மு.க.ஸ்டாலின்

“இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்போம்! ஆட்சி அமைப்போம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!

“வெல்லமண்டி தரகராக இருந்தவர் விவசாயி வேடம் போடுவதால், உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள்” என கடலூர் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்போம்! ஆட்சி அமைப்போம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த முதலமைச்சர் பழனிசாமி, இப்போது போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி கொச்சைப்படுத்தத் தொடங்கி இருக்கிறார்” என கடலூர் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (17-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“கடல் சூழ்ந்த கடலூரில் மனிதக் கடலைப் பார்க்கிறேன் என்று சொல்லத்தக்க வகையில் கூடியிருக்கிறீர்கள்! கடல் வற்றி உருவான ஊர் என்பதால் கடலூரா? கடல் சூழ்ந்த ஊர் என்பதால் கடலூரா? எப்போதும் தண்ணீரில் மிதக்கும் ஊர் என்பதால் கடலூரா? - என்று முடிவுக்கு வர முடியாத அளவுக்கு இயற்கையால் சூழப்பட்டது கடலூர்!

சோழர் காலத்தில் தொடங்கி கடல் வாணிபம் செழித்த ஊராகவே கடலூர் இருந்து வந்துள்ளது. இன்னும் சொன்னால், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தலைமையிடமாக ஆவதற்கு முன்னால் கடலூர் புனித டேவிட் கோட்டை தான் தலைமையிடமாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இருந்தது. அத்தகைய வரலாற்றுப் புகழ்பெற்ற ஊர் கடலூர்!

'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையான வடலூர் வள்ளலார் வலம் வந்த மாவட்டம்! திராவிட இயக்கத்துக்கு ஏராளமான தளகர்த்தர்களை உருவாக்கிக் கொடுத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருக்கும் மாவட்டம் இந்த மாவட்டம்! பழைய தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய கடலூர் மாவட்டமாக இருந்தாலும் சரி, கடலூர் என்றும் கழக ஊராகவே இருந்துள்ளது!

தென்னாட்டு மதுலிமாயி என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, வேங்கை என்று கலைஞரால் அழைக்கப்பட்ட முட்டம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கருப்பு இளவரசர் என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட கடலூர் வழக்கறிஞர் இளம்வழுதி, சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை என்று அண்ணாவால் போற்றப்பட்ட விருத்தாசலம் செல்வராஜ், தலைவர்கள் அனைவரையும் உபசரிப்பதில் தலைசிறந்தவரான பழக்கடை ஏ.கோவிந்தன், அத்தான், அத்தான் என்று கலைஞரை அன்போடு அழைக்கக் கூடிய பொன்.சொக்கலிங்கம், இளைஞர்களை கழகத்தை நோக்கி ஈர்த்த சகோதரர்கள் துரை.கிருஷ்ணமூர்த்தி, துரை.கலியமூர்த்தி, காசைப் பற்றிக் கவலைப்படாமல் கழகம் வளர்த்த புவனகிரி சிவலோகம், எவருக்கும் பயப்படாத பண்ருட்டி மணி, பட்டியலின மக்கள் மத்தியில் கழகத்தைக் கொண்டு சேர்த்த பண்ருட்டி மிசா ஆர்.எஸ்.மணி, விருத்தாசலம் நகரம் முழுவதும் கழகம் விதைத்த மிசா கிருஷ்ணமூர்த்தி, விருத்தாசலம் ஒன்றியம் தோறும் திராவிடம் விதைத்த போராளி தாயகம் ராஜூ போன்ற எண்ணற்ற தியாகிகளின் இரத்தத்தால், வியர்வையால் இன்று கழகம் கம்பீரமாக நிற்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் வேங்கை என்று அழைக்கப்பட்டவர் தான் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அவர் மறைந்தபோது சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை என்றும் முதலமைச்சர் கலைஞர் பெயர் சூட்டினார்.

அந்த வேங்கையின் மைந்தன் தான் இன்று கடலூர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள். வேங்கையின் மைந்தன், வேங்கையாகத்தானே இருக்க முடியும் என்பதை கடலூர் மாவட்டத்தில் கம்பீரமாக நிரூபித்துக் கொண்டு இருக்கும் பன்னீரை மனதார பாராட்டுகிறேன்.

அதேபோல், கிழக்கு மாவட்டத்துக்குப் போர்வீரராக – அனைவரையும் அரவணைத்துச் செல்லும் செயல்வீரராக கணேசன் கிடைத்துள்ளார். இவர்களுக்கு தோள்கொடுத்து செயல்பட்டு வரும் மற்ற நிர்வாகிகளும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறீர்கள். உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இன்றைய நாள் மிக முக்கியமான நாள்! தமிழக வரலாற்றில் பொன்னான நாள்!

டிசம்பர் 17 - இன்றைய தினம் தான் நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பதவி ஏற்ற நாள்! நூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1920-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் அமைச்சரவை முதன்முதலாக பதவி ஏற்றது.

கடலூருக்கும் இந்தப் பெருமையில் பெரும் பங்குண்டு. அப்படி முதலமைச்சராக பொறுப்பேற்றவர் கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் அவர்கள். இன்று சரியாக 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.

1920-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தான் வெற்றி பெற்றது. அப்போது முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள மறுத்த சர். பிட்டி. தியாகராயர் அவர்களால், இந்தப் பதவிக்கு யார் தகுதி வாய்ந்தவர் என்று சிந்தித்துத் தேர்வு செய்யப்பட்டவர் தான், கடலூர் வழக்கறிஞர் திவான் பகதூர் ஏ.சுப்பராயலு அவர்கள். அன்றைய தென்னார்க்காடு மாவட்டம் அகரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இவர். ஏற்கனவே கடலூர் நகர சபைத் தலைவராக இருந்தவர்.

கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்த பெருமை இவரைத் தான் சாரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கக் கல்வி மன்றம் ஏற்படுத்தினார். தனது சொத்துக்களை பொதுப் பயன்பாட்டுக்காகத் தாரைவார்த்த வள்ளல் தான் இந்த சுப்பராயலு அவர்கள். தமிழகத்தில் அன்று முதல் புதிய வரலாறு தொடங்கியது. அதற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தவர் கடலூர் ஏ.சுப்பராயலு அவர்கள்! அவரது நினைவுகளுக்கு இந்த நேரத்தில் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்!

அவர் பிறந்த கடலூரில் தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டம் இன்று நடப்பது பொருத்தமானது.

நீதிக்கட்சியின் தொடர்ச்சி நாம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள். அந்தத் தொடர்ச்சியை 100 ஆண்டுகள் கடந்த பிறகும் விடாமல் கடைப்பிடிப்பதில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை அடங்கி இருக்கிறது!

சில நாட்களுக்கு முன்பு தான் கடலூர் வந்து வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்டேன். ஓடும் வெள்ளத்துக்குள் அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வம். நானும் முதன்மைச் செயலாளர் நேரு அவர்களும் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டோம். நிலைமை பெரிய அளவில் இன்னும் மாறவில்லை என்றும் பன்னீர்செல்வம் சொன்னார்.

அந்த வெள்ளச் சேதப்பகுதிகளைப் பார்வையிட்டபோது, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கண்டாக வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தக் கூட்டத்தின் வாயிலாக கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு முக்கியமான வாக்குறுதியை வழங்குகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், எப்போதும் வெள்ளத்தால் சூழப்படும் கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இதுதொடர்பாக சில வல்லுநர்களிடம் விசாரித்தேன். கடலூர் என்பது அதன் மேற்குப் பகுதியில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கும் வடிகாலாக உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் போன்றவற்றுக்கு மழைநீர் வடிகால் மாவட்டம் இந்த கடலூர் தான். அந்த மாவட்டத்தின் மழை நீர் - தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆறு மற்றும் பரவனாறு வழியாக கடலுக்கு வழிந்தோட வகை செய்யும் திட்டம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் நிரந்தரமான தீர்வாக அமைய முடியும்.

எனவே அந்த மாவட்டங்களுக்கும் சேர்த்து மழை நீர் வடிகால் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கியாக வேண்டும். அறிவியல்பூர்வமான ஆய்வை இதற்காக மேற்கொள்வோம். நிரந்தரத் தீர்வை நிச்சயம் காண்போம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

மழை வந்தாலே கடலூரில் வெள்ளம் வரும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். தானே புயல் ஏற்பட்ட 2011 முதல் ஆட்சியில் இருக்கிறது அ.தி.மு.க., வெள்ளத் தடுப்புப் பணிக்காக என்ன செய்தது? ஏதாவது தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிட்டீர்களா?

“இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்போம்! ஆட்சி அமைப்போம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை!
Vignesh

மழை வெள்ளத்திற்கு ஆளாகும் கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 2015-ஆம் ஆண்டு 140 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தீட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏரி, குளங்கள் தூர்வாருதல், வடிகால் கால்வாய் கட்டுதல், ஆற்றுக் கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அதனை முறையாகச் செய்யவில்லை என்பது, இப்போது பெய்த மழையில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அந்தப் பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இந்தளவுக்கு வெள்ளம் வந்திருக்காது!

கடலூர் கெடிலம் ஆற்றின் கரைகளை திருவந்திபுரத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை பலப்படுத்துவதில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். சுமார் 22 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

சிறியதும் பெரியதும் என கடலூர் மாவட்டத்தில் பாசனத்திற்காக வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி மற்றும் பரவனாறு ஆகியவை உள்ளன. இவற்றையெல்லாம் முறையாக தூர்வாரி பராமரித்து இருந்தால் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அதை இந்த எடப்பாடி அரசு செய்யவில்லை!

57 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடலூர் மாவட்ட கடற்கரை பகுதியில், கடலரிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக 49 கடற்கரை மீனவ கிராமங்களில் பாதுகாப்பைக் கருதி 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்திலும் பெருமளவு ஊழல் நடந்துள்ளதே தவிர, முறையான பணிகள் செய்யப்படவில்லை!

ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இயங்கி வந்த கடலூர் துறைமுகத்தை 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இப்படி இந்த அ.தி.மு.க அரசால் கடலூர் கவனிக்கப்படாததால் தான் தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதக்கிறது.

இந்த மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அதுவும் தொழில் துறை அமைச்சராகவும் இருக்கிறார். அதுவும் சீனியர் அமைச்சர். அந்த அமைச்சர் எம்.சி.சம்பத் என்ன செய்தார்?

2011 முதல் 2016 வரை வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக எம்.சி.சம்பத் பதவி வகித்துள்ளார். 2016 முதல் இன்று வரை தொழில்துறை அமைச்சராக உள்ளார். இரண்டு முறையும் கடலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். இந்த மாவட்டத்து அமைச்சர் என்ற முறையில் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன பணிகளை சம்பத் செய்துள்ளார் என்பது தான் இந்த மாவட்டத்து மக்கள் எழுப்பும் ஒரே கேள்வி!

மருத்துவக் கல்லூரிகளைத் திறந்ததைத் தனது சாதனையாக பழனிசாமி சொல்லி வருகிறார். ஆனால் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்நாட்டு விழாவை நான் நடத்தினேன். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 116 ஏக்கர் நிலப்பரப்பில் அது அமைந்திருக்க வேண்டும். நான் அடிக்கல் நாட்டியதை இந்த அ.தி.மு.க அரசு செயல்படுத்தி இருந்தால் கடலூர் மக்களுக்கு மருத்துவ அரணாக அது அமைந்திருக்கும். அதனை பழனிசாமி கிடப்பில் போட்டது ஏன்? சம்பத் ஏன் அதனைச் செயல்படுத்தவில்லை? பத்து ஆண்டுகாலமாக கடலூருக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வராததற்கு பழனிசாமியும் சம்பத்தும் தானே காரணம்?

இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிகள் கட்ட எந்த இடத்தில் அடிக்கல் நாட்டினேனோ, அதே இடத்தில், கழக ஆட்சி அமைந்தவுடன் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதைக் இந்தக் கூட்டத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் கடலூருக்கு மாற்றுப்பாதையோ புறவழிச்சாலையோ அமைத்தார்களா? இதுவரை இல்லை!

சிதம்பரம் நகராட்சியில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் எந்தவித பலனும் அளிக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதி விவசாயிகள் பெருமளவில் கரும்பு பயிர் செய்து தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி வருகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக, முழுமையாக கிடைக்கவில்லை. அதற்காகப் போராடுவதே அவர்களது வேலையாக மாறிவிட்டது. தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் எம்.சி.சம்பத் அந்தப் பணத்தை வாங்கித் தர முயன்றாரா என்றால் அதுவும் இல்லை!

பொதுவாக வெள்ளச் சேதங்கள் ஏற்படும்போது அதிகமாகப் பாதிக்கும் பகுதி இது என்பதால் நிதிகள் இந்த மாவட்டத்துக்கு வந்துள்ளது. அதைக் கூட முறையாக பயன்படுத்தவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை!

புதிதாக எதையும் கொண்டு வராவிட்டாலும் தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களையாவது ஒழுங்காக முடித்தார்களா என்றால் அதுவும் இல்லை!

2007-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் 40 கோடி மதிப்பீட்டில் கடலூர் நகராட்சியில் உருவாக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் இப்போது வரை முழுமை அடையவில்லை. கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள வடிகாலாக தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த பரவனாறு அருவா மூக்கு திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

தி.மு.க ஆட்சியில் கடலூர் மாவட்டத்துக்கு ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.

* கடலூர் மாவட்டமும் நாகை மாவட்டமும் இணையும் கொள்ளிடத்தில் 52 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டிய அரசு தி.மு.க அரசு!

* பண்ருட்டியில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி.

* சோனம் குப்பம், சொத்தி குப்பம், தாழங்குடா போன்ற பகுதிகளுக்கு ஆற்றின் மீது மேம்பாலங்கள்.

* உறையூரில் துணைமின் நிலையம்!

* நெல்லிக்குப்பத்தில் புதிய பேருந்து நிலையம்

* பண்ருட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

* கடலூரில் மாவட்ட காவல்துறை அலுவலகம், நீதிமன்றக் கட்டடம், வட்டாட்சியர் அலுவலக கட்டடம்.

* காட்டுமன்னார்கோவிலில் வட்டாட்சியர் அலுவலகம்

* குறிஞ்சிப்பாடி புதிய தாலுகா ஆனது!

* குறிஞ்சிப்பாடியில் புதிய மருத்துவமனை!

* திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலம் ஆகியவை தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இப்படி அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்துச் சொல்லத் தயாரா?

எம்.சி.சம்பத் தொழில் துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் இருக்கிறார். கடலூர் மாவட்டத்துக்கு என்ன புதிய தொழில் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்? அதைச் சொல்லத் தயாரா?

விருத்தாசலம் பீங்கான் தொழிற்சாலை கஷ்ட காலத்தில் இருக்கிறது.

பண்ருட்டிக்கு முந்திரி தொழிற்சாலை வரும் என்றீர்களே. வாக்குறுதி என்னவானது?

கடலூரில் பவர் பிளாண்ட் என்னவானது?

கடலூர் துறைமுகத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திவிட்டீர்களா?

கரும்பு ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டினீர்களே! கரும்பு ஆராய்ச்சிக்கு என்ன செய்தீர்கள்?

பாலூர் பழ ஆராய்ச்சி நிலையத்தை வளர்த்தெடுக்க என்ன செய்தீர்கள்? இப்படி ஆராய்ச்சி நிலையங்கள் இருப்பதாவது வேளாண்மைத் துறை அமைச்சருக்குத் தெரியுமா?

தியாகவல்லி ஊராட்சி, நொச்சிக்காட்டில் புதிய கடலூர் பவர் பிளாண்ட் துவக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதனை அ.தி.மு.க ஆட்சி முடக்கியது ஏன்?

பெரியகுப்பத்தில் நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் 10 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அ.தி.மு.க அரசால் அது நிறுத்தப்பட்டதே! ஏன்?

- இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் எம்.சி.சம்பத்தால் பதில் தர முடியுமா?

நெடுஞ்சாலை டெண்டர்களில் காசு அடிக்க முடியும் என்பதால் அதிலேயே குறியாக இருந்தால் மற்ற துறைகள் எப்படி வளரும்? அப்படிப் போட்ட சாலைகளாவது தரமானதா என்றால் அதுவும் இல்லை. இப்போது பெய்த மழையில் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். 2 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்த்ததாகச் சொன்னார்கள். அப்போதும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தான்.

2 லட்சம் கோடிக்கு தமிழகத்தில் என்னென்ன தொழில்கள் தொடங்கப்பட்டது என்பதை அவர் சொல்லத் தயாரா?

பழனிசாமி முதலமைச்சராக வந்தபிறகும் ஒரு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். 3 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்த்ததாகச் சொன்னார்கள். முதலமைச்சர் உலகநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அமைச்சர்கள் பலரும் உலகம் சுற்றி வந்தார்கள். 3 லட்சம் கோடிக்கு முதலீடு வந்துவிட்டதா? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்? அமைச்சர் சம்பத்தால் சொல்ல முடியுமா?

சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் ஒரு விழா நடந்துள்ளது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'முதலீட்டாளர்களின் சரியான தேர்வு தமிழ்நாடு தான்' என்று சொல்லி இருக்கிறார். இதைப் போல பச்சைப் பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்திய அரசு சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப்பட்டியல் அது. இதில் 14-ஆவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. பதினான்காவது இடத்தில் இருக்கும் தமிழகத்துக்குத் தொழில் தொடங்க யார் வருவார்கள்?

இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது மத்திய அரசு தான். உங்களது கூட்டணி அரசாங்கம் வெளியிட்ட பட்டியலிலேயே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்தளவுக்குப் பல் இளிக்கிறது. இதை விட மோசமான ஆட்சிக்கு ஆதாரம் வேண்டுமா?

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தொழில்வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்தது. அதுதான் உண்மையான சாதனை. இப்போது நாம் பார்ப்பது எல்லாம் வேதனை!

“தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கடிகாரம் பின்னோக்கி திருப்பி வைக்கப்பட்டு வேகமாக ஓடுகிறது" என்று அ.தி.மு.க ஆட்சியைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் வளர்ச்சிக் கடிகாரம் பின்னோக்கித் திருப்பி வைக்கப்பட்டு மிகமிக வேகமாக ஓடுகிறது. எல்லா விதத்திலும் பின் தங்கிவிட்டோம்.

ஆனால் அவர் “விருது வாங்கிவிட்டேன், விருது வாங்கிவிட்டேன்” என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொள்கிறார். தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறார். தன்னைத் தானே அவர் ஏமாற்றிக் கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை!

நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலே தண்ணீரில் மிதந்தது. மூலவர் சன்னிதி பிரகாரமே நான்கு அடி தண்ணீரில் மிதந்தது. அம்மன் சன்னிதி, மூலவர் சன்னிதி ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியது. இடுப்பளவு தண்ணீரில் நீந்தி பக்தர்கள் சென்று வழிபட்டுள்ளார்கள். சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றன. குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன.

மழை நீரைச் சேமிக்க போதிய கட்டமைப்பு செய்யப்படாததால்தான் சென்னையின் பல பகுதிகள் மிதந்தது. இப்படி எல்லாத் துறைகளிலும் படம் காட்டப்படுகிறதே தவிர, திட்டம் தீட்டப்படுவதும் இல்லை. செயல்படுத்தப்படுவதும் இல்லை!

எல்லாத் துறைகளிலும் தலைநிமிர்ந்த தமிழ்நாடு தரைமட்டமானதை நிமிர்த்த பழனிசாமியால் முடியவில்லை; முடியவும் முடியாது!

அவருக்கு மக்களைப் பற்றிய அக்கறையும் இல்லை, அன்பும் இல்லை, தொலைநோக்கு பார்வையும் இல்லை, எதிர்காலச் சிந்தனையும் இல்லை. அவரிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் குறைந்தபட்ச நன்மையையாவது அவரால் செய்ய முடியவில்லை என்பதுதான் வேதனைக்குரியது.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் விழுந்து விழுந்து அவர் ஆதரிக்கிறார்.

சமீபத்தில் கூட வேளாண் சட்டங்களை ஆதரித்து பேட்டி அளித்த பழனிசாமி, “பா.ஜ.க.வினர் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை நான் செய்து வருகிறேன்" என்று கூச்சம் இல்லாமல் சொன்னார். அப்படி பா.ஜ.க.வின் பாதம் தாங்கும் பழனிசாமியால், அந்த மத்திய அரசிடம் இருந்து சிறு நன்மைகளையாவது தமிழ்நாட்டுக்கு வாங்கித் தர அவரால் முடிந்ததா?

கடந்த 2011 முதல் தமிழகத்தில் ஏற்பட்ட எந்தப் பேரிடருக்காவது தமிழகம் கேட்ட தொகையை மத்திய அரசு கொடுத்திருக்கிறதா? இல்லை!

2011-12-ஆம் ஆண்டில், தானே புயல் தாக்கிய போது தமிழகம் 5 ஆயிரத்து 249 கோடி கேட்டது. ஆனால் பா.ஜ.க அரசு கொடுத்தது 500 கோடிதான்!

2012-13-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சிக்கு தமிழகம் கேட்டது 9 ஆயிரத்து 988 கோடி ரூபாய். ஆனால் பா.ஜ.க அரசு கொடுத்தது 656 கோடி தான்!

2015-ஆம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது. தமிழக அரசு 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் பா.ஜ.க. அரசு கொடுத்தது ஆயிரத்து 738 கோடி ரூபாய் தான்!

2016-ஆம் ஆண்டில் வர்தா புயல் வந்தது. தமிழக அரசு 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் பாஜக அரசு கொடுத்தது வெறும் 266 கோடி ரூபாய் தான்!

2017-18-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் வந்தது. தமிழக அரசு 9 ஆயிரத்து 302 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் வந்தது 133 கோடி ரூபாய் தான்!

2018-19-ஆம் ஆண்டில் கஜா புயல் வந்தது. தமிழக அரசு 17 ஆயிரத்து 899 கோடி கேட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு தந்தது ஆயிரத்து 145 கோடி ரூபாய் தான்!

இப்போது நிவர் புயல் வந்தது. என்ன தரும் மத்திய அரசு? புரெவி புயல் வந்தது. என்ன தரும் மத்திய அரசு?

மத்திய அரசுக்குத் தருவதற்கு மனமில்லை! மாநில அரசுக்கு வாங்குவதற்கு பலமில்லை!

இப்படிப்பட்ட உதவாக்கரைகள் கையில் ஆட்சி இருக்கலாமா என்பதுதான் நான் எழுப்பும் கேள்வி!

இப்படிப்பட்ட பா.ஜ.க. அரசுக்கு எதற்காகப் பாதம் தாங்குகிறீர்கள்? பயம், பயம், பயம்! எதைப் பார்த்தாலும் பயம்! மோடியைப் பார்த்தால் பயம். அமித்ஷாவைப் பார்த்தால் பயம். நிர்மலா சீதாராமனைப் பார்த்தால் பயம்! எதனால் இந்த பயம்?

செய்வது எல்லாம் திருட்டு! அதனால் யாரைப் பார்த்தாலும் பயம்!

நிவர் புயல் கடலூரில் ஏற்படுத்திய பாதிப்பை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களே நீங்கள் தான். தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் மூலம் விவசாயிகள் அடைந்த துயரமும், குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததன் மூலமாகப் பொதுமக்கள் பட்ட துன்பமும், இன்றுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை! எந்தப் புயல் அடித்தாலும் அது மீனவ மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்கிறது. இப்படி கடலூரின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இலட்சக்கணக்கான ஏக்கரில் இருந்த நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. வாழை மரங்கள், தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஆனால் இன்றுவரை இடைக்கால நிவாரணமோ - முழு நிவாரணமோ அ.தி.மு.க அரசு வழங்கவில்லை.

நான் வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு, சும்மா ஒப்புக்கு வந்து சில இடங்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதுவும் மத்தியக் குழு வந்ததால், அவர்களோடு வந்து பார்த்து விட்டுச் சென்றுள்ளார்.

மத்தியக் குழுவினர் டெல்லி சென்று - அறிக்கை கொடுத்து - அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்று - நிதி எவ்வளவு தரலாம் என்று யோசித்து - அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு - அதனை நிதி அமைச்சகத்துக்குச் சொல்லி - அவர்கள் அதனை மாநில அரசுக்குச் சொல்லி - மாநில அரசு கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தந்து - இவர்கள் மக்களுக்குக் கொடுப்பதற்கு எத்தனை மாதம் ஆகும் என்று தெரியவில்லை.

இதற்குப் பெயர் நிவாரணமா? நிவாரணம் என்றால் உடனே தரப்பட வேண்டும். அதற்குப் பேர் தான் நிவாரணம்!

மத்திய நிதி வருவதற்கு முன்னதாகவே, மாநில அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி இருக்க வேண்டாமா? அப்படிக் கொடுத்தால் தானே, அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

மத்திய அரசிடம் எவ்வளவு நிதி கேட்டுள்ளீர்கள்? மத்திய அரசு எவ்வளவு நிதி அளிக்கப் போகிறது என்று நிருபர்கள் கேட்டபோது, 'இப்போது தானே புயல் அடித்திருக்கிறது, பொறுங்கள்' என்று பதில் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

இப்போது தான் புயல் அடித்திருக்கிறது என்றால், அடுத்த புயலுக்குத் தான் நிவாரணம் கொடுப்பீர்களா? இதே இது ஒரு காண்ட்ராக்டருக்கு பில் பாஸ் ஆகவில்லை என்றால் பழனிசாமி துடிப்பாரா மாட்டாரா? அவர்களுக்கு மட்டும் பணியை முடிப்பதற்கு முன்னால் பணம் கொடுக்க துடிப்பீர்கள் அல்லவா? ஆனால் மக்களுக்கு மட்டும் நிவாரணம் கொடுப்பதில் அக்கறை வருவது இல்லையே ஏன்? காண்ட்ராக்டர்கள் கமிஷன் கொடுப்பார்கள்! மக்கள் கொடுக்கமாட்டார்கள் என்பது தானே உண்மையான காரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். இந்தக் கல்லூரி இப்போது அரசின் மருத்துவக் கல்லூரி. அது மட்டுமின்றி கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாகவும் இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு 13 ஆயிரத்து 670 ரூபாய் கட்டணம். ஆனால் எடப்பாடி ஆட்சியில் இந்த அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணம் முதலில் 4 லட்சம் ரூபாய். இப்போது, இந்த ஆண்டு 5 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை வசூலிக்க எடப்பாடி பழனிச்சாமி மறுப்பது ஏன்?

இந்தக் கேள்வியை நான் எழுப்பினேன். அறிக்கை வெளியிட்டேன். ஆனால் அரசு அதற்குப் பதில் சொல்லவில்லை. நான் கேட்கும் கேள்விகள் எதற்கும் இந்த அரசால் பதில் சொல்ல முடியவில்லை.

தினந்தோறும் பொதுக்கூட்டம் நடத்துவது போல நிருபர்கள் கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார். சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பதைப் போல சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் ஆதாரப்பூர்வமாக மறுத்ததையும், திருத்திக் கொள்ளாமல் அதையே சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

நேற்றைய தினம் கரூர் சென்ற முதலமைச்சர், நீட் தேர்வுக்கு தி.மு.க. - காங்கிரஸ் தான் காரணம் என்று பழைய பொய்யையே திரும்பச் சொல்லி இருக்கிறார். நீட் தேர்வு முதன்முதலாக 2017-18-ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் நடத்தப்பட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்தது, அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால்! 2011-ஆம் ஆண்டு வரை தான் கழகம் ஆட்சியில் இருந்தது. அதேபோல் மத்தியில் காங்கிரஸ் அரசும், 2014-ஆம் ஆண்டுவரை தான் இருந்தது. அப்படி இருக்கும் போது தி.மு.க.வும் காங்கிரசும் எப்படி நீட் தேர்வை 2017-இல் கொண்டு வர முடியும்?

நீட் தேர்வுக்கு 2016-ஆம் ஆண்டு விலக்கு பெற்றார் அம்மையார் ஜெயலலிதா. அத்தகைய முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தனது கையாலாகாத்தனத்தை மறைக்க தி.மு.க - காங்கிரஸ் மீது பழியைப் போடுகிறார்.

இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த பழனிசாமி, இப்போது விவசாயிகளையே கொச்சைப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தரகர்கள் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதை விட விவசாயிகளைக் கொச்சைப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியுமா?

இவர் தான் வெல்லமண்டி தரகராக இருந்தவர். தரகராக இருந்தவர், விவசாயி வேடம் போடுவதால் உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள். டெல்லியில் போராடுபவர்கள் தரகர்கள் என்றால், அதை டெல்லியில் போய் சொல்வதற்கு பழனிசாமிக்குத் தைரியம் உண்டா?

'விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் ரத்து ஆகாது' என்றும் நேற்றைய தினம் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள் துயர் துடைக்க 1989-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், விவசாயிகளுக்கு வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம்.

மத்திய அரசால் இப்போது நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களில், இலவச மின்சாரம் பற்றியோ, மின் மானியங்கள் பற்றியோ, மின்சார சலுகைகள் பற்றியோ இல்லை! அதுமட்டுமல்ல, மத்திய அரசு கொண்டு வர இருக்கிற புதிய மின்சாரச் சட்டமானது - இதுபோன்ற சலுகைகளை முற்றிலுமாக பறித்துவிடும். மின் உற்பத்தியையே பெரும்பாலும் தனியாருக்குக் கொடுக்கப் போகிறார்கள். காலப் போக்கில் மின் இணைப்புகளே தனியார் நிறுவனங்கள் தரும் என்பதைப் போல மாற்ற இருக்கிறார்கள். அப்படிச் செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள்.

விவசாயிகளுக்கோ - கைத்தறிக்கோ - விசைத்தறிக்கோ - மின்சாரச் சலுகைகள் வரிசையாகப் பறிக்கப்படும். இது எதுவும் தெரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அவருக்கென்ன, இன்னும் மூன்று மாதம் தான் இருக்கிறது.

அப்படிக் கூட உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு பழனிசாமியின் நாற்காலி ஆடிக் கொண்டு இருக்கிறது. பதவிக்காலம் முடிவதற்கு முன்னாலேயே அவரது நாற்காலியைக் கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதிகள் நடந்து வருவதாக எனக்குச் செய்திகள் வருகிறது. அந்தப் பதற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க நித்தமும் ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் மசோதாவைத் தினமும் விழுந்து விழுந்து ஆதரிக்கக் காரணம் அதுதான்.

எப்படியாவது பா.ஜ.க. தலைமையின் கருணை தனக்குக் கிடைக்காதா என்று தவம் இருக்கிறார் பழனிசாமி. அதனால் தான் எதையும் தாரைவார்க்கத் தயாராகி விட்டார். அவருக்கு மக்கள் எந்தக் காலத்திலும் கருணை காட்ட மாட்டார்கள். அதைச் சொல்லப் போகும் தேர்தல் தான், அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல்!

உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! அதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது! என்று நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்!

“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்!

ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை!

அவர் எப்போதும் வால் பிடிப்பார்!” – என்று ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடியிருக்கிறார்.

இந்தப் பாட்டு இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்குப் பொருந்தும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இது. பணி முடிப்போம்! ஆட்சி அமைப்போம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories