மு.க.ஸ்டாலின்

“திராவிட தத்துவம் பேசாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளர முடியாது” - The Week பேட்டியில் மு.க.ஸ்டாலின்!

பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“திராவிட தத்துவம் பேசாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளர முடியாது” - The Week பேட்டியில் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘The Week’ ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் பாகம்:

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார் ஓ.பி.எஸ்!

செய்தியாளர் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

தலைவர் மு.க.ஸ்டாலின் : "தி வீக்" பத்திரிகையில் வெளியான கட்டுரைகளே அவருடைய ஊழல்களுக்கு ஆதாரங்களாகும். அவருடைய தொலைநோக்குப் பார்வை ஊழலையும், சொத்துக் குவிப்பையும் உள்ளடக்கியது. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஊழல்வாதிகள். அவர்கள் கொள்ளையடித்ததைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் மக்களுக்குப் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

அவருடைய தர்மயுத்தத்திற்குப் பிறகும், பழனிசாமி அரசாங்கத்திற்கு எதிரான வாக்களிப்புக்குப் பிறகும் அவர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகவில்லை. அவர் மூன்று முறை முதலமைச்சராக இருந்த போதிலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் விசாரணை ஆணையம் முன் ஆஜராகவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஓர் ஊழல்வாதி. அவர் அவருடைய "அம்மா"வுக்கே துரோகம் செய்து விட்டார்.

செய்தியாளர் : அ.தி.மு.க.வும் -பா.ஜ.க.வும் தி.மு.க.வுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனவே!

தலைவர் மு.க.ஸ்டாலின் : அ.தி.மு.க.வும் -பா.ஜ.க.வும் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக தி.மு.க.வுக்கு எதிராக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கைகோர்ப்பதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன நிர்ப்பந்தம்? மோடியும், அமித்ஷாவும் அ.தி.மு.க. அரசை சட்டப்பூர்வமாக்கியது ஏன்? எல்லா துறைகளிலும் தோல்வியடைந்த போதும் அ.தி.மு.க. அரசுக்கு முட்டுக் கொடுத்து, அதை கவுரவப்படுத்தி வருவது ஏன்?

இதன் மூலம் பா.ஜ.க என்ன ஆதாயம் அடைந்து வருகிறது? வெறும் 20 இடங்கள் தான். பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி ஏன் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் கைகளைப் பற்றிக்கொண்டிருக்கிறார் என்பதையும் மக்கள் அறிவார்கள்.

“திராவிட தத்துவம் பேசாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளர முடியாது” - The Week பேட்டியில் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க.வின் சாதனைகளை நன்றாகவே வன்னியர் சமுதாயம் அறிந்துள்ளது!

செய்தியாளர் : வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பது அ.தி.மு.க.வுக்கு உதவி செய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.கதான் வன்னியர் சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திலிருந்து 20 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கிய முதல் கட்சியாகும். உள் ஒதுக்கீடு கோரிக்கையை நாங்கள் தான் முதன்முதலில் ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்தினோம். இதனால்தான் வன்னிய இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பலனடைந்தார்கள். வன்னியர் சமுதாயம் தி.மு.க.வின் சாதனைகளை நன்றாகவே அறிந்துள்ளது. எனவே, வன்னியர் சமுதாயம் உள்பட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் தி.மு.க.வை ஆதரிப்பார்கள். அதன்மூலம் தி.மு.க கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

செய்தியாளர் : மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பற்றி தங்கள் கருத்து என்ன? அவர் தன்னை பெரியாரின் சீடர் என்றும், தானும் ஒரு திராவிடர் என்று கூறிக் கொள்கிறாரே?

தலைவர் மு.க.ஸ்டாலின் : திராவிட கொள்கைகள், திராவிட இயக்கத் தத்துவங்களைப் பின்பற்றும் அனைவரும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எந்த அரசியல் கட்சியும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைய முடியாது.

கனிமொழி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்!

செய்தியாளர் : கட்சியில் கனிமொழியின் பங்கு என்ன? முரசொலி மாறனின் மரணத்திற்குப் பின் அவர் டெல்லியில் தி.மு.க.வின் முகமாக இருக்கிறாரே?

தலைவர் மு.க.ஸ்டாலின் : என் தங்கை கனிமொழி கருணாநிதி மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் மக்களவையிலும், தமிழ்நாட்டிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை டெல்லியில் எழுப்பி வருகிறார்.

தொண்டர்களின் உழைப்புக்கு ஏற்ப அரசியல் எதிர்காலம் உண்டு!

செய்தியாளர் : நீங்கள் தி.மு.கவில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கட்சியில் உயர்நிலைக்கு வந்தீர்கள். உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் அத்தகைய ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவில்லை என்று நாங்கள் கூறலாமா?

தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் எதிர்காலம் உண்டு. அது அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ப கிடைக்கும். நான் இந்த நிலைக்கு அரை நூறாண்டு கால கடின உழைப்புக்குப் பிறகுதான் வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி தமிழ்நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார். இப்போதும் கூட அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, அத்தகைய சூழ்நிலையில் உதயநிதியை எப்படி தவிர்க்க முடியும்?

செய்தியாளர் : தேர்தலுக்குப் பின் நீங்கள் ஆட்சி அமைத்தால் மத்திய அரசுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்? பா.ஜ.கவுடனான உங்கள் அரசியல் உறவின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்?

தலைவர் மு.க.ஸ்டாலின் : மத்திய அரசுக்கும் - மாநில அரசுக்கும் இடையிலான உறவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பின் அடிப்படையில் இருக்கும். தி.மு.க. தலைமையிலான அரசு மாநிலங்களின் உரிமைகளை முழுவதும் நிலைநாட்டுவதாக இருக்கும்.

மத்திய அரசுடன் நல்லிணக்கமான, சுமுகமான உறவை மேம்படுத்தும் அடிப்படையை மனதில் கொண்டு நாங்கள் பணியாற்றுவோம். பா.ஜ.க.வும், தி.மு.க.வும் ஒரு கூட்டணியின் பங்குதாரர்கள் அல்ல. எனவே, தேர்தல் வெற்றிக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அரசியல் ரீதியான உறவு என்ற கேள்வியே எழவில்லை.

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ‘The Week' ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories