மு.க.ஸ்டாலின்

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்.. கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கருணை வடிவிலான கலைஞரின் அரசு தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்..  கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.12.2022) சென்னை, லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற “அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா-2022” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடந்து கொண்டிருக்கக்கூடிய அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்டு உங்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவதற்கும், அதே நேரத்தில், உங்களது வாழ்த்துகளைப் பெறுவதற்கும் இந்த இனிய வாய்ப்பை, நல்வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு முதற்கண் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கிறிஸ்துமஸ் விழாவை, கிறிஸ்துமஸ் விழா என்று மட்டும் சொல்லாமல் ‘அன்பின் கிறிஸ்துமஸ் விழா’ என்று இனிகோ இருதயராஜ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எந்த விழாவாக இருந்தாலும் அது அன்பின் விழாவாக – அனைவரின் விழாவாக அது அமையும். அந்த வகையில்தான் இனிகோ இருதயராஜ் அவர்கள் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காரணம், அவர் சாதாரண ராஜ் அல்ல, இருதயராஜ் அவர்கள். அதுவும் இனிகோ இருதயராஜ். அந்த காரணத்தால் இனிமையான வகையில் இந்த அன்பின் கிறிஸ்துமஸ் விழாவை அவர் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்..  கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். நான் நினைத்துப் பார்க்கிறேன். நாங்களெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். ஐந்து வருடத்திற்கு முறை அந்தக் கூட்டணி அமைக்கப்படும். இவர் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு வருடமும் இவர் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி அமைக்கக்கூடிய அந்தக் கூட்டணிக்கு என்னையும் அழைத்து வருகிறார், உங்களையும் அழைத்து வருகிறார், அதை தொடர்ந்து அவர் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் கூட்டணி வைத்து வருகிறபோது, நாட்டிற்கு பல நன்மைகளைச் செய்வதற்கு அது பயன்படுகிறது. ஆனால் இனிகோ நடத்தி அந்தக் கூட்டணி அமைத்து அதில் வெற்றி பெறுகிறபோது, இந்த சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய வகையில் இந்தக் கூட்டணி பயன்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், இந்த எழுச்சியான கிறிஸ்துமஸ் விழாவை அவர் நடத்துகிற நேரத்தில், அதில் என்னையும் தொடர்ந்து 13 ஆண்டு காலமாக அழைத்து அதில் பங்கேற்க வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைக்கிறபோது, நான் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புதல் தந்து வருவதற்குக் காரணம், என்னை உருவாக்கிய என்னுடைய தந்தை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி தட்டாமல், மறுக்காமல் வந்தாரோ, அதைப் பின்பற்றி நானும் வந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.

அதுமட்டுமல்ல, இது மதத்தின் விழாவாக இல்லாமல் - ஒரு மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த விழா நடக்கிற காரணத்தால் இன்றைக்கு எல்லோரும் இந்த விழாவிலே மகிழ்ச்சியோடு பங்கேற்க வந்திருக்கிறோம்.

இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் - மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி.

என்னை இந்த அழைப்பிதழில் சமத்துவ நாயகன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நம்முடைய இனிகோ அவர்களும் சமத்துவ விழாவாகத்தான் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே ஆண்டுதோறும் இது போன்ற விழாக்களில் நான் பங்கேற்பது என்னுடைய கடமையாகவே கருதி இதில் வந்து கலந்து கொள்கிறேன்.

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்..  கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது.

“உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மிக எளிமையான வாசகம்தான், ஆனால் அதே அளவு வலிமையான வாசகமாகவும் இது இருக்கிறது. இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும்.

சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை இயேசுவின் போதனைகள் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இத்தகைய பண்புகள் தனிமனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, இந்த நாட்டின் குணங்களாக, ஏன், இந்த உலகத்தின் குணங்களாக மாற வேண்டும்.

மக்களுடைய வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது.

இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பது, அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியினுடைய தத்துவம்!

குறிப்பாக சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் அரசு நம்முடைய கழக அரசு என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.

* 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

* 1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதல்வர் கலைஞர் அவர்கள்!

* 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்!

* 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான்!

* 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவரும் முதலமைச்சராக இருந்த முதல்வர் கலைஞர் அவர்கள் தான்!

அந்த வரிசையில்தான் இப்போதும் நாம் செயல்பட்டு வருகிறோம்.

* உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது.

* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.

* கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்..  கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தச் சாதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே, இனிகோ பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்ன அந்த மூன்று கோரிக்கைகள் என்ன? அதற்கு ஏதாவது சொல் என்று நீங்கள் சொல்வது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை. அதற்கு பதிலை அவரே சொல்லியிருக்கிறார். இங்கே பேசிய பலரும் குறிப்பிட்டுச் சொல்லி, அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், நிதி ஆதாரம், இருக்கக்கூடிய சூழ்நிலை, நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், முதலமைச்சருடைய வாயிலிருந்து என்ன வருகிறது என்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள், எனக்குப் புரியாமல் இல்லை.

முதல் கோரிக்கை – சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பானது, அதற்குப் பிறகு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அது நீதிமன்றத்தில் இருக்கிறது.

நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. கடந்த கழக ஆட்சிக்காலத்திலே உங்களுக்காக அதனை நிறைவேற்றித் தந்தவன் தான் இந்த ஸ்டாலின். அதை விட்டுவிடுவோமா? நான் விட்டுவிட மாட்டேன். அது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அதேபோல் இரண்டாவது கோரிக்கை – ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், 2006-2011 ஆட்சிக்காலத்தில், ஆதிதிராவிட மக்களுக்கு என்ன சலுகை வழங்கப்பட்டதோ, அதை ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு வழங்கிய ஆட்சி என்பதையும் நான் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

மூன்றாவது கோரிக்கை – உதவித் தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது, அது தொடர்பான கோரிக்கை எடுத்துவைத்து, அதை இன்றைக்கு ஒன்றிய அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலை இருப்பதையும் நம்முடைய இனிகோ அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம், காத்திருப்போம். இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள், இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? ஒன்றிய அரசு அதை முறையாக செய்வதற்கு முன்வரவில்லை என்று சொன்னால், நான் உறுதியோடு சொல்கிறேன், மாநில அரசு எந்த வகையில் அதற்காக உதவி செய்ய முடியுமோ, அந்த உதவியை நிச்சயமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆகவே மீண்டும், மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புவது ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மானியம் எப்படி உயர்த்தி வழங்கப்பட்டதோ, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் எப்படி வழங்கப்பட்டு வருகின்றனவோ, இந்தச் சாதனைகள் நிச்சயமாக தொடரும், தொடரும் என்பதை மீண்டும், மீண்டும் உங்களுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்தி,

* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்ததுதான்!

* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது கொரோனா காலத்தில் கல்வியை நிறுத்திய 2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து வந்ததுதான்.

* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஏழை எளிய மக்களை நோக்கி மருத்துவம் சென்றதுதான்.

* இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது விபத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கானவரை நம்மைக் காக்கும் 48 திட்டத்தினால் அவர்களுக்கு உயிரைக் காத்ததுதான்.

* கடலில் கால் நனைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுப்பாதை உருவாக்கி அவர்களது மனதை ஈரமாக்கியதில்தான் இந்த ஆட்சியின் அடையாளம் இருக்கிறது.

* இலங்கை தமிழரா, திருநங்கையரா, நரிக்குறவரா, விளிம்புநிலை மக்களா, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளா - அனைவரையும் அரவணைக்கக்கூடிய அரசுதான் இந்த அரசு. அதாவது கருணை வடிவான கலைஞரின் அரசு இது. அன்பு வடிவான அரசாக இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த அரசை மனம் திறந்து நீங்கள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

தி.மு.க அரசின் அடையாளங்கள் இதுதான்..  கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இங்கே ஒரு காணொலிக் காட்சி வெளியிடப்பட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உங்கள் அன்போடும், ஆதரவோடும் பொறுப்பேற்ற பிறகு, இந்த அரசின் மூலமாக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்பதை ஒரு காணொலிக் காட்சியாக நம்முடைய இனிகோவின் சீறிய முயற்சியோடு இது வெளியிடப்பட்டது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பணிகள் செய்திருக்கிறோமா! இவ்வளவு சாதனைகள் நிறைவேற்றி இருக்கிறோமா! நானே அப்படியே கொஞ்சம் மெய்மறந்து போயிருந்தேன். அப்படி மெய்மறந்து இருக்கக்கூடிய நேரத்தில் நான் இனிகோ அவர்களை கேட்டுக்கொள்ள விரும்புவது இந்த காணொலிக் காட்சியை நீங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று அதை மக்களிடத்தில் போட்டுக் காட்ட வேண்டும். எனக்காக அல்ல. நமக்காக அல்ல. நம்முடைய இனத்திற்காக, நம்முடைய சமுதாயத்திற்காக இந்த ஆட்சி நிலைத்திருக்க இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் குறிப்பிட்டுச் சொன்னேனே தவிர வேறொன்றும் இல்லை.

ஆகவே, உங்களுடைய வாழ்த்தும். உங்களுடைய பாராட்டும் என்னை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் என்னிடத்தில் பிடித்தது என்னவென்று கேட்டால், ஸ்டாலினிடத்தில் பிடித்தது என்னவென்று கேட்டால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று சொன்னாரே, அதை மேலும் மேலும் உழைக்கவேண்டும் என்ற அந்த உணர்வு தான் இன்றைக்கு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க நாம் பணியாற்ற வேண்டும், பாடுபடவேண்டும்.

இயேசு பிரானின் அன்புக்கட்டளையைப் பின்பற்றி நம்முடைய மனங்கள் நிறையட்டும்! அனைவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories