மு.க.ஸ்டாலின்

சொந்த கட்சியில் தலைவர் இல்லாததால் மாற்றுக்கட்சி தலைவர்களை கூறி விமர்சிக்கிறார் மோடி -முதலமைச்சர் தாக்கு !

தி.மு.க. பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பதுதான் பா.ஜ.க.விற்கு எரிச்சலாக இருக்கிறது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சொந்த கட்சியில் தலைவர் இல்லாததால் மாற்றுக்கட்சி தலைவர்களை கூறி விமர்சிக்கிறார் மோடி -முதலமைச்சர் தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல BLA-2 வாக்குசாவடி முகவர் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்” என்ற கலித்தொகைக்கு இலக்கணமாக, வீரம் மிகுந்த இந்த ராமநாதபுரம் மண்ணில் கழக தீரர்களான நாம் கூடியிருக்கிறோம்.

சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் - இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது; மறக்க முடியாதது. இந்த மண்ணைக் காக்கும் பெரும் போரில் பன்னிரண்டே வயதான இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஈடுபட்டார். தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேதுச்சீமையின் உரிமையைப் பறித்தவர்களையும், தன்னைத் திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேது மன்னர் திட்டமிட்டார். சிறையில் இருந்தபடியே மக்களை எழுச்சி பெற வைத்தார். மன்னரின் கட்டளையை மனதில் வைத்து, ஒரு பெரும் போரையே மக்கள் நடத்தினார்கள். ஒரு நாள் - இரு நாள் அல்ல, 42 நாட்கள் விடாமல் அந்தப் பெரும் போரைச் செய்தார்கள்.

திருச்சியில் இருந்தால் அவரை ஒவ்வொருவராக வந்து பார்ப்பார்கள் என்பதால், சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இழுத்துச் சென்று தனிமைச் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு. பதினான்கு வருடம் தனிமைச் சிறையில் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்தார் அவர். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்துக் கொல்லப்பட்டார் சேது மன்னர். இத்தகைய சேதுபதி மன்னரைப் பெருமைப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு 'சேதுபதி நகர்' என்று பெயர் சூட்டியவர்தான் நம் நெஞ்சில் வாழும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்! அப்படிப்பட்ட இந்த சேதுச்சீமைக்கு, ஏராளமான நன்மைகளைச் செய்த ஆட்சி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

இங்கு எல்லோரும் குறிப்பிட்டார்களே, ஒரு காலத்தில் ‘தண்ணி இல்லாத காடு’ என்று சொல்லப்பட்ட இந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு, இந்த அடியேன் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தோம். வேளாண் வளர்ச்சிக்காக பார்த்திபனூரில் மதகு அணை கட்டினோம். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் கோரிக்கையை அடுத்து 500 கிலோ மீட்டர் கிராம சாலையை நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் வகையில் மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

* தேவிபட்டினம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி!

* ஆரம்ப சுகாதார நிலையங்கள்!

* அரசு மருத்துவமனை!

* சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாவட்டத்தில் 5 ஆயிரம் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள்!

* உயர்மட்டப் பாலங்கள்!

* பாலைவனப் பூங்கா – என்று, நம்முடைய அரசு செய்த பல திட்டங்களால்தான் பின்தங்கிய மாவட்டம், இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறது.

18 ஆண்டுகள் ஓடாமல் இருந்த இராமநாதபுரம் இராமநாதசுவாமி திருக்கோயில் தங்கத்தேரை ஓடவைத்தது நம்முடைய ஆட்சிதான்.

தென் பாண்டி மண்டலத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னவுடனே இராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். அது சரியான முடிவுதான் என்று இங்கு கூடியிருக்கும் நீங்கள் நிரூபிக்கிறீர்கள். இது போலவே தேர்தல் களத்திலும் சரியான முடிவுகள் கிடைக்கச் செய்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடும் உணர்ச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களைப் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

இளைஞர் அணிக்கு நான் பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கழகக் கொடியேற்றிக் கொண்டு இருந்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் கொடியேற்றிப் பேசினேன். அப்போதுதான் நம்முடைய ஐ.பி அவர்களை நான் பார்த்தேன். பெரிய மீசை - பெரிய கிருதா என்று கட்டிளம் காளையாக வலம் வந்தார். இப்போது மீசை, கிருதாவோடு தாடியும் சேர்ந்துவிட்டது. வெள்ளி போன்ற தாடி, தலை நரைத்தாலும் கழகப் பணிக்கு நரையில்லை, தளர்வில்லை என்று பணியாற்றி வருகிறார் நம்முடைய ஐ.பி. அவர்கள்.

அவருக்குத் தோளோடு தோள் நின்ற - துணை நின்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நம்முடைய அன்பிற்கினிய ராஜ கண்ணப்பன் அவர்களுக்கும் - இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி!

இவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தை வளர்த்து வருகிறார்கள். இன்றைக்கு எவ்வளவு பெரிய எழுச்சியை இந்த கூட்டம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன் நான். தலைவர் கலைஞர் சொன்னதுபோல், கழகத்தின் வளர்ச்சிக்கான உழைப்பை வழங்கி வருகிற உங்கள் இருவரையும் – இந்த மாவட்டக் கழக நிர்வாகிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

சொந்த கட்சியில் தலைவர் இல்லாததால் மாற்றுக்கட்சி தலைவர்களை கூறி விமர்சிக்கிறார் மோடி -முதலமைச்சர் தாக்கு !

நம்மையெல்லாம் ‘உடன்பிறப்பே’ என்று அழைத்து ஒரு குடும்பம் ஆக்கிய தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாம் கூடியிருக்கிறோம். தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆள வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கனவு கண்டார். அந்தக் கனவை நிறைவேற்றிவிட்டோம்! தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கனவு கண்டார். அந்தக் கனவையும் நிச்சயம் நிறைவேற்றியே காட்டுவோம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும், நம்முடைய சீர்திருத்த சட்டங்கள் இந்தியாவின் சட்டங்களாக மாற வேண்டும் என்று தலைவர் கலைஞர் நினைத்தார். அந்தக் கனவையும் நிறைவேற்றிக் காட்டுகிற காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கான மாநாடுதான் இது! அதற்கான தளபதிகள்தான் நீங்கள்!

கடந்த 22.03.2023 அன்று என்னுடைய தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது இரண்டு முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றினோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது முதல் தீர்மானம். தமிழ்நாடு முழுவதும் முழுமையாக பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம். உறுப்பினர்களை சேர்க்கிற பணி வெற்றிகரமாக முடிந்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 2 கோடித் தொண்டர்கள் கொண்ட நம்முடைய கழகத்தில் நீங்கள் 68 ஆயிரத்தில் ஒருவர்! வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான பயிற்சியை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பாசறைக் கூட்டம், கடந்த ஜூலை 26 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் நடந்தது. கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு அவர்களின் முயற்சியால் வழக்கம் போல் பிரம்மாண்டமாக நடந்தது.

அடுத்ததாக மிகப் பிரமாண்டமாக இப்போது தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் இராமநாதபுரத்தில் நடக்கிறது. 19 மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான 16 ஆயிரத்து 978 பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களை அழைத்து வந்திருக்கிற மாவட்டக் கழகச் செயலாளர்களான,

* கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,

* தங்கம் தென்னரசு அவர்கள்,

* சக்கரபாணி அவர்கள்,

* பெரிய கருப்பன் அவர்கள்,

* மூர்த்தி அவர்கள்,

* கீதாஜீவன் அவர்கள்,

* அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள்,

* மனோ தங்கராஜ் அவர்கள்,

* ஆவுடையப்பன் அவர்கள்,

* மைதீன்கான் அவர்கள்,

* கம்பம் ராமகிருஷ்ணன் அவர்கள்,

* தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள்,

* கோ.தளபதி அவர்கள்,

* ஐ.பி.செந்தில்குமார் அவர்கள்,

* மணிமாறன் அவர்கள்,

* மகேஷ் அவர்கள்,

* காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள்,

* ராஜா அவர்கள்,

* ஜெயபாலன் அவர்கள் - ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி! பாராட்டுகள்!

கடந்த சில மாதங்களாகத் தலைமைக் கழகத்தில் இருந்து உங்களையெல்லாம் அழைத்துப் பேசி உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை வாங்கச் சொல்லியிருந்தேன். அப்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பலரை மாற்றவும் சொல்லியிருந்தேன். மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாகப் புதியவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களைப் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்புதான் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டையை பெற்ற தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மட்டும் இங்கு முதல் கட்டமாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கான வகுப்புகள் காலை முதலே நடந்து வருகிறது.

* வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் தலைசிறந்த வழக்கறிஞரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அவர்களும்,

* வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து செயல் வீரர் - தம்பி ஐ.பி. செந்தில்குமார் அவர்களும்,

* சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் என்ற தலைப்பில் இளம் பேச்சாளர் தம்பி மதுரை பாலா அவர்களும் - உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

கழகத்தின் வரலாறு – அடிப்படைக் கொள்கைகள் – திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் – நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் – திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படை தகவல்களைக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்திலும் கர்ஜித்து வரும் அருமைத் தங்கை கனிமொழி அவர்களும், திராவிடப் பள்ளியை நடத்தும் நமது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் சுப.வீ அவர்களும் – உங்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும் – தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். இதையெல்லாம் இந்தத் தேர்தலுக்கு மட்டுமல்ல, எந்தத் தேர்தலுக்கும் பயன்படும் பயிற்சி!

1967, 1971, 1989, 1996, 2006 - ஆகிய ஐந்து முறை ஆட்சியைக் கைப்பற்றித் தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம் நமது திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆறாவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறோம்.

அதேபோல் இந்தியாவில் – ஒன்றிய ஆட்சியில் பல்வேறு தேர்தல்களில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த இயக்கம், நம்முடைய இயக்கம். பிரதமர்களை - குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம், நம்முடைய இயக்கம்.

1989 - பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவை,

1996 - பிரதமர் தேவகவுடா அமைச்சரவை,

1997 - பிரதமர் குஜ்ரால் அமைச்சரவை,

1999 - பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவை,

2004 மற்றும் 2009-இல் – பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை என்று ஒன்றிய அளவிலான கூட்டணி ஆட்சிகளில் பங்கெடுத்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். இந்திய அளவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட அடித்தளம் அமைத்தோம்.

இதோ, இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை ஆற்றக் காலம் நம்மை அழைக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இத்தகைய முக்கியமான தேர்தலுக்குத்தான் நீங்கள் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களாக ஆகியிருக்கிறீர்கள். கழகத்தின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்! நாற்பதும் நமதே - நாடும் நமதே - என்று நான் சொல்வது உங்கள் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையில்தான். இன்று முதல் கழகத் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும்! வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக அமைய வேண்டும். அதற்கான சரியான வழிமுறைகளில் நீங்கள் போக வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது.

வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதுதான் உங்களின் முதல் பணி. இரண்டாவது பணி, உங்கள் வாக்குச் சாவடிக்கு உரிய வாக்காளர்கள் விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா, இறந்தவர்கள் பெயர் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டதா என்று முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். முறையான வாக்காளரை நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும்.

வாக்காளர்களைச் சந்தித்துப் பரப்புரையில் ஈடுபடுவதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்து செல்வதும் உங்களின் மூன்றாவது பணி.

வாக்குப்பதிவு நடக்கும்போது வாக்காளர்களை பூத்துக்கு வரவைப்பது நான்காவது முக்கியக் கடமை.

சொந்த கட்சியில் தலைவர் இல்லாததால் மாற்றுக்கட்சி தலைவர்களை கூறி விமர்சிக்கிறார் மோடி -முதலமைச்சர் தாக்கு !

முதலில், உங்கள் பூத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுவதுமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவத்தை இப்போது உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு விரைவில் உங்களுக்கு அது வந்து சேரும். வாக்காளர் பெயர், வயது, அவர்கள் குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்கிற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கும் என்றால் அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்? தினமும் ஒரு மணி நேரத்தைக் கழகத்துக்காக, பூத் வேலைக்காக ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியாதா? ஒதுக்குவீர்களா? அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறோம். அதைப் படித்துப் பார்த்தாலே எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இப்படி அவரவர் தேவையைக் கண்டுபிடித்து அதை நிறைவேற்றி கொடுங்கள். இதைச் செய்து தருவதற்கு உங்கள் பகுதி ஒன்றிய – நகர - பேரூர் கழகச் செயலாளர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ. அமைச்சர்களையோ அணுகுங்கள்.

இவ்வாறு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இனியும் சொல்லிட்டுக்கொண்டுதான் இருப்பேன். அதை நிறைவேற்றாதவர்கள்மீது நான் உரிய நடவடிக்கை நிச்சயமாக வரும் காலக்கட்டத்தில் எடுப்பேன். நியாயமான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும். அதனால், நீங்கள் கவலைப்படாமல் நான் சொன்ன வேலையில் கவனம் செலுத்துங்கள்.

ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள். சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுடக் கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடி செல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களாகப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நம்முடைய ஆட்சி மேல் நம்பிக்கை இருக்கிறது.

*கோடிக்கணக்கான மகளிருக்கு பயனளிக்கும் திட்டம்தான் பேருந்தில் கட்டணமில்லா ‘விடியல் பயணம்’!

*ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையை வரும் செப்டம்பர் மாதம், அண்ணா பிறந்தநாள் முதல் மாதாமாதம் வாங்கப் போகிறார்கள்.

*30 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டப் பயனாளிகள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்கிறோம்.

*லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் படிக்கிறார்கள்.

*13 லட்சம் குடும்பங்களின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

*நான் முதல்வன் திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது.

இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்ப ஒரு சிறுநரிக் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. அவர்கள் பொய்யையே சொல்லிக்கொண்டு இருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம்முடைய திட்டங்களை பற்றிப் பேசுவோம். இதிலேயே எதிரிகள் பரப்புகிற அவதூறுகள் சுக்குநூறாக நொறுங்கிவிடும்.

இப்போது பரப்புரை பாணியே பெரிய அளவில் மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரைக் களங்களாக ஆகிவிட்டது. நீங்கள் எல்லோரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அ.தி.மு.க. – பா.ஜ.க.-வினர் எதையுமே செய்யாமல் எல்லாவற்றையும் செய்த மாதிரி விளம்பரம் செய்து கொள்வார்கள். நாம் நம்முடைய சாதனைகளை மட்டும் பேசினாலே போதும்.

முன்பெல்லாம் டீக்கடையிலும், சலூனிலும் பேசப்பட்ட அரசியல் விவகாரங்கள், இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அதில் தீவிரமாக செயல்பட வேண்டும். நடமாடும் ஊடகமாக மாற வேண்டும். இதைச் செய்தாலே நம்முடைய எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பா.ஜ.க. ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இதற்கு 2024-இல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பா.ஜ.க. செய்து தரவில்லை.

* பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்று சொன்னார்களே! 15 ஆயிரமாவது தந்தார்களா? இல்லை!

* ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று சொன்னாரே பிரதமர் மோடி அவர்கள். வேலைவாய்ப்பு வந்ததா? இல்லை!

* உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று சொன்னாரே? ஆக்கினாரா? இல்லை.

பெரிய பெரிய விஷயங்களைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாட்டுக்குத் தந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றினீர்களா என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நான் கேட்கிறேன். அதுவும், ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராமநாதபுரத்திற்கு வந்து போட்டியிடுங்கள் என்று, பிரதமரை சிலர் அழைப்பதாக ஊடகங்களில் தகவல் வருகிறது. இதே ராமநாதபுரத்துக்கு வந்து பேசும்போது சொன்ன வாக்குறுதியையாவது மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறாரா?

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்துக்கு வந்து மோடி அவர்கள் பேசினார். அப்போது அவர் பிரதமர் ஆகவில்லை. வாக்கு கேட்டு வந்து பேசுகிறபோது என்ன சொன்னார்?

மிகப்பெரிய புண்ணியத் தலமான ராமேஸ்வரம், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்று நரேந்திர மோடி அவர்கள் சொன்னாராரா! இல்லையா! ராமேஸ்வரத்தை உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றிவிட்டார்களா? அம்ருத் திட்டம் – சுதேஷ் திட்டம் என்று சில கோடி ரூபாய்களை ஒதுக்கி, பாதாளச் சாக்கடைத் திட்டம் செய்திருக்கிறார்கள். அதையும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முறையாக செய்யவில்லை.

1964-இல் வீசிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அழிந்து போய்விட்டது. ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடி வரை முன்பு ரயில்கள் வந்து போனது. புயலால் தனுஷ்கோடி பாதிக்கப்பட்டதில் ரயில் பாதைகளும் காணாமல் போய்விட்டது. தனுஷ்கோடி வரை மீண்டும் பாதை அமைத்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019-ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று பிரதமர் மோடி அவர்கள் வந்து அடிக்கல் நாட்டினார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதை இன்னும் வரவில்லை. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக மோடி சுட்ட பல வடைகளில் அதுவும் ஒன்று. தேர்தல் முடிந்ததோடு, அது ஊசிப் போனது. அது இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

இதுபோல் தமிழ்நாட்டுக்காக பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டது. அதில், மோடி அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மீனவர்கள் தொடர்பானது. ''தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்" என்று இதே ராமநாதபுரத்தில் வைத்துதான் மோடி சொன்னார்.

பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இந்த 9 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா? மீனவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன் என்று குமரியில் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மோடி பேசினார். அவரின் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா? 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? 2017-ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலைக்கு யார் பொறுப்பு? 2021-ஆம் ஆண்டு மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு யார் பொறுப்பு? பலரும் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்படி பெரிய பட்டியலே இருக்கிறது.

நாளைக்கு மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அப்போது இது பற்றி இன்னும் விரிவாக பேசுவேன். மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, படகுகளை பறிப்பது என்று அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதை தட்டிக் கேட்கிற அரசாக பா.ஜ.க. அரசு இல்லை. மோடி ஆட்சியில் தாக்குதல் தொடரவே செய்கிறது என்றால் அவர் முன்பு சொன்ன மாதிரி, இவர் ஆட்சியும் பலவீனமான ஆட்சி என்று தானே அர்த்தம்?

2015-ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி அவர்கள் இருந்தபோது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்றைக்கு வரைக்கும் எய்ம்ஸ் செங்கல்தான் இருக்கிறது மருத்துவமனை வரவில்லை. இப்போதுதான் அதற்கு டெண்டரே விட்டிருக்கிறார்களாம். அதாவது, 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது விரைவாக கட்டி முடிப்பார்களா, இல்லை, இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி.-யாக பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் வசூல் செய்கிற பா.ஜ.க. அரசுக்கு ஆயிரம் கோடியை ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தர மனமில்லை.

சொந்த கட்சியில் தலைவர் இல்லாததால் மாற்றுக்கட்சி தலைவர்களை கூறி விமர்சிக்கிறார் மோடி -முதலமைச்சர் தாக்கு !

இதையெல்லாம் நாம் கேட்கிறோம் என்பதால் தி.மு.க.-வைக் கடுமையாக தாக்குகிறார்கள். பிரிவினையைத் தூண்டுகிறோம் என்று திசை திருப்புகிறார்கள். பொய் சொல்கிறார்கள். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார்? ஒரு காலத்தில் நாம் திராவிடநாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அது, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான பேச்சுதானே தவிர, இதில் பிரிவினை எங்கே இருக்கிறது? இதை வெட்டி ஒட்டி, வாட்ஸ்அப்-இல் ஒரு குரூப் அனுப்ப – நாடாளுமன்றத்தில், பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். ராஜாஜியும், காமராசரும், எம்.ஜி.ஆரும் அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார் பிரதமர்.

அவருக்குச் சொல்வேன் – திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர்தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள்! 'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று வாயசைத்துப் பாடிக்கொண்டு இருந்தவர்தான் எம்.ஜி.ஆர்., இதை எல்லாம் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வருவதையெல்லாம், வரலாறு என்று நம்புவது பிரதமர் என்ற பதவிக்கு அழகல்ல!

வகுப்புவாதத்தை துளியும் ஏற்காதவர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள். டெல்லியில் அவர் தங்கி இருந்த வீட்டைக் கொளுத்த முனைந்தது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சொந்தக் கட்சியில் சொல்லும் அளவுக்கு தலைவர்கள் இல்லாததால் மாற்றுக் கட்சித் தலைவர்களைக் கடன் வாங்கி தி.மு.க.-வை விமர்சித்திருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.

இப்போதுதான் சகோதரி கனிமொழி அவர்கள் சொன்னதால், சிலப்பதிகாரம் என்ற புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். அதை அவர் முழுமையாக படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஓய்வு கிடைக்கும். அப்போது முழுமையாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

ஆனால், அதற்கு முன்பு நிதியமைச்சரின் கணவரான டாக்டர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற புத்தகத்தை ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அது நாட்டுக்குப் பேரழிவாக இருக்கும் என்று சொல்கிறார் நிதி அமைச்சரின் கணவர் பரகலா பிரபாகர் அவர்கள். என்னை இந்தி படிக்கவிடவில்லை - சமஸ்கிருதம் படிக்கவிடவில்லை என்று முடிந்து போன காலத்தைப் பற்றி கதை விடுகிற நிதி அமைச்சர் அவர்கள், இனி நடக்கப் போகிறதைப் பற்றி படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நடத்திய நாடகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நிதி அமைச்சருக்கு மணிப்பூரில் ஆடை களையப்பட்டு இழுத்து வரப்பட்ட பெண்களைப் பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை? ஒன்றரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமருக்கு மணிப்பூர் என்கிற ஒரு மாநிலமே நினைவுக்கு வரவில்லையே! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்கு ஒரு சில நிமிடங்கள் அதைப் பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வர மறுப்பதும் – மணிப்பூர் பற்றி பேச மனமில்லாமல் இருப்பதும்தான் பிரதமரின் பின்னடைவைக் காட்டுகிறது இது நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதுயாக எதிரொலிக்கும்.

வடக்கைத்தான் அவர்கள் அதிகம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது வட மாநிலங்களையும் இழக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியின் பிரதமரோ – உள்துறை அமைச்சரோ – நிதி அமைச்சரோ தி.மு.க.-வை விமர்சிக்கிறார்கள் என்றால் தி.மு.க. சரியாக இருக்கிறது என்று பொருள்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருப்பது யார், பழனிச்சாமி! அ.தி.மு.க., பா.ஜ.க.வின் அடிமை! தி.மு.க. எதிர்ப்பு ஒன்று மட்டும்தான் அ.தி.மு.க.-விற்குத் தெரியும். நம் மீது பல அவதூறுகளையும், பொய்களையும் சொல்லித்தான் அவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியும். சொந்தமாகச் சொல்லிக்கொள்ள அவர்களுக்கு என்று எந்தத் தியாக வரலாறோ, கொள்கையோ கிடையாது. அதனால்தான் தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே நம்பி அரசியல் செய்து இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க போன்றவர்களின் பொய்களுக்கும் எதிர்ப்புக்கும் அஞ்சும் இயக்கம் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம்!

எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம்தான் இந்த இயக்கம்! ஏன் என்றால், இது மக்களுக்கான இயக்கம். மக்களோடு இருக்கும் இயக்கம். மக்களின் ஆதரவோடு என்றென்றும் பணியாற்றும் இயக்கம். எனவே, மக்கள் மன்றத்தில் எங்களைக் கொச்சைப்படுத்த நினைத்தால் அது நடக்காது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் என்ன வேண்டும் ஆனாலும் தி.மு.க. பற்றி வசைபாடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாங்கள் மாநில கட்சிதான். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலனுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரே மாநிலக் கட்சிதான் தி.மு.க! நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒன்றிய பா.ஜ.க அரசின் அமைச்சர்கள் - எம்.பி.க்கள் பேசும் அவதூறுகளுக்கு அஞ்சாமல் பதிலளித்து நமது குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகிறார்கள் நம்முடைய கழக எம்.பி.க்கள். தி.மு.க. உறுப்பினர்கள் கொள்கையைப் பேசுகிறார்கள் - பயமில்லாமல் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜக-விற்கு கோபம். தி.மு.க. பேசும் கொள்கைகளை மற்ற கட்சியினரும் பின்பற்றிப் பேசுகிறார்கள் என்பதுதான் பாஜக-விற்கு எரிச்சலாக இருக்கிறது. அகில இந்தியக் கட்சிகள் சில, நம்முடைய கருத்தியலை உணர்ந்து மனமாற்றம் அடைந்து வருகின்றன.

நம்முடைய கொள்கை இந்திய ஒன்றிய ஆட்சியை வழிநடத்தும் கொள்கையாக மாற வேண்டும். அதற்கு தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும். அகில இந்தியா முழுமைக்கும் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-வுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் நமது தேர்தல் முழக்கமாக அமையப்போகிறது.

பா.ஜ.க.வினர் தங்களை எதிர்ப்பவர்களைப் பார்த்து Anti Indians என்று பழிசுமத்துவது வழக்கம். இப்போது இந்தியாவை எதிர்க்கும் Anti Indian-களாக பா.ஜ.க.வினர் இருக்கிறார்கள்.

எனவே நமக்கு முன்னால் உள்ள கடமை என்பது மிகமிகப் பெரியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கான களப்பணியை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் முன்னணிப் படை வீரர்கள் நீங்கள். என்னுடைய போர்ப்படைத் தளபதிகள் நீங்கள். உங்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தல் களத்தை நான் உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன். எனது கடமையின் தூதுவர்களாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருக்கப் போகிறவர்கள் நீங்கள்தான். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் முக்கியத்துவமும் கழகத்தில் நிச்சயமாக, உறுதியாக, அண்ணாமீது ஆணையாக கிடைக்கும். கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு கொண்ட அண்ணாவின் தம்பியராய் கலைஞரின் உடன்பிறப்புகளாய் வென்று காட்டுவோம். உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன். களம் காணுங்கள். கழகத்தின் வெற்றிக்காக களமாடுங்கள்.

நாற்பதும் நமதே! நாடும் நமதே! " எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories