மு.க.ஸ்டாலின்

“இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை!” - திண்டுக்கல் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

“மக்களுக்காக மண்ணுக்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தார்மீக ஆதரவைத் தர வேண்டும்” தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

“இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை!” - திண்டுக்கல் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“விவசாயியாக - ஏழைத்தாயின் மகனாக நடித்து, நாட்டு மக்களை ஏய்க்கும் ‘நடிப்புச் சுதேசிகள்’ கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேர்தல் தான், 2021 சட்டமன்றத் தேர்தல்!” என திண்டுக்கல் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றினார்.

இன்று (15-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“தென்னவன் சிறுமலை என்று சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகளால் போற்றப்பட்ட திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களையும், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி அவர்களையும், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் அவர்களையும் - பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!

இளைஞரணிக்கு நான் பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றிவந்தபோது திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் என்ற ஊரில் கொடியேற்றிப் பேசினேன். அப்போது நம்முடைய ஐ.பெரியசாமி அவர்கள் கட்டிளம் காளையாக, பெரிய மீசை, பெரிய கிருதாவுடன் வலம் வருவார்கள். இன்றும் தலை நரைத்தாலும், உள்ளம் நரைக்கவில்லை என்பதன் அடையாளமாகக் கழகப் பணியாற்றி வருகிறார். பச்சைத் தலைப்பாகையுடன் கிராமப்புற விவசாயிகளுடன் நிலத்தில் இறங்கி அவர் தேர்தல் பரப்புரை செய்து வருவதைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது.

தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் களத்தில் நிற்கும் ஒரே கழகம், நம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். அந்த அடிப்படையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கும் வழிகாட்டும் செயல்வீரராக அருமைச் சகோதரர் ஐ.பி. அவர்கள் இருக்கிறார்கள்.

பட்டிவீரன்பட்டி மீனாட்சிசுந்தரம், கூடலூர் சிங்காரத்தம்மாள், திண்டுக்கல் விக்கிரமாதித்தராசன், சின்னாளப்பட்டி நாச்சியப்பன், திண்டுக்கல் எஸ்.ஏ.ராஜன் - இப்படி பல்வேறு ஆற்றல் வீரர்கள் வரிசையில் இன்று சக்கரபாணியும், ஐ.பி.செந்தில்குமாரும் இந்த வட்டாரத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

சக்கரபாணியைப் பொறுத்தவரையில் சட்டமன்றத்திலும் கழகத்துக்கு நற்பெயர் பெற்றுத்தரும் நெறியாளராகவும் செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட பல்துறை ஆற்றல் கொண்டவர்கள் தான் நம்முடைய கழகத்தினர்!

சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமாருக்கு தோளோடு தோள்சேர்ந்து பணியாற்றும் திண்டுக்கல்லின் தீரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்வதாக இருந்தால் சொல்லிக்கொண்டே போகலாம்! தொகுதிவாரியாக என்னால் சொல்ல முடியும். அதை வாசிக்க ஆரம்பித்தால் மற்ற தொகுதிக்காரர்கள், மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஏராளமான திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளோம்.

கழக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பள்ளி – கல்லூரிகள், காவல் நிலையங்கள், திருமண மண்டபங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய பேருந்து வழித்தடங்கள், மகளிர் விடுதிகள், சாலை விரிவாக்கம், குடிநீர்த் தொட்டிகள், ரேசன் கடைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்!

மாங்கரையாற்றின் குறுக்கே எட்டு பாலங்கள்

கொடகனாற்றின் குறுக்கே நான்கு பாலங்கள்

திண்டுக்கல் - நத்தம் ரயில்வே மேம்பாலம்

திண்டுக்கல் முதல் பழனி வரை பாதயாத்திரை பக்தர்கள் நடப்பதற்கென்று தனியாக 5 கோடி செலவில் நடைபாதை.

கன்னிவாடி நாயோடையின் குறுக்கே அணை

யானைவிழுந்தான் ஓடையின் குறுக்கே அணை

நங்காஞ்சியாற்றின் குறுக்கே அணை

நல்லதங்காள் ஆற்றின் குறுக்கே அணை

சிறுமலையாற்றின் குறுக்கே அணை

சுக்காம்பட்டி, ரெட்டியார் சத்திரம், பஞ்சம்பட்டி, அய்யம்பாளையத்தில் உயர் அழுத்த மின் நிலையங்கள்.

ரெட்டியார்சத்திரம் அருகே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி

கன்னிவாடியில் மகளிர் விடுதி மற்றும் மாணவர் விடுதிகள்

மருதாநதி அணையில் கிணறு அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய் பதித்து 20 ஆண்டுகால குடிநீர்ப் பிரச்சனை, கழக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்பட்டது.

அய்யங்கோட்டை பொதுமக்கள் மருதாநதி ஆற்றினை கடந்து செல்ல மேம்பாலம் கழக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.

அய்யங்கோட்டை கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்சனையினை தீர்க்க மருதாநதி அணையிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் வட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக ஆத்தூர் தாலுகாவை ஏற்படுத்தி அதற்கான அலுவலக கட்டடங்களை கட்டிக் கொடுத்தது கழக ஆட்சியில் தான்.

- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

இப்படி பட்டியல் போடுவதற்கு எடப்பாடி பழனிசாமியோ, திண்டுக்கல் சீனிவாசனோ தயாரா?

“இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை!” - திண்டுக்கல் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கல்லுக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார்; திண்டுக்கல் சீனிவாசன். அவரால் இந்த நாட்டுக்குக் கிடைத்த ஒரே நன்மை, "அம்மா இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய். நாட்டுக்கு நாங்கள் பொய்யைத் தான் சொன்னோம்" என்று சீனிவாசன் சொன்னது மட்டும்தான் இந்த நாட்டுக்கு அவரால் கிடைத்த நன்மையே தவிர, வேறு எதுவும் இல்லை!

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் சீனிவாசன் 5 ஆண்டுகளாக இந்தத் தொகுதிக்கு இந்த மாவட்டத்துக்கு என்ன நன்மை செய்தார் என்பதைச் சொன்னால் நானே என்னைத் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

திண்டுக்கல்லை மாநகராட்சி என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை சீனிவாசன் சொல்வாரா?

திண்டுக்கல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்தார்கள். அந்தத் திட்டப்படி என்னவெல்லாம் செய்து தரப்பட்டது?

திண்டுக்கல் மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று சொன்னார் அமைச்சர். தீர்த்துவிட்டாரா?

திண்டுக்கலைச் சுற்றி உள்ள குளங்களைத் தூர்வாரி விட்டாரா? இல்லை! பெரும்பாலான குளங்கள் சாக்கடை நீர் தேங்கும் குளங்களாகத்தான் இருக்கின்றன.

திண்டுக்கல் - பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டுவதற்கு ஏழு ஆண்டுகளா? இன்னும் ஏன் முடிக்கப்படவில்லை?

இன்னும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தைக் கூட புதுப்பிக்கவில்லையே ஏன்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறதே ஏன்?

இவற்றுக்கு எல்லாம் திண்டுக்கல் சீனிவாசன் என்ன பதில் சொல்வார்?

அவர் பெயரில் இருக்கும் திண்டுக்கல்லுக்கு ஒரு குன்றிமணி அளவாவது நன்மை செய்துள்ளாரா? நான் இப்போது கேட்ட கேள்வி எல்லாம் திண்டுக்கல் மக்கள் கேட்கும் கேள்விகள்! தேர்தல் பிரச்சாரத்துக்கு வரப்போகும் சீனிவாசனிடம் மக்கள் கேட்க இருக்கும் கேள்விகள்!

நான் விவசாயி என்று தம்பட்டம் அடிப்பதால் விவசாயிகளுக்கு என்ன பயன்? நான் கிராமத்தில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்வதால் கிராமத்து மக்களுக்கு என்ன பயன்?

விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் - கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர், விவசாயிகளுக்கு, கிராமப்புற மக்களுக்கு, ஏழைகளுக்கு என்ன செய்தார்? அதைச் சொல்ல வேண்டாமா?

நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை என்று சொன்னார் கலைஞர். அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சி தான்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை - எளிய, பாட்டாளிகள் பயன் பெறும் ஆட்சியாகத்தான் இருந்தது! திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 'முரசொலி'யில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

''ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள்!

ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் பேரறிஞர் அண்ணா! ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர்! இவர்கள் ஆட்சி ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஆட்சியாகத் தான் இருந்தது.

* குடிசை மாற்று வாரியம் அமைத்தது தி.மு.க.

* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்ததும் தி.மு.க.

* தொழுநோயாளிகள் இல்லம், பிச்சைக்காரர் மறுவாழ்வு மையங்கள், அமைத்ததும் தி.மு.க.

* ஏழைகளுக்குக் கண்ணொளி திட்டம் தொடங்கியதும் தி.மு.க.

* விதவைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கியதும் தி.மு.க.

* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியதும் தி.மு.க.

* விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம் அமைத்தது தி.மு.க.

* நகர்ப்புற தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்தது தி.மு.க.

* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகளை அவர்களுக்கே சொந்தம் ஆக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க.

* கை ரிக்‌ஷாவை ஒழித்தது தி.மு.க.; இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்ததும் தி.மு.க.

* மாற்றுத் திறனாளிகளுக்கான நல்வாழ்வு திட்டமும், அவர்களுக்கான தொழிற்சாலையும் அமைத்தது தி.மு.க.

* ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து, அந்தச் சொல்லுக்கு சட்ட அங்கீகாரம் தந்தவர் கலைஞர்!

* பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கருணை இல்லங்கள் அமைத்தவர் கலைஞர்!

* இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் தி.மு.க.

* ஏழை நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கியதும் தி.மு.க.

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் கொண்டுவந்ததும் தி.மு.க.

* குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க.

* மாணவர்க்கு இலவச பேருந்து பாஸ் வழங்கியதும் தி.மு.க.

* அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கியதும் தி.மு.க.

* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்ததும் தி.மு.க.

* உழவர் சந்தைகள் திறந்ததும் தி.மு.க.

* சமத்துவபுரங்கள் உருவாக்கியதும் தி.மு.க.

- இப்படி இன்று முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்! அவ்வளவு சாதனைகள்; அவ்வளவு திட்டங்கள் கலைஞர் ஆட்சிக்காலத்தில்!

அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை - எளிய மக்களுக்கான ஆட்சியாக, தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

அதனால்தான் கழக ஆட்சியை, கலைஞரின் ஆட்சியை இந்தியாவின் பெரிய மனிதர்கள் அனைவரும் பாராட்டிப் போற்றினார்கள்.

''பெயரிலேயே கருணையும் நிதியும் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று பாராட்டிப் போற்றினார் ஆச்சார்யா வினோபா!

“இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை!” - திண்டுக்கல் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

''வலிமையும் தகுதியும் உடைய கலைஞர் கருணாநிதியின் கரங்களில் தமிழ்நாடு ஒப்படைக்கப்பட்டதால்தான் அனைத்துத் தரப்பினரும் உயர்வடைந்து வருகிறார்கள்" என்று பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள் பாராட்டினார்கள்!

“கலைஞர் கருணாநிதி அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைகிறான்" என்று கிருபானந்தவாரியார் சுவாமிகள் பாராட்டினார்கள்!

“தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் கொள்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தி.மு.க ஆட்சி செயல்பட்டு வருகிறது" என்று முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்கள் பாராட்டினார்கள்!

“வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும் கொண்ட புதிய புறநானூற்றைப் படைக்கும் புரவலர்" என்று கலைஞரைப் போற்றினார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்!

- இப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மீகப் பெரியவர்கள் வரை பாராட்டிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி! பாராட்டப்பட்ட தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

ஆனால் இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த தரப்பு மக்களாவது நன்மை அடைந்துள்ளார்களா? என்றால் இல்லை!

அனைத்துத் தரப்பு மக்களையும் துன்பத்தில் துடிக்கவிட்ட ஆட்சி தான் இந்த அ.தி.மு.க. ஆட்சி!

ஏழைகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? ஒடுக்கப்பட்டோருக்கு இவர்கள் செய்த நன்மை என்ன? என்று இவர்களால் பதில் சொல்ல முடியாது!

இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன என்ன இருக்கிறது என்று வேண்டுமானால் பட்டியல் போடலாம்!

மத்திய பா.ஜ.க அரசுக்கு பாதம் தாங்கி தமிழ்நாட்டின் எந்தெந்த உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார்கள், தாரைவார்த்தார்கள் என்று வேண்டுமானால் பட்டியல் போடலாம்!

நீட் தேர்வு ஒன்று போதாதா - எடப்பாடி அரசின் கையாலாகாத்தனத்தைச் சொல்வதற்கு?

ஒரு முறையல்ல, இரண்டு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கேட்டு தீர்மானம் போட்டு அனுப்பினோம். அதற்கு ஒப்புதல் வாங்கித் தர பழனிசாமி அரசால் முடிந்ததா? இல்லை!

பழனிசாமி முதலமைச்சராக வந்தது முதல் நீட் கொடுமை நடக்கிறது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. "இந்த நீட் தேர்வை தமிழ்நாடு மட்டும் தான் எதிர்க்கிறது" என்று அவரே சொல்கிறார்.

இல்லை, காங்கிரஸ் கட்சி ஆளும் 7 மாநில முதலமைச்சர்கள், இந்த கொரோனா காலத்தில் நீட் தேர்வு தேவையா என்று உச்சநீதிமன்றத்திலேயே வழக்குப் போட்டார்கள். அப்போதாவது அவர்களோடு சேர்ந்து கொண்டு வழக்குப் போட்டாரா பழனிசாமி?

தமிழ்நாடு எதிர்க்கிறது என்றால், தமிழகம் கல்வியால் விழிப்புணர்ச்சி பெற்ற மாநிலம். அதனால் எதிர்க்கிறது.

இன்றைக்கு பஞ்சாப் மாநிலம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுகிறது. என்ன காரணம்?

பஞ்சாப் விவசாயிகள், விழிப்புணர்ச்சி பெற்றவர்கள், அதனால் எதிர்க்கிறார்கள். பழனிசாமி, தன்னைப் போல தரையில் ஊர்ந்து போகச் சொல்கிறாரா?

கல்வியில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழகம் என்பதால் எதிர்க்கிறோம். இதுகூட பழனிசாமிக்குப் புரியவில்லை.

மருத்துவப் படிப்பு மற்றும் முதுநிலைப் படிப்பில், மாநிலங்களில் இருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இடஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டு விட்டது. அதனை வாங்கித் தருவதில் எடப்பாடி பழனிசாமி அரசு காட்டிய முனைப்பு என்ன?

உச்சநீதிமன்றத்துக்கு நாம் சென்றோம் என்பதால் அவர்களும் ஒப்புக்கு வழக்குப் போட்டார்கள். ஆனால் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு தேவை என எடப்பாடி அரசு வாதாடவில்லை.

இந்த ஆண்டு தர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்னபோது அதனையும் எடப்பாடி அரசு எதிர்க்கவில்லை. இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் துரோகம் இழைத்த அரசு தான் இந்த எடப்பாடி அரசு!

சில நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தி வெளியானது. பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சுமார் 60 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். உதவித் தொகையை நிறுத்துவது என்பது, "அவர்களை படிக்க வராதே, உனக்கு படிப்பு எதற்கு" என்று சொல்வதற்குச் சமம். அதனை இந்த எடப்பாடி பழனிசாமி அரசு கண்டித்ததா?

மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கை ஒன்று கொண்டு வரப்பட உள்ளது. அது புதிய கல்விக் கொள்கை அல்ல. பழைய கொள்கையை, புதியது என்று பொய் சொல்கிறார்கள். அது கல்விக் கொள்கையும் அல்ல. காவிக் கொள்கை. 3, 5, 8, 10, 12 என்று எல்லா வகுப்பிலும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச கல்வித் தகுதியைக்கூட ஏழை மாணவர்கள் பெறுவதற்குத் தடை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். நீட் தேர்வைப் போல அனைத்துப் படிப்புகளுக்கும் தேர்வு வைத்து தடை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். குலக்கல்வியை மீட்டெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அந்தக் கல்வித் திட்டத்தைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டுவிட்டது எடப்பாடி பழனிசாமி அரசு!

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் எதற்காக சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்ப வேண்டும்? சமஸ்கிருதம் என்பது இந்தியாவின் ஆட்சி மொழியா? அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியா? எதற்காக சமஸ்கிருதத்தை திணிக்கிறீர்கள்? சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்கப் போகிறீர்களா? இதனை பழனிசாமி கண்டித்தாரா?

இன்றைக்கு மத்திய அரசு நடத்துகிற எந்தத் தேர்வாக இருந்தாலும், அது ஏதோ வடமாநிலங்களுக்கு - குறிப்பாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு நன்மை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அஞ்சல்துறை தேர்வு, ரயில்வே தேர்வுகள் அனைத்தும் இந்தி பேசும் மாநிலத்தவர் மட்டுமே நுழைய வசதியாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இதுபற்றி எடப்பாடி அரசு கவலைப்பட்டதா என்றால் இல்லை. மத்திய அரசுப் பணிகளாக இருந்தாலும், அதில் அந்த மாநில மக்களுக்கு முழு உரிமை உண்டு. அதனைப் பெறும் உரிமை அந்த மாநில மக்களுக்கு உண்டு.

இந்தத் தேர்வுகளை எதற்காக இந்தியில் மட்டும் நடத்துகிறீர்கள் என்று இந்த அரசாங்கம் கேட்டதா? அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பழனிசாமி அரசு என்றாவது கோரிக்கை வைத்தது உண்டா?

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தான் தமிழக வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்று சொல்லத் தைரியம் உண்டா? யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று ஒரு முதலமைச்சரால் எப்படி இருக்க முடியும்?

சிறுபான்மைச் சமூக மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்துவிட்டு, கூச்சமே இல்லாமல் மசூதிக்கு போக எடப்பாடி பழனிசாமியால் இப்போது எப்படி முடிகிறது? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்தச் சட்டமே தோற்றுப் போயிருக்கும். நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்தச் சட்டத்தை குப்புற விழுந்து ஆதரித்த பழனிசாமியை சிறுபான்மையினர் மட்டுமல்ல, தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள்.

மத்திய அரசின் புதிய மின்சாரச் சட்டமானது, தமிழக விவசாயிகள் இதுவரை பெற்றுவந்த இலவச மின்சார உரிமையை நிச்சயம் பறிக்கப் போகிறது. விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை மத்திய அரசின் புதிய மின்சாரச் சட்டம் பறித்துவிடும். அதனை பழனிசாமி அரசு எதிர்த்ததா? கண்டித்ததா? இல்லை!

இந்த வரிசையில் வந்த மிக மோசமான சட்டம் தான் மூன்று வேளாண் சட்டங்கள். எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால் இந்த மூன்று சட்டத்தையும் எதிர்த்து தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பார். அவர் விவசாயி அல்ல, வேடதாரி என்பதால் தான் விவசாய சட்டங்களை ஆதரித்து வெட்கமில்லாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

“இதை எல்லாம் பா.ஜ.க.தான் சொல்ல வேண்டும்; அவர்களுக்குப் பதிலாக நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்" என்று பழனிசாமி சொல்கிறார். பா.ஜ.கவினரால் கூடச் சொல்ல முடியாத, அவர்களால் கூட ஆதரிக்க முடியாத சட்டத்தை இவர் எதற்காக விழுந்து விழுந்து ஆதரிக்க வேண்டும்? அங்கே தான் பழனிசாமியின் சுயநலம் சுருண்டு கிடக்கிறது.

“இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை!” - திண்டுக்கல் கூட்டத்தில் விளாசிய மு.க.ஸ்டாலின்!

பா.ஜ.க.வை எதிர்த்தால், விமர்சித்தால், அவர்களுக்குத் தலையாட்டாமல் போனால் தனது பதவி உருண்டு விடும் என்று பயப்படுகிறார் பழனிசாமி. அதனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த 11-ஆம் தேதி மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா! பிரதமர் மோடி அவர்கள் பாரதியாரைப் புகழ்ந்து பேசினார். பாரதியின் பாடல்களைச் சொன்னார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரியை பிரதமர் சொன்னார். அதன் முழுப் பொருளையும் பிரதமர் அவர்கள் உணர்ந்து தான் மேற்கோள் காட்டினாரா என்று கேட்க விரும்புகிறேன்.

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த உலகத்தை அழித்துவிடுவோம் என்று கோபப்பட்டார் தமிழ்க்கவி பாரதியார். ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன என்பதை நான் சொல்லி பிரதமர் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. எல்லா புள்ளிவிவரங்களும் அவரிடம் இருக்கும். மத்திய அரசு கொண்டு வரும் மூன்று வேளாண் சட்டங்களும், வேளாண்மையை அழிக்கும் சட்டங்களாக, வறுமையை உருவாக்கும் சட்டங்களாகத் தான் இருக்கப் போகின்றன என்பதை லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிக்கு வந்து சொல்லிக் கொண்டு இருப்பது பிரதமர் காதில் விழவில்லையா என்று கேட்க விரும்புகிறேன்.

விவசாயிகள் போராட்டத்தால் இந்தியாவே பற்றி எரிகிறது! உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைந்து கிடக்கிறது. தலைநகர் டெல்லியே 20 நாட்களாக நடுங்கிக் கொண்டு இருக்கிறது!

உயிர் கொடுக்கும் உழவர் உயிர் விலை பேசி விற்கப்படும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மூன்று சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரால் அவர்களை வரவழைத்து, இந்தச் சட்டம் நல்ல சட்டம்தான் என்று மத்திய அரசு வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறது! அதாவது போராடுபவர்களோடு நாங்கள் பேசுகிறோம் என்ற நாடகத்தை மத்திய அரசு நடத்துகிறது!

இந்தச் சட்டத்தால் என்ன நன்மைகள் என்று தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசும் பிரதமர், அதனை விவசாயிகளைச் சந்தித்துச் சொல்ல முடியாதா? போராடும் விவசாயிகளை உள்துறை அமைச்சர் இன்னும் சந்திக்க முன்வராதது ஏன்? உலகத்தின் கவனத்தையே ஈர்த்துவிட்ட விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு மதிக்கத் தவறியது ஏன்?

இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நேற்று விவசாய சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்கள். ஆனால், அவர்களைப் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுப் போய் கைது செய்திருக்கிறார்கள். விவசாயிகள் சங்கத் தலைவர் லட்சுமணபெருமாள் கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்திருக்கிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் அவர்களைக் கீழே தள்ளி கைது செய்திருக்கிறார்கள்.

விவசாயிகளையும் விவசாயிகளுக்காகப் போராடுபவர்களையும் ‘போலி விவசாயி’யின் அரசு எப்படி மதிக்கின்றது என்பதற்கு நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது!

இதற்காகத்தான் வருகிற 18-ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் அறிவித்துள்ளோம்! கூட்டணிக் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்!

விவசாயிகள் நடத்தும் போராட்டம் என்பது தனிப்பட்ட அவர்களுக்காக அல்ல; மக்களுக்காக மண்ணுக்காக நடக்கும் போராட்டம்! அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தார்மீக ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

'தமிழ்மொழியையும் தாய்நாடான இந்தியாவையும் பாரதியார் இரு கண்களாகப் பாவித்தார்' என்று பிரதமர் மோடி அவர்கள் பாரதியார் பிறந்தநாள் விழாவில் பேசி இருக்கிறார்.

அந்தத் தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட செம்மொழி ஆய்வு நிறுவனம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது பிரதமருக்குத் தெரியுமா?

தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது நூற்றாண்டு கோரிக்கை. அதனை மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் முதல் நிபந்தனையாக வைத்துப் பெற்றுத் தந்தார்கள். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்கள்.

ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? மைசூரில் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அத்தோடு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது. இதைவிடத் தமிழ்த் துரோகம் இருக்க முடியுமா?

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிதி தராமல், ஆய்வுப் பணிகள் செய்யவிடாமல், உரிய அலுவலர்களை நியமிக்காமல், அந்த நிறுவனத்தையே பாழ்படுத்திவிட்டார்கள். இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசும் தான்.

தனியாக செயல்படும் ஒரு நிறுவனத்தை, ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்றுவதைப் போல தமிழ்த்துரோகம் இருக்க முடியுமா? செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையில்தான் இருக்க வேண்டும். அதை வேறு மாநிலத்துக்கு, வேறு பல்கலைக்கழகத்துக்கு இணைக்கும் முடிவை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை பாரதி பிறந்தநாள் அன்று மட்டும் தமிழ் மீது பாசம் கொண்டவர்களைப் போல எதற்காக பிரதமர் நடிக்க வேண்டும்? மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாட்டு முதலமைச்சர் எதிர்த்திருக்க வேண்டாமா? தமிழை, செம்மொழி நிறுவனத்தைக் காக்கும் கடமை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இல்லையா?

இவர்களைப் பார்த்துதான்,

''நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி!

சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி - கிளியே

செம்மை மறந்தாரடி!"

- என்று பாடினார் பாரதியார். இவர்களைத் தான் 'நடிப்புச் சுதேசிகள்' என்றார் பாரதியார்.

விவசாயியாக - ஏழைத்தாயின் மகனாக நடித்து, நாட்டு மக்களை ஏய்க்கும் கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தேர்தல் தான் இந்தச் சட்டமன்றத் தேர்தல்!

தமிழுக்குத் துரோகம் - தமிழர்க்குத் துரோகம் - தமிழ்நாட்டுக்குத் துரோகம் - இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை! கொள்ளை மட்டுமே இலக்கு!

இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட திண்டுக்கல் மக்கள் சபதம் எடுக்க வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தென்னாட்டு மாவீரர்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்ட ஊர், இந்த திண்டுக்கல்!

சிவகங்கையில் இருந்து பெரியமருதுவும், சின்னமருதுவும் - வீரமங்கை வேலுநாச்சியாரும் - மைசூரில் இருந்து ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் - பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் - கோபாலநாயக்கரும் - இந்த திண்டுக்கல் மண்ணில் ஓரணியாக ஒன்று சேர்ந்து போர் தொடங்கினார்கள். அதனால்தான் 'தென்னகத்தின் குருசேத்திரம்' என்று திண்டுக்கல் வர்ணிக்கப்பட்டது.

தென்னகத்தின் குருச்சேத்திரம் என்று வர்ணிக்கப்படும் திண்டுக்கல் மாவட்டமானது, தமிழகத்தை மீட்கும் யுத்தத்துக்கு அசைக்க முடியாத களம் ஆகட்டும்! கழகம் வெற்றி பெறட்டும்!

கோட்டையை மீட்போம்! தமிழகம் மீட்போம்!”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories