மு.க.ஸ்டாலின்

துபாய் மண்ணில் தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகையில், “உங்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் வணக்கம்." என்றார்.

துபாய் மண்ணில் தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை - துபாய் உலக கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், மார்ச் 24, 2022 முதல் மார்ச் 28, 2022 வரையிலான 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களுடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களுடனும் சந்திப்புகள் நடைபெற்றன.

உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

துபாய் மண்ணில் தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த திறப்பு விழாவின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் / துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் மாண்புமிகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்கள் உடனிருந்தார்.

தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“உலகத்தரத்திலான இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தி வரும் துபாய் அரசுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டின் தரத்துக்கும் திறத்துக்கும் இந்த நிகழ்வின் வெற்றியே சான்றாக அமைந்திருக்கிறது.

இந்தக் கண்காட்சியின் இந்திய அரங்கில் 'தமிழ்நாடு வாரத்தைத்' தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த எக்ஸ்போ கண்காட்சி அமைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகைப் பொருட்களும் இந்த அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா, மருத்துவம், கலை - பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழிற்பூங்காக்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியவையும் நாள் முழுதும் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்.

இந்தியத் தூதரகத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துபாய் எக்ஸ்போ மற்றும் அதில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கின் அமைப்பாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளை, வாழ்த்துகளைக் கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்” என்றார்.

துபாய் மண்ணில் தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகையில், “உங்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் வணக்கம். துபாயில் நடைபெறக்கூடிய இந்தச் சிறப்புக்குரிய கண்காட்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்த துபாய்க்கு வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்படி உலகத்தில் இருக்கக்கூடிய எந்தப் பகுதிகளாக இருந்தாலும், எந்த நாடுகளாக இருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நம்முடைய தமிழக அரசு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, பாதுகாப்பாக இருக்கிறதோ, அது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒன்றிணைந்து வேற்றுமையிலே ஒற்றுமை காணவேண்டிய நிலையில் இந்தச் சிறப்பான கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தக்கூடிய வகையில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தியிருக்கக்கூடிய அந்தக் கலைஞர்களுக்கெல்லாம் மீண்டும், மீண்டும் என்னுடைய தமிழ் வணக்கத்தைத் தெரிவித்து, உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி, நன்றி என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்த பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலிஃப் மற்றும் சவுதி அரேபியா அரங்குகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்வுகளின் போது, மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories