மு.க.ஸ்டாலின்

”பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

”பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.03.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளர்சி. மணிவண்ணன் அவர்களின் மகள் லக்‌ஷ்யா – கௌதம் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை:-

முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு நேர்முக உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய மணிவண்ணன் - திருமதி விஜயலட்சுமி இணையருடைய அன்பு மகள் மருத்துவர் லக்‌ஷ்யா அவர்களுக்கும், வேளாண்மைத் துறை இளநிலை பொறியாளர் . மோகன்ராஜ் - திருமதி பிரேமாவதி இணையருடைய மகன் கவுதம் ஆகியோருக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

நம்முடைய முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்பு நேர்முக உதவியாளராக மணிவண்ணன் அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. காரணம், முதலமைச்சர் சொல்லக்கூடிய பணிகள், முதலமைச்சருடைய செயலாளர்களாக இருக்கக்கூடியவர்கள் சொல்லக்கூடிய பணிகள், அதேபோல் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் அலுவலகத்தைத் தேடி வருகிறபோது, அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று, அதை எந்தெந்த நிலையில் நிறைவேற்றிட வேண்டும் என்பதை பொறுமையாக எடுத்துச் சொல்லி, வந்தவர்களையும் திருப்திப்படுத்தி அனுப்பி வைக்கக்கூடிய வகையிலும், முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரக்கூடிய கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்த மனுக்களுக்குரிய பரிகாரத்தை காணக்கூடிய ஒரு பெரும் பணிகளை ஆற்றக்கூடியவர்களில் ஒருவராக சிறப்பு நேர்முக உதவியாளர் மணிவண்ணன் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

”பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

அவருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் நான், நம்முடைய அமைச்சர் பெருமக்கள், நீங்களெல்லாம் கலந்துகொண்டு இன்றைக்கு மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.அதிகம் பேசவேண்டிய அவசியம் இல்லை, தேவையும் இல்லை. இந்த நிலையில் நானும் சுருக்கமாக மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைக்கு மணிவண்ணனுடைய மகள் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர், அதேபோல, கவுதம் ஒரு பொறியியல் பட்டதாரியாக இருக்கக்கூடியவர். அவர்களுக்கெல்லாம் அறிவுரைகள், ஆலோசனைகளெல்லாம் இன்றைக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நான் தொடர்ந்து இதுபோன்ற சீர்திருத்த, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணத்தில் பங்கேற்கிறேன் என்று சொன்னால், அந்த திருமணத்தில் வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் சொல்லாமல் இருந்ததில்லை. அதை இந்த திருமண விழாவிலும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அது என்ன என்று கேட்டால், இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறுமென்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெறாத சூழ்நிலையில்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா அவர்கள், முதன்முதலாக முதலமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்து, சட்டமன்றத்தில் மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார்கள்.

அந்த மூன்றில் ஒன்றுதான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் ஏற்கனவே நடந்திருந்தாலும் இனி நடக்கவிருக்கக்கூடிய திருமணங்களாக இருந்தாலும், அந்த சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தார்கள்.

அடுத்த தீர்மானமாக இருமொழிக் கொள்கையை சட்டமாக்கித் தந்தார்கள். அதற்கடுத்து இன்றைக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு என்று நாம் கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோமே இந்த தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். அதையும் நிறைவேற்றித் தந்தார்கள். எதற்காக இதையெல்லாம் சொல்லுகிறேன் என்று சொன்னால், இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்த சீர்திருத்தத் திருமணம் என்பது வெறும் சீர்திருத்தத் திருமணமாக மட்டும் நீங்கள் கருதக்கூடாது, சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணமாகவும் நடந்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இது ஒரு தமிழ்த் திருமணம். இந்த தமிழைத்தான் தலைவர் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் தலைவர் கலைஞர் அவர்கள்தான் பெற்றுத் தந்தார்கள்.

”பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் இந்தத் திருமணம் நடந்தேறி இருக்கிறது. இப்போதெல்லாம் சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது என்றால், யாரும் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை, முன்பெல்லாம் நடக்கிறபோது ஆச்சரியப்பட்டோம். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் இந்தத் திருமணங்கள் நடக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்றைக்கு கூட மாலையில் கேரள மாநிலத்தினுடைய தலைமை நீதியரசர் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அவர் என்னை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நீதியரசர் அழைத்துச் செல்கிறபோது அவர் என்னிடத்தில் பெருமையாகச் சொன்னார், இன்று காலையில் இந்தத் திருமணத்தை நாங்கள் நடத்திவைத்தோம். வரவேற்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்தத் திருமணமும் தமிழ் முறைப்படி, சீர்திருத்த முறையில்தான் நாங்கள் நடத்தி வைத்தோம். கேரள மாநிலத்தினுடைய முதலமைச்சர் அவர்களே நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார் என்று பெருமையாகச் சொன்னார். இன்றைக்கு இப்படி பரவலாக எங்கு பார்த்தாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயமரியாதை, சீர்திருத்த திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

அதே நேரத்தில் இது தமிழ் திருமணமாக நடக்கிற காரணத்தால் நம்முடைய மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மாத்திரம் சொல்லி, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories