மு.க.ஸ்டாலின்

"நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது" : 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது" : 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (18.10.2023) செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது அரசின் முக்கிய திட்டங்கள் எந்த அளவுக்கு களத்தில் மக்களை சென்றடைந்து வருகின்றன என்பதையும், இன்னும் அந்தத் திட்டங்களை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடைமுறைபடுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் எல்லாம் குறித்து இங்கே நாம் விவாதித்திருக்கிறோம்.

மக்களை நேரடியாக சந்தித்து அரசு திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அலுவலர்களாகிய நீங்கள் அளித்து வரும் சிறப்பான செயல்பாட்டினால், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் வகுத்துத் தரும் திட்டங்கள் சீரிய வகையிலும், பொதுமக்கள் போற்றும் வகையிலும் அவர்களை சென்றடைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் உங்கள் அனைவரின் பங்களிப்பால் திறம்பட செயலாக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் இரண்டாவது தவணைத் தொகையையும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இது மட்டுமல்ல இன்னும் எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக;

“புதுமைப் பெண் திட்டம்”

“மக்களைத் தேடி மருத்துவம்”

“முதல்வரின் முகவரி”

“நான் முதல்வன்”

இது போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்கள் உங்களது சிறப்பான பணியினால் மக்களை சென்றடைந்துள்ளது. அதற்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது நாம் முக்கியமான திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். குறிப்பாக, மாநகராட்சி சாலைப் பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளைக் குறித்தும் நாம் ஆய்வு செய்தோம். இவ்வகை திட்டப்பணிகள் குறிப்பாக சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றித் தருவது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவதை காண முடிந்தாலும், ஒருசில பணிகளில் தொய்வு இருந்ததையும் நாம் கவனித்தோம். அதற்கான விளக்கத்தையும், அது குறித்து என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், துறைத் தலைவர்களும் தெரிவித்தார்கள். அதன்படி நீங்கள் அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டங்களில் காலதாமதம் ஏற்படுவதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நான் முந்தைய ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அது என்னவென்றால், அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்பதை அந்தத் திட்டத்தைத் துவக்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம். உத்தேச பணி முடியும் நாட்களுக்குள் குறிப்பிட்ட பணி முடிவடையாதபோது திட்டத்திற்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளினால் அந்தப் பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். எனவே, எக்காரணம் கொண்டும் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும், குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடுகளுமின்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.

"நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது" : 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனவே, அனைத்து துறைத் தலைவர்களும் தங்கள் துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு உங்களை அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக இலக்கு மக்களின் குடும்பங்களை மேம்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பயன்பெறுவதை உறுதி செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற வழிவகை செய்வது, போன்ற பலவழிகளிலும் ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் வளம்பெற நீங்கள் உதவமுடியும். பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் அரசு திட்டங்களின் பயனைப் பெறுவதோடு வழிகாட்டுதல்களையும் பெறவேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெறுவது, பள்ளி, கல்லூரி அளவில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல், அவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதையும், அவர்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதையும் உங்கள் முக்கிய பணிகளில் ஒன்றாக நீங்கள் கருதவேண்டும்.

இந்த நல்ல தருணத்தில் நான் இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்; முதலாவதாக, தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன், இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர். தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்.

"நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது" : 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

மக்களுக்காக இயங்கும் இந்த அரசு அவர்களை நோக்கிச் செல்வதன் ஒரு முயற்சி தான் இந்த கள ஆய்வில் முதலமைச்சர் என்ற ஆய்வுக் கூட்டம். நேற்றைய தினம், பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் இந்த மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு திட்ட செயலாக்கம் பற்றி நேரடியாக அறிந்து உங்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில், அரசின் திட்டங்கள் மேலும் செம்மைபடுத்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகள் அவைகளை எல்லாம் நீங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் சிறப்பாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமாக நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது, தினமும் குறிப்பாக நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால்தான், என்ன நாட்டில் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி உங்களது மாவட்டங்களைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்தவகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலை முதல் duty-ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி, அரசின் திட்டங்களை, சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கும் உங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை ஈட்டித் தரவேண்டுமென்று அன்போடு கேட்டு, அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி!! வணக்கம்!!!

banner

Related Stories

Related Stories