மு.க.ஸ்டாலின்

“திராவிட இயக்க சிந்தனையுடன் தீவிரமாக செயல்பட்டவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நல்ல தமிழ்ச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் அவர் ஆற்றிய பத்திரிகைப் பணி பாராட்டத்தக்க - போற்றத்தக்க சிறப்புக்குரியதாகும்.

“திராவிட இயக்க சிந்தனையுடன் தீவிரமாக செயல்பட்டவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட சிந்தனையிலேயே வாழ்நாளெல்லாம் திளைத்திருந்த கவிஞர்-எழுத்தாளர்-பத்திரிகையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் மறைந்தாரே எனக் குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதில், “அறிஞர் அண்ணா அவர்களால் தி.மு.கழகம் தொடங்கப்பட்ட 1949 செப்டம்பர் 17ஆம் நாளில் அதன் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற 150 பேரில் ஒருவரும், தன் இறுதி மூச்சு வரை தி.மு.கழகத்தின் உறுதியான உடன்பிறப்புகளில் ஒருவராக விளங்கியவருமான கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்கள் மறைவெய்தியது பெரும் வேதனையும் பேரிழப்புமாகும்.

“திராவிட இயக்க சிந்தனையுடன் தீவிரமாக செயல்பட்டவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரிடம் அணுக்கமாக இருந்து, அரிய முறையில் அன்னைத் தமிழ் எழுத்துப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மாலை மணி, நம் நாடு போன்ற கழகத்தின் இதழ்களில் நற்பணியாற்றியதுடன், கவிக்கொண்டல், மீண்டும் கவிக்கொண்டல் ஆகிய இதழ்களை நடத்தி, தொடர்ச்சியாக 70 ஆண்டுகளுக்கும் மேல் முழு நேரப் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர் மா.செங்குட்டுவன்.

நல்ல தமிழ்ச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் அவர் ஆற்றிய பத்திரிகைப் பணி பாராட்டத்தக்க - போற்றத்தக்க சிறப்புக்குரியதாகும். சென்னை மவுண்ட் ரோட்டினை “அண்ணா சாலை “ எனத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் பெயர் மாற்றம் செய்தபிறகும், அஞ்சல் நிலையத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்ததை எதிர்த்துப் போராடி, அந்தப் பெயர் மாற்றத்தை நிலைநாட்டியவர்.

தமிழ் உணர்வும் தளராத போர்க் குணமும் கொண்டு, தனி திராவிட இயக்க சிந்தனையுடன் எந்நாளும் தீவிரமாகச் செயல்பட்ட கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எழுத்துகள் என்றென்றும் நிலைத்து வாழும்; அவரது பெயரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories