மு.க.ஸ்டாலின்

“கமலா ஹாரிஸ் மூலம் தமிழர் தம் பெருமை உலகுக்கே பறை சாற்றட்டும்” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்!

கமலா ஹாரிஸ் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய் மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கமலா ஹாரிஸ் மூலம் தமிழர் தம் பெருமை உலகுக்கே பறை சாற்றட்டும்” - மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அமெரிக்க நாட்டின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துத் தன் கைப்படக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:

அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டின் மன்னார்குடி - துளசேந்திரபுரத்தை தாய்வழி பூர்வீகமாகக் கொண்டவர்!

கமலா ஹாரிஸ் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்!

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு:

“அன்புமிக்க திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கட்கு,

அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வணக்கம்; வாழ்த்துகள்!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள் பேதம் இல்லை என்பதைப் போலவே, ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களைத் தீட்டிய இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. உங்களது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும்.

தங்களது வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும்- ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories