மு.க.ஸ்டாலின்

கடைசிநேர கொள்ளைக்காக விடப்படும் டெண்டர்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

“கடைசி நேரக் கொள்ளைக்காக விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும்; ஆளும் கட்சியினரிடம் ஒப்பந்ததாரர்கள் ஏமாறவேண்டாம்” என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

கடைசிநேர கொள்ளைக்காக விடப்படும் டெண்டர்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“அரசுப் பணி நியமனங்களுக்கு அ.தி.மு.க நிர்வாகி மூலம் லஞ்சம் கேட்டு மிரட்டும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்; கழக அரசு அமைந்ததும் தவறிழைப்போரைச் சிறைக்கு அனுப்பித் தண்டிப்பதே முதல் வேலை” என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

இன்று (21-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை – விஜயமங்கலம் நான்குவழி நெடுஞ்சாலை, கடப்பமடை – கலைஞர் திடலில் நடைபெற்ற, ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம்:

கழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஈரோடு மண்டல மாநாடு, 2018 ஆம் ஆண்டு இந்த திடலுக்கு அருகில்தான் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசும் போது கழகத்துக்கு ஐம்பெரும் முழக்கங்களை நான் வழங்கினேன்.

* கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காப்போம்!

* தமிழரை வளர்த்துத் தமிழைப் போற்றுவோம்!

* அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

* மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

* வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்! - என்ற ஐம்பெரும் முழக்கத்தை நான் வழங்கினேன்!

அதை விட முக்கியமான ஒரு அறிவிப்பைச் செய்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த மாநாட்டில் ஒரு சபதம் எடுத்தேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை அமைப்போம், அதை தலைவர் கலைஞரிடம் ஒப்படைப்போம் என்று உறுதிமொழி எடுத்தேன். ஆனால் காலம் முந்திக் கொண்டது. கலைஞரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் காலம் இப்போது நெருங்கிவிட்டது.

அந்த உறுதிமொழி நிறைவேறத்தான் போகிறது என்பதை உங்களது எழுச்சியும் உணர்ச்சியும் காட்டுகிறது. அந்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய கடமை, எனக்கு மட்டுமில்லை - உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. கலைஞர் அவர்களுக்கு நான் மட்டுமா பிள்ளை? நீங்கள் அனைவருமே அவரது பிள்ளைகள் தான்.

1986-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் மொழிப்போர் தியாகிகளின் படங்களைத் திறந்து வைத்து நான் பேசினேன். இந்த வாய்ப்பு தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த வாய்ப்பாக நான் நினைக்கவில்லை, இளைஞரணிக்கு கிடைத்த வாய்ப்பு என்று சொன்னேன்.

''திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞரின் மகன் ஸ்டாலின் என்று கூறிக் கொள்வதை விட, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பெற்றிருக்கிற தொண்டர்களில் நானும் ஒரு தொண்டன் என்று கூறிக் கொள்வதில் தான் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டேன். தலைவர் கலைஞர் அவர்களும் என்னை மகன் என்பதாக இல்லாமல் தொண்டனாகத்தான் வார்ப்பித்தார்.

இன்றைக்கு கழகத் தலைவராக நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், தலைமைத் தொண்டனாகத்தான் என்னை எப்போதும் எண்ணிக் கொள்கிறேன். ஒரு நல்ல தொண்டன் தான் தலைவனாக ஆக முடியும்! நல்ல தலைவராக இருப்பவர் நல்ல தொண்டராகத் தான் இருப்பார்! உங்களில் ஒருவனாக நான் இருப்பதால் தான் உங்களது துன்ப துயரங்களை என்னால் உணரமுடிகிறது. அதை உணர்ந்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் 100 நாட்களில் குறைகளைத் தீர்ப்பேன் என்ற திட்டமாகும்!

கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இந்த அ.தி.மு.க ஆட்சியில் எந்த தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை!

மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க திமுகவால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களை நீங்கள் கொடுத்து வருகிறீர்கள். இப்படி மக்களை சந்திப்பதும் மனு வாங்குவதுமே கூட பழனிசாமிக்கு பிடிக்கவில்லை.

“பெட்டியைத் தூக்கித் திரிகிறார் ஸ்டாலின். ஆனால் எனது ஆட்சியில் வீட்டில் இருந்தே புகார் அனுப்பலாம்” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. வீட்டில் இருந்தபடியே புகார் அனுப்பலாம், உண்மைதான். ஆனால் செய்து தரமாட்டார்கள். இதுதான் பழனிசாமி ஆட்சி! புகார் அனுப்பலாம் என்று பழனிசாமி சொன்னாரே தவிர, நிறைவேற்றுவேன் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு வாக்குறுதியை நிறைவேற்றத் தெரியாது.

கடைசிநேர கொள்ளைக்காக விடப்படும் டெண்டர்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும் : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

ஜெயலலிதாவால் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் தான் 1100க்கு போன் செய்தால், உங்கள் குறைகள் தீரும் என்ற திட்டமாகும். அந்தத் திட்டம் கடந்த ஐந்தாண்டுகளாக அமலில் இருந்ததா? அதில் சொல்லப்பட்ட மொத்த குறைகள் எவ்வளவு? அதில் தீர்க்கப்பட்ட குறைகள் எவ்வளவு? பழனிசாமியால் சொல்ல முடியுமா?

இப்போது நாங்கள் அறிவித்தபிறகு 1100 போன் நம்பரை தூசு தட்டி எடுத்துள்ளார் பழனிசாமி. இது ஏற்கனவே அமலில் இருக்கிறது என்றால், இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குறைகளைச் சொல்ல பெருந்துறையில் எதற்காக கூட வேண்டும்? இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதற்கு அத்தாட்சி தான் இங்கு வைக்கப்பட்ட பெட்டியில் மனுக்கள் நிரம்புவது. பழனிசாமி ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் இத்தனை மனுக்கள் வந்திருக்குமா?

தேர்தல் நெருங்கி வருவதால், 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். எப்படி உருவாக்குவார்? இந்த நான்காண்டு காலத்தில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தீர்கள்? காலியான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதா? பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பினீர்களா?

தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களை திறக்க என்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள்? தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பதிந்துவிட்டு ஒரு கோடிப் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்களே? அவர்களைப் பற்றி இதுவரை இந்த அரசாங்கம் கவலைப்பட்டது உண்டா? ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது அதிமுக. அப்படி ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள்?

20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இருக்கட்டும். முதலாவது தொழில் முனைவோர் மாநாட்டின் மூலமாக தொடங்கப்பட்ட தொழில்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது? இரண்டாவது தொழில் முனைவோர் மாநாட்டின் மூலமாக எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது? தமிழக அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுகள் ரத்து ஆனதற்கு என்ன காரணம்? தமிழகப் பணியிடங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான அளவு சேர்வதற்கு என்ன காரணம்? அது எப்படி சாத்தியம் ஆனது?

''வீதியோரத்தில் வேலையற்றவர்கள், வேலையற்றவர்கள் எண்ணத்தில் விபரீதங்கள். வேந்தே! இதுதான் காலத்தின் குறி" என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அப்படி தமிழ்நாட்டை மீண்டும் மாற்றியதற்கு பழனிசாமியின் தகுதியின்மைதானே காரணம்?

பழனிசாமிக்கு இந்த நாட்டு இளைஞர்கள் மீது அக்கறை இருக்குமானால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பார். செய்ய மாட்டார். அவருக்கு செய்யத் தெரியாது.

இன்றைய தினம் 'தினகரன்' நாளிதழில் வெளியாகி உள்ள தலைப்புச் செய்தி. பல்வேறு துறைகள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதை விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

பொதுவாக தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக இது போன்ற பெரிய டெண்டர்களை விட மாட்டார்கள். ஏனென்றால் இவற்றை ஆட்சி முடிவதற்குள் முடிக்க முடியாது. எனவே இது போன்ற டெண்டர்கள் தவிர்க்கப்படும். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் கூச்சமே இல்லாமல் டெண்டர் கொள்ளை நடக்கிறது.

3,888 பணிகளுக்காக அவசர அவசரமாக டெண்டர் விட்டுள்ளார்கள். இந்த டெண்டர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டாத ஒப்பந்தகாரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து, டெண்டர்களை எடுத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக டெண்டர் எடுக்கச் சொல்கிறார்கள் என்றும்- ஆட்சியே மாறினாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் டெண்டர் பணிகளை நீங்கள் தானே பார்க்கப் போகிறீர்கள் என்றும்- இப்போது சிறிது பணத்தைக் கொடுங்கள், மீதிப் பணத்தைப் பிறகு கொடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் சொல்வதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது நிச்சயமாக, உறுதியாக அ.தி.மு.க ஆட்சிக்கு வராது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இது போன்ற டெண்டர்கள் அனைத்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன். இதை ஒப்பந்ததாரர்கள் உணர வேண்டும்.

'மக்களுக்காக உழைக்கவில்லை கலைஞர்' என்று ஒரு கூட்டத்தில் பழனிசாமி பேசி இருக்கிறார். மிஸ்டர் பழனிசாமி அவர்களே, கலைஞரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு அருகதை, யோக்கியதை இருக்கிறதா? பழனிசாமிக்கு கலைஞர் என்றால் யார் என்று தெரியுமா? உங்களைப் போல கூவத்தூர் குப்பை மேட்டில் இருந்து பதவிக்கு வந்தவர் அல்ல கலைஞர்.

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே” என்று போர்ப்பரணி பாடியவர் தலைவர் கலைஞர். தமிழ்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் கலைஞர் அவர்கள் தான், 95 வயது வரைக்கும் இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அயராது உழைத்த வாழ்நாள் போராளி!

போராளி மட்டுமல்ல - மிகச்சிறந்த நிர்வாகி! அவரால் உருவாக்கப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழ்நாடு! எத்தனை பிரதமர்களை உருவாக்கியவர் கலைஞர்! எத்தனை ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்! ஆட்சி கவிழும் என்று தெரிந்தே சர்வாதிகாரத்தை எதிர்த்தவர் கலைஞர்!

முதன்முதலாக முதலமைச்சர் பொறுப்புக்கு கழக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் கலைஞர். அப்போது கூட்டம் நடப்பதற்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கலைஞர் அவர்கள் ஒரு கடிதம் எழுதுகிறார். 'என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று எழுதுகிறார் கலைஞர். இத்தகைய கம்பீரம் கலைஞருக்கு மட்டும் தான் வரும்! வேண்டுகோள் வைப்பதிலேயே ஒரு வீரமும் விவேகமும் கலைஞருக்கு மட்டும் தான் வரும்!

சசிகலா முதல் மோடி வரை யார் பாதமும் தாங்கும் பழனிசாமிக்கு நான் சொல்லிக் கொள்வது, கலைஞர் பெயரை உச்சரிக்கவே உங்களுக்கு அருகதை கிடையாது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக என்றார் வள்ளலார். கருணை இல்லாத பழனிசாமி ஆட்சியை வீழ்த்துவதற்கு மட்டுமல்ல கருணை மிகுந்த கழக ஆட்சியை உருவாக்கவும் நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.

எனவே நாம் அமைக்கும் அரசு - மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக - மக்கள் விரும்பும் அரசாக - மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக - மக்கள் கனவுகாணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்!

இந்த அரங்கத்துக்குள் வரும்போது நீங்கள் கொண்டுவந்த (ஃ)பாரங்களை - இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது: ‘கழக ஆட்சி அமையும் கவலைகள் யாவும் தீரும்!’

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories