மு.க.ஸ்டாலின்

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடி பேச்சு!

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆற்றிய உரை:

டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் அவர்கள் இங்கே வருகை தந்திருப்பதில் நமக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர், உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்பதும் - நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து - அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து இந்தளவு முன்னேறி இருக்கிறார் என்பதும், தமிழ்நாட்டிற்கும் நமக்கும் மிகப்பெரிய பெருமையாக அமைந்திருக்கிறது. அறிவாற்றலும் - திறமையும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடையலாம் என்பதற்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்.சந்திரசேகரன் அவர்களே சாட்சியாக இங்கே நமக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

தொழில் - வர்த்தகம் - நிறுவனம் ஆகியவற்றோடு தன்னுடைய ஆர்வத்தை நிறுத்திக் கொள்ளாமல் இசை, புகைப்படம் எடுத்தல் ஆகிய தனித்திறமைகளிலும் சிறந்தவராக அவர் இருக்கிறார். அனைத்தையும் விட, நியூயார்க் நகரத்தில் மாரத்தானில் கலந்து கொண்டு சாதனையும் படைத்தவர் அவர்.

வேகம் - விவேகம் - துடிதுடிப்பு ஆகிய தனது குணத்தை, தான் பங்கெடுக்கும் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிக் காட்டியய என்.சந்திரசேகரன் அவர்களை இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் அனைவரின் சார்பில் நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், மரியாதைக்குரிய சந்திரசேகரன் அவர்களை எடுத்துக்காட்டாகக் எடுத்துக்கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்த நேரத்திலே உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடி பேச்சு!

யார் ஒப்புக் கொண்டாலும் - ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக - தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

அனைத்துத் தொழில்களிலும் சிறந்த மாநிலமாக விளங்கும் நம்முடைய தமிழ்நாடு, தொழிற்சாலைகள் நிறைந்த பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம்!

ஆட்டோமொபைல்

மின்னணு சாதனங்கள்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள்

நிதிச் சேவைகள், அது தொடர்பான நிறுவனம் (Fintech)

மின்னணு வாகனங்கள்

தோல் சார்ந்த காலணி மற்றும் தோல்சாரா உற்பத்தி தொழில்கள்

வங்கி

நிதி

காப்பீடு மற்றும் சேவை நிறுவனங்கள்

வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி

பொறியியல்

டெக்ஸ்டைல்ஸ்

ஆடைகள் உற்பத்தி

பிளாஸ்டிக் மற்றும் இரசாயன உற்பத்தி

ஆகிய துறைகளிலு ம் தமிழ்நாடு இப்போது முன்னணியில் உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தொழில்துறை ஆண்டறிக்கையின்படி நம்முடைய இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. பணிபுரியும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு,

வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்,

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிமுறைகள்,

மின்னணு வடிவமைப்பு,

மருத்துவ மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு அபரிவிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடி பேச்சு!

தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என பெருமிதத்துடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

2021 – 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும்; உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது.

நம்முடைய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக, 2022-2023-ஆம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதை நான் இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி புதிய புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன என்றால், புதியதாக தொழில்கள் தொடங்கப்படுகின்றன என்றால் என்ன பொருள்?

தமிழ்நாட்டில் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது என்று பொருள்!தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று பொருள்! தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது என்று பொருள்!

அதனால்தான், முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம். எனது கனவுத் திட்டங்களில் ஒன்று, நான் முதல்வன் திட்டம்!

மாநிலத்தின் முதன்மை திறன் மேம்பாட்டுத் திட்டமான - “நான் முதல்வன்”, திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்காலப் பணியாளர் தேவை வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. திறன்மிக்க மனிதவளம் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து கிடைத்திடவும் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அளவில் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் இந்த அரசு, தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக பல்வேறு தொழிற்பிரிவுகளில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 877 கோடியே

43 லட்சம் ரூபாய் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடி பேச்சு!

இந்த மையங்களில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டமாக 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களை இன்று துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தகைய திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் டாடா குழுமத்தினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்து 140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடையப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்து 40 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இந்த சிறப்புமிக்க நிகழ்வு இந்த அரசின் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்!

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மட்டுமல்லாமல் இதர பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அரிய வாய்ப்பினை தமிழ்நாட்டு மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி, வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு உளமாற வாழ்த்துகிறேன். எல்லார்க்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்களை, இளைஞர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டு இளைய சக்தியை உலக நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி வருகிறோம்.

டாடா போன்ற நிறுவனங்கள் தொழில் உற்பத்தியை மட்டுமல்ல, மனித ஆற்றலை உற்பத்தி செய்து பெருக்கும் நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

'எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பது இல்லை - ஆனால் எல்லோருக்கும் திறமை வளர்ப்பதற்கான வாய்ப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்' என்று பெருமதிப்பிற்குரிய ரத்தன் டாடா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அனைவருக்கும் திறமை வளர்ப்பதற்கான ஒரே மாதிரியான வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். எங்களது எண்ணத்திற்கு வலுசேர்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டு இந்த நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    banner

    Related Stories

    Related Stories