மு.க.ஸ்டாலின்

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !

"தமிழால் இணைவோம். தமிழராய் இணைவோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம்!" திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரை.

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நேற்று (26-03-2022), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், துபாய் வாழ் தமிழர்களிடையே ஆற்றிய உரை விவரம் :

“அனைவரையும் தாங்குவதற்கு ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனித் தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் நாம் என்று இந்த உலக தமிழ்ச் சமுதாயத்தின் அண்ணனான பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவார்கள்.

அந்த வகையில் தனித்தனித் தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் கடல் கடந்து வந்து சந்திப்பதில் பெருமை அடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். பூரிப்படைகிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல.

தமிழர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், அறிவில், ஆற்றலில் மேன்மை அடைந்த மக்களாக மாறவேண்டும் என்றுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விரும்பினார்கள்; பாடுபட்டார்கள்; உழைத்தார்கள்.

அவர்களின் அந்த ஆசை நிறைவேறியதன் அடையாளம்தான் நீங்கள் எல்லாரும். உங்களது கல்விக்கு, உழைப்புக்கும் திறமைக்கு ஏற்ற வேலைகளைப் பெற்று இங்க வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். பலரும் பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறீர்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைகளை வழங்கி வருகிறீர்கள். இதைப் பார்க்கும்போதுதான் பெருமையாக இருக்கிறது என்று நான் சொன்னேன்.

தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம். 1966-ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போ சிங்கப்பூர் சாலான் பஜார் மைதானத்தில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் ரெண்டு லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் கூட்டம் அது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள், "மலேசியாவில் பண்டிதர் நேருவுக்குக் குவிந்த கூட்டத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்த இப்போதுதான் பார்க்கிறேன்" என்று சொன்னார். ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்.

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !

"மலாக்கா, சீன மொழிகளைப் போலவே தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இந்த இரு நாடுகளிலும் உரிய மரியாதை தரப்படுவது வரவேற்கக் கூடியது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் தாங்கள் வாழும் நாட்டின் குடிமக்களாகவே நாட்டுப்பற்றுடன் வாழ வேண்டும்" என்று பேசினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று சொன்னதையே இன்று நானும் சொல்றேன். இந்த நாட்டின் குடிமக்களாக நாட்டுப்பற்றுடன் வாழுங்கள். அதே நேரத்தில் நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள்.

இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதியோ, மதமோ உங்களைப் பிளவுபடுத்தக் கூடாது.இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். எது நம்மை ஒற்றுமைப்படுத்துகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எது நம்மை பிளவுபடுத்துகிறதோ அவை அனைத்தையும் உதறித் தள்ளுங்கள்.

ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூகம்தான், அனைத்திலும் வளர்ச்சியைப் பெறும் என்பதை மனதில் வையுங்கள். அதனால்தான் அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துக்குமான வளர்ச்சி என்கிற இலக்கை முன்வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் மிகச் சிறந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு வந்து, வாழும் நாட்டின் அரசியலைப் பேசக் கூடாது என்று எனக்குத் தெரியும். அதனால், அரசியல் இல்லாமல், எங்கள் அரசின் இலக்குகளை மட்டும் நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் வளமான தமிழகத்தை உருவாக்கும் அரசு அமைந்திருக்கிறது. இத்தகைய திராவிட முன்னேற்றக் கழக அரசை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உள்ளூர் தமிழர்களை எப்படி ஆதரித்து அரவணைக்கிறோமோ - அதைப் போலவே உலகத் தமிழர்களையும் ஆதரித்து அரவணைக்கும் அரசாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அயலகத் தமிழர்களை, தமிழ்நாட்டு அரசு ஒரு தாயின் பரிவோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனவரி 12-ஆம் தேதி அன்று அயலகத் தமிழர் நாள் விழாவை நாங்க நடத்தினோம்.

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !

அதனுடைய இலக்காக, 'தமிழால் இணைவோம்' என்று பொறித்து வைத்திருந்தோம். தமிழுக்கு மட்டும்தான் இணைக்கும் ஆற்றல் உண்டு. தமிழால் நாம் இணைந்தால், நம்மை யாராலும் மதம், சாதியால், பிரிக்க முடியாது என்று அந்த விழாவில் பேசியபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன் - ''நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு" என்று குறிப்பிட்டேன்.அத்தகைய மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள். இதைவிட நமக்கு என்ன பெருமை வேண்டும்? 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்பதைத்தமிழ் மண்ணில் விதைத்து - மொழிப்பற்றும் - இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம். கழக ஆட்சி அமையும்போதெல்லாம் - அது இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமில்லாம - உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக உக்ரைன் சம்பவத்தைச் சொல்லலாம்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போரின் காரணமாக, அங்குச் சிக்கி தவித்த தமிழக மாணவர்களை, உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர முடிவுகள் எடுத்தோம். இதுக்காக மாநிலக் கட்டுப்பாட்டு அறை ஒன்று உடனடியா தொடங்கப்பட்டது. மாநிலத் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும்; சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவும் கொண்ட குழுவையும் அமைத்தோம். அந்த மாணவர்கள் பத்திரமாக, தாயகம் திரும்ப ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. புதுடெல்லியில் இருந்து தமிழக அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர் வரை போவதற்கு வாகன வசதிகள் செய்து தரப்பட்டது.

இதில் அரசு செலவில் திரும்பியுள்ள 1,524 மாணவர்கள் உட்பட மொத்தம் 1,890 மாணவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இதற்காகத் தமிழ்நாடு அரசால் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை போடப்பட்டிருக்கிறது. இப்படி உலகத்தில் எங்குத் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உடனே சென்று உதவும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறுவாழ்வுத் துறையை “மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை” எனப் பெயர் மாற்றம் செய்தார்.

அடுத்த பத்தாண்டு காலத்தில் தொய்வு ஏற்பட்டாலும் கழக அரசு அமைந்ததில் இருந்து அயலகம் வாழ் தமிழர்கள் நலன் காக்கும் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டேன். நம்முடைய இனம் ஒரு நிலத்தில் - ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் இல்ல. உலகளாவிய இனம் என்று ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். கல்வி, வணிகம், வர்த்தகம் ஆகிய பொருளாதாரக் காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்றும் வருகிறார்கள், குடியேறியும் வருகிறார்கள்.

இது காலம் காலமாகத் தொடர்கிறது. இவர்களுக்கான எல்லா உதவிகளையும் இந்தத் துறை மூலமா செய்து வருகிறோம். கடந்த ஆண்டில் மட்டும் 995 கோரிக்கைகள் இந்தத் துறைக்கு வந்திருக்கின்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது.

* அயலகத் தமிழர்களது தரவுத் தளம் அமைத்தல்

* அடையாள அட்டை வழங்குதல்

* காப்பீட்டுத் திட்டம்

* பணியின் நிமித்தம் சென்ற தமிழர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்குதல்

* இவர்கள் தகவல் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்

* செயலி மற்றும் வலைத்தளம் உருவாக்கம்

* சட்ட உதவி மையம்

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !

* புலம்பெயர் தமிழர்களுக்கு முன்பயணப் புத்தாக்கப் பயிற்சி மையம் ஆகியவை அமைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

* கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

* தமிழ் மொழி, பண்பாட்டைத் தமிழ்க் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

* கோவிட் காரணமாக வேலை இழந்து தாயகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

* அயலகத் தமிழர்கள் தங்கள் சேமிப்பை சரியான முறையில் முதலீடு செய்ய ஆலோசனை வழங்கப்படும்.

* அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்குக் கல்வி, மருத்துவ உதவிகள் செய்ய அரசு தரப்பில் திட்டம் உருவாக்கி செய்து தரப்படும். இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, உங்களுக்கு முழுமையான உதவியைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டுக்கும் நீங்கள் உதவிகளைச் செய்ய வேண்டும். தொழிலதிபர்களாக இருக்கக் கூடியவர்கள் - தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் - வர்த்தகர்கள் - தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

* 1.93 இலட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்குகிறது.

* 2020-21ஆம் ஆண்டுக்கான அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.97 விழுக்காடு.

* மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.

* ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

* காலணி ஏற்றுமதியில் 45 விழுக்காடு பங்களிப்பைக் கொண்டிருக்கிறது.

* மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25 விழுக்காடு பங்களிப்பை அளித்து வருவது மிகவும் பெருமைக்குரியது. இப்படி, பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருக்கிறோம். கடந்த பத்து மாத காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. அனைத்து வகையிலும் தொழில் நிறுவனங்களை நடத்த சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் பெற்றிருக்கிறது.

“தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல்.. தமிழை - தமிழரை வளர்ப்போம்!” : துபாய் தமிழர்களிடையே முதல்வர் உரை !

இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று என்னை முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியிட்டார்கள். நான் நம்பர் ஒன் என்பதை விட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகணும்னு நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். அதற்குக் கடல் கடந்து வாழக் கூடிய தமிழர்கள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வளர்கிறது என்றால் அந்த வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்திருக்கிறது என்றால் - ‘அது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு’ என்று சொன்னேன். எனவே, திமுக அரசு பேரும் புகழும் பெற்றால் - அதில் ஒவ்வொரு தமிழர்களுக்கும் பங்கு இருக்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்களும் அதில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல - உங்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது தமிழினம் ஒற்றுமையாக வாழ வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல யாரையும் தாழ்த்தாமல் - யாருக்கும் தாழாமல் - யாருக்கும் அடிமையாக இல்லாமல் - யாரையும் அடிமைப்படுத்தாமல் - வாழ வேண்டும். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள்.

எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். தமிழால் இணைவோம். தமிழராய் இணைவோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம்.

banner

Related Stories

Related Stories