மு.க.ஸ்டாலின்

“தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது... இந்த கறையை தேர்தலோடு கழுவுவோம்” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!

“தமிழக மக்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்கும் வேண்டுகோள். இந்த அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க வேண்டும்.”

“தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது... இந்த கறையை தேர்தலோடு கழுவுவோம்” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"இளைஞர்களுக்கு சுய முன்னேற்றக் குழுக்கள், மாவட்டந்தோறும் பெண்கள் திறன்மேம்பாட்டு மையங்கள், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் தி.மு.கழக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்படும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (24-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திட்டக்குடியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.

திட்டக்குடி தொகுதியில் கழக வேட்பாளர் கணேசன் அவர்கள், மாவட்ட கழகத்தின் செயலாளராக இருப்பவர். ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுக்கு அரும் பணியாற்றி இருப்பவர். கொரோனா தொற்று நோயின் காரணமாக தன்னுடைய மகளை இழந்தவர். அவருக்கும் அந்தத் தொற்று ஏற்பட்டது. அதை பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு பணியாற்றுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அப்படிப்பட்டவரை தான் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், நெய்வேலி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக அருமை சகோதரர் சபா. ராஜேந்திரன் அவர்கள், தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பவர். ஏற்கனவே இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுதி மக்களுடைய பிரச்சினைகளை சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எடுத்து பேசுகிற, பணியாற்றுகிற ஆற்றலைப் பெற்றவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் என்னுடைய இனிய சகோதரர் வேல்முருகன் அவர்கள், ஈழத் தமிழர்களுக்காகவும் தொழிலாளர் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவர் ஏற்கனவே சட்டமன்றத்தில் இருந்து பணியாற்றியவர். அவ்வாறு பணியாற்றியபோது அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் கருத்துக்கள் அங்கிருக்கும் அனைவரையும் குறிப்பாக தலைவர் கலைஞர் அவர்களையே கவரும் வகையில் ஆற்றலோடு பேசும் ஒரு சிறந்த செயல் வீரர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு கை சின்னத்திலும் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் நீங்களெல்லாம் தேடித் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நடுநாடு என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் – திருவதிட்டக்குடி என்று அழைக்கப்பட்ட திட்டக்குடி. வேங்கை மரம் சூழ்ந்த – திட்டக்குடி. சிற்பங்களுக்கு உதாரணமான – விருத்தாசலம். நிலக்கரி சுரங்க நகரமாம் – நெய்வேலி. நினைத்தாலே இனிக்கும் பலாப்பழத்திற்கு பெயர் பெற்ற – பண்ருட்டிக்கு உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன்.

இவ்வாறு பெருமைக்குரிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள். எனவே அவர்களை ஆதரித்துத்தான் உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.

அவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல, நானும் வேட்பாளராகத்தான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளராக உங்களை தேடி வந்திருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர். எனவே அந்த உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

நம்முடைய கழகத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு முறையும் தேர்தலைச் சந்திக்கிற போது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் என்னென்ன வாக்குறுதிகளை உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையாக தயாரித்து வெளியிடுவது வழக்கம். எனவே இந்த முறையும் தேர்தல் அறிக்கையை தயாரித்து நம்முடைய கழகத்தின் சார்பில் வெளியிட்டு இருக்கிறோம்.

அதில் தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு உறுதி மொழிகள், வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு உறுதி மொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. “சமூகநீதி" என்னும் அடித்தளம் அமைத்திட வேண்டும் என்று பாடுபடும் இயக்கம் தி.மு.க.

அந்த அடிப்படையில், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் நிறைவேற்றப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். கட்டாயத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3.50 லட்சம் பணியிடங்களில், தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள்.

நீர் நிலைகளைப் பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்களாக இருப்பார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. பெண்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையமாக "அனிதா அச்சீவர்ஸ் அகாடமி" மாவட்டந்தோறும் தொடங்கப்படும். நீட் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி, அரியலூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா. அதைத்தொடர்ந்து பல மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். அதை இந்த நாடு மறந்துவிடாது.

“தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது... இந்த கறையை தேர்தலோடு கழுவுவோம்” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!

என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில், “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” என்ற பெயரில் ஒரு மையத்தை உருவாக்கி இந்த 2 வருடத்தில் ஏறக்குறைய 1,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம். 2 மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இது கொளத்தூருக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இதுபோன்ற மையங்களைத் தொடங்குவோம் என்று அறிவித்தேன். அதைத்தான் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம்.

சாலைப்பணியாளர்களாக 75 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள். கோவில்கள் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்புப் பணிக்கு 25 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் தொடங்க கடன் வழங்கப்படும். பட்டதாரி இளைஞர்கள் குறுந்தொழில் தொடங்கினால் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இளைஞர் சுய முன்னேற்றக் குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்கள் சிறுகுறு தொழில் தொடங்க கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் வேலையில்லாத் திண்டாட்டமே இல்லை என்ற நிலையை தி.மு.க. அரசு உருவாக்கும்.

ஆனால் அதேநேரத்தில் இன்றைக்கு பழனிசாமி அரசை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், இந்த ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்பதற்கு எத்தனையோ காரணங்களை நாம் சொல்ல முடியும்.

அதில் முக்கியமான முதல் காரணமாக - 2016-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது, டி.என்.பி.எஸ்.சி. மூலம் பிற மாநிலத்தவர் சேரலாம் என்ற மாற்றத்தைச் சட்டத்தில் செய்த ஆட்சிதான் இந்த ஆட்சி என்பதைச் சொல்லலாம்.

அதுமட்டுமல்ல அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அதில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வந்திருக்கிறோம். வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அவர் இறந்த பிறகு, பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அதில் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று அறிவித்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி முதலீடு செய்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக எவ்வளவு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்?

இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதுவரையில் வழங்கவில்லை.

இந்த லட்சணத்தில் முதலமைச்சரும் சில அமைச்சர்களும் கோட் சூட் போட்டுக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா மாதிரி ஒரு பயணம் நடத்தினார்கள். பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால் இதுவரையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம்? எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வந்திருக்கிறது? என்ற பட்டியலை இதுவரையில் அவர்கள் வெளியிடவில்லை. காரணம் எதுவும் செய்யவில்லை.

அதுமட்டுமல்ல. காலியாக இருக்கும் அரசுப் பணிகளை நிரப்ப முடியாத லாயக்கற்ற ஒரு ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்கள் மறுக்கப்படும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக நம்முடைய இளைஞர்கள் சமீபத்தில் நெய்வேலியில் நடத்திய போராட்டம்.

“தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது... இந்த கறையை தேர்தலோடு கழுவுவோம்” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!

நம்முடைய மாவட்டச் செயலாளர், கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்திப் பேசும் இளைஞர்கள் தமிழக பணிகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறார்கள். இதை பழனிசாமியால் தடுக்க முடியவில்லை. காரணம் அவருக்கு முதுகெலும்பு கிடையாது. கொத்தடிமையாக மோடிக்கு அடங்கியிருக்கும் ஒரு ஆட்சியை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார்.

இதைத் தடுக்க முடியும் என்றால் தி.மு.க.வால்தான் முடியும். இந்த ஸ்டாலினால் தான் முடியும் என்பதை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் மற்றும் தமிழக மருத்துவ படிப்புகளில் இவர்களால் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் வரிப்பணத்தில் வேறு மாநிலத்தவர் குளிர் காயலாமா? அதனால் நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த நம்முடைய பிள்ளைகளின் கல்வி பாதிக்காதா? வேலைவாய்ப்பு பாதிக்காதா? இதைத் தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து இன்றைக்கு ஒரு சர்வாதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அதனால் தான் இன்றைக்கு பல மாநிலங்கள் அதை ஏற்க மறுக்கிறது. ஆனால் இங்கிருக்கும் அரசு அதைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று அதை அமல்படுத்தி கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இதைத் தமிழக இளைஞர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோல் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம் போல விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமே பெட்ரோல் - டீசல் விலை உயர்வுதான். மோடி அதிகமாக வரி போடுகிறாரா… நான் அதிகமாக வரி போடுகிறேனா என்று பழனிசாமி போட்டி போட்டுக்கொண்டு வரியைப் போட்டு விலையை ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கிறார்.

பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப்போவதில்லை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மலரும்… மலரும்… மலரும்… என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பாச்சா தமிழ்நாட்டில் பலிக்காது.

ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. காரணம் அ.தி.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும் அவர் அ.தி.மு.க.வாக இருக்கமாட்டார். பாஜக-வாக மாறி விடுவார்.

புதிய தலைமுறையில் கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது. எல்லா கருத்துக் கணிப்புகளிலும் நாம் தான் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொல்கிறார்கள்.

இந்து ராம் அவர்கள் அ.தி.மு.க. தலைமையில் இருக்கும் கூட்டணி ‘வாஷ் அவுட்’ ஆகப்போகிறது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். நானே சில மாதங்களுக்கு முன்பு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது 15 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றிவரும் போது கூட்டங்களில் காணப்படும் எழுச்சியை - உணர்ச்சியைப் பார்க்கும் போது 234 இடங்களில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அது உறுதி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் நாம் தான் வெற்றி பெற்றோம். ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அவர் ஓபிஎஸ் மகன். அவர் வெற்றி பெற்று பாஜக எம்.பி.யாகத்தான் இருக்கிறார்.

எல்லோருடைய லெட்டர் பேடிலும் அவரவர் கட்சித் தலைவர்களின் படத்தைத்தான் போடுவார்கள். ஆனால் அவர் மோடியின் படத்தைப் போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் - எந்தக் காரணத்தை கொண்டும் பாஜக வெற்றி பெறக்கூடாது. அதேபோல அ.தி.மு.க.வும் வெற்றி பெறக்கூடாது.

கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற தேர்தல் - நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிடுவார். அப்போது. “சொன்னதை செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்” என்று தலைப்பிடுவார்.

அவருடைய மகன் ஸ்டாலின் நான் சொல்கிறேன். ‘சொன்னதைச் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன்’. அந்த உறுதியோடுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அதில் கரும்பு விவசாயிகள் பயன்பெற, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 4,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகள் தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒரு கால வரையறைக்குள் பெற்றுத்தந்திட தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் 3 இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குறுதிகள், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகியவை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும். திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் பாதாள சாக்கடைத் திட்டம். விருத்தாசலத்தில் சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை மீண்டும் செயல்படும். விருத்தாசலத்தில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி. விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை. பண்ருட்டியில் மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலை; குளிர்பதனக் கிடங்கு; முந்திரி பதப்படுத்தும் தொழிற்பயிற்சி மையம்; பலாப்பழச்சாறு தொழிற்சாலை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை தி.மு.க. கடுமையாக எதிர்ப்பதோடு, அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நெய்வேலியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் அருகிலுள்ள கிராமங்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கத் திருப்பி விடப்படும். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலங்கள் அளித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து பரிந்துரைகள் செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்படும்.

இது நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றுப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு போல ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அந்த பொதுக்கூட்டத்தில் ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில்10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவித்தேன். 50 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போய்விட்ட தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக அந்த உறுதிமொழிகளை அறிவித்தேன்.

இந்தத் தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து, நீட்டை கொண்டுவந்து நமது மாணவர்களின் கல்வியைப் பாழாக்கி வரும் மத்திய அரசுக்கு நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, இது திராவிட மண். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு நிச்சயம் பலிக்காது.

திருச்சியில் பத்தாண்டுகால தொலைநோக்குப் பார்வையோடு அந்த 7 வாக்குறுதிகளை அறிவிக்கும்போது இது அண்ணா மீது – தலைவர் கலைஞர் மீது – தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணை என்று எப்படி உறுதிமொழி தந்தேனோ, அதனை மீண்டும் இப்போது நினைவு படுத்துகிறேன்.

எனவே தமிழினத்தின் சுயமரியாதை காப்பாற்றிவிட வேண்டும். இப்போது நடைபெறவிருக்கின்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். அதற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றப்பட வேண்டும். நாம் தன்மானத்தோடு வாழ வேண்டும்.

நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தல்.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க, விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, பண்ருட்டி - திட்டக்குடி - விருத்தாசலம் - நெய்வேலி இந்த 4 தொகுதிகளிலும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று சொன்னால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்.

உடன்பிறப்பே… உடன்பிறப்பே… என்று தலைவர் கலைஞர் அவர்கள், கட்சி தொண்டர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் சேர்த்துத்தான் அழைப்பார்.

எனவே தமிழக உரிமையை மீட்க நீங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று, உங்களை அன்போடு உரிமையோடு, விரும்பி, வேண்டி, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக, தலைவர் கலைஞருடைய மகனாக உங்கள் பாத மலர்களைத் தொட்டு கேட்கிறேன். ஆதரவு தாருங்கள், வெற்றி பெற வையுங்கள், என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

“தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது... இந்த கறையை தேர்தலோடு கழுவுவோம்” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்!

விழுப்புரத்தில் தி.மு.க தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

திருக்கோவிலூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக முனைவர் க.பொன்முடி அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் நின்று வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் அந்த தொகுதி மக்களுடைய பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஆழமாக ஆணித்தரமாக எடுத்து வைத்து உரையாற்றி இருப்பவர். அந்த தொகுதிக்கு பல பணிகளை எதிர்க்கட்சியாக இருந்தாலும் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பவராக விளங்கியவர். அவர் ஏற்கனவே கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்து இந்த மாவட்டத்திற்கு என்னென்ன பணிகளை கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார் என்பதற்கு ஒரு மிகப்பெரிய பட்டியலே போட முடியும். அந்த அளவிற்கு செய்தவர். எனவே அவரைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்து வேட்பாளராக இன்றைக்கு நாம் நிறுத்தியிருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் நா.புகழேந்தி அவர்கள், ஏற்கனவே இடைத் தேர்தலில் நின்று ஆளுங்கட்சியின் அராஜகங்கள் அக்கிரமங்கள் அநியாயங்களை சந்தித்து வெற்றி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் அவர்தான் கழக வேட்பாளராக தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் அவர்களை, சண்முகத்தை வீழ்த்துவதற்காகவே வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணிகளில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அருமை சகோதரர் வன்னியரசு அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர். அவர் சட்டமன்றத்திற்கு சென்றால் நம்முடைய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுடைய குரலாக சமூகநீதிப் போராட்டத்தின் குரலாக ஒலிப்பார். அவருக்கு பானை சின்னத்திலும் நீங்கள் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விழுப்புரம் தளபதியின் கோட்டை என்று எப்போதும் பொன்முடி சொல்வார். ஆனால் இப்போது தலைவராக வந்திருக்கிறேன். எனவே தலைவரின் கோட்டை என்று அடுத்த முறை சொல்ல வேண்டும். அந்த உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு உறவினர்களுக்கு பினாமிகளுக்கு டெண்டர் விட்டு கொள்ளை அடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால் தான் உதவாக்கரை என்று அடிக்கடி அவரை நான் சொல்வது உண்டு. நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். நான் என்ன சொல்கிறேனோ அதை பார்த்து காப்பி அடிப்பவர் அவர். அதற்கு சில உதாரணங்கள். கொரோனா வருகிறது அதற்கு முன்னெச்சரிக்கையாக சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள் என்று சொன்னேன். அதை அவர் கேட்கவில்லை. ஆனால் பின்பு அதை செய்தார். கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. உடனே டெஸ்ட் எடுப்பதை அதிகப்படுத்துங்கள் என்று சொன்னேன். முதலில் கேட்கவில்லை. அதற்குப் பிறகு அதிகமாக டெஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரமுடியாது. பள்ளிகளை மூடும் தருணம் வந்துவிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு அரசு முயற்சியில் ஈடுபட்டது. தேதி குறித்தது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வு எழுதுவார்கள்? எனவே பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று சொன்னேன். முதலில் கேட்கவில்லை. பின்பு ரத்து செய்தார்கள்.

இ-பாஸை ரத்து செய்யுங்கள் என்று சொன்னேன். முன்பு கேட்கவில்லை. அதற்கு பிறகு செய்தார். 7.5 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு. அதற்காக திராவிடர் கழகத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினோம். அப்போதும் கேட்கவில்லை. அதற்குப்பிறகு அவசர அவசரமாக ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அதற்குப் பிறகு முதலமைச்சர் ஆளுநரை அவசர அவசரமாக பார்த்து, அதற்குப்பிறகு செயல்படுத்தினார்.

அதற்குப் பிறகு நான் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்தேன். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதை தீர்த்து வைப்பேன் என்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடத்தில் மனுக்களை பெற்றேன். உடனே அவர் 1100 என்ற ஒரு எண்ணைக் கொடுத்து உங்கள் குறைகளை சொல்லலாம் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார். ஏற்கனவே அந்த திட்டம் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அறிவித்து அது செயல்படாத நிலையில் இருக்கிறது. ஆனால், 100 நாட்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்று சொல்லி மனுக்களை நான் வாங்கிய பிறகு அந்தத் திட்டத்தை அவர் அறிவித்தார்.

இந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் அதிமேதாவி. அவர் பெயர் சி.வி.சண்முகம்.

2012-ஆம் ஆண்டு அவரது மாவட்டச் செயலாளர் பதவியையும் - அமைச்சர் பதவியையும் அம்மையார் ஜெயலலிதா பறித்தார். அதற்கு காரணம், அவர் பத்திரப் பதிவுத் துறையில் அமைச்சராக இருந்தார். அந்த பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது என்று புகுந்து விளையாடினார். அதிகாரிகளை மிரட்டி வாய்க்கு வந்தபடி திட்டினார்.

அதனால் அவர் பதவியை அம்மையார் ஜெயலலிதா பறித்தார். முந்தைய ஆட்சியில் அவர் அமைச்சராக முடியவில்லை. ஆனால் இந்த முறை கருணை அடிப்படையில் இப்போது அமைச்சராக இருக்கிறார்.

தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்த மாவட்ட மக்களுக்கு அவர் செய்தது என்ன? நான் பலமுறை இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் உரிய விளக்கத்தைச் சொன்னதில்லை.

உதாரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்தபோது தெருத்தெருவாகச் சென்று பிரச்சாரம் செய்த போது, நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் பழனிசாமியே சொன்னார். இதுவரையில் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது விழுப்புரம் நகரத்திற்கு விரிவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் வரும் என்று சொன்னார்கள். டெண்டர் விட்டு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. இதுவரையில் அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.

விழுப்புரம் நகராட்சியைச் சிறப்பு நிலை நகராட்சியாக ஆக்கவில்லை. 10 ஆண்டுகள் ஆகியும் இந்த விழுப்புரத்திற்கு சுற்றுச்சாலை வசதி வரவில்லை. பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்றின் தடுப்பணை இடிந்து விழுந்த காட்சி. 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்துவிட்டது. அது அணை அல்ல, சுவர்தான் என்று இந்த சண்முகம் சொன்னார். 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அணையைப் பயன்படுத்தி எவ்வளவு கோடி ரூபாய் கொள்ளை அடித்தார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால் சுகாதாரத்துறை செயலாளரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னவர் இந்த சண்முகம். அடுத்த நாள் அதை மறந்து விட்டார்.

சசிகலா எங்களுக்கு சின்னம்மா அல்ல, அம்மா என்று ஒரு நாள் இரவு சொல்கிறார். மறுநாள் காலையில் மறந்துவிட்டார். அதனால்தான் அவரை அதிமேதாவி என்று சொன்னேன்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமலாக்க அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் வீராவேசமாக சொன்னார். ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது அனைத்திற்கும் மேலாக நீட்டை எதிர்த்து இரண்டு தீர்மானம் போடப்பட்டது. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம். அதனை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதற்கு அனுமதி வாங்குவதற்கு இதுவரைக்கும் சண்முகத்திற்கு முதுகெலும்புக்கு இல்லை, பழனிச்சாமிக்கு அருகதை - யோக்கியதை இல்லை.

அதைவிட முக்கியமாக, அந்தத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். அந்த விஷயத்தை சட்டமன்றத்திற்கு இந்த சட்ட அமைச்சர் தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த பொய்யர்களின் கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலை நீங்களெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழகத்தின் துயரமான ஆட்சி இது. அந்த துயரம் களையப்பட வேண்டும். தமிழகத்தில் துக்கமான ஆட்சி இது. இந்த துக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். தமிழகத்திற்கு களங்கமான ஆட்சி இது. இந்த களங்கம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு கறை படிந்த ஆட்சி இது. இந்த கறை கழுவப்பட வேண்டும். தமிழகத்தை சீரழித்த ஆட்சி இது. இது சீர்பட உடனடியாக நாம் முயற்சி எடுத்தாக வேண்டும். தமிழகத்தை வஞ்சித்த ஆட்சி இது. இந்த வஞ்சகம் நிறுத்தப்படவேண்டும்.

தமிழகத்திற்கு துரோகம் செய்த ஆட்சி இது. அத்தகைய துரோகத்தை நாம் தூக்கி எறியவேண்டும். மொத்தத்தில் இந்த ஆட்சி ஒரு இருண்ட ஆட்சி. அது இந்த மாதத்தோடு முடியவேண்டும். அதற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். எனவே விடியலை உருவாக்க நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.

மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்த்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த மாவட்டத்திற்காக, திருக்கோவிலூர் அணையிலிருந்து மலட்டாற்றின் குறுக்கே 5 இடங்களில் குழாய் பாலங்கள் நீக்கப்பட்டு பாலங்கள் கட்டப்படும். விக்கிரவாண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். விழுப்புரம் சாலமேடு அருகே ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விழுப்புரத்தில் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை, சிப்காட் அமைக்கப்படும். விழுப்புரத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும். விக்கிரவாண்டியில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். நன்னாடு மற்றும் திருவாமாத்தூரில் அரசு விதைப் பண்ணை அமைக்க ஆவன செய்யப்படும். நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுச் செஞ்சி, விக்கிரவாண்டி, மானூர், விழுப்புரம், கீழ்பென்னாத்தூர் ஆகிய ஊர்களில் பாசன வசதிகள் பெருக்கப்படும். வானூர் ஒன்றியம் கோட்டகுப்பம் மீனவர் பகுதியில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் மார்க்கெட் கட்டடம் கட்டப்படும். கோட்டகுப்பம் மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும். வளவனூர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பது போன்ற உறுதிகளை அளித்துள்ளோம். இவை நாம் ஆட்சிக்கு வந்து 5 வருடத்திற்குள் நிறைவேற்றுப்பட இருக்கின்ற சில திட்டங்கள்.

ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ள தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக, 10 வருடத்திற்கான தொலைநோக்கு பார்வையோடு ‘ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற உறுதிகளை அறிவித்தேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, நீட்டை கொண்டுவந்து நுழைத்து மாணவர்களின் கல்விக்கனவைச் சிதைத்து, சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய அரசுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

தமிழக மக்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்து வைக்கும் வேண்டுகோள். இந்த அடிமை ஆட்சியை ஒழிக்க வேண்டும். இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க வேண்டும்.

இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கும் தேர்தல்தான். ஆனால் அதே நேரத்தில் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

மாநில உரிமைகளை பாதுகாக்க, விவசாயிகள் வாழ்க்கை செழிக்க, இந்த விழுப்புரத்தை கழக கோட்டையாக ஆக்குவதற்கு நீங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்.

இந்த வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்கும் நேரத்தில் நானும் ஒரு வேட்பாளர் என்பதை மறந்து விடாதீர்கள். முதலமைச்சர் வேட்பாளர். இந்த முதலமைச்சர் வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டுமென்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தாக வேண்டும். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories