மு.க.ஸ்டாலின்

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

“செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றவர் யார் என்றால் எடப்பாடி. இன்றைக்கு எடப்பாடியிடம் கைகட்டி நிற்கிறார் செங்கோட்டையன்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“அமைச்சர் செங்கோட்டையன் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவரது தொகுதி மக்களின் கோரிக்கைகள் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (02-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்டம் - கோபி சட்டமன்றத் தொகுதி, கோபி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்” பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய விவரம் வருமாறு:

“இது கிராம சபைக் கூட்டம். கிராம சபைக் கூட்டம் என்றால் எடப்பாடிக்குக் கோபம் வந்துவிடும். அதனால் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று இதற்கு நாம் பெயர் வைத்திருக்கிறோம். முதலில் வைத்தது கிராம சபைக் கூட்டம் தான். கடந்த 23ஆம் தேதி இந்த கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கினோம். நான் காஞ்சிபுரம் பகுதியில் முதன் முதலில் தொடங்கி வைத்தேன். அடுத்ததாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதிக்குச் சென்றேன். அதற்குப் பிறகு ராணிப்பேட்டைக்குச் சென்றேன். இப்படி மூன்று பகுதிகளுக்குச் சென்று, இன்று காலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்குச் சென்றேன்.

அது மிகவும் சிறப்புமிக்க தொகுதி. ஏனென்றால், அது ‘ஊழல் மணி’ தொகுதி. அங்கும் சென்றுவிட்டு தான் வந்தேன். அங்கு எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தி, அந்தக் கூட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்று முடிவு செய்து, வேலுமணி அவர்கள் ஒரு திட்டம் தீட்டினார்.

அந்தத் திட்டம் எங்களுக்கு நேற்று இரவே தெரிந்துவிட்டது. நாங்கள் எப்போதும் உஷாராக இருப்போம். அதன்படி இன்று காலையில் ஒரு சகோதரி, உதயசூரியன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாக வந்து, முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டார்.

கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் இடையில், திடீரென்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அந்த பெண் கலவரத்தில் ஈடுபட்டார்.

ஏன் இந்த கிராம சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள்? என்ன காரணம்? என்று எல்லாம் வினவினார். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தச் சகோதரி பேசுவதை நான் தெரிந்து கொண்டு, நீங்க யார் - எங்கிருந்து வந்து இருக்கிறீர்கள் - எப்படி வந்தீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னேன்.

எந்தக் கலவரத்தையும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். மரியாதையாக வெளியே சென்று விடுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் என்ன நினைத்தார் என்றால் நாம் பிடித்து அடித்துவிடுவோம். அதில் ஏற்படுகிற இரத்த காயங்களைத் தொலைக்காட்சியில் காண்பித்து விடலாம். அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தார். நாமெல்லாம் அண்ணா வழியில் - கலைஞர் வழியில் வந்திருக்க கூடியவர்கள். அதனால் அமைதியாக இருந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நம்முடைய தோழர்கள், அந்த சகோதரியை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு, அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் அந்தச் சகோதரி, என்னை அனைவரும் சேர்ந்து அடித்து விட்டார்கள் என்று ஒரு புகார் கொடுத்துவிட்டு வந்து விட்டார். நாம் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் புகார் கொடுத்து விட்டு வந்தோம்.

அந்தச் சகோதரி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தொலைபேசியில் ஊழல் மணியிடம் பேசுகிறார். அது எல்லாம் வீடியோவில் வந்துவிட்டது. அதுதான் இப்போது வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த அம்மா பேசியது - போலீஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யுங்கள் அப்படிச் செய்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று பேசியது எல்லாம் வீடியோவில் வந்து விட்டது.

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

அந்த அம்மா அ.தி.மு.க. மகளிரணி பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன்னால் அ.தி.மு.க.வில் இணைந்து இருக்கிறார்.

அந்த அம்மா வேலுமணிக்குப் பக்கத்து வீடு என்பதும், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் புகைப்படத்துடன் தெளிவாக சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

எவ்வளவோ திட்டமிட்டு, முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் அந்த தடைகளை எல்லாம் மீறி, அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் காட்டிய நம்முடைய கழகத் தோழர்களுக்கு இந்த கிராம சபைக் கூட்டத்திலிருந்து நான் என்னுடைய நன்றியை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நானும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவன்தான். ஆனால் வேலுமணி இருந்த பொறுப்பில் நாம் இருந்திருக்கிறோமே என்று கவலைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். ஆனால், ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ வழங்கியவன் என்று பெயர் எடுத்தவன் நான் என்பதால் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது.

கிராம சபைக் கூட்டங்களை உள்ளாட்சி அமைப்பு தான் நடத்த வேண்டும். ஆனால் ஆண்டுக்கு மூன்று முறை, காந்தி ஜெயந்தி, சுதந்திர நாள், குடியரசு நாள் ஆகிய இந்த மூன்று நாட்கள் நடைபெற வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

அதனால் தான் நாம், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12,600க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம்.

நான் ஒரு 60 ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினேன். நான் மட்டுமல்ல, நம்முடைய கட்சியில் இருக்கக்கூடிய முன்னோடிகள், மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தில் என்ன குறை என்பது எல்லாம் கேட்டு, அதுமட்டுமில்லாமல் அவர்களிடத்தில் மனுக்களை வாங்கிக்கொண்டு, அதையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு, அதை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேகரித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில், தாசில்தாரிடத்தில், அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.

அதன்பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி நமக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளில் ஒன்றே ஒன்றுதான் தவறிவிட்டது. 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் நம்முடைய அணி மாபெரும் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஊராட்சி சபைக் கூட்டம் தான் மிக அதிக அளவுக்கு பயன்பட்டது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து முறையாக நடத்த வேண்டும் என்று சொன்னோம். இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் போனது உங்களுக்குத் தெரியும்.

அந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி எவ்வளவோ முறைகேடுகளை எல்லாம் செய்தார்கள். அதை எல்லாம் தாண்டி 75 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்மீது இருக்கும் நம்பிக்கை. தேர்தல் நியாயமாக நடந்து இருந்தால் கிட்டத்தட்ட 90% இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.

எதற்காக சொல்கிறேன் என்றால், இன்றைக்கும் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம். இந்த கிராம சபைக் கூட்டத்தில் இருக்கக்கூடிய உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்கள் ஒன்றை நினைத்துப்பாருங்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதாவிற்குப் பிறகு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர்கள் என்னதான் ஆட்சி சிறப்பாக நடத்திடவில்லை என்றாலும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.

அவருடைய மறைவை இன்றைக்கும் நம்மால் மறக்க முடியவில்லை. அவர் மறைவில் உள்ள மர்மத்தை விசாரணையை நடத்த வேண்டும் என்று இன்றைக்கும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மார்ச் மாதத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். மே மாதத்தில் உங்களுடைய அன்போடு ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி அமையப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அதற்கு முன்பு உங்களிடத்தில் விழிப்புணர்வு; ஏற்கனவே பெற்றிருக்கும் விழிப்புணர்வோடு மேலும் பல செய்திகளை, பல உண்மைகளை, அறிந்து கொள்ள வேண்டும், அதே நேரத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை நாடி வருகிறோம். அதேபோல நீங்களும் எங்களை நாடி வந்திருக்கிறீர்கள்.

எங்களுக்கு உங்கள் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையை விட உங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை தான் அதிகமாக உள்ளது. பெண்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கிறீர்கள். ஆண்கள் உங்களைச் சுற்றிப் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்கிறார்கள்.

உட்கார்ந்திருக்கும் உங்கள் முகத்தைப் பார்க்கிறேன். உங்கள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பார்க்கிறேன். இதனை பார்க்கிறபோது, ஏதோ நம் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி போல் இருக்கிறது.

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

ஒரு அ.தி.மு.க பெண் தனியாக ஒரு கலவரத்தைச் செய்து விட்டுச் சென்றுவிட்டார். அதை நினைத்துப் பார்க்கிறேன். இவ்வளவு பெண்கள், சகோதரிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். கட்டுப்பாடாக உட்கார்ந்திருக்கிறார்கள். இதுதான் தி.மு.க. நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இப்போது மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் உங்களிடத்தில் என்னென்ன கோரிக்கைகள் இருக்கப் போகிறது என்பதைக் கேட்கப் போகிறேன்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் ஆற்றிய விவரம் வருமாறு:

மீண்டும் உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முன்னுரையில் என்னென்ன கருத்துக்கள் சொன்னேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் சுருக்கமாக இங்கு 12 பேர் பேசி இருக்கிறீர்கள்.

அதிலும் குறிப்பாக உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி இங்கே தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். 10,000 பேர் வசிக்கக்கூடிய இந்த சிறுவலூர் பஞ்சாயத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி கூடக் கொண்டுவரப்படவில்லை என்று ஒரு சிறுமி பேசியபோது சொன்னார். அதுதான் உண்மை.

அதனால் இங்கு எட்டாம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு, படிப்பைப் பாதியில் நிறுத்தக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த பஞ்சாயத்தில் 6 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருக்கின்றன. ஒரு பள்ளியில் கூட விளையாட்டு மைதானம் இல்லை. சுகாதார வசதி இல்லை என்கிற குறைபாடு இருந்து கொண்டே உள்ளது.

செங்கோட்டையனைப் பொறுத்தவரைக்கும் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமில்லை. ஒரு சீனியர் மினிஸ்டர் மட்டுமில்லை. பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக இருக்கக் கூடியவர். ஈரோடு மஞ்சளுக்கு 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்ததும், அதிக ஏற்றுமதி ஆகக் கூடிய வாய்ப்பு இருந்த வகையில் அ.தி.மு.க. அரசு அதற்கு எதையும் செய்யவில்லை. கரும்பு உற்பத்தியில் உரிய விலை கிடைக்காததால் இங்கு விவசாயிகள் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற முடியவில்லை. அதனால் அவர்கள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி நிலங்களைப் பறி கொடுக்கக்கூடிய சூழல் உள்ளது.

தொகுதியில் 19 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கமிஷன் வசூலிக்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த கொள்முதல் நிலையங்களில் மட்டும் மாதத்திற்கு 50 லட்சம் விவசாயிகளிடம் கமிஷன் வசூலிக்க கூடிய கொடுமை இந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

குடிநீர் திட்டத்தின் கீழ் கொடிவேரி குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுவலூர் ஊராட்சிக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. 10,000 பேருக்கு 2 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் மட்டுமே உள்ளன. புதிய மேல் நீர்த்தேக்கத் தொட்டி வேண்டும் என்பது இந்த மக்களுடைய கோரிக்கை. இதுவரைக்கும் இந்த ஆட்சி நிறைவேற்றவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.

கோபிசெட்டிபாளையத்தைப் பெருந்துறையுடன் இணைக்கும் மிக முக்கியமான பஞ்சாயத்து சிறுவலூர் பஞ்சாயத்து. இங்கு ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டு கொள்ளவே இல்லை.

சிறுவலூர் பஞ்சாயத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கைகள் வேண்டும் என்று 10 வருடங்களாக இந்த ஆட்சியில் நீங்கள் வைத்துக் கொண்டிருக்க அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

கோபிசெட்டிபாளையம் நகரத்திலுள்ள சாக்கடைப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் இருக்கக்கூடிய அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லை. அதனால் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய ஈரோடு மருத்துவமனைக்குத் தான் போக வேண்டிய அவசியம், கட்டாயம் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசு மருத்துவமனையை உருவாக்கி அதனால் என்ன பயன் என்ற நிலைதான் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. சிறுவலூர் ஆயிகுளம், செங்குளம், கவுண்டம்பாளையம், மல்ல நாயக்கனூர், எம்.ஜி.ஆர்.நகர் குட்டை பகுதிகளில் அதிமுகவினர் மணல் கொள்ளை நடத்துகிறார்கள். அதேபோல் பனைமரம், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. அவருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற முன்வரவில்லை.

பனைவெல்லம் தொழிற்சாலை உருவாக்கப்படும் என்று 2011 தேர்தல் அறிக்கையில் இப்பொழுது இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சி உறுதிமொழி கொடுத்தது. 3 வருடம் ஆகியது. இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல அத்திக்கடவு அவினாசி திட்டம் இந்த பகுதியில் நிறைவேற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது அ.தி.மு.க ஆட்சிதான். இந்த பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தைப் பார்த்துத்தான் மீண்டும் அந்த திட்டத்தைத் தொடங்கப் போகிறோம் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கால்வாய் மூலம் கொண்டுவர வேண்டிய தண்ணீரை 2 இன்ச் பைப் மூலம் கொண்டுவரத் திட்டம் போட்டு அத்திக்கடவுத் திட்டத்தை அப்படியே அ.தி.மு.க அரசு பாழாக்கி வருகிறது.

எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன். ஆனால் கோபி பகுதி மக்களின் கோரிக்கைகள் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை என்ற பொறுப்பும் அவருக்கு உள்ளது. ஆனால் அந்தத் துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்குத் தெரியாது. என்ன மாற்றங்கள் நடக்கிறது? என்ன அறிவிப்பு வருகிறது? அதுவே அவருக்குத் தெரியாது.

அந்த காலத்தில் செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றவர் யார் என்றால் எடப்பாடி. இன்றைக்கு எடப்பாடியிடம் கைகட்டி நிற்கிறார் செங்கோட்டையன். இப்படிப்பட்ட நிலைமை தான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழு பற்றி வேதனையோடு சொன்னீர்கள். இப்பொழுது நாங்கள் அனாதைகளாக இருக்கிறோம் என்றும் சொன்னீர்கள். தி.மு.க ஆட்சி இருந்த பொழுது, கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, எவ்வளவு வசதிகள் கிடைத்தது. சுழல்நிதி கிடைத்தது. மானியம் கிடைத்தது. வங்கிக் கடன் கிடைத்தது. இப்பொழுது இல்லை என்று சொன்னீர்கள். உண்மைதான்.

1989 முதன்முதலாக கலைஞர் அவர்கள், தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை உருவாக்கினார்.

அந்த திட்டத்தை நம் ஆட்சியில், நான் துணை முதலமைச்சராக மட்டுமில்லாமல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபொழுது தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுவை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அதற்காகத் தனியாகக் கவனம் செலுத்தினேன்.

குறிப்பாகப் பெண்களுக்குக் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது, அருமையான பல திட்டங்கள் கொண்டு வந்தார். சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாகப் பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டங்களைக் கொண்டுவந்தார். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணுக்குத் திருமணம் என்றால் அந்தத் திருமணத்திற்கு உதவித்தொகை தந்த ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க ஆட்சி தான்.

இப்படிப் பல்வேறு திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர்களுடைய முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தியது தி.மு.க ஆட்சி.

“8 முறை MLA-வாக இருந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அவருக்கு எட்டாக்கனியே” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

கொரோனா காலத்தை பற்றி இங்கு ஒரு சகோதரி சொன்னார்கள். ‘ஒன்றிணைவோம் வா‘ என்ற திட்டத்தின் கீழ் தி.மு.கழகம் சார்பில், உயிரைப் பணயம் வைத்து களத்தில் வந்து நின்றோம். இன்னும் 4 மாதங்கள்தான் இருக்கிறது. நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்ற அந்த நம்பிக்கையோடுதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் உரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, ஈரோடு திரும்பும் வழியில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள திங்களூர் பகுதியில், நான்கு சாலை சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories