மு.க.ஸ்டாலின்

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!

தன்னை டாக்டராக நினைத்துச் செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில், மிகச் சாதாரணமாகச் சொன்னதும் தான்; இத்தகைய மோசமான நிலைமையை நாம் சந்திக்கக் காரணம் என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"கொரோனா விவரங்களை மறைத்தும் - எண்ணிக்கைகளைக் குறைத்தும் காட்டுவதால் நற்பெயர் வாங்க முடியாது; மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுவரை 88 நாட்கள், ஊரடங்கு - ஊரடங்கிற்குள் ஊரடங்கு - படிப்படியாகத் தளர்வுகள் - தீவிரமான முழு ஊரடங்கு என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் இந்த ஊரடங்குக் காலம் முடிவடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் கொரோனா நோய்த் தொற்று முடிந்துவிடுமா என்று பார்த்தால் அதற்கான சிறிய அறிகுறிகூடத் தென்படவில்லை. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 1000 -1500 -2000 என்று மிக மோசமான எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்குதான் ஒரே வழி என்று சொன்னது மாநில அரசு. ஆனால் ஐந்து கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்த பிறகும், நோய்ப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றால், இவர்கள் அமல்படுத்தியது பெயரளவுக்கான ஊரடங்கு என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இப்போது கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845. இறந்தவர்கள் எண்ணிக்கை 704 ஆகிவிட்டது. தினமும் 2000 பேருக்கு மேல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் சுமார் 50 பேர் இறக்கிறார்கள். நேர்ந்துவரும் இந்தப் பேரழிவைத் தமிழக அரசோ, தமிழக முதல்வரோ எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னமும், கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளோம் என்று அறிவிப்புக்கு மேல் அறிவிப்பு செய்து கொண்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

இந்த அறிவிப்புகளின் உண்மைத் தன்மையினை தமிழக மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, 'இறைவனுக்குத்தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?' என்று ஊடகவியலாளர்களை நோக்கிக் கேட்டுள்ளார், எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா என்று வினோதமான வினாத்தொடுத்த முதலமைச்சர். எல்லாவற்றுக்கும் அரசாங்கம், அரசாங்கம் என்று சொல்லக் கூடாது, அரசாங்கம் என்று தனியாக எதுவும் கிடையாது, மக்கள் தான் அரசாங்கம் என்றும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!

அதாவது, தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவுமில்லை; செய்யத் தெரியவில்லை; செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 'மூன்றே நாளில் கொரோனா ஒழிந்துவிடும்' என்று இவர் தான் இறைவனைப் போலப் பேட்டி கொடுத்தார். 'இது பணக்கார வியாதி; வயதானவர்களுக்குத்தான் வரும்' என்று மருத்துவ நிபுணரைப் போலச் சொன்னார். ‘யாரும் பயப்படத் தேவையில்லை’என்று போலி ஆறுதல் சொன்னார். ஐந்து கட்ட ஊரடங்குக்குப் பிறகும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் கைபிசைந்து நிற்கிறார்.

‘காய்ச்சல் வருகிறது, சளி வருகிறது, இதெல்லாம் வரத்தான் செய்யும், மனிதன் என்று இருந்தால் நோய் வரத்தான் செய்யும்' என்று நேற்றைய தினம் அவர் திருவாய் மலர்ந்துள்ளது, நாட்டு மக்களை மட்டுமல்ல; மருத்துவ உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா வைரசும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா? சாதாரண சளி, காய்ச்சலில் தான் 704 உயிரிழப்புகள் நடந்துள்ளதா? இன்னுமா இந்த வைரசின் தாக்கம் குறித்து அறியவில்லை!

வேறு உடல்நலக்குறைவு உள்ளவர்களை இந்த வைரஸ் தாக்கினால் உடனடிப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நல்ல ஆரோக்கியம் உள்ளவரைத் தாக்கினாலும், பாதிப்பு அதிகமாக இருக்கிறது. யாரையும் இத்தொற்று அதிகம் பாதிக்கும் என்பதே இன்றைய நிலைமை. இதனை மறைத்து, சாதாரண காய்ச்சல், சளியோடு, இந்த வைரஸ் தொற்றை ஒப்பிடலாமா?

எல்லோரும் ‘மாஸ்க்’போட வேண்டாம் என்று டாக்டர் பட்டம் வாங்கிய விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் சொன்னதும்; 'நம்ம ஊருக்கெல்லாம் வராதுங்க, ஒரு ஆளுக்கு வந்தால் கூட குணப்படுத்திவிடுவோம்' என்று தன்னை டாக்டராக நினைத்துச் செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி சட்டசபையில், மிகச் சாதாரணமாகச் சொன்னதும் தான்; இத்தகைய மோசமான நிலைமையை நாம் சந்திக்கக் காரணம் ஆகும்.

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!

கொரோனாவை மறைக்க முயற்சித்தார்கள். தடுப்பு நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீது பழி போட்டார்கள்; பிறகு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது பழி போட்டார்கள்; அதற்கடுத்து மக்கள் மீதே பழி சுமத்தினார்கள்; இப்போது இறைவன் தலையில் பழியையும், பாரத்தையும் ஏற்ற முயற்சி செய்துள்ளார்கள். இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குப் பரவிவிட்டதும், 'இந்த நோயை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்' என்று முதலமைச்சர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் பரவாமல் தடுக்கவாவது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கத்தை நான் குற்றம் சொல்வதாக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். குளறுபடிக்கு மேல் குளறுபடி, குழப்பத்திற்கு மேல் குழப்பம், குற்றத்துக்கு மேல் குற்றம் அரசாங்கம் செய்வதால்தான், நான் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். கொரோனாவைத் தடுத்திருக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்குத் தானே உண்டு!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானவரைக் கூட விட்டது யார் குற்றம்?

கோயம்பேடு காய்கறி அங்காடியில் இலட்சக்கணக்கானவர்களைக் கூட விட்டது யார் குற்றம்?

ஊரடங்குக் காலத்தில் மதுக்கடைகளைத் திறந்து விட்டு ஒருவர் தோளில் இன்னொருவரை ஏறி நிற்க விட்டது யார் குற்றம்?

மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கூட விட்டது யார் குற்றம்?

கொரோனாவால் மறைந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்தது யார் குற்றம்? பரிசோதனைகளின் எண்ணிக்கையை மறைத்தது யார் குற்றம்?

இன்று கூட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு, பரிசோதனை எண்ணிக்கைகளின் லட்சணத்தை அக்கு வேறு ஆணி வேறாக வெளியிட்டிருக்கிறதே? - இவை அனைத்தும் பொதுமக்களின் குற்றமா? அல்லது இந்த நாட்டை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் திரு. பழனிசாமியின் குற்றமா?

MK Stalin
MK Stalin

கோயம்பேடு காய்கறி அங்காடியை ஒழுங்குபடுத்தி இருந்தால் தமிழகத்தின் மொத்தப் பாதிப்பு பத்தாயிரத்துடன் நின்றிருக்கலாம். இத்தகைய பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர் தானே? இவை அனைத்துக்கும் மேலாக, 'பாசிட்டிவ் என்று வந்தாலும் நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று இந்த அரசாங்கம் சொன்னதுதான் பல்லாயிரக்கணக்கில் பரவக் காரணம். இந்த நோயின் தன்மையையே உணரவில்லை என்பதற்கு உதாரணம் இது.

வைரஸ் அறிகுறி இருந்தது எல்லாம் ஆரம்பத்தில் தான். மே மாத நிலைமை மாறிவிட்டது. பலருக்கும் நோய் அறிகுறி இல்லை, ஆனால் வைரஸ் இருந்தது. நோய் அறிகுறி இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றதும், அவர்கள் தைரியமாக இருந்தார்கள். அவர்கள் மூலமாகத் தொற்று அதிகமாகிவிட்டது. இதுதான் சென்னையில் தொற்று அதிகம் பரவக் காரணம்.

பரிசோதனைக்கு வந்தாலே பதினான்கு நாட்கள் இருக்க வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டினார்கள். அதனால், தொற்று இருப்பவர்களும் வீட்டுக்குள் இருக்கத் தொடங்கினார்கள். பரிசோதனை செய்து கொள்ள வரவில்லை. இதுவும் சென்னையில் தொற்று அதிகம் பரவக் காரணம்.

'வீடுவீடாகச் சென்று மாநகராட்சி மருத்துவர்களும், சுகாதாரத் துறையினரும் சேர்ந்து பரிசோதனை செய்கிறோம்' என்று உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். மார்ச் மாதம் சட்டமன்றத்தில் பேசிய நான், 'பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள்; பரிசோதனைகள் செய்தால் தான் தொற்று இருக்கிறதா இல்லையா எனத் தெரிந்து கொள்ள முடியும்?' என்றேன். பரிசோதனை செய்தால் தொற்று உள்ளவர் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்பதால் பரிசோதனை செய்வதைக் குறைத்துக் கொண்டே போனதன் விளைவாகவே தற்போது இந்தத் தொற்று அதிகம் பரவியுள்ளது.

நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் 20 சதவிகிதம் பேர் தான். மற்றவர்களுக்கு அறிகுறி இல்லை என்கிறார் முதலமைச்சர். இப்போது பரவும் நோயின் தன்மை இதுதான். அறிகுறி இல்லை என்பதற்காக அவர்களை மருத்துவமனையில் வைத்துப் பராமரிக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது. அவர்களை வரவேண்டாம், வீட்டிலேயே இருங்கள் என்று சொன்னதால் தான் நோய் அதிகமாகப் பரவியது என்பதை இன்னுமா அரசு உணரவில்லை?

சமூகப் பரவல் இல்லை என்று அரசு சொல்லி வருகிறது. சமூகப் பரவலாக ஆகிவிடக் கூடாது; ஆனால், சென்னையில் பாதிக்கப்பட்ட சுமார் 1500 பேருக்கு யாரால் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை என்கிறார்கள். இதுதானே சமூகப் பரவலுக்கான முதல் அறிகுறி. இதனை அரசு கவனித்ததா?

இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலென்ஸ் ஓட்டுநர்கள், காவலர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கத்தையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவர்களை வணங்க வேண்டும். இப்பணியாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

முதலில் இவர்களது பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை அதிகப்படுத்தித் தரவேண்டும். தமிழகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறை நண்பர்களைத் தொற்று பாதித்துள்ளது என்கிறார்கள். சென்னையில் மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுரளியை இழந்துள்ளோம். அவரது உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறிய கதறல் இன்னமும் காதுகளில் கேட்கிறது. இத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை முதலமைச்சருக்குத்தான் இருக்கிறது.

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!

வெளிமாவட்டங்களில் தொற்று குறைவு என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதாக இன்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்றைய தினம் ஒரே நாளில் 2396 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றால், அதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1254 பேர் தான். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 1142 பேர் என்கிறது அரசின் அறிவிப்பு. பிறகு எப்படிப் பிற மாவட்டங்களில் தொற்று குறைவு என்று சொல்ல முடியும்?

செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாகி இருப்பதையே இது காட்டுகிறது. சென்னையில் மட்டுமே அதிகமாக இருந்த பரவல், இப்போது பிற மாவட்டங்களிலும் அதிகமாகி வருவதை இது காட்டவில்லையா?

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின் தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதுதான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘ட்விட்டர்’செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் திரு. பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்’ செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனிச்செயலராகப் பணியாற்றி வந்த பி.ஜே.தாமோதரன் அவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ‘உடல்நலக் குறைவால்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இதனை மறைக்க வேண்டும்? மறைப்பதன் மூலமாக என்ன கிடைத்துவிடப் போகிறது? கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித் தருமே தவிர; கொரோனாவை மறைப்பதாலோ, எண்ணிக்கைகளைக் குறைத்துக் காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது!

“கொரோனாவும் சாதாரண சளி, காய்ச்சலும் ஒன்றா?” பின் இறப்பு, பாதிப்புகளை மறைப்பது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி!

எவ்வளவு பரிசோதனைகள் செய்துள்ளீர்கள் என்பதை மாவட்ட வாரியாகக் கொடுங்கள் என்று தொடக்கத்திலிருந்து சொல்லி வருகிறேன். ஒரே ஒருநாள் மட்டும் அப்படிக் கொடுத்தார்கள். பிறகு நிறுத்திவிட்டார்கள். நேற்றைய தினம் மாவட்ட வாரியாக எண்ணிக்கையைக் கொடுத்துள்ளார்கள். நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை விட்டுவிட்டு நோய்த் தொற்று குறைவாக உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

3620 பேர் பாதிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,050 சோதனைகளும், 1095 பேர் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12,983 சோதனைகளும், 2414 பேர் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் 13,981 சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. 323 பேர் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்டத்தில் மட்டும் 31,019 பேருக்குச் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று நான் கேட்கவில்லை. அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன்.

சேலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உடைகள் வழங்கியதைப் போல, சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? திரு. பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரைப்’போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்?

அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். கொரோனா காலத்தில் மதுக்கடைகளைத் திறப்பதையும், 9 இலட்சம் மாணவ மாணவியரையும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் வீட்டை விட்டு வெளியே வரவைத்துப் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டுமா என்பதையும் தான் கேட்டோமே தவிர; மற்றபடி அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்புத் தந்தே வருகிறோம்.

அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையையும் நாங்கள் தடுக்கவில்லை. அரசின் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல, இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டும். அதற்கான ஆலோசனைகளைத்தான் சொல்லி வருகிறேன். இந்த ஆலோசனைகள் நாட்டு நலன் கருதி, தமிழ் மக்கள் நலன் கருதிச் சொல்லப்படுபவை. இந்த ஆலோசனைகளைக் கூட அரசியல் உள்நோக்கத்தோடு முதலமைச்சர் பார்க்கிறார். இதனை அவர் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

'கொரோனா என்பது புதிதாக வந்த நோய், அதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை' என்று திரும்பத் திரும்ப முதலமைச்சர் சொல்கிறார். அவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. மேலும் பரவாமல் தடுக்கத்தான் சொல்கிறோம். ‘வாட்ஸ்அப்’ மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தாலே போதும். ஆனால் அத்தகைய எண்ணமோ இயல்போ தமிழ்நாடு முதலமைச்சருக்கு இல்லாமல் போய்விட்டதே!

அரசாங்கம் சொல்கிற படி நடந்து கொள்ளுங்கள் என்று மக்களைப் பார்த்து வணங்குகிறார் முதலமைச்சர்; அப்படி நடந்து கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள்; அரசு, மக்களிடம் நம்பகத்தன்மையை விதைத்து வளர்க்க வேண்டும்; அத்தகைய முயற்சி அரசிடம் காணப்பட வில்லையே!

மக்கள் சொல்லும் ஆலோசனைகளை - மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை - கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். அவரது நேற்றைய பேட்டி மனக்கவலை அளிப்பதாக உள்ளது; தமிழக மக்களின் கவலைகளைத் தீர்த்துவைப்பதாக இல்லை!

banner

Related Stories

Related Stories