மு.க.ஸ்டாலின்

“இனமான பேராசிரியரின் புகழ் போற்றி, இன்ப திராவிடத்தை காப்போம்.. களத்திலும் வெல்வோம்..” மு.க.ஸ்டாலின் மடல்!

வருமானத்தைவிடத் தன்மானமே - இனமானமே பெரிது என்றும்; தன்னலத்தைவிட இயக்கத்தின் நலனே - தமிழர் நலனே தலை சிறந்தது என்றும்; எதற்கும் தாழாமல் நிமிர்ந்து நின்றே வாழ்ந்து காட்டினார் நம் பேராசிரியர்.

“இனமான பேராசிரியரின் புகழ் போற்றி, இன்ப திராவிடத்தை காப்போம்.. களத்திலும் வெல்வோம்..” மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"இனமான பேராசிரியர் புகழ் போற்றி திராவிடம் காப்போம் - எல்லா களத்திலும் வெல்வோம்!" என மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதில், “பெரியார் ஒருவர்தான் பெரியார், அறிஞர் என்றால் நம் அண்ணா, நாவலர் என்றால் நெடுஞ்செழியன், கலைஞர் என்றால் முத்தமிழறிஞரான நம் தலைவர்; பேராசிரியர் என்றால், நம் நெஞ்சங்களில் நீங்காமல் என்றென்றும் நிறைந்திருக்கும் பெருந்தகையாளர் அன்பழகனார் ஒருவரேதான். இந்த உண்மைகளைத் திராவிட இயக்கத்தாருக்கு எடுத்துச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.

சத்தான திராவிட அரசியல் சித்தாந்தத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு - அதற்காக இறுதி மூச்சு இருந்தவரை அயராது பாடுபட்டவர் இனமானப் பேராசிரியர். பிறப்பால் அனைவருமே மனிதர்கள்தான் - அதில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை என்பதுதான் சமூக நீதித் தத்துவத்தின் சாரம். அதனைத் தன் வாழ்க்கையின் நடைமுறை இலட்சியமாகக் கொண்டு அரும்பாடுபட்ட உறுதிமிக்க கொள்கை ஏந்தலாகத் திகழ்ந்தவர் பேராசிரியப் பெருந்தகை.

“முதலில் நான் மனிதன். இரண்டாவது நான் அன்பழகன். மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன். நான்காவது நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் நான் சாகிற வரையில் என்னோடு இருக்கும். இயற்கையில் வரும் சாக்காடு என் வரலாற்றை முடிக்கலாமே தவிர, இடையில் என் வாழ்வில் புகுவதற்கு மாற்றான் எவனுக்கும் இடம் இருக்காது” - இப்படித் தன்னைப் பற்றி, தன்மானம் போற்றிப் பிரகடனப்படுத்தியவர் நம் பேராசிரியர். அவருக்கு இன்று (19.12.2020 ), 98வது பிறந்தநாள். அவர் நம்முடன் இல்லாத முதல் பிறந்தநாள் என்ற இறுக்கமான வேதனை நம் இதயத்தை ஈட்டியாகத் தாக்கினாலும், அவர் நமக்குக் கற்பித்துள்ள இலட்சியப் பாடங்கள், என்றென்றும் கலங்கரை விளக்கமாக நம்மை வழிநடத்தி, இந்த இயக்கத்திற்கு மேலும் மேலும் எஃகினை ஒத்த வலிமையைத் தந்திடும்.

“இனமான பேராசிரியரின் புகழ் போற்றி, இன்ப திராவிடத்தை காப்போம்.. களத்திலும் வெல்வோம்..” மு.க.ஸ்டாலின் மடல்!

வருமானத்தைவிடத் தன்மானமே - இனமானமே பெரிது என்றும்; தன்னலத்தைவிட இயக்கத்தின் நலனே - தமிழர் நலனே தலை சிறந்தது என்றும்; எதற்கும் தாழாமல் நிமிர்ந்து நின்றே வாழ்ந்து காட்டினார் நம் பேராசிரியர். தந்தை பெரியாரின் சிந்தனைகளை நெஞ்சில் சுமந்து, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடந்து, தலைவர் கலைஞருக்குத் தோளோடு தோள் கொடுத்து - தோன்றாத் துணையாக நின்றவர் இனமானப் பேராசிரியர். தலைவர் கலைஞரைவிட வயதில் மூத்தவர் என்றபோதும், அண்ணாவுக்குப் பிறகு இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்து, எதிர்காலம் முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற இணையிலாப் பொறுப்பினைத் தெளிவாக உணர்ந்து, கலைஞரையே தலைவராக ஏற்றுக்கொண்டு, கொள்கைத் தடம் குறையாமல் மாறாமல், அரசியல் பாதையில் அரிமா எனப் பயணித்தவர்.

‘மாற்றான் எவனுக்கும் இடம் இருக்காது’ என்று சொன்னதை நிச்சயப்படுத்தும் வகையில், தன்னிச்சையாகத் தன்னைத் தேடி வந்த தூதுப் புறாக்களைத் ‘தூ’வெனக் காரி உமிழ்ந்து, துரத்தியடித்து, மெய்ப்பித்துக் காட்டியவர். பதவியைவிடக் கொள்கையே மிகவும் உயர்வானது; அந்தக் கொள்கையைத் தூக்கிப் பிடித்து, நிலைநிறுத்தி - மக்கள் தொண்டாற்றிடத் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கமே வழி என்பதை ஒவ்வொரு மேடையிலும் ஊரறிய உரக்கச் சொன்னவர்.

தி.மு.க. பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள் என்றார் பேரறிஞர் அண்ணா. அதுபோல, தி.மு.க நடத்திய மாநாடுகள் அனைத்தும் இன - மொழி வரலாற்றுக்கான எடுப்பான பல்கலைக் கழகங்கள். அந்தப் பல்கலைக் கழகத்தில் குவிந்திருந்த பல இலட்சக்கணக்கான தோழர்களுக்கு, கொள்கை வகுப்பு எடுத்து சுயமரியாதை அறிவு கொளுத்தியவர் நம் பேராசிரியர். ஒவ்வொரு மாநாட்டிலும் அவர் ஆற்றிய உரைகள், திராவிட இயக்கத்தின் வரலாற்றை, அடிமைப்பட்டிருந்த தமிழினம் தன்மானம் கொண்டு விழித்தெழுந்து வளர்ச்சி அடைந்த பின்னணியை, அதற்குப் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஆற்றிய அரும் பணிகளை, அதன் காரணமாக ஆதிக்கபுரிகள் தகர்ந்து நொறுங்கித் தரைமட்டமானதை, ஏழை எளிய மக்கள் - பாடுபடும் பாட்டாளிகள் - சாதாரண சாமானியர்கள் - வாழ்வு பெற்றதை, வரிசையாக அடுக்கி அழகொழுகச் சொல்கின்ற அவரது பேச்சுப் பாணி, கேட்பவர்கள் அனைவரின் உள்ளத்திலும், திகட்டாத திராவிட உணர்வை - தமிழ் மீதான தணியாத பற்றை ஊட்டிவிடும்.

தமிழினம் தலை நிமிர்வதற்கும் - நிமிர்ந்த தலை எக்காலத்திலும் தாழாமல் நிலைத்திருப்பதற்கும் - திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மக்கள் இயக்கம் என்றென்றும் இன்றியமையாத் தேவை என்பதை, செறிவார்ந்த தன் சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் அனைவர்க்கும் உணர்த்தியவர் இனமானப் பேராசிரியர். தலைவர் கலைஞருக்குக் குருதி வழி அண்ணன் இல்லை என்கிற குறையை, கொள்கை வழி அண்ணனாக இருந்து நிறைவு செய்து நிரப்பியவர். அதேபோல, எனக்குக் கண்ணான கழகப் பாதையினை வழிகாட்டி அடையாளப்படுத்திய அருமைப் பெரியப்பாவாக, இயக்கத்தின் இலட்சியத்தைக் கற்பித்து இதயம் கவர்ந்த ஆசானாக, களத்தில் ஆற்றிய பணிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் உற்சாகப் பாராட்டுகளை வழங்கிய கழகக் குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருந்தவர் பேராசிரியப் பெருந்தகை.

“இனமான பேராசிரியரின் புகழ் போற்றி, இன்ப திராவிடத்தை காப்போம்.. களத்திலும் வெல்வோம்..” மு.க.ஸ்டாலின் மடல்!

தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடம் பறித்த வேதனை தீர்வதற்கு முன்பே, தன் கொள்கை உடன்பிறப்பு இருக்குமிடம் தேடிப் போய்விட்டாரோ நம் பேராசிரியர் என்று இதயம் கனக்கின்ற அளவுக்கு, இயற்கை அவரைப் பறித்துக் கொண்டது. இழப்புகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு மீள்வதற்கான வழியினை நமக்குத் தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் கற்றுத் தந்திருப்பதால், இந்தத் துயரக் கடலையும், இலட்சியப் படகில் கடந்து கொண்டிருக்கிறோம். இலட்சிய வாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் 98வது பிறந்தநாள் விழாவினை கல்லூரி மாணவ மாணவியர்க்குக் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிடும் விழாவாகக் கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.

“எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்.. எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்’ என்ற அடிப்படையில் இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவில், உங்களில் ஒருவனான நான், கல்வி உதவித் தொகையினை வழங்கி உரையாற்றுகிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களைப் போலவோ - பேராசிரியர் பெருந்தகை அவர்களைப் போலவோ, “கேட்டார் பிணிக்கும் தகையவாய்” நான் பேசக்கூடியவன் அல்ல. ஆனால், அவர்களின் பேச்சுகளையும் அதில் இருந்த அரிய பெரிய கருத்துகளையும் கேட்டறிந்து உரம் பெற்றவன்; உறுதிமிக்க உள்ளத்தைப் பெற்றவன்.

தலைவர் கலைஞர் - இனமான பேராசிரியரின் உடன்பிறப்பாக, உங்களில் ஒருவனாக - இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் நிலையில், அவர்கள் காட்டிய வழியில் - ஊட்டிய உணர்வில் எத்தகைய நெருக்கடிகளையும் கடந்து, இலட்சியங்களை வென்றெடுக்கும் தீர்மானத்துடன் திடசிந்தையோடு பயணிப்பது என்ற உறுதிமொழியினை பேராசிரியர் அவர்களின் பிறந்த நன்னாளில் மீண்டும் ஒரு முறை எடுத்துக் கொள்கிறேன். உடன்பிறப்புகளான நீங்கள் ஒவ்வொருவரும் அத்தகைய உறுதி மொழியை ஏற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் சுயமரியாதை - சமூக நீதி - மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளின் தாயகமாக விளங்கும் திராவிட இயக்கத்தின் தொட்டிலான தமிழகத்தில், முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றுப் பயணத்தை நெருங்கும் தி.மு.கழகம், நூற்றாண்டு கடந்து தொடர்ந்து பயணித்திட உங்களில் ஒருவனான நான் எந்நாளும் முன்னிற்பேன்; உங்களோடு இணைந்து பயணிப்பேன். அதற்கான கூடுதல் வலிமை தரும் நாளாக இனமானப் பேராசிரியர் பிறந்தநாளை முன்னெடுப்போம்.

பேராசிரியப் பெருந்தகையின் வாடாத புகழ் போற்றி - அவர் ஏந்திய திராவிடக் கொள்கை எனும் இலட்சியச் சுடர் அணையாமல் காத்து - கழகத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வோம். மக்களுக்காகத் தொடர்ந்து பயணித்திடும் தி.மு.கழகம், தனது தேர்தல் பரப்புரையின் அடுத்த கட்டத்தை டிசம்பர் 20ஆம் நாள் தொடங்குகிறது.

நாம் கவனமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வெற்றி இலக்கை நோக்கிய வீறு குன்றாத அடிகள். கவனம் சிதறாமல் களப் பணியாற்றுவோம். ஒருங்கிணைந்து - ஒற்றுமை காத்துச் செயலாற்றி, தோழமை உறவுகளுடன் கைகோர்த்து, அதிகாரத்தில் இருப்போரின் வஞ்சகச் சூழ்ச்சிகளை வேரறுத்து, களத்தினில் வென்று - கழக ஆட்சியினை அமைத்து, தலைவர் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்குவோம். இனமானப் பேராசிரியர் பிறந்தநாளில் அந்த உணர்வையும் வலிமையையும் நிரம்பப் பெறுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories