மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க வக்கற்ற எடப்பாடி அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா? மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

முதலீடுகள் ஈர்த்தது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கூறிய அனைத்தும் பொய்யென தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெங்களூரு பதிப்பு மெய்ப்பித்திருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலீடுகளை ஈர்க்க வக்கற்ற எடப்பாடி அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?  மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"முதலீடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்டது; இதில் முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ "நூற்றுக் கணக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம்"; "கோடிக் கணக்கில் முதலீடுகளை ஈர்த்து விட்டோம்" என்று, திரும்பத் திரும்பப் பொய்களையே சொல்லி, ஜம்பம் பேசி வந்த முதலமைச்சர் பழனிசாமியின் முகமூடியை, 28.12.2020 நாளிடப்பட்ட பெங்களூரு பதிப்பு, “தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, கழற்றித் தரையில் வீசி விட்டது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முதலீடான 1 லட்சத்து 90 ஆயிரம் கோடியில் பெற்றது வெறும் 9.4 சதவீதம் மட்டும்தான்; அதாவது வெறும் 18 ஆயிரத்து 188 கோடிதான் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆகவே கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் பெற்ற முதலீடுகள், ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டிற்குக் கூட்டமாகப் படையெடுத்தது, உள்ளிட்ட நாடகங்களின் மூலமாக இதுவரை போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் வெத்து வேட்டு! எல்லாமே வீண் விளம்பரம் என்பது நிரூபணமாகி விட்டது. "கொரோனா காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்த்ததில் முதல் மாநிலம்" என்று அரசுப் பணத்தில் அதாவது மக்களின் வரிப் பணத்தில், பத்திரிகைகளில் இன்று இரண்டு முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ள பழனிசாமியின் சாயம் வெளுத்து விட்டது; வேடம் கலைந்து விட்டது !

முதலீடுகளை ஈர்க்க வக்கற்ற - வழி இல்லாத இந்த அரசுக்கு முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories