“இந்த ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிரபல ஏடுகள் பாராட்டி இருக்கின்றன; அத்தகைய சிறந்த நிர்வாகத்தைத் தமிழகத்தின் ஒவ்வொரு மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும், ஊராட்சிக்கும், கிராமத்துக்கும் வழங்குவோம்” என தருமபுரி மாவட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
இன்று (01-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சியில், நடைபெற்ற, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“ ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மக்கள் தங்களுடைய குறைபாடுகளை - பிரச்சினைகளை பற்றி இங்கு வந்து சொல்லவேண்டும்.
நமது தோழர்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலில் நின்று பதிவு செய்திருப்பார்கள். உங்கள் குறைபாடுகளை அதில் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள். மனுக்களாகக் கொடுத்திருக்கிறீர்கள்.
அதற்குப் பின் அவர்கள் ரசீது ஒன்று உங்களிடம் தந்திருப்பார்கள். அதை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். வாங்காதவர்கள் திரும்பிச் செல்லும்போது அதனைக் கேட்டு வாங்கிச் செல்லுங்கள். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பதற்கான அடையாளச் சீட்டு தான் அது.
அந்த ரசீது முக்கியம். ஏன் என்றால் நீங்கள் உரிமையோடு என்னிடத்தில் கேள்வி கேட்கலாம். உங்களுக்கு கேட்கும் உரிமை இருக்கிறது.
இங்கு வந்திருக்கும் அத்தனை பேரையும் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அத்தனை பேரையும் பேச வைக்க வாய்ப்பே இல்லை. ஆயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கில் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். ஒரு மாநாடு போல இங்கே வந்து நீங்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். அதனால் அத்தனை பேரைம் பேச வைக்க வாய்ப்பு இல்லை.
அதனால் ஒரு அடையாளத்திற்காக 10 பேரை பேச வைக்க போகிறேன். அதுவும் இந்தப் பெட்டியில் உங்கள் மனுக்கள் இருக்கின்றன. அதில் உங்க பெயர்கள் இருக்கிறது. அதிலிருந்து 10 பேர் பெயரை எடுக்கப்போகிறேன். அவ்வாறு பேசுகிறவர்கள் சுருக்கமாகப் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்போது சில மனுக்களை எடுத்து அதன்படி பெயர்களை அழைக்கிறேன். அவர்கள் சுருக்கமாகத் தங்களது கோரிக்கைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதன் விவரம் வருமாறு:
“மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க ஆட்சியில் நாம் எவ்வளவோ திட்டங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். குறிப்பாக ‘ஊனமுற்றோர்’ என்ற அழைத்துக் கொண்டிருந்த அந்தச் சொல், அவர்களை கொச்சைப் படுத்துகின்ற வகையில் - கேவலப்படுத்தகின்ற வகையில் - இழிவுபடுத்தும் நிலையில் - தன்னம்பிக்கை இழக்கும் நிலையில் இருக்கிறது என்று தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்து அந்தப் பெயரை, ‘மாற்றுத்திறனாளிகள்‘என்று மாற்றிப் பெயர் சூட்டினார்.
அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை, பல்வேறு திட்டங்களைக் கலைஞர் அவர்கள் செய்து கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முதலமைச்சர் கலைஞர் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே அந்த மாற்றுத்திறனாளிகளுக்கான துறையை வைத்துக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் கரூர் - குளித்தலை தொகுதியில், ‘மினி கிளினிக்’ திட்டத்தை அந்த மாவட்டத்தைச் சார்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்திருக்கிறார். திறந்து வைக்கும்போதே அது இடிந்து விழுந்துவிட்டது.
தேர்தல் வரும் காரணத்தினால் ‘மினி கிளினிக்’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தினாலே போதும். அதற்கு மருத்துவர்கள் இல்லை. அதற்கு மருந்து மாத்திரைகள் இல்லை. அதற்கு தேவையான உபகரணங்கள் இல்லை. அதற்கு தேவையான கருவிகள் இல்லை.
அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது ஊரை ஏமாற்றுவதற்காக - நாடகம் போடுவதற்காக - மக்களை ஏமாற்றுவதற்காக ‘மினி க்ளினிக்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
நாம் ஒரு மருத்துவ முகாமை நடத்துவோம். காலையில் முகாம் போட்டு மாலை வரை இருப்போம், அடுத்து வேறு இடத்திற்கு செல்லுவோம். அதுகூட சிறப்பாக நடைபெறும்.
ஆனால் இந்த மினி கிளினிக்கில் மருத்துவர்கள் இல்லை. இந்த நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்குரிய வகையில் பணியாற்றுவோம்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 7,000 கோடி ரூபாய் கடனை ஒரே கையெழுத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ரத்து செய்தார். அதை இந்த நாடு மறந்திருக்காது.
அப்போது பலர் கலைஞரிடத்தில், இதில் அ.தி.மு.க.வினர் தான் அதிகமாக கடன் வாங்கியிருக்கிறார்கள். அதை ஏன் தள்ளுபடி செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
அப்போது கலைஞர் அவர்கள், நான் அவர்களை அ.தி.மு.க.வினர் என்று பார்க்கவில்லை. பா.ம.க என்று பார்க்கவில்லை. காங்கிரஸ் என்று பார்க்கவில்லை. தி.மு.க என்று பார்க்கவில்லை.
அவர்களை இந்த நாட்டின் முதுகெலும்பாகத்தான் பார்க்கிறேன். அவ்வாறு கட்சி பாகுபாடின்றி செய்தார்கள். அதேபோல கட்சி பாகுபாடின்றி, அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயமாக எந்தெந்த வகையில் கடன் வழங்க முடியுமோ அந்தந்த வகைகளில் நிச்சயமாக, உறுதியாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியின் நில அபகரிப்பால்தான் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள். நான் செல்லுகின்ற இடங்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில், இதேபோல ஆளும் கட்சி உறுப்பினர்கள் பற்றி குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் 3 மாதங்கள் தான். 3 மாதங்களுக்குப் பிறகு அதைச் சரி செய்வது மட்டுமில்லாமல் யார் யார் இதில் தவறு செய்தார்களோ அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர்கள் மீது இந்த ஆட்சி எந்த அக்கறையும், மரியாதையும் செலுத்துவதில்லை. இந்த ஆசிரியர்கள் தான் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அந்த மாணவர்கள் தான் வருங்காலத்தில் நாட்டிற்கு தலைவர்களாக வருபவர்கள். அப்படிப்பட்ட தலைவர்களாக வரும் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியருக்கு மதிப்பளிக்காத ஆட்சி நிலைத்து நின்றதில்லை.
எனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உங்களுடைய கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதிலும் குறிப்பாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் கே.பி.அன்பழகன். அவர் உயர் கல்வித்துறை அமைச்சர். அவருக்கு அந்த இலாகாவில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
ஏனென்றால் சூரப்பா என்று ஒருவர் இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர். அந்த சூரப்பா பிரச்சினையில் எப்படியெல்லாம் அவர் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அவருக்கு கூடுதலாக விவசாயத் துறை அமைச்சராகவும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையை குட்டிச்சுவராக்கியது மட்டுமில்லாமல் விவசாயத் துறையையும் குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிறார். இதுதான் இன்று இருக்கும் நிலை.
தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பிறகு பாதுகாப்பான, பிரபலமான சுற்றுலாத் தலமாக ஒகேனக்கலை வளர்த்தெடுப்போம் என்ற அந்த உறுதியை இந்த கூட்டத்தில் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் விழுப்புரத்தில் ஒரு ஒரு தடுப்பணை கட்டி இருக்கிறார்கள். கட்டிய 2 மாதங்களில் அது இடிந்து விழுந்து விட்டது. நமது பொன்முடி மற்றும் அங்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தினார்கள்.
அதனால் அவர்களைக் கைது செய்து அதன்பின் அவர்களை வெளியில் விட்டுவிட்டார்கள். பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
அதிகாரியோடு அதை முடித்து விட்டார்கள். இரயில் இன்ஜின் திருடியவனை விட்டுவிட்டு, அந்த இன்ஜினில் இருந்து விழுந்த கரியைத் திருடியவனைப் பிடித்து உள்ளே வைத்திருக்கிறார்கள். அதுதான் இன்றைய நிலை. பாலைவன ரோஜாக்கள் திரைப்படத்தில் தலைவர் கலைஞரின் வசனம் இது. இதுதான் இந்த நேரம் எனக்கு ஞாபகம் வந்தது.
ஏனென்றால் இப்போது கொடுக்கப்படுகின்ற ஒப்பந்தங்களை சதவீதம் வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திட்டங்களில் முழுப் பணத்தைச் செலவிட முடியவில்லை.
ஆனால் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பவர்களைச் சும்மா விடப்போவதில்லை. அதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் இன்னும் 3 மாதங்களில் வரப்போகிறது என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.
அடுத்த நிகழ்ச்சியாக உங்கள் மனுக்கள் எல்லாம் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியை உங்கள் முன்னால் நான் மூடி, பூட்டுப் போட்டு, சீல் வைக்கப் போகிறேன்.
சீல் வைத்த பின்பு இதை நாங்கள் சென்னைக்கு எடுத்துச் சென்று விடுவோம். அதற்குப் பிறகு தேர்தல் முடிந்து, மிகப்பெரிய வெற்றியை உங்கள் அன்போடு ஆதரவோடு பெற்று, தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அடுத்த நாள், உங்கள் முன்னால் இந்த சீலை நானே உடைத்து பூட்டை நானே திறப்பேன்.
இதில் இருக்கும் மனுக்களை எடுத்து, தனித்துறை இதற்கென உருவாக்கப்பட்டு, அந்தத்துறை இந்தப் பணியை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்தப் பணியும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, அதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது அனுப்பட்டு, 100 நாட்களுக்குள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுப்பான் இந்த ஸ்டாலின் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு இப்பொழுது உங்கள் முன்னால் இந்தப் பெட்டியை பூட்டப்போகிறேன். அந்த காட்சியை நீங்கள் பார்க்க போகிறீர்கள்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“ஆட்சிப் பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் உங்களுடைய குறைகளைப் போக்க மனுக்களைப் பெறுகிற நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துகொண்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் மனுக்களைக் கொடுக்கிற மக்களிடம் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பேற்கிறேன் என்று தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களில் சிலர் கருதலாம், “என்ன இவன் ‘நான்’ என்று சொல்கிறான் என்று, இந்த ‘நான்’ என்பது அகம்பாவம் - ஆணவத்தால் சொல்வது இல்லை. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு அதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொள்வதற்காக உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் ஆகிய நான் என்று குறிப்பிடுகின்றேனே தவிர, வேறு அல்ல. தி.மு.கழகம் ‘நாம்’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்ட இயக்கம். ‘நாம்’ என்பது குடும்பம். ‘நாம்’ என்பது நமது உள்ளத்து உணர்வு என்று சொன்னார், பேரறிஞர் அண்ணா அவர்கள். ‘நாம்’ என்பது ஜனநாயகம் என்றார் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அதே உணர்வோடுதான் இந்த இயக்கம் இன்றைக்கு - நேற்றல்ல - என்றைக்கும் இயங்கும் என உறுதியாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல்.
10 ஆண்டு காலமாகத் தமிழகம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க - அதுமட்டுமின்றி அடுத்து அரை நூற்றாண்டு காலத்திற்கு தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாக 5 ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருப்போம் என்பது முக்கியமல்ல. அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு திட்டமிட்டு செய்தால்தான் தமிழகத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.
ஒரு கட்சியின் ஆட்சி என்பது 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்வது மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும், அடுத்த 5 ஆண்டு காலத்தில் வளர்ப்பதாக அந்த ஆட்சி அமைய வேண்டும். அத்தகைய ஆட்சியைத்தான் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்தார்கள். அத்தகைய ஆட்சியைத்தான் நானும் கொடுப்பேன்.
என் 45 வயதில் சென்னை மாநகர மேயராகப் பொறுப்பேற்ற போது நான் சொன்னேன். “சென்னை மாநகரத் தந்தை என்பதைவிட சென்னை மாநகர முதல் சேவகனாக இருப்பதையே விரும்புகிறேன். சென்னை மாநகர மக்களின் முதல் குடிமகன் என்பதைவிட சென்னை மாநகர மக்களின் முதல் ஊழியராகப் பணியாற்றுவதில் பெருமைப்படுகிறேன்” என்று சொன்னேன் அப்படித்தான் நான் பணியாற்றினேன் – கடமையாற்றினேன்.
இன்னும் ஒன்றையும் சொன்னேன். “எனக்கு வாக்களித்த மக்களிடம் மட்டுமின்றி எனக்கு வாக்களிக்காத மக்களிடமும் மதிப்பைப் பெறும் அளவிற்கு பாடுபடுவேன்” என்று சொன்னேன்.
எனக்கு வாக்களிக்காக மக்களிடமும் எனது செயலால் நான் நம்பிக்கை பெற்றேன்.
‘கல்கி’ என்பது ஒரு பாரம்பரியமிக்க வார ஏடு. அந்த ‘கல்கி’ என்ற ஏடு என்னுடைய பணிகள் குறித்து அப்போது ஒரு தலையங்கம் தீட்டியது. அதை இப்போது நான் உங்களிடத்தில் படிக்க விரும்புகிறேன்.
1.4.2001 கல்கியில் வெளியான தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் நான் இப்போது வாசிக்கிறேன். “கோப்புகளைப் பார்ப்பதில் - முடிவெடுப்பதில் ஸ்டாலினின் சுறுசுறுப்பு பாராட்டுக்குரியது. நகரின் சில பகுதிகளில் குப்பை அகற்றும் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு எடுத்தார். அட்டகாசமான பாலங்கள் கட்டினார். மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மருத்துமனைகளின் நம்பிக்கைத் தன்மையை உயர்த்தியிருக்கிறார்.
அடிக்கடி கூட்டம் - நேரில் காண்பது என்ற நடவடிக்கைகளால் அதிகாரிகளை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறார். வெளியூர்களில் இருந்தாலும் தினசரி இருமுறை தொலைபேசியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அப்பாவைப் போலவே, அதாவது கலைஞரைப் போல, அப்பாவை போலவே காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகு அவற்றில் மாநகராட்சியைப் பற்றி ஏதேனும் குற்றம் - குறைகள் சொல்லப்பட்டிருந்தால் விசாரிக்கிறார்.
5 ஆண்டு காலத்தில் யாரிடத்திலும் உரத்த குரலில் பேசி கோபப்படவில்லை. இடைநிலை ஊழியர்களிடத்தில் கனிவாக நடந்து கொள்கிறார். 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட சென்னை மாநகர ஆண்டு பட்ஜெட் 70 கோடியாக இருக்கும் சென்னை மாநகராட்சி, ஒரு குட்டி மாநிலத்திற்கு சமமானது. இங்கு தமது திறமையை நிரூபித்து மேயர் இன்னும் உயரமான இடத்திற்கு செல்ல தயாராகி விட்டார்“என்று கல்கி எழுதியது.
“வரையறுக்கப்பட்ட குறைந்த ஆதாரங்களோடு கைகள் கட்டப்பட்டு இருந்தாலும் - குறைந்த அதிகாரங்களுடன் கைகள் கட்டப்பட்டு இருந்தாலும் - மாநகராட்சி நலன்களை மேற்கொள்ளும் செயல்திறன் மிக்க தலைவராக ஸ்டாலின் விளங்குவதை யாரும் மறுக்க முடியாது” என்று ஆங்கில ‘தி இந்து’ நாளேட்டில் எழுதினார்கள்.
அடுத்து இந்தியா டுடே வார பத்திரிகை, “இந்திய அளவில் தலைசிறந்த மேயர்” என்று என்னைப் பாராட்டி எழுதியது.
ஸ்டாலின் என்றால் யார்? அவரது நிர்வாகம் எப்படி இருக்கும்? என்பதை நான் சொல்லவில்லை, இந்த ‘தி இந்து‘ – ‘இந்தியா டுடே‘ – ‘கல்கி‘ போன்ற ஏடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறது. அத்தகைய நிர்வாகத்தை தமிழகத்தின் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் - நகராட்சிக்கும் - ஊராட்சிக்கும் வழங்குவோம்.
நகரம் - கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வளர்ச்சியை வழங்குவோம். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில் தமிழகத்தை நகர்த்திச் செல்லவே நான் திட்டமிட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையாக நினைப்பது வேளாண்மைத் துறையில் நிலவுகிற பிரச்சினைகளைத்தான்.
விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அரசாக தி.மு.க அரசு இருக்கும். வேளாண் தொழிலை மேற்கொள்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள், மண் சார்ந்த மக்களுக்கு மறுமலர்ச்சியை தி.மு.க அரசு வழங்கும்.
அடுத்ததாக இன்றைய தினம் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க - வேலையில்லாப் பிரச்சினையை தனிப்பட்ட ஒரு இளைஞனின் பிரச்சினையாகப் பார்க்காமல் - அதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்த்து அதற்கான தீர்வுகளை நான் மேற்கொள்வேன்.
அதாவது இளைய சக்தியை உருவாக்க இளைஞர்களின் இலட்சிய ஆட்சியாக தி.மு.க அரசு இருக்கும். ஒரு பக்கம் வேளாண்மையையும் - குடிநீரும் - சுகாதாரமும், இன்னொரு பக்கம் கல்வியும் – வேலைவாய்ப்பும் - தொழில் வாய்ப்பும் வழங்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்.
ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலாளிக்கு வளர்ச்சியை குறிப்பிடக்கூடிய அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அமையும் எனக்கூறி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்தனை பேருக்கும் நல்வாழ்த்துகளையும் - பாராட்டுக்களையும் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.