மு.க.ஸ்டாலின்

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

வீரபாண்டி, நாமக்கல் பகுதிகளில் இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களிடையே உரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இந்தத் தேர்தலில் தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (16-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, வீரபாண்டி - கஜல்நாயக்கன்பட்டியில் பொதுமக்களிடையே உரையாற்றினார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் நம்முடைய அருமை தம்பி டாக்டர் தருண் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் ஏற்காடு தொகுதியின் கழக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன். டாக்டர் தருண் நம்முடைய அஞ்சா நெஞ்சன் என்னுடைய ஆருயிர் அண்ணன் - நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் வீரபாண்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அந்த குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் தருண் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும். அதேபோல் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்கனவே ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுடைய அன்பைப் பெற்றவராக கடமையாற்றியவர் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். எனவே மீண்டும் அந்தத் தொகுதியில் பணியாற்ற அவரை தேர்ந்தெடுத்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும்.

தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அநியாய அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல் என்பதை நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு இந்தத் தேர்தல்தான் கடைசித் தேர்தல். முதலமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல அரசியலை விட்டு ஓடிப் போகும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையப்போகிறது. அதனால்தான் தன்னை மறந்து ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னை பற்றி பெருமையோடு நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். படிப்படியாக வளர்ந்து வந்தாரா, படிப்படியாக ஊர்ந்து வந்தாரா என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கும் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே எப்படி அவர் அந்த பொறுப்புக்கு வந்தார் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

அம்மாவால்தான் முதலமைச்சர் ஆனேன் என்று பழனிசாமி சொல்வது அப்பட்டமான பொய். அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்று சொல்வார்களே, அந்த மாதிரியான பொய்யை பழனிசாமி அவர்கள் சொல்லியிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்ப்டடு சிறைக்குச் சென்ற போதெல்லாம், ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார். பழனிசாமியிடம் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைக்கவில்லை.

முதலமைச்சராக அம்மையார் ஜெயலலிதா பொறுப்பேற்று ஓராண்டு காலத்திற்குள் உடல் நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்திலும், அவருடைய பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம்தான் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

பின்னர் சசிகலா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து விலகச் சொன்னார். பதவியேற்புக்கு ஆளுநர் தேதி குறிக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் போர்க்கொடி தூக்கினார். அப்போது தன்னுடைய எம்.எல்.ஏ.க்களைப் பாதுகாக்க முடிவு செய்து அனைவரையும் கூவத்தூரில் கொண்டு சென்று அடைத்து வைத்தார் சசிகலா. அந்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினால் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆனால் 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டியாக வேண்டும். அவர்தான் இந்த வழக்கில் முதல் குற்றவாளி.

அதற்குப் பிறகு சசிகலா, தீர்ப்பு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் பெங்களூர் சிறைக்குச் சென்றாக வேண்டிய நிலை. இதற்கிடையில் யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது அவர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தன்னுடைய காலருகே யாரோ ஊர்ந்து வருவது போல உணர்வு ஏற்பட்டது. குனிந்து பார்த்தால் பழனிசாமி ஊர்ந்து வருகிறார். அப்படித்தான் அவர் முதலமைச்சரானார்.

ஆனால், இன்றைக்கு தான் முதலமைச்சராக இருப்பதற்கு ஜெயலலிதாவே காரணம் என்று அபாண்டமான பொய்யை பழனிசாமி சொல்கிறார். அவர் முதலமைச்சரானதற்கு சசிகலாதான் காரணம் என்றாலும், ஊர்ந்து போனதுதான் உண்மையான காரணம். சமூகவலைதளங்களில் இப்போதும் அந்தக் காட்சி வலம் வந்து கொண்டிருக்கிறது. அதனை நிரூபிக்க இந்த ஸ்டாலின் தயார். இல்லையென்று நிரூபிக்க பழனிசாமி தயாரா? முடியாது. ஏனென்றால் அது நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பரவி விட்டது.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

அம்மையார் ஜெயலலிதாவிற்கு நான் விசுவாசமாக இருப்பேன் என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். விசுவாசமாக இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்? அவருடைய மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டிற்கு சொல்லி இருக்க வேண்டும்.

இதுவரையில் யாருக்காவது ஜெயலலிதா எப்படி மறைந்தார் என்று தெரியுமா? உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே தெரியாது. பெரிய மர்மமாக இருக்கிறது. அதுவும் இறந்தது யார்? சாதாரண ஜெயலலிதாவோ, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ அல்ல. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா! சிறிது நினைத்துப் பாருங்கள். நம்முடைய உறவினர்களோ, நண்பர்களோ அக்கம் பக்கத்தில் இறந்து விட்டால் என்ன செய்கிறோம்? அங்குச் சென்று அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, இறந்ததற்கான காரணத்தைக் கேட்கிறோம். அவர்களும் அவர் இறந்ததற்கான காரணத்தைக் கூறுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருடைய மரணம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அந்தப் பொறுப்பில் இருந்த போதுதான் இறந்து போனார். ஏன் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் மறைந்தார்.

அப்போதெல்லாம், பேரறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா அவர்களும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்ததில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே அவர்களும்தான் அவ்வப்போது அவர்களது உடல்நிலை குறித்த விவரங்களை, காலையிலும், மாலையிலும் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்கள்.

அதுதான் மரபு. அதேபோல் ஜெயலலிதா அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் மறைந்தார். அவரது உடல்நிலை பற்றி முறையாக அவ்வப்போது அறிவித்தார்களா?

ஒவ்வொரு அமைச்சரும் வந்து அம்மா இட்லி சாப்பிட்டார், டிவி பார்த்தார், பத்திரிகை படித்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரு தலைவரின் மரணத்தைப் பற்றி கொச்சைப்படுத்திப் பேச விரும்பவில்லை. அவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை வளர்க்கவும் இல்லை. ஆனால் அந்த மரணம் குறித்த உண்மை இதுவரையில் வெளிவரவில்லை. என்ன காரணம்?

இதே ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை சசிகலா பறித்தவுடன் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். ‘அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீங்கள் கொடுத்த பதவி. நீங்கள் சிறைக்குச் செல்லும் போதெல்லாம் எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்து இருக்கிறீர்கள். அந்தப் பதவியைப் பறித்து விட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மரணமே மர்மமாக இருக்கிறது. எனவே அந்த மர்மத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். விசாரணை கமிஷன் வைத்தாக வேண்டும்’ என்று ஆன்மாவோடு பேசி, அதற்கு பிறகு பத்திரிகை நிருபர்களிடம் பன்னீர்செல்வம் விளக்கம் சொல்லி அவையெல்லாம் செய்திகளாக வந்ததா இல்லையா?

அதற்குப் பிறகு ‘உங்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறோம் என்றும் நீங்கள் கேட்ட விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் சொல்லி சமாதானம் செய்தனர். ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு நான்கு வருடம் ஆகிவிட்டது. ஏதாவது நியாயம் கிடைத்திருக்கிறதா? இதுவரையில் இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் - யார் விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்னாரோ, அந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு பல முறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இதுவரையில் அவர் செல்லவில்லை.

இந்த லட்சணத்தில் பழனிசாமி அவர்கள் ஜெயலலிதா மரணத்திற்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாம் ஆட்சிக்கு வந்ததும், அந்த விசாரணையை விரைவுபடுத்தி உண்மையை வெளிக்கொண்டு வரப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். அதைப் பார்த்தவுடன் அஞ்சி நடுங்கி திசைதிருப்ப மக்களிடத்தில் மூடி மறைப்பதற்கு ஸ்டாலினும் கலைஞரும் தான் காரணம் என்று ஒரு புது கரடியை விட்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அது உண்மை என்றால், ஏன் நான்கு வருடங்களில் ஆறுமுகசாமி எங்களை அழைத்து விசாரிக்கவில்லை. இப்போதும் சொல்கிறேன். ஆறுமுகசாமி எங்களை அழைக்கட்டும். நேரடியாக நான் வந்து ஆஜராகி விளக்கம் சொல்லத் தயாராக இருக்கிறேன். காத்திருக்கிறேன். பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?

முதலமைச்சர் பொறுப்பு என்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பில் உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

தேர்தல் அறிக்கையை நாம் வெளியிட்டிருக்கிறோம். முன்னர் கலைஞர் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, ப.சிதம்பரம் அவர்கள் ‘இந்தத் தேர்தல் களத்தில் கதாநாயகன் தேர்தல் அறிக்கைதான்’ என்று சொன்னார். அதேபோல இன்றைக்கு நம்முடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து கதாநாயகன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். கதாநாயகன் மட்டுமல்ல. கதாநாயகியும் நம் தேர்தல் அறிக்கைதான்.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

அவர்களும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வில்லன் என்று சொல்லலாம். அதுவும் ஆக்ரோஷமான வில்லனல்ல; காமெடி வில்லன். அவர்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். பெண்களுக்கு 1500 ரூபாய் இலவசமாக கொடுக்க போகிறார்கள். நாம் கடந்த ஏழாம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு பொதுக் கூட்டத்தில் மாதம் தோறும் குடும்பத்தலைவியருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தோம். உடனே ஆயிரத்து 500 என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

நம் தேர்தல் அறிக்கையையும் அவர்களது தேர்தல் அறிக்கையையும் எடுத்துப் பாருங்கள். நம் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. ரேஷன் கார்டு இருக்கின்ற அத்தனைப் பேருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இதை அறிவித்தார்கள். இதுவரையில் யாருக்காவது அரசின் சார்பில் செல்போன் வழங்கப்பட்டு இருக்கிறதா? இப்போது அதைத் திரும்ப அறிவித்திருக்கிறார்கள்.

இதே போல நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலில் அறிவித்தார்கள். நீட் தேர்வு வந்ததற்கு காரணமே இவர்கள்தான். அனிதாவை இழந்தோம். தமிழகத்தில் பல மாணவர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை தமிழ்நாட்டுக்குள் வர விடாமல் தடுத்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதை மறந்துவிடாதீர்கள்.

அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரையில் கூட அது தடுக்கப்பட்டு இருந்தது. அது உண்மைதான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மறுக்கவில்லை.

ஆனால் பழனிசாமி இன்றைக்கு முதலமைச்சராக வந்ததற்கு பிறகு, அது சுலபமாக நுழைந்திருக்கிறது என்றால் என்ன காரணம்? அஞ்சி, நடுங்கி, மத்திய அரசிற்கு பயந்து கொள்ளை அடித்த விவகாரங்கள் எல்லாம் மத்திய அரசின் கையில் இருக்கிறது. எனவே அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு கைகட்டி, வாய் பொத்தி அடிமையாக அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த லட்சணத்தில் 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உறுதிமொழி கொடுத்தார்கள். இப்போது இந்தத் தேர்தலில் உறுதிமொழி கொடுக்கிறார்கள். சட்டமன்றத்தில் 2 முறை மசோதாக்கள் தாக்கல் செய்து, அதை நாம் மத்திய அரசிற்கு தி.மு.க.வின் ஆதரவோடு, தி.மு.க. முயற்சி எடுத்து அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் டெல்லி அதை சீர்தூக்கி பார்க்கவில்லை. ஏறெடுத்து பார்க்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

அது மட்டுமல்ல; கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற ஒரு அறிவிப்பை அறிவித்திருக்கிறார்கள்.

நாளைக்கு வேண்டுமென்றால் பாருங்கள் ஹெலிகாப்டர் ஒன்று கொடுக்கப் போகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் விமானம் கொடுக்கப் போகிறோம் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு சென்றுவிட்டார்கள்.

இதே விவசாயிகளுடைய கடன் தள்ளுபடி என்பது 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் சொன்ன உறுதிமொழி அது. 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய போகிறோம் என்று கலைஞர் சொன்னார். அதை எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்று நினைத்தோம்.

ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு நேராக கோட்டைக்கு கூட செல்லாமல், கோட்டையில் இருக்கும் கோப்புகளை விழா மேடைக்கு கொண்டு வரவழைத்து, அந்த விழா மேடையிலேயே 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்ற உத்தரவில் கையெழுத்திட்டார் கலைஞர் அவர்கள்.

அதற்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். விவசாய அமைப்புகள் எல்லாம் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு வந்தது. உங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை தான். அதை தள்ளுபடி செய்யுங்கள் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டதா இந்த பழனிசாமி அரசு. இல்லை. அவர்கள் என்ன செய்தார்கள், அதற்குரிய நிதி எங்களிடத்தில் இல்லை என்று சொல்லி நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கினார்கள்.

கடந்த பொங்கல் திருநாளன்று நான் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னேன். இது வரையில் அ.தி.மு.க ஆட்சியில் தள்ளுபடி செய்யவில்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எப்படி கலைஞர் 7,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தாரோ அதேபோல, தி.மு.க ஆட்சியில் நாங்கள் விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்வோம் என்று ஒரு அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

உடனே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று ஒரு அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார். எனவே இந்த நிலையில் தான் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இருந்தாலும் நான் உங்களுக்கு விலாவாரியாக - விளக்கமாக சொல்வதற்கு நேரம் இல்லை என்று சொன்னாலும் சுருக்கமாக - தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மாத்திரம் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நம்முடைய தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்க முடிவு செய்திருக்கிறோம். டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கான உறுதிமொழியும் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதை உறுதி செய்து இருக்கிறோம்.

அதேபோல மகளிருக்கான செலவை குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருக்கிறோம். அதேபோல கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, எப்போது கொரோனா வந்ததோ அப்போதே நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரேஷன் கார்டு இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் தரவேண்டும் என்று தான் தொடர்ந்து சொன்னேன்.

அவ்வாறு அவர்கள் தந்தார்களா? வெறும் 1,000 தந்தார்கள். அதனால்தான். இந்த தேர்தலில் நாங்கள் சொல்லியிருக்கிறோம். மிச்சமிருக்கும் 4,000 ரூபாயை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட். மாணவர்கள் பெற்றிருக்கும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நாம் இதைச் சொன்னோம். ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு சொன்னோம். அதைக்கூட சட்டமன்றத்தில் விமர்சித்து பேசினார்கள். முதலமைச்சர் பழனிசாமி தவறான வாக்குறுதிகளை சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். அதையெல்லாம் தள்ளுபடி செய்யவே முடியாது என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

ஏதோ பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி விட்டீர்கள் என்று சொன்னார். அப்போது நான் கூட கேட்டேன் நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்ற போகிறீர்களா?

நாம் ஆட்சியில் இல்லாத காரணத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை. சொன்னது உண்மை தான். இப்போது மீண்டும் சொல்கிறேன் நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உறுதி… உறுதி… உறுதி… அவ்வாறு வந்ததற்கு பிறகு அதை தள்ளுபடி செய்யப் போகிறோம்.

அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் பெற்றிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அதை முழுமையாக தள்ளுபடி செய்யப் போகிறது. அதேபோல இந்து ஆலயங்கள் புனரமைப்பு - குடமுழுக்கு பணிகளுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மசூதி, தேவாலயங்கள் இவைகளெல்லாம் சீரமைப்பதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

வீரபாண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். வாழப்பாடியில் மகளிர் அரசுக் கல்லூரி - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். காய்கறி சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். ஏதோ வாய்க்கு வந்தபடி எல்லாம் - நினைத்ததை எல்லாம் பழனிச்சாமி போல பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள்.

நான் கலைஞருடைய மகன். கலைஞர், “சொன்னதைத் தான் செய்வார் - செய்வதைத் தான் சொல்வார்“. எனவே அதே உணர்வோடுதான் இந்த உறுதிமொழிகள் - வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.

நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சமீபகாலமாக கருத்துக் கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு, இந்து ராம் - உங்களுக்கு தெரியும். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். பொதுவாக, எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடியவர் - அவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். என்னவென்றால் தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறப்போகிறது என்று அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க. தலைமையில் இருக்கும் அந்த கூட்டணி மிகப்பெரிய தோல்வியை அடைய போகிறது என்று தெளிவாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நேற்றிரவு ஏ.பி.பி – சி - வோட்டர்ஸ் என்ற வடமாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி 43 சதவிகிதம் வெற்றி பெறப் போகிறது. அ.தி.மு.க. கூட்டணி வெறும் 30 சதவிகிதம் தான் என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆனால் இந்த நிலைமை மாறும். இன்னும் தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு மக்களுடைய மனநிலை.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

நான் சில மாதங்களுக்கு முன்பு எப்படியும் நம்முடைய கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று சொன்னேன். ஆனால் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற பிரச்சாரங்களை எல்லாம் நடத்தி, “மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்” எல்லாம் நடத்தி, அதற்குப் பிறகு இப்போது 2 நாட்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்காக புறப்பட்டு 2வது நாளாக இன்றைக்கு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

உங்களுடைய எழுச்சியை, நாட்டு மக்களின் உணர்வுகளை எல்லாம் பார்க்கும் போது, 200 அல்ல 234 இடங்களிலும் தி.மு.க. அணி தான் வெற்றி பெறப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பொருளாதாரம் சீரழிந்து போயிருக்கிறது. குடிநீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. இதையெல்லாம் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இவ்வாறெல்லாம் இருக்கின்ற நேரத்தில் கோடிகோடியாக அரசு பணத்தை செலவு செய்து இன்றைக்கு விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது யார் வீட்டுப் பணம்? மக்களுடைய வரிப் பணம் அது.

நாம் தரும் வரிப் பணம் அது. அந்த வரிப்பணத்தில், வரி தரும் மக்களைப் பற்றிச் சிந்தித்து மக்களுக்கான திட்டங்களை தீட்ட வேண்டும். அதையெல்லாம் விடுத்து இன்றைக்கு அவருடைய சுய விளம்பரத்திற்காக கோடி கோடியாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் மிக விரைவில் வரும் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளை எல்லாம் நிச்சயமாக - உறுதியாக நிறைவேற்றுவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறந்துவிடாதீர்கள், இந்த மண் அண்ணன் வீரபாண்டியாருடைய மண். அந்த மண்ணில் இருந்து உங்களைக் கேட்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நின்று கேட்கிறேன். அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் தம்பியாக நின்று கேட்கிறேன். கலைஞருடைய பிள்ளையாக நின்று கேட்கிறேன். உங்களில் ஒருவனாக நின்று கேட்கிறேன்.

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நம்முடைய டாக்டர் தருண் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அதேபோல ஏற்காடு தொகுதியில் நம்முடைய தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து, அவர்களைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, இந்த வாய்ப்பைத் தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு கழகத் தலைவர் உரையாற்றினார்.

“கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவேண்டாமா?” - மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!

தி.மு.க தலைவர் அவர்கள் நாமக்கல் – பூங்கா சாலையில் மக்களிடையே ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உங்களையெல்லாம் சந்தித்து, உங்களில் ஒருவனாக நின்று உங்களிடத்தில் உரிமையோடு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் 14 வயதில் என்னை இணைத்து, கழகத்தின் இளைஞர் அணியின் பொறுப்பேற்று, கழகத்தில் பல்வேறு பொறுப்புக்களில் என்னுடைய கடமையாற்றி, சட்டமன்ற உறுப்பினராக கடமையாற்றி, சென்னை மாநகரத்தின் மேயராக பொறுப்பேற்று, உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக பொறுப்பேற்று, 50 ஆண்டு காலமாக என்னை அரசியலில் ஒப்படைத்துக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் நின்று பணியாற்றுவேன் என்ற அந்த உறுதியை உரிமையோடு உங்களிடத்தில் கூறி, பத்தாண்டு காலமாக பாழ்பட்டு போயிருக்கும் இந்த தமிழகத்தை மீட்டெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று உங்கள் உத்தரவை எதிர்நோக்கி வந்திருக்கிறேன்.

அந்த உத்தரவை நீங்கள் எல்லாம் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களைத் தேடி - நாடி வந்திருக்கிறேன்.

திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் - பொதுச்செயலாளர் நம்முடைய ஈஸ்வரன் அவர்கள், கொங்கு பகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆற்றலாளர் - செயல்வீரர் – பண்பாளர், அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பரமத்தி - வேலூர் தொகுதியில் மூர்த்தி அவர்கள், ஏற்கனவே அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று மக்களுடைய அன்பை - சிறப்பு பெற்று தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கும் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாமக்கல் தொகுதிக்கு ராமலிங்கம் அவர்கள், விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் - மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் – அமைதியானவர், ஆனால் அதே நேரத்தில் ஆற்றலோடு செயலாற்றக் கூடியவர் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ராசிபுரம் தொகுதியில் டாக்டர். மதிவேந்தன் அவர்கள், ராசியான மருத்துவர் என்று பெயரெடுத்தவர் - குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர் - அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், சேந்தமங்கலம் தொகுதியில் பொன்னுசாமி அவர்கள், எளிமையானவர் - ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று பணியாற்றியவர் - அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை எல்லாம் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்தில் பத்தாண்டு காலமாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு தோல்வியைத் தருவதோடு மட்டுமல்ல, அரசியலை விட்டு அவரை ஓட ஓட விரட்டி விட வேண்டும் என்று உறுதியோடு நீங்கள் இருந்திட வேண்டும்.

இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அமைச்சர் தங்கமணி. கொள்ளையடிப்பதில் பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சர்களில் பெயர் பெற்றிருப்பவர்களில் 2 மணி இருக்கிறார்கள். ஒருவர் தங்கமணி - இன்னொருவர் வேலுமணி.

வேலுமணி எதையும் வெளிப்படையாக செய்வார். தங்கமணி எதையும் அமைதியாக செய்வார். அவர்கள் அடித்திருக்கும் கொள்ளைகளை - ஊழல்களை - லஞ்ச லாவண்யங்களை எல்லாம் பட்டியல் போட்டு ஏற்கனவே தமிழக ஆளுநரிடத்தில் மனுக்களாக நாங்கள் தந்திருக்கிறோம்.

பொத்தாம் பொதுவாக தரவில்லை. என்னென்ன ஊழல்கள் செய்திருக்கிறார்கள்? எவ்வளவு கொள்ளை அடித்திருக்கிறார்கள்? என்பதை எல்லாம் தெளிவாக ஆதாரங்களோடு ஆளுநரிடத்தில் தந்தது மட்டுமல்ல, சில பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.

அவையெல்லாம் ஆளுநர் மூலமாக நமக்கு பலன் தருகிறதோ இல்லையோ, ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அத்தனைப் பேரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு மிகப்பெரிய பட்டியலே போடலாம். காற்றாலை மின்சாரத்தில் ஊழல். தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததில் ஊழல். தனியார் மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல். மின் வாரியத்தில் உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல். 2 நாட்களுக்கு முன்பு கூட அறப்போர் இயக்கத்தின் சார்பில் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் மின் வாரியத்தைத் தனியாருக்கு தாரைவார்ப்பதில் கொள்ளை - ஊழல் நடந்திருக்கிறது என்று வெளிப்படையாக அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆதாரங்களை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் அமைச்சர்கள் சார்பிலும் - அரசின் சார்பிலும் அதற்கு மறுப்பு - விளக்கம் சொல்லவில்லை என்பதுதான் முக்கியம்.

கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சிதான் இந்த ஆட்சி. மின்சார கட்டணத்தை கொரோனா காலத்திலும் உயர்த்தி அதில் பேரம் பேசிய ஆட்சிதான் இந்த ஆட்சி. கொடுமையிலும் கொடுமை, அந்த நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புக்காகப் போடும் மாஸ்க்கில் கொள்ளை, பிளீச்சிங் பவுடரில் கொள்ளை, விளக்குமாறில் கொள்ளையடித்த ஆட்சி இந்த ஆட்சி.

எனவே கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டாமா? இந்த கேள்வியைத்தான் நான் உங்களிடத்தில் கேட்க வந்திருக்கிறேன்.

தங்கமணி அவர்களை பொறுத்தவரையில், சட்டமன்றமாக இருந்தாலும் - மக்கள் மன்றமாக இருந்தாலும் - தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும், அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டை மிகை மின் மாநிலமாக நாங்கள் ஆக்கியிருக்கிறோம் என்று ஒரு தவறான புள்ளிவிவரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மின் மிகை மாநிலம் என்றால், அந்த மின்சாரத்தை நம்முடைய மாநிலமே உற்பத்தி செய்து, அந்த மின்சாரத்தில் தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதம் இருந்து - அதை பல மாநிலங்களுக்கு தருகிறோம் என்றால் - அது தான் மின் மிகை மாநிலம்.

ஆனால் இப்போது பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில், தங்கமணி - மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் - பல மாநிலங்களிலிருந்து – தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குகின்றனர். விலைக்கு வாங்கும் நிலையில் மின்மிகை மாநிலம் என்று ஒரு தவறான குறிப்பைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் தனியாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்றால், அதில் தான் பேரம் - லஞ்சம் - ஊழல் செய்ய முடியும். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம்தான் இந்தத் தேர்தல். இந்தத் தேர்தல் அவர்களை வீட்டிற்கு மட்டும் அல்ல, சிறைக்கு அனுப்பும் தேர்தலாக அமையப்போகிறது. மறந்துவிடாதீர்கள்.

இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தத் தேர்தல் அறிக்கையில், மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும் என்று ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பை அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளிவருவதற்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லி இருக்கிறோம்.

இந்த பத்து ஆண்டுகளாக அவர்களுக்கு புத்தி வராமல் இப்போது திடீரென்று அறிவித்து இருக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் என்ன சொல்லுவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னதற்கு பிறகு அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை எல்லாம் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம். ஏனென்றால் அது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை. கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்று சொல்வார். அவருடைய மகன் ஸ்டாலினும் அவர் வழி நின்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன்.

குடும்ப தலைவியருக்கு உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற உறுதிமொழி அந்தத் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எப்பொழுதும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற நேரத்தில் துணைநிற்கும் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு திருமணம் என்றால் உதவித்தொகை. இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழ் நாட்டில் தான் அதுவும் கலைஞருடைய ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள்.

அதேபோல, திருச்செங்கோடு - நாமக்கல் - ராசிபுரம் ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும். பரமத்தி - வேலூரில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம். நாமக்கல்லில் முட்டை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும், சேந்தமங்கலத்தில் விவசாய குளிர்பதன கிடங்கு. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். நாமக்கல்லில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக லாரி மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்து தரப்படும், லாரி தொழில் நல வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு 505 உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கிறது அதில் சிலவற்றை தான் நேரத்தின் அருமை கருதி நான் இங்கு குறிப்பிட்டு காட்டி இருக்கிறேன்.

எனவே எவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ அதேபோல ஒரு வெற்றியை நீங்கள் நிச்சயமாக உறுதியாக தேடித்தரப் போகிறீர்கள்.

அந்த வெற்றியை வங்கக் கடலோரத்தில் பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் கொண்டு சென்று நாம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மறந்துவிடக்கூடாது.

கலைஞர் இருந்து பார்க்க வேண்டிய வெற்றியை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கம் தான் நமக்கு இப்போது வந்திருக்கிறது. அவர் எதையும் விரும்பிக் கேட்டது கிடையாது. அவர் கடைசியாக விரும்பியது, உடல் நலிவுற்றிருந்த நேரத்தில், உயிர் பிரியும் நேரத்தில், பேரறிஞர் அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான்.

பேச முடியவில்லை. எழுத முடியவில்லை. அந்த நேரத்தில் மருத்துவர்கள் எல்லாம் எழுதும் பயிற்சிக்காக முயற்சித்தபோது, உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று எழுதுங்கள் என்று சொன்ன போது, ஒரு புன்முறுவல் பூத்துக் கொண்டு, அவர் எழுதியது -, அவர் பெற்றெடுத்த பிள்ளைகளான எங்களுடைய பெயரை எழுதவில்லை. அவர் எழுதிய பெயர் அண்ணா.

அந்த அண்ணனுக்கு பக்கத்தில் அவர் அடக்கம் செய்வதற்கு மறுத்த நயவஞ்சர்கள் ஆட்சி தான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் ஆட்சி. நானே முதலமைச்சர் பழனிசாமியிடத்தில் கேட்பதற்காக சென்றேன். கலைஞருடைய எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்று என்று சொன்னேன். திட்டவட்டமாக மறுத்தார்கள்.

இந்த நாட்டிற்கு, பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எத்தனையோ பிரதமர்களை அடையாளம் காட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஒருமுறை கூடத் தேர்தலில் தோல்வி என்பதே இல்லாமல் அத்தனை முறையும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

தமிழ்நாட்டிற்காக மட்டுமல்ல, எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தொடர்ந்து குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருக்கு இடம் கிடையாது என்று இந்த ஆட்சியாளர்கள் மறுத்தார்கள்.

இறுதியில் நீதிமன்றம் சென்றோம். நீதிபதிகள் வழக்கை விசாரித்து, அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் ஒரு மூத்த தலைவராக விளங்கியவர் - எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய தலைவருக்கு இடம் உண்டு என்று தீர்ப்பு தந்தார்கள்.

ஒருவேளை நீதிமன்றமும் ஆட்சியாளர்கள் சொல்வது நியாயம் தான். எனவே இடம் கிடையாது என்று சொல்லியிருந்தால் நாடு எந்த நிலைக்கு போயிருக்கும் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்த்து வேதனைப்பட்டேன்.

ஆனால் அந்த நிலைக்கு போகாமல் நீதிமன்றம் உண்மையை உணர்ந்த காரணத்தால் இடத்தை அனுமதித்தார்கள். 6 அடி இடம் நம்முடைய தலைவர் கலைஞருக்கு கொடுக்க மறுத்த இந்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?

எனவே இந்த கேள்விக்கு விடைகாணும் நாள் தான் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி. அன்றைக்கு நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் அத்தனைபேருக்கும் உதயசூரியன் உள்ளிட்ட சின்னங்களில் ஆதரவு தந்து மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று உங்கள் பாத மலர்களை அன்போடு கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories