மு.க.ஸ்டாலின்

“சொந்தக் கட்சிக்காரர்களால் கூட மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

"நிர்வாகத் திறமையின்மை, அகங்காரம், ஊழல் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஓர் உருவம் கொடுத்தால் அதுதான் பழனிசாமியின் அரசு" என தி.மு.க தலைவர் உரையாற்றினார்.

“சொந்தக் கட்சிக்காரர்களால் கூட மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"நிர்வாகத் திறமையின்மை, அகங்காரம், ஊழல் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து ஓர் உருவம் கொடுத்தால் அதுதான் பழனிசாமியின் அரசு" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

இன்று (13-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் – புறவழிச் சாலை அருகில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“சீர்மிகு சிதம்பரத்தில் - கலைமிகு சிதம்பரத்தில் - கல்விமிகு சிதம்பரத்தில் - இயற்கை சூழ் சிதம்பரத்தில் நடைபெறக் கூடிய இந்த மாபெரும் மக்கள் திரளின் முன்னால் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மக்களிடம் செல், மக்கள் குறைகளைக் கேள், மக்களோடு இரு என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அந்த அடிப்படையில் உங்களிடம் உங்கள் குறைகளைக் கேட்பதற்காக வந்துள்ளேன். கேட்பது மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதற்கான காலம் கனிந்து வருவதால் தான் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.

தமிழகத்தில் ஆட்சியை அமைத்தாலும், மத்தியில் நமது கூட்டணி அமைந்தாலும், தமிழ் மக்களுக்கு - தமிழ்நாட்டுக்கு வேண்டிய திட்டங்களை உருவாக்கிய கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இன்று நீங்கள் பார்க்கும் நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த உள்கட்டமைப்பை உருக்குலைக்கும் ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி என்ன செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதிலும் குறிப்பாக பழனிசாமி அரசு, பேரழிவின் உச்சமாக உள்ளது.

பழனிசாமிக்கு தானும் செய்யத் தெரியாது. அடுத்தவர் செய்ததும் தெரியாது. 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்ததா என்று பழனிசாமி கேட்கிறார். பழனிசாமி, இந்த நாட்டில் தான் இருக்கிறாரா? அல்லது வேற்று கிரக வாசியா என்று தெரியவில்லை!

மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போதெல்லாம் மத்திய ஆட்சிக்கு தலையாட்டிக் கொண்டு இருந்த கட்சி அல்ல தி.மு.க. மத்திய ஆட்சியின் மூலமாக எதையெல்லாம் தமிழகத்துக்கு கொண்டு வர முடியுமோ, அத்தனையும் கொண்டு வந்த கட்சி தான் தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால் இன்று முழுவதும் பட்டியல் போடலாம். அந்தளவுக்கு அபரிதமான திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

* இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம்.

* மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

* இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தோம். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட்டன!

* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.

* 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.

* சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

* 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

* 1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

* 2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

* நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்

* 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

* அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

* 1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

* சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

* திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

* சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்.

* திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின.

* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிபூங்கா.

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட திமுகவைப் பார்த்து, என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று பழனிசாமி கேட்கிறார் என்றால் அவரை எந்த வகையில் சேர்ப்பது?

இப்படி எங்களைப் பார்த்து கேட்கும் பழனிசாமி என்ன செய்தார்? மத்திய அரசிடன் இருந்து என்ன வாங்கி வந்தார்?

எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாகச் சொல்லி இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முதல் செங்கல் கூட வரவில்லை. 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கியதாகச் சொல்கிறார். அவர் உருவாக்கவில்லை. அனுமதி வாங்கி இருக்கிறார். இந்தக் கல்லூரிகள் அமைய இரண்டு மூன்றுகள் ஆகும். அதனால் இதிலும் பழனிசாமி பெருமை கொண்டாட முடியாது.

கேட்ட நிதியை மத்தியில் இருந்து வாங்க முடிந்ததா? பேரிடர் நிதியை வாங்க முடிந்ததா? நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்க முடிந்ததா? காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய முடிந்ததா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடிந்ததா? இந்தி திணிப்பை தடுக்க முடிந்ததா? மத்திய அரசின் பணியிடங்களில் தமிழர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இதை எல்லாம் பழனிசாமியால் தடுக்க முடிந்ததா? அப்புறம் எதற்காக முதலமைச்சர் பதவி? பிறகு எதற்காக கோட்டையில் இருக்கிறீர்கள்?

எந்த சலுகையும் உதவியும் மத்திய பா.ஜ.க அரசில் இருந்து பெற முடியாத உதவாக்கரை பழனிசாமிக்கு தி.மு.கவையும் காங்கிரஸ் அரசையும் குறைசொல்வதற்கான எந்த அருகதையும் இல்லை.

ஆனால் வாய் மட்டும் பெரிதாக பீற்றிக் கொள்கிறார் பழனிசாமி. தினந்தோறும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரால் பழனிசாமி பேசி வரும் பேச்சுகள் சகிக்கவில்லை. குறிப்பாக, தான் என்ன சாதனை செய்தேன் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். எதை எடுத்தாலும் தமிழ்நாடு முதலிடம் என்கிறார். தொழிலில் முதலிடம், கல்வியில் முதலிடம், நிதியில் முதலிடம் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அப்படி யார் சொன்னது என்பதை அவர் சொல்வது இல்லை!

அடுத்து, அந்த விருது வாங்கினேன், இந்த விருது வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறார். யார் விருது கொடுத்தது என்பது தெரியவில்லை. இவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார்கள் என்றால் அந்த விருது கொடுப்பவர்களின் தகுதி என்ன? யார் யாரோ விருது கொடுப்பது இருக்கட்டும்? தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்களா? அந்த தகுதி அவருக்கு இருக்கிறதா? தகுதி இல்லாத ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்ற வருத்தம் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது. இன்னும் சொன்னால் அ.தி.மு.கவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது. சொந்தக் கட்சிக்காரர்களால் மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி.

தோல்வி பயம் பழனிசாமிக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் தேதி கந்தனேரியில் பேசிய பழனிசாமி, “ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை" என்று பேசி இருக்கிறார். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப் போல இருக்கிறது. ஆட்சி அவர் கையில் இருந்து நழுவப் போகிறது. அதனால் தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் பழனிசாமி.

சுருட்ட வேண்டியது அனைத்தையும் சுருட்டி முடித்துவிட்டார்கள். அதனால் தான் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லை என்கிறார். அடிக்க வேண்டிய கொள்ளையை அடித்து முடித்துவிட்டார். அதனால் தான் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லை என்கிறார். ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இருந்தாலும், அவருக்கு ஆட்சி கிடைக்கப் போவது இல்லை. ஆட்சி நம் கைக்குத் தான் வரப்போகிறது. அதனைத் தான் தமிழ்நாடு முழுவதும் நான் பார்க்கும் எழுச்சி சொல்கிறது. உங்களது எழுச்சியும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இந்த எழுச்சி தமிழ்நாட்டின் மலர்ச்சிக்கு வித்திடட்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும், அவரது எண்ணங்களும் உணர்வுகளும் நமது உள்ளத்தில் இருக்கிறது. அவரால் உருவாக்கப்பட்டவர்கள் நாம். அடுத்தமுறை ஆட்சியைப் பார்த்துவிட்டுதான் கண் மூட வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பை நாம் அவருக்கு வழங்கவில்லை. அவர் மறைந்ததற்குப் பின் அண்ணாவின் அருகில்தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினார். சண்டாளர்கள் தடுத்தார்களே! நயவஞ்சகர்கள் அனுமதித்தார்களா? அனுமதிக்க முடியாது என்று சொன்னார்களே! யாருக்கு? ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழகத்தை ஆட்சி செய்த கலைஞருக்கு இடமில்லை என்றார்கள். இந்த நாட்டிற்கு குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களை உருவாக்கித் தந்த கலைஞருக்கு அனுமதியில்லை என்றார்கள். தமிழகத்திலும் – இந்தியாவிலும் உள்ள தமிழகர்களுக்கு மட்டுமல்ல; உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குப் பாதுகாவல் அரணாக விளங்கிய தலைவர் கலைஞருக்கு இடமில்லை என்றார்களே நயவஞ்சகர்கள்!? நீதிமன்றம் சென்று போராடி – வாதாடி இடம் பெற்றோம்.

அண்ணனுக்கு அருகில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கலைஞரின் கடைசி ஆசைக்கு ஆறடி இடம் கொடுக்காத பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா என்பதுதான் என்னுடைய கேள்வி. சிந்தியுங்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories