மு.க.ஸ்டாலின்

”எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு; வேறேதும் இல்லை” - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மடல்!

6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது தி.முக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

”எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு; வேறேதும் இல்லை” - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“வாழ்த்துகள், ஓயாது உழைத்திட ஊக்கம் தரும்!” எனக் குறிப்பிட்டு தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் இமாலய வெற்றியை - மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் அவர்களைவிட எனக்கு அதிகமாக இருந்தது. அறிவாலயத்தில் அவர்களின் ஆர்வம் பொங்கிடும் ஒளிமுகம் கண்டு அக மகிழ்ந்தேன். மக்களின் கோரிக்கைகளை ஒன்று விடாமல் அக்கறையுடன் கேட்டு, அவற்றை நேரில் நிறைவேற்றி அரிய கடமை ஆற்றிடப் போகும் கழகத்தினரிடமும் தோழமைக் கட்சியினரிடமும்தான் எத்தனை மகிழ்ச்சி! எவ்வளவு உணர்ச்சி!

முதலமைச்சர் என்ற முறையில் பணிகள் நிறைந்திருந்த நிலையில், ஓய்வையும் உறக்கத்தையும் சற்று உதறித் தள்ளிவைத்துவிட்டு, கழகத்தினரைக் காணும் பேராவலில், ஒவ்வொரு நாளும், 6 மணி நேரத்திற்கும் அதிகமாக நின்றபடியே அவர்களின் அன்பினை நிறைவுடன் ஏற்றுக் கொண்டேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இருந்தபோது, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் நிகழ்வில் மணிக்கணக்கில் மேடையில் நின்று, என் கைகளால் அவர்களுக்கு நிதி வழங்கி மகிழ்ந்தேன். அதே போன்ற மிகுந்த மகிழ்வான உணர்வுடன், வெற்றி பெற்ற கழகத்தினரின் அன்பினை ஏற்று, அவர்களை மனதார வாழ்த்தினேன்.

இந்த வெற்றி மாபெரும் வெற்றி; கழகத்தின் தொடர்ச்சியான வெற்றி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி, அதனுடன் இணைந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி, 2020-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் கழக ஆட்சியை உருவாக்கிய வெற்றி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, 2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என 6 தேர்தல் களங்களில் அடுத்தடுத்து வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் ‘சிக்ஸர்’ அடிப்பது போன்ற வெற்றி இது; மக்கள் தந்த வெற்றி; இந்த வெற்றியின் அருமை பெருமை முழுவதும் மக்களையே சேரும். இதற்காக அல்லும் பகலும் உழைத்திட்ட உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், ஆதரவு அமைப்பினர் அனைவருக்கும் நன்றி, நன்றி!

நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சிறந்த அடையாளமான இந்த வெற்றி என்பது, மக்களுக்கு நாம் நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான திட்டங்களால்தான் முழுமை பெறும். அதிலும், உள்ளாட்சி அமைப்புகள் என்பவை ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்குபவை; மக்களாட்சியின் உயிரோட்டத்தைக் கொண்டிருப்பவை. அதில் வெற்றி பெற்றவர்கள் ஆற்றும் விரைவான பணி என்பது மக்களுடன் நேரடியானது. அரசின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு மனிதருக்கும் கொண்டு சேர்ப்பது. அதனால்தான், வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தபோது, ஊடகத்தினரைச் சந்தித்த உங்களில் ஒருவனான நான், வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பேன் என்று தெரிவித்தேன்.

வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், மார்ச் 4 அன்று மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தங்கள் உள்ளாட்சி அமைப்புக்கான தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். அந்தப் பொறுப்புகளுக்குக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுபவர்களை முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்யவேண்டும். அதுபோலவே, தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நேரடித் தேர்தலில் மக்கள் தந்த மகத்தான வெற்றிக்கு வலு சேர்க்கும் வகையிலும், கழகத்தின் கட்டுப்பாட்டையும், கூட்டணியின் ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தும் வகையிலும் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள் இதனைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது உங்களில் ஒருவனான எனக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்- துணைத் தலைவர் தேர்தலில் கட்டுக்கோப்புடன், ஒருமனதுடன் செயல்படுவதுதான் கழகத்தினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.

என்னுடைய பிறந்தநாளில் நான் உங்களுக்கு வழங்கும் அன்புப் பரிசாக - நன்றிப் பரிசாக ‘உங்களில் ஒருவன்’ என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரும் அன்னை தயாளு அம்மையாரும் ஈன்றெடுத்த புதல்வனாகவும், தலைவரின் மடி தவழ்ந்து - அவர் விரல் பிடித்து வளர்ந்த தொண்டனாகவும், அரை நூற்றாண்டுகால அரசியல் பயணத்தை மேற்கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இயற்கை நம்மிடமிருந்து சதி செய்து பிரித்தபிறகு, இயக்கத்தைக் காக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்த தலைவனாகவும், மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற முதலமைச்சராகவும், 68 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கைப் பயணம்.

பதவிகளை மட்டுமல்ல, சிறைகளையும் சந்தித்தவன்; சித்திரவதைகளை அனுபவித்தவன்; போராட்டக் களங்களைக் கண்டவன். ஏச்சுகள், ஏளனங்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு, இளைஞரணியை வளர்த்தெடுத்து, வெற்றியிலும் தோல்வியிலும் மக்களுக்கான பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு; வேறேதும் இல்லை.அதுதான், முத்தமிழறிஞர் கலைஞரிடம் நான் பெற்ற நற்சான்றிதழ். அந்த நற்சான்றிதழுக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஒப்புதலுடன் சூட்டிய வெற்றி மகுடம்தான் இந்த முதலமைச்சர் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்ற பிறகும் உழைக்கிறேன்; அனுதினமும் உழைக்கிறேன்; மேலும் மேலும் உழைக்கிறேன்.

உங்களில் ஒருவனான என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில், நான் பிறந்த 1953-ஆம் ஆண்டு முதல், நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976-ஆம் ஆண்டு வரையிலான முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை ‘உங்களில் ஒருவன்’ என்ற மனதுக்கு நெருக்கமான தலைப்பிலேயே புத்தகமாகப் பதிவு செய்திருக்கிறேன். என் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், தலைவர் கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உள்ளிட்ட அனுபவங்களை இதில் பதிவு செய்திருக்கிறேன்.

நாளை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ள அதன் வெளியீட்டு விழாவிற்கு, கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையேற்க, கழகப் பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் முன்னிலை வகிக்க, கழக மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழுத் துணைத் தலைவருமான கனிமொழி அவர்கள் வரவேற்புரையாற்ற, இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் - இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் நூலினை வெளியிடுகிறார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் அவர்கள், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், நடிகர் சத்தியராஜ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். நூலாசிரியர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் ஏற்புரை வழங்குகிறேன்.

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு 1500-க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் தலைவர்களின் பாதுகாப்புச் சூழல் காரணமாக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் நேரடியாக அழைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.

எங்களில் ஒருவன் வெளியிடும் உங்களில் ஒருவன் புத்தகத்திற்கு நாங்கள் வர இயலாதா எனக் கேட்கும் அன்பு உடன்பிறப்புகளுக்காக, நேரலை வாயிலாக அந்த விழா நிகழ்வுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவரவர் இடத்திலிருந்தும், ஆங்காங்கு உள்ள கழக அலுவலகங்களில் கூடியும் இந்த நிகழ்வைக் கண்டு களித்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விழாவைக் காண்பதுடன், புத்தகத்தை வாங்கிப் படித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவித்து, அடுத்த பாகத்தை நான் எழுதிட எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்திட வேண்டுகிறேன்.

நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களின் இதய அன்பும் இணையிலா வாழ்த்துகளுமே நான் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பதற்கு ஊற்றுப் பிரவாகமாக அமைகின்றன. மார்ச் 1 அன்று என்னுடைய பிறந்தநாள்; எப்போதும் போல தலைவர் கலைஞரின் அவர்களின் வாழ்த்துகளுடன்தான் தொடங்கும். என்னை ஈன்ற அன்னை தயாளு அம்மையார் அவர்களிடம் வாழ்த்து பெற்று, குடும்பத்தினரின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, உயிரனைய கழக உடன்பிறப்புகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெறவிருக்கிறேன்.

ஒரு குடும்பமாக இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களையும், அதே உணர்வுடன் இந்த இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையும் எந்நாளும் நெஞ்சில் ஏந்தி நம் பயணத்தை இன்னும் சிறப்பாகவும் வேகமாகவும், தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையிலும், தொடர்ந்திட பிறந்தநாள் சந்திப்பு உரமாக அமையும். நம் பயணம் என்பது தமிழ் உணர்வுக்கானது, திராவிட அரசியல் முன்னெடுத்த சமுதாய உரிமைக்கானது, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கானது, சமூகநீதியையும் சுயமரியாதையையும் நிலைநாட்டுவதற்கான பயணம் இது. இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காப்பதற்கான பயணம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவை இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு இருக்கும் எனக் கழகத்தைத் தொடங்கியபோது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னார்கள். இன்றைய நிலையில், முன்பைவிடவும் தேவை அதிகமாகி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு (All India Federation for Social Justice). நம் பயணம் நீண்டது, நெடியது; அது முடிவதில்லை.

உடன்பிறப்புகளாகிய உங்கள் பேரன்பால் கழகத்தின் தலைவராகவும், மக்களின் பேராதரவால் முதலமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிற உங்களில் ஒருவனான என்னுடைய பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்பது என் அன்புக் கட்டளை. மக்களுக்கு உரிய பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்காலத் தலைமுறைக்கு நம் இலட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள்.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என முத்தமிழறிஞர் நமக்குத் தந்துள்ள பொன்மொழியை நினைவில் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட, மேலும் மேலும் உழைப்பேன்.. ஓயாது உழைப்பேன்.. உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளுடன் உற்சாகமாக உழைப்பேன் எனப் பிறந்தநாள் உறுதியினை ஏற்கிறேன்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மடலில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories