மு.க.ஸ்டாலின்

“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் நுழையவே முடியாது; இது திராவிட மண்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

“மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து நாட்டை குட்டிச்சுவராக்க நினைக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களால் நுழைய முடியாது. இது திராவிட மண்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் நுழையவே முடியாது; இது திராவிட மண்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"அ.தி.மு.க. மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க.தான் ஆட்சி நடத்துகிறது; இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (20-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, தக்கலையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உங்களைத் தேடி நாடி, உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை நீங்கள் தேடித் தரவேண்டும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நம்முடைய வெற்றி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

பத்மநாபபுரம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் அருமை சகோதரர் மனோதங்கராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் சகோதரி விஜயதரணி அவர்களுக்குக் கை சின்னத்திலும், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அருமை சகோதரர் ராஜேஷ்குமார் அவர்களுக்குக் கை சின்னத்திலும், குளச்சல் தொகுதியில் போட்டியிடும் சகோதரர் பிரின்ஸ் அவர்களுக்கு கை சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும்.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கும் இடைத்தேர்தல் நடக்கப்போகிறது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அருமைச் சகோதரர் விஜயகுமார் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

பதின்மூன்றாவது வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் மாணவர்களை ஒன்று திரட்டி நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க - திணிக்கப்படும் இந்தியை எதிர்த்திட, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்று போர்ப்பரணி பாடிய தலைவர் கலைஞரின் மகன்தான் ஸ்டாலின்.

வான்புகழ் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்து அழகு பார்த்த கலைஞருடைய மகன்தான் ஸ்டாலின்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளை போல, தென் எல்லைப் போராட்ட தியாகிகள் குடும்பங்களுக்கு நிதி உதவி - பல்வேறு சலுகைகளைத் தந்த கலைஞருடைய மகனான ஸ்டாலின் இன்றைக்கு உங்களைத் தேடி வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையாகக் கொண்டிருக்கும் கூட்டணிதான் முழு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது வரலாறு. எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத வரலாறு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உண்டு. அந்த வரலாறு தொடர வேண்டும்.

இந்த குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த நேரத்தில் எத்தனையோ திட்டங்களை - சாதனைகளைப் படைத்து இருக்கிறார்.

ஐந்து முறை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய நேரத்தில் அவர் செய்திருக்கும் சாதனைகளை உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். அனைத்தையும் சொல்வதற்கு நேரம் இல்லை என்றாலும் சுருக்கமாக சிலவற்றை உங்களிடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

133 அடி உயரத்தில் நம்முடைய அய்யன் வள்ளுவருக்கு சிலை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம், மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம், பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், பொதுவுடைமைத் தோழர் ஜீவாவிற்கு மணிமண்டபம், பொய்கை அணை மாம்பழத்தாறு அணை, குளச்சல், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்கள் - இப்படி பல்வேறு நலத்திட்டங்களை நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது இந்த மாவட்டத்திற்கு நிறைவேற்றி தந்திருக்கிறோம்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பழனிசாமி அவர்கள் தலைமையில் நான்கு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி என்னென்ன கொடுமைகளை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறது.

நான் படிப்படியாக வளர்ந்து வந்தவன். அவர் படிப்படியாக வளர்ந்து அல்ல, ஊர்ந்து வந்தவர்.

14 வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டு, படிப்படியாக வளர்ந்து இந்த இயக்கத்தின் தலைவனாக பொறுப்பேற்று உங்கள் அன்போடு ஆதரவோடு பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் நுழையவே முடியாது; இது திராவிட மண்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

மக்களுக்கு ஆற்றிய பணியை பொறுத்தவரையில், சட்டமன்ற உறுப்பினர் - இரண்டு முறை சென்னை மாநகரத்தின் மேயர் - உள்ளாட்சித் துறை அமைச்சர் - துணை முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர். இப்போது வேட்பாளர்களுக்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்டேன். இந்த வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்கும் நானும் ஒரு வேட்பாளர் தான் - முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சராக உட்கார முடியும்.

பத்தாண்டுகாலமாக பாழ்பட்டிருக்கும் ஒரு நிலையைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து பல கொடுமைகளை - அக்கிரமங்களைச் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சிதான் அ.தி.மு.க.வின் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சி நடத்துகிற பழனிசாமி, ஏதோ பத்தாண்டுகளாக நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறார்.

பத்தாண்டுகளாக மத்திய ஆட்சியின் கூட்டணியோடு தி.மு.க. பொறுப்பில் இருந்ததே அப்போது என்ன செய்தது என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நம்மைப் பார்த்து கேட்கும் அவரைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்களே, என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?

அவருடைய துறை நெடுஞ்சாலைத் துறை. அந்த துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இதை ஆதாரத்தோடு நம்முடைய கழக வழக்கறிஞர் - மாநிலங்களவை உறுப்பினர் - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கண்டுபிடித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. இதை முறையோடு விசாரிக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும். எனவே சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பழனிசாமி சந்திக்க வந்தாரா? தைரியம் இருந்தால் – தெம்பு இருந்தால் - துணிவிருந்தால் - திராணி இருந்தால் நேரடியாக சி.பி.ஐ. வழக்கை அவர் சந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சந்தித்திருந்தால் அவர் இன்றைக்கு முதலமைச்சர் இல்லை. அவர் சிறையில் தான் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் உயர்நீதிமன்றம் உத்தரவு போட்ட அடுத்தநாளே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி விட்டார். அதனால்தான் இன்றைக்கு அவர் வெளியில் இருக்கிறார்.

ஆனால் ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. அவ்வாறு வந்ததற்கு பிறகு அவர் வெளியில் இல்லை. ஜெயிலுக்குள் தான் இருக்கப் போகிறார். கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தை முடிவு செய்து உறவினர்களுக்குக் கொடுத்தாரா? கொடுக்கவில்லையா? இதற்கு பதில் சொல்லட்டும்.

இப்படி டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு? என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?

உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என்ற விதியே இருக்கிறது. அந்த விதியை மீறி அவர் கொடுத்திருக்கிறார். அப்படி கொடுத்த நேரத்தில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இதை விசாரிக்க வில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?

முதலமைச்சருடைய பினாமிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது நகைகள், பணம் எல்லாம் கிடைத்திருக்கிறது. இந்தக் கேள்வியை நீதிபதிகள் நீதிமன்றத்தில் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?

4,000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது. இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?

இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, எஸ்.பி.கே அண்ட் கம்பெனி, பாலாஜி டோல்வேய்ஸ் மதுரை பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கும் - பழனிசாமிக்கும் - அவரது மகன் மிதுனுக்கும் என்ன தொடர்பு? இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு ஒரு உத்தரவு போட்டது. அவ்வாறு உத்தரவு போட்ட சில நாட்களில் ஈரோட்டில் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அவர் பெயர் அன்புநாதன்.

தமிழக அரசின் பல்வேறு டெண்டர்களை எடுப்பவர் பெருந்துறை சுப்பிரமணியம். அவருக்கும் பழனிச்சாமிக்கும் என்ன உறவு? அதை பழனிச்சாமி சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா?

நான் சொல்கிறேன். சுப்பிரமணியத்தின் ஒரு மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார். சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளுக்கு ராமலிங்கம் மகனோடு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர் சம்பந்தியின் சம்பந்தி. இவர்கள் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர் எடுப்பவர். பணம் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய பின்பு தான் பா.ஜ.க.வின் பாதம் தாங்கிய பழனிசாமியாக இன்று அவர் ஆகியிருக்கிறார். பிறகு சசிகலாவிற்கு துரோகம் செய்தார். அதற்குப் பிறகு பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டார். இப்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் பா.ஜ.க.வின் கிளைக் கழகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. இதை பழனிசாமி மறுக்கமுடியுமா?

தன்னை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க.விடம் இன்றைக்கு மாநில அரசின் அதிகாரங்கள் - உரிமைகள் அனைத்தையும் தூக்கி கொடுத்து விட்டார். அதுமட்டுமல்ல, பழனிசாமியின் உறவினர்களாக இருக்கும் வெற்றிவேல் ஈஸ்வரமூர்த்தியும் – என்.ஆர்.சூரியகாந்தும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் புள்ளி விவரத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருப்பது மட்டுமல்ல, தமிழக ஆளுநரிடத்தில் புகார் மனுவும் கொடுத்திருக்கிறோம்.

“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் நுழையவே முடியாது; இது திராவிட மண்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சட்டப்படி முறைப்படி செய்ய வேண்டும் என்பதற்காக நாம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் உறுதியாகச் சொல்கிறேன். மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. அவ்வாறு எண்ணப்பட்ட மறுநாள் நாம் ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக இவை அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய உரிமைகள் அத்தனையும் பா.ஜ.க.விடம் - மோடியிடத்தில் அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் தலைவராக சொல்லிக் கொண்டிருக்கும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், ஜி.எஸ்.டி. சட்டத்தை ஆதரிக்க முடியாது. உதய் மின் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நீட் தேர்வை ஆதரிக்க முடியாது. உணவப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க முடியாது – என்று தெரிவித்துள்ளார்.

அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் அவர் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அவர் மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த உண்மையும் வெளிவரவில்லை.

எனவே தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும் முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது நம்முடைய கடமை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் அம்மா, அம்மா என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் அம்மாவின் லட்சியத்தைக் காப்பாற்றி விட்டார்களா?

திடீரென்று சிறுபான்மையினருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது போல ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து சட்டத்திற்கு ஆதரித்தவர்கள் நீங்கள், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் நீங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் நீங்கள். நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு அ.தி.மு.க. எம்.பி. இருக்கிறார். அவர் அ.தி.மு.க. எம்.பி. அல்ல, அவர் பா.ஜ.க. எம்.பி.யாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனால் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் பா.ஜ.க. உறுப்பினராகத்தான் செயல்படுவார். எனவே அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடாது. பா.ஜ.க.வும் வெற்றி பெறக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விடமாட்டீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதை ஆதரித்துப் பேசியவர்கள் நீங்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாங்கள் ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று இப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். பத்தாண்டுகளாக எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இப்போது தேர்தல் வரும் காரணத்தால் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட உறுதிமொழிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

நாமும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் அந்தத் தேர்தல் அறிக்கைதான். அதில் சிலவற்றை மட்டும் உங்களிடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மீனவர் சமுதாயம் உயர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பல்வேறு அறிவிப்புகளை நம்முடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறோம். அவற்றில் முக்கியமானவை, மீனவ சமுதாயத்தினரை - கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி எடுக்கும். மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும், மீனவர் நலனை பாதுகாத்திட தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட மத்திய அரசுக்கு தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும், மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாகவும், மழைக்கால நிவாரண உதவித்தொகை 6,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும், விசைப்படகு மானிய விலை டீசல் 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், கட்டுமரம் - நாட்டுப்படகு – ஃபைபர் படகு ஆகியவற்றிற்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் அளவு 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தேவைப்படுகின்ற கடற்கரையோர மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு தடுப்பு சுவர் அமைத்து தரப்படும், உள்நாட்டு மீனவர்கள் பரிசல் மற்றும் வலைகள் வாங்குவதற்காக 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும், முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எஃப்.ஆர்.பி-ஐ.பி கட்டுமரம் போன்ற படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் முன்பு வழங்கப்பட்ட ஐஸ் பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படும் - என்ற வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக எத்தனையோ திட்டங்களை நம்முடைய கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது செய்த சாதனைகளை மறந்திருக்க மாட்டீர்கள்.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு இது போன்ற பல்வேறு திட்டங்களை - சாதனைகளை செய்து தந்தார். அதையெல்லாம் மனதில் வைத்து தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த 30 சதவிகித இட ஒதுக்கீட்டை உயர்த்தி 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவிக் குழு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். விலைவாசியை குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறோம்.

“நாட்டை குட்டிச்சுவராக்கிய மோடி-அமித்ஷாவால் நுழையவே முடியாது; இது திராவிட மண்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்கள் படிப்பிற்காக பெற்ற கல்வி கடனை ரத்து செய்வோம், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள், நீர் நிலைகள் - இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள், சாலைகள் - பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25 ஆயிரம் இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள், மக்கள் நலப்பணியாளர்களாக 25,000 மகளிர் நியமனம் செய்யப்படுவார்கள்.

அனைத்து தரப்பு மக்களுக்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் வெறும் 1,000 மட்டுமே கொடுத்தார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை, நாம் ஆட்சிக்கு வந்து ஜூன் 3 நம்முடைய தலைவர் கலைஞர் பிறந்த நாளன்று நிச்சயமாக வழங்கப்படும்.

மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இவை பொதுவான வாக்குறுதிகள்.

இப்போது இந்த மாவட்டத்திற்கு அத்தியாவசியமாக இருக்கும் சில வாக்குறுதிகளைச் சொல்லப்போகிறேன்.

கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டசாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். காட்டுப்பள்ளி துறைமுகம் அனுமதிக்கப்படமாட்டாது என்பதைபோல் கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தையும் அனுமதிக்க மாட்டோம், கன்னியாகுமரி துறைமுகம் வருவதால் விவசாயிகளும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் அழியும் என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் இத்திட்டத்தை வரவிடாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், கன்னியாகுமரி அரசுக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மையம் அமைக்கப்படும், விளவங்கோடு, நெய்யாறு, இடதுகரை கால்வாய் தூர்வாரப்படும், கல்குளம் வட்டம் - வாணியக்குடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், குலசேகரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இவை அனைத்தையும் தேர்தல் அறிக்கை சொல்லியிருக்கிறோம்.

எனவே 5 ஆண்டு காலத்தில் இதையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறோம். ஏற்கனவே கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு போல ஒரு கூட்டத்தை நடத்தி, அந்த கூட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். அதாவது ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் ஏழு உறுதிமொழிகளை நான் வெளியிட்டிருந்தேன்.

அதாவது தொலைநோக்குப் பார்வையோடு பத்தாண்டு காலத்திற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான என்னுடைய 7 உறுதிமொழிகளை நான் சொல்லியிருந்தேன்.

தமிழ் மண்ணில், இந்தியைத் திணித்து, நீட்டையும் கொண்டுவந்து திணித்து, அதன் மூலமாக மதவெறியைத் தூண்ட நினைக்கும் பா.ஜ.க.வுக்கு நான் சொல்ல விரும்புவது, இது திராவிட மண் - தந்தை பெரியார் பிறந்த மண் – அண்ணா பிறந்த மண் - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண் - நம்முடைய கலைஞர் பிறந்த மண் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது.

தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஆட்சியை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஆளவில்லை. டெல்லியில் இருப்பவர்கள்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அண்ணா - கலைஞர் இருந்தபோது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தார்கள். அது இன்றைக்குப் பறிபோய்க் கொண்டிருக்கிறது. எனவே இதற்கெல்லாம் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இன்றைக்கு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் தேர்தல் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்முடைய சுய மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். அதற்காக இந்த தேர்தல் நடக்கிறது. மதவெறியை தூண்டி, நாட்டை குட்டிச் சுவர் ஆக்குவதற்கான முயற்சியில் இன்றைக்கு மத்தியில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்.

மோடியும் - அமித்ஷாவும் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை குட்டிச் சுவராக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பல மாநிலங்களில் அதை செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் யாரும் உள்ளே நுழைய முடியாது. இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது.

எனவே உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, வேலைவாய்ப்புகள் பெருக, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, விலைவாசியைக் குறைக்க, குமரியை முழுமையான வெற்றிக்குரிய குமரிமுனையாக்க வேண்டும் என்றால் நீங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

எனவே நீங்கள் உங்களை எல்லாம் இன்றைக்கே தயார்படுத்திக் கொண்டு, வருகின்ற ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பினால் அகால மரணமடைந்து நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திப் பிரிந்துவிட்டார் வசந்தகுமார். அவருடைய இடத்தை பூர்த்தி செய்வதற்காக அவரது திருமகன் விஜயகுமார் உங்களிடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். எனவே வசந்தகுமார் அவர்களை நினைத்து அவருடைய அருமை மகன் விஜயகுமாருக்கு நீங்கள் கை சின்னத்தில் ஆதரவு தரவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எனவே நம்முடைய வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றி தாருங்கள் என்று அன்போடு – பண்போடு - பாசத்தோடு – பணிவோடு - உரிமையோடு உங்கள் வீட்டுப் பிள்ளையாக - உங்கள் சகோதரனாக - உங்கள் தம்பியாக - உங்கள் அண்ணனாக - உங்களில் ஒருவனாக - அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய மகனாக இருந்து உங்கள் பாத மலர்களைத் தொட்டுக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories