மு.க.ஸ்டாலின்

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைப்பாளர் தினத்தில் அறிவித்துள்ளர்.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதும் இன்று மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உழைப்பாளர் தினமான மே நாளையொட்டி, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேடையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றினார்.

மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் எனது மே நாள் வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறுதேங்கிய நல் வாய்க்காலும், வகைப்படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன் விளைவிக்கும்

நிறையுழைப்புத் தோள்கள் எல்லாம் எவரின் தோள்கள்?

கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்

கருவியெல்லாம் செய்து தந்த கைதான் யார் கை?

பொற்றுகளைக் கடல் முத்தை மணிக்குலத்தைப்

போய் எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?

- என்று கவிதையாய்க் கேட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். இவை அனைத்தும் தொழிலாளத் தோழர்கள் தோள்கள்... தொழிலாளத் தோழர்களின் கரங்கள்... தொழிலாளர் மூச்சு என்பதே ஒட்டுமொத்தமான விடை!

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

அத்தகைய தொழிலாளர் தோழர்களுக்கு என்னுடைய வீர வணக்கத்தை இந்த நாளில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோசலிச இயக்கத்தின் தலைவர்கள் 1889-ஆம் ஆண்டு கூடி மே 1-ஆம் நாளை தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்திற்கான உலக நாளாக அறிவித்தார்கள்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களது முயற்சியால் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923-ஆம் ஆண்டு 'மே நாள்' முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் சோவியத் சென்று வந்த நம்முடைய தந்தை பெரியார் அவர்களும் மே நாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள். அனைவரையும் "தோழர்" என்று அழைக்கச் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடிஅரசு ஏட்டில் வெளியிட்டார்கள். தந்தை பெரியாரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் இணைந்து செயல்பட்டார்கள்.

சுயமரியாதை உணர்வையும் - சமதர்மச் சிந்தனையையும் இணைத்தே தமிழ்நாட்டில் இயக்கம் நடந்திருக்கிறது. அதன் விளைவாக திராவிட இயக்கத்தின் கருப்பு நிறத்தோடு சேர்ந்து சிவப்பும் நமது கொடிகளில் இடம் பெற்றுள்ளது. திராவிட இயக்க லட்சியங்கள் என்பது பொதுவுடைமைச் சிந்தனையால் நிறைந்தது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையே மேலோங்கி இருக்கும்.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

நங்கவரம் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்காகப் போராடியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு நன்றாக அறியும். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்டாக ஆகியிருப்பேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு வைத்த பெயரே ஸ்டாலின்.

* 1969-ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனே தொழிலாளர் நலனுக்காகவே ஒரு நலத்துறையை உருவாக்கி தனி அமைச்சகத்தையே உருவாக்கினார்.

* இரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கக்கூடிய தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969-ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து அதை சட்டமாகவும் இயற்றித் தந்தார்கள்.

* தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிறபோது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் “பணிக்கொடை” வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதும் கழக அரசுதான்.

* விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை ஏற்படுத்தியதும் கழக அரசுதான்.

* கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி தந்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

* 1990-ஆம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில், இந்த நேப்பியர் பூங்காவிற்கு “மேதினப் பூங்கா” எனப் பெயர் சூட்டியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

காரிலே வருகிறபோது, நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் எங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த மறைந்த WR வரதராஜன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார். மே தினத்தையொட்டி தொழிலாளர்களை நினைவுபடுத்தக்கூடிய வகையில் ஒரு நினைவுச் சின்னம் சென்னை மாநகரகத்தில் அமைத்திட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைத்தவுடனே சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறபோதே, அதை நிறைவேற்றித் தருவோம் என்று முடிவு செய்து அறிவித்து, அறிவித்தது மட்டுமல்ல, அந்த நினைவுச் சின்னம் எப்படி அமைய வேண்டும் என்று தன்னுடைய கையாலேயே அதை வரைபடமாக வரைந்து சட்டமன்றத்திலே காட்டி அதற்குப் பிறகு அமைந்ததுதான் இந்த மே தின நினைவுச் சின்னம் என்பதையும் நான் உங்களுக்கு பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

இதே வழியில்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கைத் திட்டம்தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அதுதான் நம்முடைய அடித்தளம்.

* தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன.

* இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

* 25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

* 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

* 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

* இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

* தனியார் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறோம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. இப்படி வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பதுதான் சமுதாயத்தினுடைய அடையாளமாக, சமூகநீதியினுடைய அடையாளமாக அமைந்திருக்கிறது.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

இப்படி வரிசைப்படுத்தி நான் சொல்லிக் கொண்டிருக்கிறபோது, தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு பற்றி ஒரு சர்ச்சை உருவாகியிருக்கிறது. அதை நான் சொல்லவில்லை என்று நீங்கள் யாரும் கருதவேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும். அதுமட்டுமல்ல, அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் ஏற்படுத்தித் தரவேண்டும். அதிலும் குறிப்பாக, தென் மற்றும் வட மாவட்டங்களில் அந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற அந்த நோக்கில்தான் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது.

இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்ட திருத்தம் அல்ல. மிகமிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அதுவும் நிபந்தனைகளுடன் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணிநேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்தினுடைய திருத்தம். தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதில் இருந்தது. ஆனாலும் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது.

திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும் திமுக-வினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் அதில் வேடிக்கை. அதற்காக நான் அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, இதன் மூலம் அது மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

இத்தகைய விமர்சனம் வந்ததும், உடனடியாக அனைத்து தொழிற்சங்கத் தோழர்களையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குப் பிறகு தொழிற்சங்கத்தின் கருத்துக்களைக் கேட்டு – உடனடியாக எந்தவித தயக்கம் இன்றி, துணிச்சலோடு அதைத் திரும்பப் பெற்றிருக்கக்கூடிய அரசுதான் நம்முடைய அரசு.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துதும் அதனை திரும்பப் பெறுவதற்காக ஓராண்டிற்கு மேலாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக உழவர்கள் தலைநகர் டெல்லியில் போராடினார்கள். வெயிலில், மழையில், பனி, இதுபோன்ற கொடுமையில் அவர்கள் போராடி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் போராடிய காரணம் உங்களுக்குத் தெரியும். அதனால் பலபேர் உயிரையும் இழந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் உழவர்களின் போராட்டத்தைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களை வதைபடக்கூடிய நிலையில் விட்டுவிட்டார்கள்.

அதேபோல, எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து ஒரே இரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, அதில் மகிழ்ச்சியடைந்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களைப் போராடவிட்டு ரசித்தவர்கள், தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், இவர்களுக்கு ஊதுகுழலாக இருக்கக்கூடிய சில ஊடகங்களும் இதனை நமது அரசுக்கு எதிராக மாற்றி விடலாம் என்று திட்டமிட்டு பிரச்சாரத்தைப் பரப்பினார்கள். ஆனால், அவர்களுடைய தீய எண்ணங்களையெல்லாம் தொழிலாளத் தோழர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். தொழிற்சங்கத்தினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட இரண்டே நாளில் அந்த சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற்ற தொழிலாளர் தோழன்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு.

விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை, அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன்.

“விட்டுக்கொடுப்பதை அவமானமாக கருதாமல் பெருமையாக கருதுகிறேன்..” - உழைப்பாளர் தினத்தில் முதலமைச்சர் உரை !

ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால் - அதனை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு பயிற்சி தந்திருக்கிறார்கள். எனவே, அதனால்தான் அதனை நிறுத்தி வைத்திருக்கிறோம். இதுகுறித்த தகவல் பேரவைச் செயலகத்திற்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது குறித்த செய்தி மாண்புமிகு பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்திக்குறிப்பின் மூலமாக விரைவில் தெரிவிக்கப்படும்.

இவையெல்லாம் தெரிந்தும் சில ஊடகங்கள் அதைப் பாராட்ட மனமில்லாமல் தி.மு.க.-விற்கு எதிரான அஜெண்டாவை நிறைவேற்ற, சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்த பின்பும் ஆழ்மனதில் ஊறிய வன்மத்தோடு அவதூறு செய்திகளை தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் என்றைக்கும், யாரும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும் - தொழிலாளர்களும் வாழ வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை!

தொழிற்சங்கங்களை புரட்சியின் பள்ளிக் கூடங்கள் என்பார்கள். அத்தகைய தொழிற்சங்கத் தோழர்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் உங்களில் ஒருவனாக – இந்த மே தின நினைவுச் சின்னத்திற்கு நான் வீரவணக்கத்தை செலுத்தியிருக்கிறேன்.

தொழிலாளர்கள் உரிமைகளைக் காப்பதோடு - தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான அனைத்துச் செயல்களையும் திராவிட மாடல் அரசு நிச்சயம் செய்து தரும் என்ற உறுதியை நான் தருகிறேன்.

இரத்தைத்தையே வியர்வையாகச் சிந்தி உழைக்கும் அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.! தொழிலாளர் வாழ்க்கை செழிக்கட்டும் !"

Related Stories

Related Stories