மு.க.ஸ்டாலின்

“வீரன் அழகு முத்துக்கோன் தியாக நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!” - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

"விடுதலைப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் தியாக நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!" எனக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"விடுதலைப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் தியாக நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!" எனக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய் மண்ணாம் நம் தமிழ்நிலத்தை எவரும் அடிமைப்படுத்திட விடமாட்டோம் என வெள்ளையர் ஆதிக்கத்தை வீறுகொண்டு எதிர்த்து நின்ற தமிழக மாவீரர்களில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் தியாகம் அளப்பரியது. இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் 18-ம் நூற்றாண்டில் பிறந்த வீரன்அழகு முத்துக்கோன், எட்டயபுரம் பாளையத்தின் பட்டத்திற்குரிய ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் நம்பிக்கைக்குரிய நண்பராகத் திகழ்ந்தவர்.

நெல்லைச் சீமை பாளையக்காரர்களிடம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நேரடியாக வரிவசூலிப்பதற்காக தங்களின் கமாண்டராக கான்சாகிப் என்பவரை நியமித்தனர். வெள்ளையர்கள் தந்த பீரங்கிப்படையுடன் 1756-ல் எட்டயபுரம் பாளையத்தை கான்சாகிப் தாக்கியபோது, தனது நண்பரான பாளையத்தின் மன்னரைக் காப்பாற்றிப் பாதுகாப்பாகத் தங்க வைத்தவர் வீரன் அழகு முத்துக்கோன். அதுமட்டுமின்றி, வெள்ளையர் ஆதிக்கத்தையும் அவர்களின் கமாண்டரையும் எதிர்க்கும் வலிவுடன் புதிய படைகளை உருவாக்கி, எட்டயபுரத்தை மீட்டெடுக்கும் போரில் அழகு முத்துக்கோன் வீரத்துடன் ஈடுபட்டார். அவரது வீரத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாத கான்சாகிப் படையினர், போர்நெறியை மீறி இரவு நேரத்தில், வீரர்கள் உறக்கத்தில் இருந்த வேளையில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான வீரர்களை கொடும் சித்திரவதை செய்து கொன்றனர்.

அப்போதும் அஞ்சாமல் களம் கண்ட வீரன் அழகு முத்துக்கோனையும் அவருடனான 7 பேரையும் பீரங்கியின் வாய்ப்பகுதியில் வைத்துக் கட்டி, வெடிக்கச் செய்து, உடலைப் பிளந்தது ஆங்கிலேயரின் அடிமைப் படை.

பீரங்கியால் துளைக்கப்படும் நிலையிலும் வெள்ளையருக்கு மண்டியிடாத மாவீரன் அழகு முத்துக்கோன் வீரமரணம் எய்திய தியாகத் திருநாளான ஜூலை 11-ம் நாள் ஆண்டுதோறும் அவரது நினைவுநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய விடுதலை வீரர்களின் தியாகத்தைப் போற்றி, தி.மு.கழக ஆட்சியில் தாமிரப்பட்டயம் வழங்கிச் சிறப்பித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் முதல்வராக இருந்தபோது ‘அரிமாநெஞ்சன் அழகு முத்துக்கோன்' என்று போற்றிப் புகழ்ந்து, அரசு சார்பில் நினைவு நாள் விழா எடுத்து அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்திடச் செய்தார்.

அடிமைத்தனத்தை எதிர்த்து - உரிமைகளைக் காப்பதற்கான போர்க்களத்தில் மடிந்த மாவீரன் அழகு முத்துக்கோனின் தியாக நினைவினை என்றும் போற்றிடுவோம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories