படிப்படியாக செய்ய ஆரம்பித்து, இன்றைக்கு மனுக்கள் ஒருமுறை வருகிறபோது 25 மனுக்கள் வந்தாலே பெரிய விஷயம், அந்த அளவுக்கு குறைந்துவிட்டது.

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

எதற்கு சொல்கிறேன் என்றால், அந்த மனுக்களை தரக்கூடிய தோழர்கள், தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள், மகளிர், மாணவர்கள் ஆகியோர் எல்லாம் நம்பிக்கையோடு அந்த மனுக்களை தருகிறார்கள். அந்த மனுக்களை பெற்று எதற்கெல்லாம் தீர்வு காண முடிகிறதோ, அதற்கெல்லாம் தீர்வு கண்டு கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

கொளத்தூருக்கு வருவது என்றாலே, அதில் ஒரு தனி இன்பம். இதைச் சொல்வதால் மற்ற தொகுதியைச் சார்ந்தவர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. எல்லாத் தொகுதிக்கும் போவதால் எனக்கு இன்பம் கிடைக்கிறது. ஆனால் கொளத்தூர் வருகிறபோது என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதியாயிற்றே என்ற அந்த உணர்வு வரும். மற்ற தொகுதிகள் உள்ளவர்களும் நான்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தேர்தலில் ஓட்டு போட்டீர்கள், ஓட்டு போட்டபிறகு, ஓட்டு எண்ணிக்கை நடந்தது, தமிழ்நாடு முழுவதும் யார் யாரெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்கின்றபோது, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்று இலயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே அச்சான்றிதழை பெற்றுக்கொண்டு நேரடியாக தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்குதான் நாங்கள் சென்றோம். அந்த நினைவிடத்தில் தலைவர் கலைஞருக்கு நாங்கள் மரியாதை செய்துவிட்டு அங்கிருந்து புறப்படும்போது, நிருபர்கள் சூழ்ந்துகொண்டு என்னிடம் கேட்டார்கள். ஆட்சிக்கு வரக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பெரும்பான்மை வந்துவிட்டது. நீங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், இந்த வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, மகிழ்ச்சி, என்று ஒரு வார்த்தை சொன்னேன். எங்களுக்கு வாக்களித்தவர்களுக்காக நன்றி சொல்கின்ற அதேநேரத்தில் நீங்கள் வாக்களித்து சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லவேண்டும், அவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு நாங்கள் பணியாற்றுவோம். அவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களும் மகிழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு, ஆகா, இவர்களுக்கு ஓட்டுப்போடாமல் விட்டுவிட்டோமே என்று கவலைப்படக்கூடிய அளவிற்கு அவர்கள் பாராட்டவேண்டும். அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொன்னேன். அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எவ்வளவோ திட்டங்கள், தேர்தல் நேரத்தில் அறிவித்த உறுதி மொழிகள் இவைகள் எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம், காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். செய்து முடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதில் முக்கியமானது என்னவென்று கேட்டீர்கள் என்றால், அதை அறிவித்தபோதே, என் கூட இருந்தவர்கள் முடியுமா? என்று கேட்டார்கள். நடக்குமா? என்று கேட்டார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, இது சாத்தியப்படுமா? என்று கேட்டார்கள். அதுதான் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம். உள்ளபடியே நானே பயந்தேன். காரணம், ஆட்சிக்கு வந்தபோது நிதி நிலவரத்தைப் பார்த்தால், அவ்வளவு மோசமாக இருந்தது. அதனால் நிறைவேற்ற முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டது உண்மைதான். எல்லோருக்கும் ஏற்பட்டதுபோல எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நிதிநிலைமை ஓரளவிற்கு சரி செய்து, சீர்படுத்தி, அதற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நம்முடைய அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஐ தேர்ந்தெடுத்து அன்று முதல் வழங்கினோம், அக்டோபர் மாதமும் வழங்கப்பட்டுவிட்டது. இதில் என்ன பெரிய சிறப்பென்றால் செப்டம்பர் 15-ஆம் நாளன்று தான் வழங்கப்படும் என்றுதான் அறிவித்தோம். ஆனால், 14-ஆம் தேதி இரவே பணம் மகளிரின் வங்கிக் கணக்குக்கு சென்றுவிட்டது. இப்போது அக்டோபர் 14 விடுமுறை, ஆனால் 13ஆம் தேதியே பணம் அவர்களுக்கு சென்றுவிட்டது. எந்தவித குறுக்கீடும் இடையில் கிடையாது. எந்தவித தலையீடும் கிடையாது. அந்த குடும்பத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக போகக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கின்ற அற்புதமான திட்டத்தை அறிவித்தோம். அந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவென்று கேட்டால், 234 தொகுதிகள் இருக்கின்றது, ஆளும் கட்சி-திமுக, எதிர்க்கட்சி-அதிமுக, நம்முடைய தோழமை கட்சிகள்- காங்கிரஸ், இடது கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக, விசிக போன்ற பல கட்சிகள் இருக்கிறது. அதுபோல, எதிர்க்கட்சியாக அதிமுக.

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

234 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு அவைதான் சட்டமன்றம். அந்த 234 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்கள் விரும்பக்கூடிய 10 திட்டப்பணிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள் என்றால் அதை நிறைவேற்றி கொடுக்கிறோம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தோம். அந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் எம்.எல்.ஏக்கள் தெரிவு செய்கிறார்கள் என்றால் அந்த எம்.எல்.ஏ. தேர்வு செய்கிறபோது அது முடியுமா, நடக்குமா என்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்களோடு கலந்து பேசி, ஆய்வு செய்து அதற்கு பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

அந்த அடிப்படையில் 1896 கோரிக்கைகள் அனுப்பினார்கள். அதில் இந்த ஆண்டுக்கு மட்டும் 788 பணிகளை செயல்படுத்த போகிறோம். இதற்காக 11 ஆயிரத்து 239 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வரும் ஆண்டில் 203 பணிகளை முடிப்பதற்காக 5 ஆயிரத்து 901 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் பத்திரிகையிலும், சமூக ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், அவர் பாராட்டி செய்தி கொடுத்திருக்கிறார்.

“நான் பத்து கோரிக்கைகளை அனுப்பி வைத்திருக்கிறேன். அதில் 3 கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்துவிட்டார். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக அவர் சொல்லி இருக்கிறார். யாரென்று உங்களுக்குத் தெரியும், தெரியும் அல்லவா? அதை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடும். ஆனால், வெளிப்படையாக வந்துவிட்டது, அவர் வேறு யாரும் அல்ல, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள். சில பேர் தொலைபேசியில் எனக்கு தகவல் சொன்னார்கள்.

இதை நான் சொல்வதற்குக் காரணம், கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல் நோக்கத்தை எண்ணிப்பார்க்காமல், மக்களுடைய பிரச்சினை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய பிரதிநிதிகள் அவர்கள். மக்களின் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அவற்றையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, இதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு, இந்த பொறுப்பில் நான் உட்காருவதற்கு அந்த வாய்ப்பை மக்கள்தான் உருவாக்கி தந்தார்கள். ஆனால் மக்கள் உருவாக்கி தருவதற்காக ஓயாது உழைத்திருக்கக்கூடிய முன்னோடிகள்தான் இந்த இயக்கத்தின் முன்னோடிகள், அதை மறந்திட முடியாது. இது இன்றல்ல, திமுக ஆட்சியில் இல்லாத நேரத்திலும், நான் இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தபோது, பொருளாளாராக இருந்தபோது, செயல் தலைவராக இருந்தபோது, தலைவராக இருக்கும் இப்போதும் இந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்; செய்தி கொண்டிருக்கிறோம். ஏதோ புதிதாக செய்கின்ற நிகழ்ச்சி அல்ல. இன்றைக்கு கூட இளைஞரணியின் செயலாளர் தம்பி உதயநிதி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கின்றபோது, அமைச்சராக இருக்கின்ற போதல்ல, அமைச்சராவதற்கு முன்னால், இளைஞரணியின் செயலாளராக என்றைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டாரோ அன்றிலிருந்து அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால், எங்கேயாவது நிகழ்ச்சிக்கு தேதியை கேட்டார்கள் என்றால், கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதாக இருந்தால் நான் வருகிறேன், அந்த நிகழ்ச்சிக்கு ஒன்று ஏற்பாடு செய்யவேண்டும், அத்துடன் பல நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்கிறேன் என்று சொல்லி, கட்டாயப்படுத்தி, அதை உறுதி செய்துகொண்டுதான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்கிறார். இந்த நேரத்தில். உள்ளபடியே பாராட்டவேண்டும். மகன் என்ற காரணத்திற்காக அல்ல, கட்சியின் முன்னோடிகளுக்கு உரிய மரியாதை அவர் வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்காகத்தான் அவரை இந்த நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

"சரியான நபரைதான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று மக்கள் சொல்லவேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

அதேபோல இன்றைக்கு நீங்கள் எல்லாம் இல்லை என்றால், இந்தக் கட்சியே இல்லை. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தினுடைய வேர்கள். இந்த வேர்கள் தான் இன்றைக்கு மரமாக, கிளையாக வளர்ந்து, நாங்கள் எல்லாம் இந்தப் பொறுப்பு இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட முன்னோடிகளை பெருமைப்படுத்துவதற்காக ஏதோ ஒரு கடமை மட்டுமல்ல, நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் இந்த இயக்கம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் தெம்போடு இருந்தால்தான் இந்த இயக்கம் வளரமுடியும். இந்த இயக்கம் வளர்ந்தால் மக்கள் நாட்டில் நலமாக வாழ்ந்திடமுடியும். அதற்காகத்தான் இன்றைக்கு உங்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த இந்த பொற்கிழி வழங்குகிறோம். உங்கள் பணி முடிந்துவிட்டது என்று உங்களை விட்டுவிடமாட்டோம். ஏதோ ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னை அழைக்கிற போதெல்லாம், ஓயாமல் உழைக்கக்கூடிய உழைப்பாளி என்று பலமுறை என்னிடத்தில் சொல்லியிருக்கிறார். ஓயாமல் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், இந்த இயக்கம் தான், மக்கள் தான் காரணம். ஆகவே, இன்னும் நீங்கள் எங்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கிடவேண்டும். நீங்கள் பக்கபலமாக இருந்தால்தான், நாங்களும் கடமைகளை வேக வேகமாக நிறைவேற்றமுடியும்.

அந்த உணர்வோடுதான் உங்களை பெருமைப்படுத்துவதன் மூலமாக நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆகவேதான், அந்த நிலையில்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இது நம்முடைய நிகழ்ச்சி, நம்முடைய தொகுதி, இது நம்முடைய குடும்ப விழா, அப்படிப்பட்ட விழாவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய கழக நிர்வாகிகள், பகுதி கழக, வட்டக்கழக செயலாளர்கள், குறிப்பாக ஒரே ஒரு சொல்லவேண்டும் என்று சொன்னால் நம்முடைய செயல் பாபு, சேகர் பாபு அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து உரையை நிறைவு செய்கிறேன்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories