மு.க.ஸ்டாலின்

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.2.2023) சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதி அவர்களின் மகனும், மாமன்ற உறுப்பினருமான பரிதிஇளம்சுருதி - டாக்டர் நந்தினி (எ) கனிஷ்கா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை:-

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

நம்முடைய நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிடச் சுடர் இளம்பரிதி - கண்ணம்மாள் மற்றும் அழகுவேல் - காஞ்சனா அவர்களுடைய அன்புப் பேரனும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்கள் - திருமதி உதயகுமாரி அவர்களுடைய அருமை மகன் வழக்கறிஞர் பரிதி இளம்சுருதி அவர்களுக்கும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கிருஷ்ணமூர்த்தி – லட்சுமிரேகா மற்றும் பால்ராஜ் - சின்னத்தாய் ஆகியோருடைய பேத்தியும், ரமணமூர்த்தி - பொன்மாரி தம்பதியினருடைய புதல்வி டாக்டர் நந்தினி என்கிற கனிஷ்கா அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சியை பொறுத்தவரை, நீண்ட நேரம் வாழ்த்துரை வழங்கக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியாத நிலையில், வந்திருக்கக்கூடிய அனைவரின் சார்பிலே நான் ஒருவனே வாழ்த்தக்கூடிய வாய்ப்பைப் பெற்று, காரணம், இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு நான் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். அதேபோல் இங்கு வந்திருக்கக்கூடிய சில பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஈரோட்டில் நடைபெறவிருக்கக்கூடிய இடைத்தேர்தலில் பணியாற்றிக் கொண்டு இடையில் ஒருநாள் விடுமுறை கேட்டு, அனுமதி பெற்று இங்கு வந்திருக்கிறார்கள். எனவே, திருமணம் முடிந்த கையோடு அவர்களெல்லாம் உடனடியாக ஈரோட்டிற்கு புறப்பட இருக்கிறார்கள். புறப்படுகிறார்களா என்று கண்காணிக்கக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன். இந்த நிலையில் நான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வந்திருக்கக்கூடிய நம்முடைய முன்னோடிகள், நிர்வாகிகள் இங்கே வாழ்த்துரை வழங்கக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியாத நிலையில், அவர்கள் அனைவரின் சார்பில் நான் மணமக்களை வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

மணமகனாக வீற்றிருக்கக்கூடிய தம்பி பரிதி இளம்சுருதி அவர்கள் தன்னுடைய தந்தையார் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். அதேபோல் கழகத்தினுடைய தலைமை மீதும் பற்று கொண்டவர். ஆனால் பாசத்தைவிட பற்று தான் அவருக்கு அதிகம். என்னுடைய பிரியத்திற்குரிய, என்னுடைய அன்புக்குரியவராக, ஏன் நம்முடைய குடும்பத்தின் பிள்ளையாக விளங்கக்கூடியவர் தம்பி இளம்சுருதி அவர்கள். காரணம், அவருடைய உடம்பில் கருப்பு-சிவப்பு ரத்தம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இது ஒரு குடும்ப விழாவாக நடந்து கொண்டிருக்கிறது.

மணமக்களை வாழ்த்துகிற நேரத்தில், நம்முடைய சேகர்பாபு அவர்கள் அவருடைய உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை இங்கு வெளிப்படுத்திக் காட்டினார். அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் தான், அந்த சிந்தனை தான் என்னுடைய உள்ளத்திலே ஓடிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பரிதி இளம்சுருதி அவர்களுடைய தந்தையார் என்னுடைய இனிய நண்பர், இனிய நண்பர் என்றுகூட சொல்லக்கூடாது, ஆருயிர் நண்பர், அதையும் தாண்டி சொல்ல வேண்டுமென்று சொன்னால், என்னுடைய உயிர் நண்பர் பரிதி இளம்வழுதி அவர்கள். அவருடைய நினைவுதான் இந்த திருமண விழாவிற்கு அவர் என்னிடத்தில் தேதி பெற்ற நேரத்திலே, அழைப்பிதழ் தந்த நேரத்திலே அதற்குப் பிறகு இந்த திருமணத்திற்காக நான் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரத்திலே, இந்த மேடையிலே வந்து நிற்கிற நேரத்திலே, மணவிழாவை நடத்தி வைத்த நேரத்திலே, வாழ்த்துகிற நேரத்திலே, நம்முடைய பரிதி இளம்வழுதியினுடைய நினைவுதான் எனக்கு நினைவில் வந்துகொண்டிருக்கிறது.

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

நான் அவரை சந்தித்த முதல் இடம் எது என்று கேட்டால், சிறைச்சாலை. கைலாசம் கமிஷன் நகலை எரிக்கிற போராட்டம். மறைந்த நம்முடைய நாவுக்கரசர் நாஞ்சில் அவர்கள் தலைமையிலே அந்தப் போராட்டத்தை தலைவருடைய உத்தரவை ஏற்றுக்கொண்டு நடத்தினோம். நாஞ்சிலார் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்திலே நாங்களெல்லாம் கலந்து கொண்டோம். அப்போது அதிமுக ஆட்சி. எங்களை கைது செய்து சென்னை மத்திய சிறையிலே கொண்டுபோய் அடைத்து வைத்தார்கள். அப்படி மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்த நேரத்தில்தான் முதன்முதலில் பரிதிக்கும் எனக்கும் சந்திப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு, அவருடன் பேசுகிற வாய்ப்பு, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இப்படி தொடர் சந்திப்பாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அந்த நிலையில்தான் முதன்முதலாக மதுரையில் 1980ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று ஒரு துணை அமைப்பு தேவை. அதில் இளைஞர்கள் பங்கேற்றாக வேண்டும், இளைஞர்களை நாம் கவரக்கூடிய வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணை அமைப்புகளில் ஒன்றாக இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

அதற்குப் பிறகு 1981ஆம் ஆண்டு திருச்சியில் ஒரு கலந்துரையாடல் கூட்டம். அந்தக் கலந்துரையாடல் கூட்டத்திலே இளைஞர் அணியின் ஓராண்டு நிறைவு விழா நிகழ்ச்சியை நடத்தி, அதன்பிறகு ஒரு கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்தக் கலந்துரையாடல் கூட்டத்திலே, கட்சியினுடைய முன்னோடிகளெல்லாம் உரையாற்றினார்கள். மறைந்த மாவட்டச் செயலாளராக, அமைச்சராக இருந்த தங்கபாண்டியன் உரையாற்றினார். மறைந்த துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செல்வராஜ் உரையாற்றினார். பல்வேறு மாவட்டச் செயலாளர்களெல்லாம் அந்த கூட்டத்திலே உரையாற்றினார்கள். அதில் பரிதி இளம்வழுதியும் உரையாற்றினார். அப்படி உரையாற்றியபோது, தலைவரை கவரக்கூடிய வகையில் அவர் பேசினார். அவருடைய பேச்சைக் கேட்டு கலைஞர் அவர்கள் அவரை பக்கத்தில் அழைத்து, தட்டிக் கொடுத்து, மிக சிறப்பாக பேசுகிறாய். ஆனால் அதே நேரத்தில் கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும் என்று அறிவுரையும் சொன்னார். வயதுக்கு ஏற்றதுபோலப் பேசவேண்டும் என்று புத்திமதியும் சொன்னார். நீ நன்றாக வளர வேண்டியவன், அதனால் அதற்கேற்றவாறு பேச வேண்டும் என்று அறிவுரை சொன்னார்.

அப்படிப்பட்ட அந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பரிதி அப்படி என்ன குறிப்பிட்டுச் சொன்னார் என்றால், இளைஞர் அணியை தொடங்கி விட்டீர்கள், அந்த இளைஞர் அணிக்கு தலைவராக நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைத் தான் நீங்கள் நியமிக்க வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாக பேசினார். அதற்கு பல உதாரணங்களையெல்லாம் எடுத்துச் சொன்னார். அவர் மட்டுமல்ல, தங்கபாண்டியன் பேசினார், செல்வராஜ் பேசினார், இப்படி பலர் அந்த கலந்துரையாடல் கூட்டத்தில் எல்லோரும் பேசினார்கள். அதற்குப் பிறகு அன்று இரவு திருச்சியில் மிகப்பெரிய ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசுகிறபோது, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது, அதில் இளைஞர் அணிக்கு ஸ்டாலினை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. காரணம், வாரிசு, வாரிசு என்று ஓர் அவப்பெயர் வந்துவிடும். அப்படி ஒரு அரசியலை உருவாக்கி கேலி, கிண்டல் செய்து பேசுவார்கள். மகனை உருவாக்கிவிட்டான் கருணாநிதி என்று ஒரு பெயர் எனக்கு வந்துவிடக் கூடாது. அதனால் அதற்கு உடன்படவில்லை. இருந்தாலும் இளைஞரணிக்கு உடனடியாக ஒரு ஐந்து பேர், ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை நியமிக்கிறேன் என்று சொல்லி, ஒரு அமைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அந்த அமைப்புக் குழுவில் இடம்பெற்றவர்கள் யாரென்று கேட்டால், திருச்சி சிவா, சேலத்தைச் சார்ந்த தாரை மணியன், வாலாஜா பகுதியைச் சார்ந்த வாலாஜா உசேன், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த பஞ்சவர்ணம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயன்லியஸ், அதேபோல் பரிதி இளம்வழுதி. அந்த பரிதி இளம்வழுதியுடன் என்னையும் சேர்த்து ஒரு ஏழு பேரைக் கொண்ட குழுவை நியமித்தார்கள். அந்தக் குழு நியமிக்கப்பட்டதற்குப் பின்னால் நாங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரு காரில் சுற்றுப்பயணம் செய்தோம். நானே கார் ஓட்டுவேன், எல்லோரையும் அந்த காரிலேயே அழைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுக்க சுற்றிவந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞரணியின் நிர்வாகிகளை நான் தேர்ந்தெடுத்தேன். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னால், அந்த இளைஞர் அணியின் அமைப்புக் குழு கலைக்கப்பட்டு அமைப்பாளர் என்கிற ஒரு பொறுப்பு உருவாக்கப்பட்டு அமைப்பாளராக என்னை நியமித்தார்கள். அப்படி அமைப்பாளராக நியமித்ததற்குப் பிறகு, அது படிப்படியாக இன்னும் வளர்ந்து தலைமை நிலையத்தில் இருக்கக்கூடிய அணிகளின் செயலாளர்களில் ஒருவராக இளைஞரணி செயலாளராக என்னை நியமித்தார்கள். அ

தற்குப் பின்னால் ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்று இளைஞரணி அமைப்பாளர் நியமிக்கப்பட்டபோது, சென்னைக்கு பரிதி இளம்வழுதி அவர்களை மாவட்ட அமைப்பாளராக நான் நியமித்தேன். அதற்குப் பின்னால் பல்வேறு வளர்ச்சிகள். மாநில அளவிலே அவர் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். நான் செயலாளர் என்று சொன்னால், மாநில அளவில் இருக்கக்கூடிய துணைச் செயலாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றிருந்தார். அதற்குப் பிறகு கட்சியில் பல்வேறு பொறுப்புகள், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், ஏன் கட்சியினுடைய தலைமை நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், அந்த துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் தலைவர் கலைஞர் அவர்கள் நியமித்து அழகு பார்த்தார்கள். அதற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக முதன்முதலில் பெரம்பூரில் தான் இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக ஆட்சி நடக்கிறபோது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது பெரம்பூரில் இடைத்தேர்தல். அந்த இடைத்தேர்தலில் அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்கள் நம்மை எதிர்த்து அதிமுக சார்பில் நிற்கிறார். அவரை எதிர்த்து பரிதியால் வெற்றி பெறமுடியுமா என்று எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது. அப்போது அவருக்குத்தான் நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் தலைவரிடத்தில் சென்று போரிட்டோம்.

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சத்தியவாணி முத்து அம்மையார் நிற்கிறார்கள். அவருக்கு என்று ஒரு தனி செல்வாக்கு உண்டு. எனவே அவரை எதிர்த்து பரிதியால் வெற்றி பெற முடியுமா என்று தலைவர் கேட்டார், நீங்கள் கொடுங்கள், நாங்கள் இளைஞரணி சார்பில் வெற்றி பெற வைத்து உங்களை கையில் கொண்டுவந்து கொடுக்கிறோம் என்று தலைவர் அவர்களிடத்தில் சொல்லிவிட்டு, அதற்குப் பிறகு வேட்பாளராக இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு நானே பொறுப்பேற்று ஒரு 10 நாள், 15 நாள் இந்த எழும்பூர் பகுதியிலேயே தங்கி, தேர்தல் பணியாற்றி ஒரு மிகப்பெரிய வெற்றியை அன்றைக்கு எழும்பூர் இடைத்தேர்தலில் அதுவும் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக-வை எதிர்த்து இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பரிதி இளம்வழுதி அவர்கள் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து எழும்பூரில் 6 முறை அவர் அந்த தொகுதியில் நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கக்கூடிய அந்த நிலைகளையெல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

இங்கே நம்முடைய சேகர்பாபு அவர்கள் சொன்னதுபோல, இடையில் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது, அது ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்பதையெல்லாம் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது நான் சொல்ல விரும்பவில்லை. கோபதாபம் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் அந்த கோபம் வந்தபோது கூட அவர்மேல் யாரும் வருத்தப்படவில்லை. எவ்வளவோ விமர்சனம் செய்து நம்மைப் பற்றியெல்லாம் பேசினார். நம்முடைய தோழர்களே அவருக்கு பதில் கொடுத்தெல்லாம் பேசினார்கள். ஆனால் நான் மட்டும் அவருக்கு பதில் சொல்லிப் பேசினதே கிடையாது. ஏனென்றால், அப்படி பழகியிருக்கக்கூடியவர்கள். அதனால் அந்த அளவிற்கு அவர் நட்போடு இருந்தவர். அதனால்தான் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நம்மைவிட்டு மறைந்தபோது முதல் ஆளாக நான்தான் போய் நின்றேன், அதைத் தான் சேகர்பாபு சொன்னார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் எவ்வளவுதான் விமர்சனம் செய்திருந்தாலும், கோபதாபத்தோடு பல பணிகளை அவர் செய்திருந்தாலும் அவரை இந்த இயக்கத்திலிருந்து ஆற்றிய அந்த தியாகத்தை, அவர் தந்தை ஆற்றிய தியாகத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த உணர்வோடுதான் நான் அவரை பார்க்கிறேன்.

1991-ல் சட்டமன்றத் தேர்தலை நாம் சந்தித்தபோது, ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தி, நம்மை தோற்கடித்தார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இதுவரை திமுக சந்திக்காத ஒரு தோல்வி அதுதான், இரண்டே இடத்தில் தான் வெற்றி பெற்றோம். மற்ற எல்லா இடத்திலும் தோற்றோம். ஒன்று துறைமுகம், இரண்டாவது எழும்பூர். துறைமுகத்தில் கலைஞர் வெற்றி பெறுகிறார், எழும்பூரில் பரிதி வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில் கலைஞர் அவர்கள் இவ்வளவு பெரிய தோல்வியை மக்கள் தந்த காரணத்தால் என்னுடைய வெற்றியை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ராஜினாமா செய்கிறேன் என்று கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் ஒரே ஆள் பரிதி இளம்வழுதி, சட்டமன்றத்தில் தன்னந்தனியாக போய் நின்று ஆளுங்கட்சியின் வண்டவாளங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களையெல்லாம் தைரியமாக கைநீட்டி தட்டிக் கேட்கிற ஒரு வீரனாக, ஒரு போர்ப்படைத் தளபதியாக செயலாற்றியது, அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அவர் செய்த தவறுகளோ, நம் மீது கோபித்துக் கொண்டு சென்றதோ நினைவிற்கு வரவில்லை. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அதனால்தான் இன்று இந்த திருணமத்திற்கு வந்திருக்கிறேன். தலைவர் அதைப் பார்த்துவிட்டு, பலமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். நினைத்துப் பார்க்கிறேன்.

முரசொலியில் கடிதம் எழுதினார். வீர அபிமன்யூ என்று பட்டம் கொடுத்தார், இந்திரஜித் என்று பட்டம் கொடுத்தார். அப்படிப்பட்ட நிலையிலிருந்து பாடுபட்டவர் நம்முடைய பரிதி இளம்வழுதி. பல பொய் வழக்குகள், கொலைவெறித் தாக்குதல்கள் இப்படி பல நடந்திருக்கிறது.

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அதற்குப் பிறகு 1996-ல் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது தலைவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் அவருக்கு பேரவையின் துணைத் தலைவராக பொறுப்பேற்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்தார். 2006-ஆம் ஆண்டு செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இப்படி பல பணிகளை, கட்சிப் பணியாக இருந்தாலும், ஆட்சிப் பணியாக இருந்தாலும் இந்த இயக்கத்திற்கும், தலைவர் கலைஞருக்கும், நமக்கும் எந்தளவிற்கு அவர் விசுவாசமாக இருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட பரிதி இளம்வழுதியினுடைய அருமை மகனுக்குத்தான் இன்றைக்கு திருமணம். இன்றைக்கு தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969-ல் தான் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். திட்டமிட்டு இந்த தேதியை ஏற்பாடு செய்து நடத்துகிறாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் பொருத்தமாக அமைந்திருக்கிறது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்று, அது அண்ணா மறைவிற்குப் பிறகு 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் தான் பிப்ரவரி 10. அந்தத் தேதியில்தான் இன்றைக்கு தம்பி பரிதி இளம்சுருதிக்கு திருமணம் நடக்கிறது. ஐந்து முறை தொடர்ந்து கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியிருக்கக்கூடிய, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து பணியாற்றியிருக்கக்கூடிய, எப்போதெல்லாம் தலைவர் கலைஞருடைய பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது.

வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதற்காக பாடுபட்ட பேனா தான் அவர் பேனா. டைடல் பார்க்கை வடிவமைத்து அதை உருவாக்குவதற்கு கையெழுத்து போட்ட பேனாதான் கலைஞருடைய பேனா. பூம்புகாரை உருவாக்கித் தந்ததற்கு, அதற்கும் திட்டமிட்டது, அதற்கும் கையெழுத்து போட்ட பேனாவும் கலைஞர் பேனாதான். குடிசைகளை மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட பேனாவும் கலைஞருடைய பேனாதான். இலட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பேனாவும் கலைஞருடைய பேனாதான். தமிழ் சமுதாயத்தினுடைய தலையெழுத்தையே மாற்றி அமைத்த பேனாவும், தலைவர் கலைஞருடைய பேனா தான். அந்த பேனா எழுதிய இலட்சியம் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு கையேடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மணமகன் பரிதி இளம்சுருதி அவர்கள் மாநில அளவில் அயலக அணியினுடைய துணைச் செயலாளராக இருந்து, மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, கட்சிக்கும் மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்பான நிலையில் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவரைப் பார்க்கிறபோது, எனக்கு பரிதி இளம்வழுதியின் நினைவுதான் வரும்.

எனக்கு பரிதி இளம்வழுதி நினைவுதான் வருகிறது. அறிவாலயத்தில் வருவதைப் பார்ப்பேன், கொளத்தூர் தொகுதியில் வருவதைப் பார்ப்பேன். கட்சி நிகழ்ச்சியில் வருவதைப் பார்ப்பேன். எனக்கு பதிரி இளம்வழுதி ஞாபகம்தான் வருகிறது. அவரைக் கூப்பிட்டு செளக்கியமாக இருக்கிறாயா என்று பார்க்கிறபோது கேட்காத நாளே இல்லை. ஆக சுறுசுறுப்பாக இருந்து பணியாற்றக் கூடிய அருமை தம்பி இன்றைக்கு மணமகனாக இங்கே வீற்றிருக்கிறார். இந்த விழாவில் கூட பார்த்தீர்கள் என்றால், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள் என்று போட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் யாரும் வரவில்லை. உங்களுக்கு என்ன காரணம் என்று தெரியும். ஈரோட்டில் தேர்தல். பல பேர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது முக்கியம். அதற்காக தம்பி கோபித்துக்கொள்ள மாட்டார் அதுவும் எனக்கு தெரியும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களாவது வந்திருக்கலாம் என்று கேட்கலாம். இன்றைக்கு டில்லியில் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பார்க்கலாம், பாராளுமன்ற, ராஜ்ய சபாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி எல்லாம் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார். பதில் இல்லை. வருஷத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லிதான் பிரதமாராக இருக்கக்கூடிய மோடி ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? ஒரு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம், நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் போடுவேன், நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாய், 15 ரூபாயாவது போட்டிருக்கிறார்களா? இல்லை.

தயாராக இருங்கள்.. 2024-ல் இந்தியாவிற்கே விடுதலை வரப்போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய அருமை தங்கை கனிமொழி, கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆச்சு? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஒரு செங்கலை வைத்து நம்முடைய தம்பி உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே, தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கிளம்பிடுவானே என்ற பயம் வர வேண்டாம். இந்த நிலையில், கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒன்றுக்கும் பதில் இல்லை.

அதேபோல ஆ.ராசா கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி மாறன் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்லுகிறார். நாடாளுமன்றத்தில் “கோரமே” இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள்.

அதேபோல தமிழச்சி தங்கபாண்டியன் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறோம். அதனால் எண்ணற்ற பேர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகக்கூடிய கொடுமைகள் தினம் தினம் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி கேட்டால் எது எதற்கோ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல மாநிலங்கவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று கேட்டு, அந்தப் படை வரிசையில் ஒருவனாக தம்பி பரிதி இளம்சுருதி அவர்கள் இருக்கிறார். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று உன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உன்னை வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories