மு.க.ஸ்டாலின்

4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி அமையும்.. தமிழகம் மீளும்.. புத்தாண்டில் நம்பிக்கை மலரட்டும்! - மு.க.ஸ்டாலின்

13 வயது மாணவனாக கோபாலபுரத்தில் முடிதிருத்தும் கடையில் இளைஞர் திமுக துவங்கி, அரசியலில் என் வரலாறு ஐம்பது ஆண்டுகாலம் என்பதை வாரிசு அரசியல் என்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறினார்

4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி அமையும்.. தமிழகம் மீளும்.. புத்தாண்டில் நம்பிக்கை மலரட்டும்! - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை அடுத்த ஆவடியில் நேற்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

“இன்று தமிழ்ப் புத்தாண்டாம் உழவர்கள் திருநாளாக இருக்கக்கூடிய, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த திருநாளை வாரம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று, போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடுகின்ற வழக்கத்தை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். அதனடிப்படையில், இப்போது ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 15-வது வார்டில் அடங்கியிருக்கும் கோணாம்பேடு கிராமத்தில் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், உங்களையெல்லாம் சந்தித்து உங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்வது மட்டுமல்ல, உங்களுடைய வாழ்த்துக்களைப் பெறுவதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.

நேற்றைய தினம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட நத்தம் ஊராட்சிக்குச் சென்று அப்பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். இன்று காலையில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகிற வரையில், எனது இல்லத்தில் கழகத் தோழர்கள், பொதுமக்கள் நண்பர்கள் உறவினர்களைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டேன். அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு, இந்தக் கோணாம்பேடு கிராமத்திற்கு வந்திருக்கிறேன். நாளை திருப்பெரும்புதூர் அருகில் இருக்கக்கூடிய என்னுடைய தோட்டத்தில் நான் வளர்க்கும் மாடுகளுடன் மாட்டுப் பொங்கல் கொண்டாடவிருக்கிறேன். இந்தப் பொங்கல் விழாவானது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - உள்ளங்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதி - மத உணர்வுகளைக் கடந்து, சமத்துவ உணர்வோடு சமத்துவ பொங்கலாக கொண்டாடுகின்ற நேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் ஒன்றை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டாக பிறந்திருக்கிறது; எனவே அந்த நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிட வேண்டும். பல தமிழறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கூறிய அந்த உணர்வை வெளிப்படுத்தக்கூடிய வகையில் கடந்த சில ஆண்டுகளாக தை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம் அதற்கான அரசாணையும் வெளியிட்டு அதனை பின்பற்றி வருகிறோம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று நம்முடைய நாசர் அவர்கள் இங்கே சொன்னார்கள். தை பிறந்துவிட்டது! வழி தான் பிறக்க வேண்டும்; பிறக்கத்தான் போகிறது! பிறந்தே தீரும்! அது பிறக்கத் தான் நீங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் என்னை அழைத்து நிகழ்ச்சி நடத்த காத்திருக்கும் போது, அந்த வாய்ப்பு ஆவடி பகுதியில் உள்ள இந்தக் கோணாம்பேடு கிராமத்திற்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி என்று நாசர் அவர்கள் பேசும் போது எடுத்துச் சொன்னார். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னிடத்தில் தேதி கேட்கவில்லை; நேற்று முன்தினம் தான் நான் அவரைத் தொலைபேசியில் அழைத்து தேதி கொடுத்தேன். நான் எப்போதுமே பொங்கலுக்கு முதல் நாள் மாலையில் ஏதாவது ஒரு இடத்திற்கு பொங்கல் நிகழ்ச்சிக்கு செல்வதுண்டு. அல்லது பொங்கல் அன்று மாலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மறுநாள் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பது உண்டு. ஆனால் இந்த முறை இன்னும் சில இடங்களுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து நேற்று பொன்னேரி தொகுதிக்குச் சென்று இருந்தேன். இன்று இங்கு வந்திருக்கிறேன். அதிக இடங்களுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து, யாருக்கு தேதி கொடுக்கலாம் என்று யோசித்தேன். நாசர் என்றால் சும்மாவா!? சென்னை மாநகரத்தில் ஆவடி பகுதியில் இருக்கக்கூடிய ஒரு கிராமம் தான் இப்பகுதி. இந்த மேடையை ஒரு கிராமத்தை போன்று வடிவமைத்து, எங்குத் திரும்பினாலும் பச்சை பசேலென்று பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது. மேடைக்கு அருகில் சிறு குளத்தை உருவாக்கி அதில் மீன்களை நீந்த விட்டு, புல் தரையில் அமர்ந்து பேசுவது போல மேடையை அமைத்துள்ளார்.

4 மாதங்களில் தி.மு.க. ஆட்சி அமையும்.. தமிழகம் மீளும்.. புத்தாண்டில் நம்பிக்கை மலரட்டும்! - மு.க.ஸ்டாலின்

வலது பக்கத்தில் கோவில் உள்ளது. நம்மை ஏதோ கோவிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். "கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் சிவாஜி அவர்களது முதலாவது வசனத்திலேயே சொன்னார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்ட செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்தப் பக்தியை நாங்கள் குறைச் சொல்ல தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது பேரறிஞர் அண்ணா அவர்களது உறுதிமொழியாக இருந்தது. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றி கொண்டிருக்கிறோம். என்னதான் திட்டமிட்டு சதி செய்து தி.மு.க. மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும், அவையெல்லாம் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்டத்தான் போகிறார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது, ‘மாற்றம் வேண்டும்; தை பிறந்துவிட்டது வழி பிறக்க வேண்டும்’ என்று நாம் சொல்ல என்ன காரணம்?

கடந்த 2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார். அதன் பிறகு அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்துவிட்டார். மறைந்த தலைவரைப் பற்றி விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை. அது நமது பண்பாடும் இல்லை. அவ்வாறு நம்மை நமது தலைவர் கலைஞர் அவர்கள் பயிற்றுவிக்க வில்லை. அவரது ஆட்சி எப்படி இருந்தது என்று உங்களுக்கெலலாம் நன்றாகத் தெரியும். அது ஒரு அக்கிரம - அநியாய ஆட்சியாகத்தான் நடைபெற்றது. அதற்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. அதன்பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அவர்களாக இருந்தாலும், ஒரு கொடுமையான அக்கிரம ஆட்சியை நாட்டைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத வகையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள்தான் முதலமைச்சர் என்று நினைத்து மக்கள் வாக்களித்து இருந்தால், அவர்கள் மக்களைப் பற்றி சிந்திப்பார்கள். அவர் எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். தவழ்ந்து தவழ்ந்து வந்து முதலமைச்சர் பொறுப்பைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். அந்தக் காட்சிகளை செல்பேசியில் வாட்ஸ்அப்பில் நீங்கள் கண்டிருப்பீர்கள். எனவே அதனை விளக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதனால் அதைப்பற்றி பேச வேண்டியதில்லை.

ஆனால் நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று அவர் சொல்கிறார். எப்படி படிப்படியாக வளர்ந்து வந்தீர்கள்? தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாமெல்லாம் ஏதோ திடீரென்று அரசியல் வாரிசாக வந்து விட்டதைப் போல பேசுகிறார். அரசியலில் என்னுடைய வரலாறு என்பது 50 ஆண்டுகால வரலாறு!

அருகில் இருக்கக்கூடிய திருமுல்லைவாயில்; வரும்போது நாசர் அவர்கள் அடையாளம் காட்டினார். நான் தேதி கொடுக்கும் போது, திருமுல்லைவாயிலுக்கு அருகில் எங்காவது நடத்துங்கள் என்றுதான் சொன்னேன். முதன்முதலாக இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது ராணுவ மிடுக்கோடு நடைபோட்டு வரக்கூடிய ஒரு அணிவகுப்பை நடத்துவதற்கு, அதற்கென இளைஞர் பட்டாளத்தை தயார் படுத்தினோம். ஏறக்குறைய 10 நாட்கள் அங்கேயே முகாமிட்டு அந்த பணியை நிறைவேற்றினோம். அதற்கு முழு பொறுப்பையும் ஏற்று அதனை வெற்றியோடு நிறைவேற்றி கொடுத்தவர் இங்கு அமர்ந்திருக்கும் நாசர் அவர்கள். அதனால் எந்தப் பணியாக இருந்தாலும் அது எழுச்சியோடு நடைபெற வேண்டும் என்றால் நான் உடனடியாக நாசரைத்தான் அழைப்பேன்.

எதற்காக இதனை எல்லாம் சொல்கிறேன் என்றால், தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே திணிக்கப் படக்கூடிய இந்தியை எதிர்த்தாக வேண்டும்; தமிழை வாழ வைக்க வேண்டும்; தமிழுக்காக பாடுபட வேண்டும்; பணியாற்ற வேண்டும் என்று தமிழுக்காக குரல் கொடுத்தார். தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது மாணவனாக அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு ஒரு கையில் கொடி ஏந்தி மறுகையில் ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று எழுதப்பட்ட பதாகையை தாங்கி பிடித்துக்கொண்டு மாணவர்களை ஒன்று திரட்டி கொண்டு "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே!" என்று போர்ப்பரணி பாடிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய மகன் நான்!

அவருடைய மகன் என்ற காரணத்திற்காகவே வந்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? அவருடைய மகன் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆனால் அவரே, "உழைப்பு… உழைப்பு… உழைப்பு… அதுதான் ஸ்டாலினிடத்தில் எனக்குப் பிடிக்கும்!" என்று பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த ஒரு பாராட்டு போதும் எனக்கு!

எடப்பாடியின் பாராட்டையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. பாராட்டுவதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி அவருக்கு இருக்கிறதா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

எதற்காக இதனைச் சொல்கிறேன் என்றால், படிப்படியாக வளர்ந்தவன். பதிமூன்று வயது மாணவனாக இருந்தபோது கோபாலபுரம் பகுதியில் முடி திருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க. என்ற படிப்பகத்தைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அதனை இளைஞரணி என்ற அமைப்பாக மாற்றி, அதன் பிறகு கழகத்தின் துணை அமைப்பாக அது மாறியது. அந்த அணியில் செயலாளராக நான் பொறுப்பேற்று இருந்தபோது மாவட்ட அமைப்பாளராக இருந்தவர்கள் தான், இங்கு இருக்கும் நாசர் அவர்களும் மா.சுப்ரமணியன் அவர்களும். இன்று அவர்கள் மாவட்டக் கழகச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் என பொறுப்பேற்று என்னுடைய சிப்பாய்களாக தளபதிகளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றால் என்னை விட பெருமைப்பட கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது.

இரண்டு முறை மக்களால் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் இந்த அடியேன்! அதற்கு முன்பு கவுன்சிலர்கள் இணைந்து மேயரைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். ஆனால், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இந்த அடியேன் ஸ்டாலின்.

முதன் முதலில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது தி.மு.க. ஆட்சி இருந்தது. இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி. அப்போது அவர்கள் என்னை தோற்கடிப்பதற்காக எத்தனையோ திட்டமிட்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். அதனையெல்லாம் மீறி இரண்டாவது முறையாக மேயராக வெற்றி பெற்றேன். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக, இப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வருகிறேன். இது மக்கள் பணி.

கட்சிப் பணி என்றால், இளைஞரணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், இன்றைக்கு உங்களில் ஒருவனாக இருந்து தலைவராக இருக்கக்கடிய பெரும் பொறுப்பை பெற்றிருக்கிறேன் என்றால், இதெல்லாம் வரலாறு!

ஏதோ வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் இதையெலலாம் சொன்னேன்; வேறல்ல!

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய இந்த ஆட்சியால் வேலைவாய்ப்பு இல்லை; பெண்களின் முன்னேற்றம் பாழ் பட்டிருக்கிறது; விவசாயப் பெருங்குடி மக்கள் எந்தளவிற்கு இன்றைக்குத் துன்பத்திற்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 50 நாட்களை கடந்து விட்டது. கடும் குளிர், மழை, வெயில் பாராது அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு குடும்பம் குடும்பமாக அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் என பல மாநிலங்களிலிருந்து புறப்பட்டு வந்து, அங்கேயே சமைத்து – உண்டு - உறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 70-க்கும் மேற்பட்டோர் மாண்டிருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டு இறந்து இருக்கிறார்கள். இன்று உழவர் நாளை கொண்டாடுகின்ற நேரத்தில் இந்தக் கொடுமைகள் நடந்திருக்கிறது. அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது, ஏழை - எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், விவசாயிகளுக்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். அவற்றைப்பற்றி நேற்றைய தினம் நத்தம் ஊராட்சியில் எடுத்துச் சொன்னேன். நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய அவர்கள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அவர்கள் இல்லை என்றால், நாம் இல்லை; நாடே இல்லை!

கம்பெனிகளுக்கு, கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகளை ஆதாயங்களைத் தேடக் கூடிய வகையில் கொடுமையான 3 வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. அதனை நாடாளுமன்ற மக்களவையில் நம்முடைய உறுப்பினர்கள் அத்தனைப் பேரும் எதிர்த்தார்கள்; மாநிலங்களவையில் எதிர்த்தோம். ஆனால் அதனை ஆதரித்து பேசியவர்கள் யார்? பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சி ஆதரித்து பேசியது? தமிழகத்தில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. அதனை ஆதரித்து அறிக்கை விடுகிறது; மக்களவையில் - மாநிலங்களவையில் அதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும்போது ஆதரித்து வாக்களிக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. திருச்சி சிவா அவர்களது பெயரில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். வில்சன் அவர்கள்தான் வழக்குத் தொடுத்திருக்கிறார். நாம் மட்டுமல்ல, பல மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த முதலமைச்சர் வழக்கு போட்டாரா? மாநில அரசின் சார்பில் வழக்கு போடுங்கள்; நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்ளுங்கள்; உங்கள் பாவத்தை கழுவிக் கொள்ளுங்கள் என்று எத்தனை முறை நான் அறிக்கை விடுத்தேன். இதுவரை கேட்கவில்லை.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடினார்கள். குறைக்க முடியாது என்று அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி மறுத்தது. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தார். ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று நீங்கள் போராடுகிறீர்கள் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை இலவச மின்சாரம் என்று அடுத்த நாளே அறிவித்தார்.

அதேபோல் விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கூட்டுறவு கடன் முழுவதையும் ரத்து செய்வேன் என்று 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அறிவித்தார். 7000 கோடி ரூபாய்க் கடனை எப்படி தள்ளுபடி செய்யப் போகிறார் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கான விழா நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பதவியேற்பு விழா நடைபெற்ற அந்த மேடையிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் கோட்டையிலிருந்து 7000 கோடி ரூபாய் கடன் ரத்துக்கான கோப்புகளை வரவழைத்து அதில் கையெழுத்திட்டார்.

அ.தி.மு.க.வினர்தானே அதிகமாக கடன் வாங்கியிருக்கிறார்கள். எப்படி கடனை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் கேட்டோம். நான் அவர்களை தி.மு.க.வினராக அ.தி.மு.க.வினராக காங்கிரஸ்காரர்களாக பா.ம.க.வினராக கம்யூனிஸ்டுகளாக பார்க்கவில்லை; அவர்கள் அத்தனை பேரையும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களாக நான் பார்க்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்.

இப்படி தலைவர் கலைஞர் அவர்கள் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைக்காக எப்படியெல்லாம் துணை நின்றிருக்கிறார் – பாடுபட்டிருக்கிறார் - பணியாற்றி இருக்கிறார் என்று நேற்றைய தினம் பொன்னேரி தொகுதியில் உள்ள நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் பேசுகிறபோது எடுத்துக் கூறினேன்.

எப்படி தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ, அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியிலும் தள்ளுபடி செய்யுங்கள் என்று கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முடியாது என்று நீதிமன்றத்திற்கு சென்றார்கள். ரத்து செய்யுங்கள், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று ஸ்டே வாங்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் அ.தி.மு.க. ஆட்சி.

இப்போது சொல்கிறேன். இன்னும் நான்கு மாதங்கள்தான். பொறுங்கள். நான்கு மாதங்களில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன், விவசாயிகளினுடைய கூட்டுறவுக் கடன் அத்தனையும், எப்படி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரத்து செய்தாரோ அதேபோல் ரத்து செய்யப்படும். அதேபோல் நகை கடன். குடும்பத்தின் சூழல் காரணமாக - வறுமையின் காரணமாக தாய்மார்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கிறார்கள், இன்னும் மீட்க முடியவில்லை; வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது சொன்னேன். அதன்படி 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்வோம். அதனை இப்போது சட்டமன்றத் தேர்தலின்போதும் சொல்கிறேன். இந்த வாக்குறுதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காப்பாற்றப்படும் - நிறைவேற்றப்படும் என்று நேற்று சொன்னேன். அதேதான் இங்கேயும் சொல்கிறேன்.

இன்று உழவர்கள் தினம்; அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்போது பல துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கலாம்; கவலைப்படாதீர்கள். பொறுத்தது தான் பொறுத்தோம், இன்னும் நான்கு மாதங்கள்தான்; பொங்கி எழுவோம்! தை பிறந்து விட்டது; வழி பிறக்கத்தான் போகிறது! உங்கள் அனைவருக்கும் பொங்கல் – மாட்டுப்பொங்கல் - காணும் பொங்கல் - நல்வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

banner

Related Stories

Related Stories