மு.க.ஸ்டாலின்

“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.

“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று (23-09-2020) காலை பல்வேறு இடங்களில் நல உதவிகள் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

வார்டு 67 - ஜி.கே.எம். காலனி 30-வது தெருவில் கழக மூத்த முன்னோடிகள் 300 நபர்களுக்கு பொற்கிழி, புத்தாடைகள் மற்றும் நல உதவிகள் வழங்கினார்.

வார்டு 67 - ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், 'எல்லோரும் நம்முடன்' இணையதளம் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வினை துவக்கி வைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.

வார்டு 66 - பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தைத் திறந்து வைத்தார்.

வார்டு 64 - NUHM (NATIONAL URBAN HEALTH MISSION) நிதியிலிருந்து அஞ்சுகம் நகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள மருத்துவ நல்வாழ்வு நிலையம் - ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தைத் திறந்து வைத்தார்

வார்டு 64 - நேர்மை நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

வார்டு 64 - நேர்மை நகர் துணை மின் நிலையம் ஆய்வு செய்தார்.

வார்டு 65 - பல்லவன் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில், 500 தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

கழக மூத்த முன்னோடிகள் 300 நபர்களுக்கு பொற்கிழி வழங்கி கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு :

“இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் நல்வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இயக்கத்திற்கு பாடுபட்டிருக்கக்கூடிய - பணியாற்றியிருக்கக்கூடிய - பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கும் நம்முடைய தியாகச் செம்மல்களுக்கு, கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இது.

இந்த இயக்கத்திற்காக பாடுபட்டிருக்கும் முன்னோடிகளை கழகம் எப்பொழுதும் விட்டுவிடாது, மறந்துவிடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சிறப்பான இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும், சென்னை வடக்குப்பகுதி மாவட்டக் கழகத்தின் செயலாளர் அன்பிற்குரிய சேகர்பாபு அவர்களுக்கு நான் இதயம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு துணை நின்று பணியாற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வார். “கழகத்தால் தனக்கு என்ன லாபம் என்ற உணர்வுடன் பாடுபடாமல், நம்மால் இந்த இயக்கத்திற்கு என்ன லாபம் என்ற உணர்வுடன் பாடுபடவேண்டும்”என்று அடிக்கடி எடுத்துச் சொல்வதுண்டு. அந்த வகையில், நமது முன்னோடிகள் இந்த இயக்கத்திற்கு பாடுபட்டு இருப்பதை மறந்து விடாமல் அவர்களுக்கு இன்றைக்கு பொற்கிழி வழங்கி உள்ளோம். உங்களுக்கு பொற்கிழி தந்துவிட்டோம் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக அல்ல; இன்னும் இந்த இயக்கத்திற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவும், நினைவு படுத்துவதற்காகவும், ஊக்கப்படுத்துவதற்ககாவும்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வழங்கப்பட்டிருக்கும் நிதியும், நீங்கள் உழைத்திருப்பதும் சமமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை; இருந்தாலும் உங்களைப் பெருமைப்படுத்துவதன் மூலம் நாங்கள் பெருமைப் படுகிறோம், கழகம் பெருமைப்படுகிறது என்கிற அந்த உணர்வுடன் தான் இந்தப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பொற்கிழியைப் பெற்றிருக்கும் அத்தனை பேருக்கும் எனது பாராட்டுகளை - வாழ்த்துகளை, நன்றிகைளை மீண்டும் ஒரு முறை தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி. வணக்கம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

முதலில் எனக்கு பேசும் வாய்ப்பை அளிப்பதற்கு மறந்து விட்டார்கள். உங்களைப் பேச வைத்தார்கள். என்னை மறந்து விட்டார்கள். இப்பொழுது நானாக கேட்டு உங்களிடத்தில் நன்றி சொல்ல வந்திருக்கிறேன். தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தார்கள். தொடக்கத்தில் மாவட்டச் செயலாளர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் நம்முடைய கழக நிர்வாகிகள் எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றினார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாம் எத்தனையோ பேரிடர்களை பார்த்திருக்கிறோம். கடுமையான மழை - வெள்ளம் - புயல் - சுனாமி போன்றவற்றைச் சந்தித்திருக்கிறோம். இப்படி பல பேரிடர்களை சந்தித்தபோது மக்களுக்கு பல நிவாரண பணிகளை அளிப்பதில் ஈடுபட்டிருக்கிறோம். பல உதவிகளை செய்து இருக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய சில வசதிகளை நம்மால் முடிந்த அளவு செய்து கொடுத்திருக்கிறோம். அப்போது நமக்கு எந்த பயமும் - அச்சமும் இருக்காது. துணிச்சலாக சென்று களத்தில் நிற்போம். ஆனால் இப்போது கொரோனா என்ற கொடிய தொற்று நோய் ஏறக்குறைய ஆறு மாத காலமாக இன்னும் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட கொரோனா தொற்று நோய் என்பது சாதாரண தொற்று நோயல்ல; அது எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது, யாரால் வருகிறது அதற்கு மருந்து இருக்கிறதா? அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பதெல்லாம் ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், இது உயிரையே பலிவாங்கும் தொற்று நோயாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சிலருக்கு இந்த நோய் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் வந்து போகிறது. ஒருசிலருக்கு மருத்துவமனைகளில் 15 - 20 நாட்கள் இருந்து – அதற்கென்று மருந்து மாத்திரை இல்லை - வழக்கமாக தலைவலி போன்றவற்றிற்குக் கொடுக்கப் படும் மாத்திரைகள், வைட்டமின் சி, வைட்டமின் டி மாத்திரைகள், கசாயம், ஊட்டச்சத்து கலந்த உணவைக் கொடுத்து மருத்துவமனையில் இருக்க வைத்து அனுப்பி வைத்து விடுகிறார்கள். இல்லையென்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தால் போதும் என்ற நிலையில் குணமாகி விடுகிறார்கள்.

எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு இந்தக் கொடிய நோய் வந்திருக்கிறது. அவர்கள் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தால் பத்திரிகைகளில் அவர்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த நோய் வருகின்றபோது பத்திரிகைகளில் செய்திகளாக வருவதில்லை. கணக்குத் தான் செய்திகளில் வருகின்றது. அந்தக் கணக்குகளும் முறையாக இல்லை; அதுவும் பொய்க் கணக்கு. நோய்த் தொற்று குறைவாக இருக்கிறது என்று குறைத்து தான் கணக்கு காட்டப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்திலும் பொய் சொல்கிறவர்கள், கொள்ளையடிப்பவர்கள் இந்தக் கணக்கு காட்டுவதிலும் பொய் சொல்கின்ற நிலைதான் இன்று தமிழ்நாட்டில் இருக்கின்றது.

நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இது உயிரை பலிவாங்கும் நோய் என்று சொல்வதற்கு காரணம் - உதாரணமாக சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார் என்பது உங்களுக்குத் தெரியும். அதுபோல் இன்னும் பல கட்சிகளில் பலர் இறந்திருக்கிறார்கள். ஜெ.அன்பழகனுக்கு ஏற்கனவே ஒரு அறுவை சிகிச்சை லண்டனில் 15 ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்டது. அந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தாயகம் திரும்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் நலத்துடன் திரும்பி வந்தார். 15 ஆண்டுகள் நலமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தார். மூன்று முறை மாவட்டச் செயலாளராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாக செயலாற்றியவர். கலைஞரிடத்தில், எங்களிடத்தில் நல்லபெயர் பெற்றவர். அவருக்கு இந்த நோய் வந்த பொழுது எதிர்க்கின்ற சக்தி அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் தான் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.

சர்க்கரை நோயாளிகளுக்கு, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, ஆஸ்துமா காரர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு இந்த நோய் வந்துவிட்டால் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. இந்த நோய் வந்தவுடன் அன்பழகனிடத்தில் ‘தயவு செய்து வெளியில் வர வேண்டாம்’ என்று சொன்னோம். ‘உங்களுக்கு வந்துவிட்டால் அது ஆபத்தாக முடிந்துவிடும். உங்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடையாது’ என்று சொன்னோம். ஆனால் பதினைந்து நாட்கள் மட்டும் அவர் பொறுத்திருந்தார். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சித் தோழர்கள் நலத்திட்ட உதவிகளை செய்கிறார்கள் என்பதைப் பார்த்தவுடன், மாவட்டச் செயலாளரான - எம்.எல்.ஏ.வான அவர் வீட்டில் இருக்காமல் வெளியில் வந்துவிட்டார். தொகுதிக்குச் சென்று நலத்திட்ட உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். இதைப்பார்த்தவுடன் நான் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் ஏன் சென்றீர்கள், எதற்கு சென்றீர்கள் இது நியாயமா, உங்கள் உடல்நிலை ஒத்துக் கொள்ளுமா’ என்று கொஞ்சம் கடுமையாக அவரிடம் பேசினேன். ‘நீங்கள் செல்கிறீர்கள் நான் ஒரு பத்து பேருக்கு தான் நலத்திட உதவி வழங்கினேன்’ என்று சமாதானம் சொன்னார். ஆனால், பத்துப் பேருக்குக் கொடுத்தற்கே அவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர் ஆபத்தான கட்டத்திற்குச் சென்று விட்டார். சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படிப்பட்ட கொடுமையான மரணத்தைத் தழுவுகிற, உயிரைப் பலிவாங்கும் கொடிய நோய் இது. அந்த நோயைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் நீங்கள் சென்று களத்தில் நின்று மக்களுக்குப் பணியாற்றியதை என்றும் நான் மறக்க மாட்டேன்.

“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வேன் என்று எனக்கு புரியவில்லை. ஆகவே நான் உங்கள் அனைவரையும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இன்னும் கொரோனா தொற்றுநோய் முடிவடையவில்லை. அக்டோபரில் இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கை கால்களை சுத்தமாகக் கழுவி, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நாம் இருந்தால் தான் மக்களுக்கு பணியாற்றி நாட்டை காப்பாற்ற முடியும். நம்முடைய சந்ததியினருக்கு நாம் வழிகாட்ட முடியும். ஆகவே நீங்கள் பத்திரமாக - பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அருமையான பணியைச் செய்து இருக்கிறீர்கள்.

ஏறக்குறைய 180 நாட்கள் இந்தக் கொளத்தூர் தொகுதியில், இந்த மண்டலத்திற்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கும் பணியை, வழங்கி வரும் செயல்வீரர் ஆற்றல்மிக்க மாவட்டச் செயலாளர் அருமை சகோதரர் சேகர்பாபு அவர்களும் - அவரையும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். சரி என்று சொல்லிக்கொண்டு காலையில் மண்டல அலுவலகத்திற்கு முன்னால் நிற்பார் – அதேபோல் வட்டச்செயலாளர் முரளியாக இருந்தாலும் சரி, மகேஷாக இருந்தாலும் சரி, நம்முடைய கழக நிர்வாகிகளும் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அத்தனை கழகத் தோழர்களும் இதில் ஒருங்கிணைந்த சிறப்பாக இந்தப் பணியை நிறைவேற்றி தந்திருக்கிறீர்கள் அதற்காக என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உணவு வழங்குகிற, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யக்கூடிய பணியை கூட தடுக்கும் முயற்சியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதைக் கூட நாம் நீதிமன்றம் சென்று அவர்கள் போட்ட தடையை ரத்து செய்து அதன்பிறகு வந்திருக்கிறோம். இதெல்லாம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் அரசியல் பேச விரும்பவில்லை. கொரோனா நோயை வைத்தும் கொள்ளையடிக்கக் கூடிய ஆட்சிதான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆறு மாத காலத்தில் இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடியக்கூடிய காலம் விரைவில் வரப்போகிறது என்பதை எடுத்துச் சொல்லி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories