மு.க.ஸ்டாலின்

“அ.தி.மு.க ஆட்சி முடியப்போவதை நம்மை விட அ.தி.மு.கவினர் அதிகம் உணர்ந்துவிட்டார்கள்”: மு.க.ஸ்டாலின் பேச்சு!

விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“அ.தி.மு.க ஆட்சி முடியப்போவதை நம்மை விட அ.தி.மு.கவினர் அதிகம் உணர்ந்துவிட்டார்கள்”: மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தடைவாங்கிய முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்று சொன்னதால், தற்போது ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.

விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என தூத்துக்குடி தெற்கு மாவட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (05-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் செல்லும் வழியில், சாயர்புரம் தேரி சாலையிலுள்ள வாழைத் தோட்டத்திற்கு சென்றார். அங்கு வாழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், இந்தப் பகுதியில் 315 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்த இருவப்புரம் குளத்தை சுற்றி தனிநபர்கள் ஆக்கிரமித்து வாழை தோட்டங்களை அமைத்து வருவதாகவும், அந்தக் குளத்தின் பரப்பளவு தற்போது சுருங்கி உள்ளதாகவும் இதனால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் வேதனையோடு தெரிவித்தனர். இதேபோல் திருவைகுண்டம் அணையில் இருந்து விவசாயிகளுக்கு என தண்ணீர் திறக்காமல் தொழிற் சாலைகளுக்கு அனுப்பப் படுவதாகவும் அதே அணைக்கட்டில் ஆழ்துளைக் கிணறு பதித்து மோட்டார் வைத்து தண்ணீர் திருடப் படுவதாகவும் அவர்கள் முறையிட்டனர்.

தொடர்ந்து வாழைத்தோட்ட விவசாயி குணசேகரன் தற்போது விவசாயிகள் படும் துயரங்களையும், வறட்சி நிவாரணங்கள் கிடைக்காமல் பலர் கடன் தொல்லையால் பாதிக்கப் படுவதாகவும், 2,000 ஏக்கருக்கு மேல் வாழைத்தோட்டம் இப்பகுதியில் அமைந்துள்ளதால் தி.மு.க ஆட்சி அமைந்ததும் குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து, திருவைகுண்டம் - நட்டாத்தி ஊராட்சி – பட்டாண்டிவிளை கிராமத்தில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற கழகத் தலைவர் அவர்கள், அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துக் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நடைபெறும் மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு நாமெல்லாம் பெருமைப்படத்தக்க வகையில், வியப்பூட்டும் நிலையில், ஒரு பெரிய மாநாடு போல நம்முடைய அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதற்காக நான் அவருக்குத் தலைமைக் கழகத்தின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் நன்றியை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு மட்டுமின்றி, அவரோடு இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் எல்லாம் வந்து அரங்கத்திற்குள் சேருவதற்கு முன்பு அரங்கத்தின் வெளியில் நம்முடைய தொண்டர்கள் 200 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உள்ளே வரும்போது உங்கள் பெயர், முகவரி எல்லாம் கொடுத்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களது கோரிக்கைகளைச் சொல்லிவிட்டு வந்திருப்பீர்கள். உங்கள் உள்ளூரில், உங்கள் பகுதிகளில், உங்கள் வட்டாரத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் பொதுப் பிரச்சினைகள், அடிப்படை பிரச்சினைகள், என்னென்ன தேவைகள் என்பதையும் அங்கு சொல்லி மனுக்களைக் கொடுத்துவிட்டு வந்திருப்பீர்கள். அவர்கள் அதை எல்லாம் பதிவு செய்துள்ளனர். அந்த மனுக்கள் அனைத்தும் இந்தப் பெட்டிக்குள் வந்து சேர்ந்துவிட்டன.

அவ்வாறு அவர்கள் பதிவு செய்யும்போது உங்களுக்கு ஒரு ரசீது கொடுத்திருப்பார்கள். அது மிகவும் முக்கியமானது. நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நீங்கள் கொடுத்த மனுக்களுக்கு பரிகாரம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு வந்து கொடுத்திருக்கிறீர்கள். அந்த உறுதியை நான் தந்திருக்கிறேன்.

அந்த உறுதியைத் தந்தது நான். இந்த ஸ்டாலின் கொடுத்திருக்கிறான். இந்த ஸ்டாலின் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக அரசியலில் என்னை ஒப்படைத்துக் கொண்டு சாதாரண கட்சி உறுப்பினராக - பொதுக்குழு உறுப்பினராக - செயற்குழு உறுப்பினராக - இளைஞரணி அமைப்பாளராக - செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - சென்னை மாநகரத்தின் 2 முறை மேயராக - உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக இப்படியெல்லாம் பொதுப் பொறுப்புகளிலிருந்து மக்கள் பணியாற்றியவன். எல்லாவற்றையும் விடச் சிறப்பு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் மகன். எனவே அந்த நம்பிக்கையோடு கொடுத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையோடுதான் இவ்வளவு பேர் இங்கே வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

மனுக்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த ரசீதுதான் மிக மிக முக்கியம். இதை எதற்காக வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்தப் பிரச்சினை ஏதாவது தீரவில்லை என்றால் என்னிடத்தில் வந்து கேள்வி கேட்கும் உரிமை இந்த ரசீதிற்கு உள்ளது.

அடுத்து இங்கு 10 பேரைப் பேச வைக்கப் போகிறோம். இந்தப் பெட்டியில் இருக்கும் மனுக்களில் இருந்து 10 மனுக்களை எடுப்பேன். அவ்வாறு பேசுகிறவர்கள் சுருக்கமாகப் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் பேசிய விவரம் வருமாறு:

“அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்ற நியமன முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் செவிலியராக நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு தி.மு.க ஆட்சி செயல்படும்.

கடுமையான கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் மருத்துவர்களுக்கு இணையாக மக்களை உயிரைக் காப்பாற்றியவர்கள் உங்களைப் போன்ற செவிலியர்கள்தான். ஆனால் தம் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றுகின்ற மருத்துவப் பணியாளர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தி வருகிறது இந்த அ.தி.மு.க ஆட்சி. அறிவித்த ஊக்கத்தொகையைக் கூடத் தராமல் இழுத்தடித்து அவர்களைப் பலமுறை போராட்டக்களத்துக்குத் தள்ளுகிறது. நர்சுகள், டாக்டர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர் என அனைத்துப் பிரிவினருக்கும் மரியாதை இல்லாத ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. மக்களுக்குச் சேவை செய்வோரைப் புறக்கணிக்கும் இந்த ஆட்சியை மக்களாகிய நீங்களே அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிவிட்டது.

கடைக்கோடி கிராமம் வரை போக்குவரத்து வசதி இருக்க வேண்டும் என்கிற கனவோடுதான் நம்முடைய தலைவர் கலைஞர் போக்குவரத்துச் சேவையினை நாட்டுடைமையாக்கினார். மினி பஸ்களை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரால் அமைய இருக்கிற ஆட்சியில் உங்கள் பகுதிக்கு பேருந்து வசதி முன்பு போல செய்து தரப்படும்.

அரசின் அலட்சியத்தால் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாயை இழந்து நிற்கும் இளம்பெண்ணுக்கு முதலில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க ஆட்சியில் கோயில்கள் பராமரிக்கப்படும் இலட்சணம் இதுதான். ஓடாத தேரை எல்லாம் சீரமைத்து ஓடவைத்து, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் குடமுழுக்குகளை நடத்திய, மூடிக் கிடந்த கோயில்களில் ஒருகால பூஜையாவது நடக்க வேண்டும் என்று உத்தரவிட்ட, பக்தர்களின் நண்பனாகத் திகழ்ந்த ஆட்சிதான் கலைஞர் ஆட்சி. ஆனால் இன்று ஆலயங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவில்கள் கூடாது என்பதல்ல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது’ என்ற கலைஞரின் வசனம்தான் திமுகவின் கொள்கை. தி.மு.க ஆட்சியில் கோயில்கள் முறையாகப் பராமரிக்கப்படும். அவ்வாறு நடக்கின்றதா என்று கண்காணிக்கப்படும்.

கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர் உங்களின் இழப்புக்கு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து இழப்பீடு வழங்க வழி இருக்கின்றதா என்று ஆலோசித்து ஒரு நல்ல முடிவெடுப்போம்.

இந்த மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். கடம்பூர் ராஜூ என்று ஒருவர் இருக்கிறார். அவர் தன்னை முதலமைச்சரை விட பெரிய முதலமைச்சர் என்று நினைத்துக்கொண்டு பேசுவது, பேட்டி கொடுப்பது, அறிக்கை விடுவது, கிண்டல் ¬செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

2 நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தி பார்த்தேன். இந்த நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்கள்தான். இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார் அவர்.

அவரை மக்கள் பணி குறித்து சொல்லச் சொன்னால் இரண்டு மணி நேரம் சொல்லுவார். அந்த அளவிற்கு சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் இப்போது டெல்லியில் இருக்கிறார். இருந்தாலும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். ‘கடம்பூர் ராஜு கனிமொழி என்ன செய்திருக்கிறார்’ என்று கேட்டிருக்கிறார் என்று சொன்னேன்.

நீங்கள் செய்தது என்ன என்று கேட்டேன். எனக்கு ஒரு பெரிய பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலிருந்து சிலவற்றை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

சாத்தான்குளம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் பாலத்தை பார்வையிட்டு, மருதூர் கீழ் கால்வாய் பாசன கால்வாய் சீரமைப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் கொடுத்து அந்த பணியை அவர் வேகப்படுத்தியிருக்கிறார். கல்விளை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டதை அறிந்து, அந்த குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி, நிதி உதவியும் செய்திருக்கிறார்.

காயல்பட்டினத்தில் கைப்பந்து விளையாட்டு திடல் அமைத்துக் கொடுத்திருக்கிறார். கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள் 450 பேருக்கு உபகரணங்கள் வழங்கி இருக்கிறார். ஆலந்துறையில் மீன் வளர்ப்புக் கூடம் திறந்து வைத்திருக்கிறார். குறுக்குச் சாலை ஊராட்சி சமூகநலக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

கொரோனா காலத்தில் தொகுதியில் இருக்கும் பல்வேறு பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். மருத்துவ முகாம் நடத்தி வைக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். சாத்தான்குளம் சம்பவமாக இருந்தாலும் மக்களோடு மக்களாக இருந்தவர் நம்முடைய கனிமொழி அவர்கள்.

சாத்தான்குளம் சம்பவம் நடந்தபோது, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த போது இந்த கடம்பூர் ராஜு எங்கே இருந்தார். அதுதான் என்னுடைய கேள்வி. அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்.

அவர் இப்போது கனிமொழி என்ன செய்தார் என்று கேட்ட கேள்விக்கு நான் இங்கே பதில் சொல்லி விட்டேன். இப்போது நான் கேட்கிறேன் சாத்தான்குளம் பிரச்சினை நடந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உங்கள் முதலமைச்சர் எங்கே இருந்தார்?

முதலமைச்சர் அவர் உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்ற செய்தி வந்தது. கொரோனா காலத்திலும் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேரம் பேசிய கதைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். அதேபோல காற்றாலை முதலாளிகளிடத்தில் வசூலில் இறங்கியதால் டெல்லி மேலிடம் அவரைக் கண்டித்து இருக்கிறது.

இதை எல்லாம் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 3 மாதத்தில் தேர்தல் நடைபெறப் போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்த அக்கிரமத்திற்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீவலப்பேரி பகுதியில் இருந்து பாசனத்திற்கு ஏற்ற வகையில் எப்படி எல்லாம் நீரை சேமிக்கலாம், பயன்படுத்தலாம் என்று ஆரோக்கியமான, பயனுள்ள யோசனைகளை ஒரு விவசாயியாக இந்த மனுவில் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் யோசனைகள், கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும்.

CRPF-ல் பணிபுரியும் உங்கள் அண்ணாதுரை காணாமல் போய் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இது தமிழகத்திற்கு வெளியே நடந்திருக்கும் சம்பவம் என்பதால், உடனடியாக டெல்லியில் இருக்கும் நம்முடைய எம்.பிக்களிடம் சொல்லி, மத்திய அமைச்சர்களிடம் இது தொடர்பாக வலியுறுத்தி, உங்கள் கணவரைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விடச்சொல்றேன். நீங்கள் மனதை தளரவிடாமல், நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் கணவரை நீங்கள் விரைவில் சந்திப்பீர்கள்.

காலையில் கோவில்பட்டியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலும், மீனவர்கள் சார்பில் இதே கோரிக்கையை வைத்தார்கள். இப்போது நீங்களும் எரிபொருளுக்கான மானியத்தைக் கூட்ட வேண்டும், மீன்பிடிக்கத் தடை உள்ள காலத்தில் தருகின்ற நிவாரணத் தொகைய கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். உரிய முறையில் பரிசீலிக்கிறேன். கழகம் ஆட்சிக்கு வந்ததும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் 12,600 ஊராட்சிகளிலும் தீர்மானம் போட்டு நூலகம் இல்லாத ஊராட்சி இருக்கக்கூடாது என்று எல்லா இடங்களிலும் நூலகத்தை அமைத்தோம். நான் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தேன்.

அது மிகப்பெரிய சாதனை. ஆனால் இப்போது இருக்கும் நூலகங்கள் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. நூல்நிலையம் இருந்தாலும் புத்தகம் இல்லாத நிலையில் இருக்கிறது.

அதனால்தான் நான் என் பிறந்தநாள் வருகிறபோது ஒரு அறிக்கை விடுவேன். யாரும் எனக்கு பொன்னாடைகள் போர்த்த வேண்டாம். அதற்குப் பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் என்று சொல்வேன். புத்தகம் எனக்காக அல்ல, எனக்கு வருகின்ற அந்த புத்தகங்களை ஒவ்வொரு நூலகத்திற்கும் நான் அனுப்பி வைத்து விடுவேன்.

அதே போலக் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அந்தப் புத்தகங்களில் 80 சதவீதம் கொடுத்துவிட்டேன். மீதம் இருப்பதை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறேன். நம்முடையஆட்சி வந்தவுடன் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்கள் அமைக்கப்படும்.

இப்போது அடுத்த நிகழ்ச்சியாக நீங்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் இந்தப் பெட்டியில் உள்ளது. இப்போது இந்த பெட்டியை மூடி, பூட்டு போட்டு, சீல் வைத்து, சென்னை அண்ணா அறிவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக இருக்கும்.

கழக அரசு அமைந்த பிறகு அதில் இருக்கும் மனுக்கள் எல்லாம் ஆய்வு செய்வதற்கென்று ஒரு தனி வாரியத்தை அமைக்கப்போகிறோம். அவ்வாறு அமைத்து 100 நாட்களுக்குள் அதற்கு உரிய பரிகாரம் நடக்கும். அந்த நம்பிக்கையோடு கொண்டு வந்து இங்கே கொடுத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது. மறுபடியும் சொல்கிறேன், என்னை நம்புங்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள். மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வையுங்கள். இதனைப் பூட்டி விட்டு, அதற்குப்பிறகு 10 நிமிடம் உங்கள் இடத்தில் நான் பேசப் போகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் பொதுமக்களின் புகார்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

“அ.தி.மு.க ஆட்சி இன்னும் மூன்றே மாதத்தில் முடியப் போகிறது! உண்மையான மக்களாட்சியை இன்னும் மூன்றே மாதத்தில் நீங்கள் காணப்போகிறீர்கள்!

அ.தி.மு.க ஆட்சி முடியப் போகிறது என்பதை நம்மை விட அ.தி.மு.கவினர் அதிகம் உணர்ந்துவிட்டார்கள். அதனால் தான் கடைசி நேரத்தில் எதையாவது செய்யலாமா என்று துடிக்கிறார்கள். அணையப் போகும் விளக்கு, பிரகாசமாக எரியும் என்பதைப் போல விளம்பர வெளிச்சம் மூலமாகக் தன்னை உயர்வானவராகக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி!

இன்று காலையில் ஒரு அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். அதாவது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சொன்ன போது ரத்து செய்யாத பழனிசாமி - கூட்டுறவுக் கடனை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் சொன்னபோது ரத்து செய்யாத பழனிசாமி - ரத்து செய்ய மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதிட்ட பழனிசாமி - இன்று ரத்து செய்ய என்ன காரணம்?

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி. விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் எதைச் சொல்கிறதோ, இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார்!

ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி நாங்கள் ஆளுநரை சந்தித்தோம். உடனே அவரும் சந்தித்தார். ஆனால் ஆளுநரை தமிழக அரசு முறையாக வலிறுத்தவில்லை. அதனால் தான் ஆளுநர் இன்று கைவிரித்து விட்டார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார் ஆளுநர். இப்படி ஆளுநர் முடிவெடுத்து டெல்லிக்கு அனுப்பிய பிறகு, ஆளுநரைச் சந்தித்து நாடகம் ஆடினார் பழனிசாமி.

இது போன்ற நாடகங்களைத்தான் நீட் விவகாரத்திலும் நடத்தினார் பழனிசாமி. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பியதை வெளியில் சொல்லாமல் மறைத்தவர்தான் பழனிசாமி. அதைப் போலவே எழுவர் விடுதலையை ஆளுநர் நிராகரித்ததையும் மறைத்தார். இத்தகைய பொய் நாடகங்களை நித்தமும் நடத்தி வருகிறார் பழனிசாமி.

''2011 ஆம் ஆண்டுக்கு முன்னால் தி.மு.க ஆட்சியில் தமிழகம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? எல்லா வகையிலும் தமிழகத்தை வளர்த்துவிட்டோம்'' என்று பழனிசாமி பேசி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகத்தில் தனிநபர் வருமானம், இந்திய அளவிலான வருமானத்தை விட 50 சதவிகிதம் அதிகம். தென் மாநில தனிநபர் வருமானத்தில் தமிழகம்தான் முதலிடம். அப்படி வைத்திருந்தோம். ஆனால் இன்று தென் மாநிலங்களே தமிழகத்தை முந்திச் சென்றுவிட்டது. தமிழகம் பின் தங்கிவிட்டது. இது தான் அ.தி.மு.க ஆட்சி நடத்திய லட்சணம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 21.50 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் 18.75 லட்சம் ஹெக்டேர்தான் நெல் பயிரிடப்படுகிறது. அதாவது விவசாய பாசனப் பரப்பு தி.மு.க ஆட்சியை விட, அ.தி.மு.க ஆட்சியில் குறைந்துவிட்டது. பயிரிடுவதற்கு ஏற்ற தரிசு நிலங்களின் பரப்பு குறைந்துவிட்டதாக பழனிசாமி அரசு வெளியிட்ட மானியக் கோரிக்கை அறிக்கையிலேயே இருக்கிறது. இதுதான் விவசாயி ஆளும் ஆட்சியா?

2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பழனிசாமிக்கு நான் நினைவூட்டுகிறேன்.

* இரண்டாவது விவசாய புரட்சித் திட்டம் கொண்டுவருவோம் என்று அறிவித்தீர்களே! வந்ததா? இல்லை!

* விவசாயிகளின் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவோம் என்று அறிவித்தீர்களே? வருமானம் உயர்ந்ததா? இல்லை!

* எல்லா விவசாயக் கருவிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்போம் என்று சொன்னீர்களே! கொடுத்தீர்களா? இல்லை!

* கரும்புவிலையைப் போல மற்ற விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றீர்களே! நிர்ணயித்துவிட்டீர்களா? இல்லை!

* கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பணத்துக்கு பாக்கி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே? அப்படித்தான் இப்போது நடக்கிறதா?

* சொட்டு நீர் பாசனத்தை அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகச் செய்து கொடுப்போம் என்றீர்களே? செய்து கொடுத்துவிட்டீர்களா? எதில் தமிழகத்தை வளர்த்துள்ளீர்கள்?

இரண்டே இரண்டு விஷயங்களில் தமிழகம் வளர்ந்துவிட்டது. ஒன்று ஊழல்! இன்னொன்று விலைவாசி! அதிகமான ஊழல் செய்யும் மாநிலம் எது? தமிழகம்! விலைவாசி உயர்ந்து கொண்டே போகும் மாநிலம் எது? தமிழகம்! இதுதான் பழனிசாமியின் சாதனை! இந்த வேதனையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது!

''எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மனுக்களை வாங்கி என்ன செய்யப் போகிறார்?'' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்லி இருக்கிறார். நான் என்ன திட்டம் அறிவித்துள்ளேன் என்பதை புரிந்து கொள்ளும் சராசரி அறிவு கூட அந்த அமைச்சருக்கு இல்லை,

கடந்த பத்தாண்டு காலத்தில் அரசின் மூலம் அடைய வேண்டிய பலனை தமிழ்நாட்டு மக்கள் அடையவில்லை. பல்வேறு சலுகைகளை இழந்துள்ளார்கள். அதனை மீட்டுத் தருவதற்காகவே 100 நாளில் தீர்வு என்று சொல்லி இருக்கிறேன்.

மக்களின் கோரிக்கைகளை ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றுவேன் என்று சொல்லித் தான் மனுக்களைப் பெறுகிறேன். சொன்னால் இந்த ஸ்டாலின் செய்வான், நிறைவேற்றிக் காட்டுவான் என்று மக்கள் நம்பிக்கை வைத்து மக்கள் மனுக்களை தருகிறார்கள்.

இந்த மாவட்டத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒழுங்காக மக்கள் பணி ஆற்றி இருந்தால் மக்கள் எதற்காக என்னிடம் மனுக் கொடுக்க வரப்போகிறார்கள்? மக்கள் குறைகளைத் தீர்க்காமல், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் பழனிசாமியும், பன்னீர்செல்வமும், கடம்பூர் ராஜுவும் கடமை தவறியதால்தான் என்னிடம் வந்து மக்கள் மனு கொடுக்கிறார்கள்.

அ.தி.மு.க அரசாங்கம் செய்யத் தவறியதை- செய்ய மறுத்ததை- திமுக அரசாங்கம் செய்யும். நம்புங்கள்!

உங்கள் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்! இந்த ஸ்டாலினை நம்பிச் செல்லுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories