மு.க.ஸ்டாலின்

“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, ஏராளமான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கொரோனா காலத்தில் நாம் ஆற்றவேண்டிய பணியில் இருந்து என்றைக்கும் பின்வாங்கிட மாட்டோம். கொரோனா காலமாக இருந்தாலும்; எந்தக் காலமாக இருந்தாலும் மக்களுக்குப் பயன்படும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபடும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (28-08-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அவற்றின் விவரம் வருமாறு :

வார்டு 69 - பல்லவன் சாலை - டான் போஸ்கோ பள்ளியில் (RO Plant) குடிநீர் சுத்திகரிப்புக் கருவியினை மாணவர்கள் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்தார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஏழை - எளிய 200 மகளிர் பயன்பெறும் வகையில் இலவச தையல் பயிற்சிக் கூடத்தைத் துவக்கி வைத்து பயிற்சி பெறும் மகளிருக்கு பயிற்சி மேற்கொள்ள உபகரணம் வழங்கி கொரோனா தடுப்பு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அதோடு, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வேலைவாய்ப்புடன் கூடிய TALLY பயிற்சி வழங்கும் கூடத்தைத் துவக்கி வைத்து மாணவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள உபகரணம் வழங்கி கொரோனா தடுப்பு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

பின்னர், வார்டு 65 - ஜி.கே.எம் காலனி பிரதான சாலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதல் கட்டடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

வார்டு 67 - ஜி.கே.எம் காலனி 24A தெரு முத்து மாரியம்மன் கோவில் குளத்தை ஆய்வு செய்தார்.

அடுத்ததாக, வார்டு 67 - ஜி.கே.எம் காலனி 23வது தெருவில் 18.07.2020 அன்று கழகத் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, இன்று 34-வது நாளாக நடைபெறும் "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மாலை உணவு வழங்கினார்.

“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அடுத்ததாக, வார்டு 66 - கொளத்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் உள்ள 'அனிதா அச்சீவர்ஸ் அகாடமி'-யில் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்து, பயிற்சி மாணவர்களிடையே உரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு :

“அனைவருக்கும் மாலை வணக்கத்தினை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்களே, கிழக்கு மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்களே, மற்றும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளே, பகுதிக் கழகத்தின், கிளைக் கழகத்தின் செயலாளர்களே, நண்பர்களே, பயிற்சி பெற்று பல்வேறு பலன்களைப் பெற்றிருக்கக்கூடிய, பல்வேறு பலன்களை பெறவிருக்கக்கூடிய அன்புக்குரிய சகோதரிகளே, இளைஞர்களே, நண்பர்களே, தொலைக்காட்சி, ஊடகத்துறையைச் சார்ந்திருக்கும் சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

கொரோனா காலத்தில் நாம் ஆற்றவேண்டிய பணியில் இருந்து என்றைக்கும் பின்வாங்கிட மாட்டோம். அது எந்தக் காலமாக இருந்தாலும். மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்பதற்கு அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கொளத்தூர் தொகுதிக்கு நான் அடிக்கடி வந்து போகிறவன். ஆனால் இப்போது அடிக்கடி வரமுடியாத சூழ்நிலை. நான் வரத் தயார். நான் வரும்போது பாதுகாப்போடு வந்துவிட்டுப் போய்விடுவேன். ஆனால், நான் வருகிற காரணத்தால் மக்களுக்கு எதுவும் இடையூறு வந்துவிடக்கூடாது. மற்றவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், நான் கூடுமான வரையில் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவித்து, அதே நேரத்தில் நம்முடைய பணி தொடர்ந்து நடைபெறும் என்கிற அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியும் அதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.

“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இங்கே வரவேற்றுப் பேசிய சகோதரர் சொன்னார்; திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக நான் 2-ஆம் ஆண்டு நிறைவு பெற்று 3-ஆம் ஆண்டிலே அடியெடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நான் சேகர்பாபுவிடத்திலே தேதி தருகிறபோது, 3-ஆம் ஆண்டின் தொடக்கம் என்று எனக்குத் தெரியாது. தெரியாமல் வந்திருக்கிறேன் என்று சொன்னால் அதுதான் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஆகவே 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற நேரத்தில் எல்லோரிடத்திலும் வாழ்த்துப் பெறும்போது, இந்த கொளத்தூர் தொகுதியிலும் வாழ்த்துப் பெறாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான், அது சரியான நேரமாக, சரியான நாளாக அந்த நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடிய சிறப்போடு நடந்து கொண்டிருக்கிறது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்னாலும், வீட்டுப் பற்றும் நிச்சயமாக இருந்திட வேண்டும். என்னதான் நான் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் காரணத்தால் எல்லாத் தொகுதிகளுக்கும் உரியவன் என்ற அந்த நிலையை நான் பெற்றிருந்தாலும், எப்படி வீடு ஒரு முக்கியமாக அமைந்திருக்கிறதோ அதுபோன்று இந்த கொளத்தூர் தொகுதியும் ஒரு வீடு போல் அமைந்திருக்கிறது. அதைச் சொல்வதற்குக் காரணம், என் வீட்டையும், இந்த கொளத்தூர் தொகுதியையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. எண்ணுவதும் இல்லை. வீடே கொளத்தூராகத்தான் பார்க்கிறேன். கொளத்தூரையே வீடாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ பணிகளை நாம் இந்த கொளத்தூர் தொகுதிக்குச் செய்து கொடுத்திருக்கிறோம். இன்னும் நிறைவேற்றுகிற முயற்சியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறோம். அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட என்னால் மட்டும் அல்ல. இந்த மாவட்டத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிற சேகர் பாபு மட்டும் அல்ல. இந்தப் பகுதியில் இருக்கும் கழக நண்பர்கள், கழக நிர்வாகிகள், நம்முடைய தோழர்கள் மட்டும் அல்ல. எல்லாவற்றிற்கும் நமக்குத் துணை நிற்கும் அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் அவர்களுடைய ஒத்துழைப்போடுதான் இந்தப் பணிகளை எல்லாம் நடத்த முடிகிறது. அதையும் தாண்டி இந்தத் தொகுதியில் உள்ள மக்களின் ஆதரவு, அரவணைப்பு எல்லாவற்றையும் இணைத்துதான் இந்தத் திட்டங்களை மிகப் பெரிய பிரச்சனைகளை முடிந்த வரையில் நம்மால்... ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்தப் பணிகளை எல்லாம் நாம் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஆளுங்கட்சியாக இருந்தால் இன்னும் என்னென்ன பணிகளை நிறைவேற்றி இருப்போம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தப் பகுதியில், வேலையில்லாமல் இருக்கும் சகோதரிகளுக்கு எப்படியாவது நம்மால் முடிந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத்தான் அனிதா பெயரில் அந்த அகாடமி தொடங்கப்பெற்று, முதற்கட்டமாக 61 பேர் பயிற்சி பெற்று, 59 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டாவது கட்டமாக 67 பேர் பயிற்சி பெற்று, 59 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். மூன்றாவது கட்டமாக 75 பேர் பயிற்சி பெற்று 53 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவது கட்டமாக 68 பேர் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அடுத்து ஐந்தாவது கட்டமாகத் தயாராகி, பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தீர்களானால் 88 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே இந்த அகாடமி, பயிற்சி நிலையம் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அனிதாவை உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. பள்ளிப்படிப்பில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை என்பதால் மனமுடைந்து வேதனையடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி. நீட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ளாமல் உயிருடன் இருந்து இந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துகொண்டிருந்திருப்பார். அவரை ஒரு மருத்துவராக நாம் இன்றைக்குப் பார்த்திருப்போம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய நினைவாகத்தான் இந்த மையத்துக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மையத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், அது அனிதாவுக்கு நாம் சேர்க்கும் சிறப்பு என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்தப் பயிற்சி மையத்தை நான் பார்க்க வரும்போதெல்லாம், இந்தப் பகுதியில் உள்ள கழகத் தோழர்களும் நண்பர்களும் என்னிடத்தில் சொல்வார்கள், பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்களே, அவர்கள் எல்லாம் திருமணம் செய்து வேறு ஊருக்குப் போய்விடுவார்கள், ஆனால் நாங்கள் இங்கேதான் இருப்போம் என்று. அவர்களிடம் சொன்னேன் அந்தப் பெண்கள் எங்கே சென்றாலும் நமக்குத்தான் ஆதரவு கொடுப்பார்கள் என்று. கொளத்தூர் மட்டுமல்ல; தமிழ்நாடே என் தொகுதிதான்.

இப்படி ஒருபுறம் நான் சமாதானம் சொன்னாலும் இங்கிருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும், அவர்கள் வாழ்க்கையிலும் வசந்தம் வீசவேண்டும் என்று முடிவு செய்து இளைஞர்களுக்கான பயிற்சி மையத்தைத் தொடங்கியிருக்கிறோம். நூறுபேர் பங்கேற்கும் வகையிலான பயிற்சி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. எப்படி சகோதரிகளுக்கான பயிற்சி மையம் சிறப்பாகச் செயல்படுகிறதோ அதைப்போல இதுவும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நிச்சயம் அதைச் செய்து காட்டுவோம்.

“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அத்துடன் 200 பெண்கள் பங்கேற்கக்கூடிய தையல் பயிற்சியையும் தொடங்கியிருக்கிறோம். இந்தப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துகளையும் பயிற்சியளிக்கும் சகோதர, சகோதரிகளுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது கொரோனா காலம் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வேண்டுகோள்கூட அல்ல, உங்களையெல்லாம் கண்டிப்புடன் உத்தரவு இடவும் எனக்கு உரிமையுண்டு. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துச் சொல்கிறது. கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் என்று அரசு சொல்லிவிட்டது. 'கையைக் கழுவுங்கள்' என்று சொன்னார்கள். இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள். நாமேதான் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று இந்தவேளையில் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக கொரோனா காலமாக இருந்தாலும் சிறப்பாகவும் பக்குவமாகவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் என்னையும் பங்கேற்கச் செய்து, உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய சேகர் பாபுவுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!”

இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories